குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழகம் வருகிறார்…

 குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழகம் வருகிறார்…

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இயங்கி வரும், கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் நாளை பங்கேற்பதற்காக, இன்று சென்னை வருகிறார். இதனால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா நாளை 27-ம் தேதி நடக்கிறது.. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவர்களை கவுரவிக்க உள்ளார்.

ஜனாதிபதி கலந்து கொள்ளும் இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், இணை அமைச்சர்கள் ஸ்ரீபாத் நாயக், சாந்தனு தாக்குர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பெங்களூருவில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் இன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு, 6.50 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிறகு விமான நிலையத்திலிருந்து காரில் சாலை வழியாக கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று இரவு அங்கு தங்குகிறார்.

நாளை காலை 9 மணியில் இருந்து 9.30 மணி வரை, ஆளுநர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். அதன் பின்பு ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு, ஓஎம்ஆர் சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் செல்கிறார். அங்கு நடக்கும் 8வது பட்டமளிப்பு விழாவில் காலை 10.15 மணி முதல் 11.15 மணி வரை கலந்து கொள்கிறார்.

அதன் பின்பு காரில் புறப்படும் குடியரசு தலைவர், பகல் 11.55 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு குடியரசு தலைவருக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் வழியனுப்பு நிகழ்வு நடக்கிறது. தொடர்ந்து பகல் 12.05 மணிக்கு‌, இந்திய விமானப்படை தனி விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

நேற்று மாலை திடீரென ஆளுநர் மாளிகை அருகே, பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது… மர்மநபர் ஒருவர் ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டை வீசிவிட்டு போனார்.

உடனே கண்காணிப்பு பணியிலிருந்த போலீசார் அந்த நபரை விரட்டிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் மேலும் 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன, விசாரணையில் அவர் தேனாம்பேட்டையை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பதும், இவர் ஏற்கனவே கடந்த வருடம் சென்னை தி.நகர் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர் என்பதும் தெரியவந்தது. அந்த வழக்கில் கைதாகி, 2 நாளைக்கு முன்புதான், இவர் ஜெயிலிலிருந்து வெளியே வந்தாராம்.. இப்போது மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசியிருக்கிறார்.

ஜனாதிபதி திரெளபதி முர்மு சென்னை வரும் சமயத்தில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இன்று சென்னை வரும் ஜனாதிபதி, ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்க போவதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. எனினும் தற்போது, ஆளுநர் மாளிகை விவகாரம் பரபரப்பை தந்துள்ளதால், ஆளுநர் மாளிகையில் தங்குவாரா? அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தங்கும் இடம் மாற்றம் செய்யப்படுமா? என்று தெரியவில்லை.

ஆனால், சென்னை ஆளுநர் மாளிகை முன்பு போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளனர்.. முன்னதாக, பழைய விமான நிலையத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக கிண்டி ஆளுநர் மாளிகை வரையும், அதன் பின்பு ஆளுநர் மாளிகையில் இருந்து ஓஎம்ஆர் சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரையிலும் பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

டிஜிபி அலுவலகம் வெளியிட்டிருந்த செய்தியில், “ஜனாதிபதியின் சென்னை வருகையில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை, கவர்னர் மாளிகையில் தங்கி பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்வார்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...