வடசென்னை க்கு 1000 கோடி ப்ராஜெக்ட் ரெடி…
இன்றுவரை பலருக்குச் சென்னை என்றால் அது எழும்பூர் வரைதான். அதைத் தாண்டி வடசென்னை என்றால் அப்படியே மயங்கிப்போய் நின்று விடுவார்கள். ஹைஃபை ஆன வசதிகள் நிறைந்த பெசன்ட் நகர் கடற்கரையை விரும்பிப் போகும் சென்னைவாசிகள் அப்படியே காசிமேடு பக்கம் வாருங்கள் என்று அழைப்பு கொடுத்தால் ஆடிப் போய்விடுவார்கள். அந்தளவு வசதிகள் குறைந்த பகுதியாகக் கருதப்படும் வடசென்னை. தமிழ்த் திரைப்படங்களிலும் சென்னையைப் பற்றிய சித்தரிப்புகள் நல்ல விதமாக இல்லாமல் போனது ஒரு முக்கிய காரணம்.
அந்தப் பகுதி மக்களைப் பற்றி எதிர்மறையான ஒரு தோற்றத்தை சினிமா உலகம் தொடர்ந்து கட்டமைத்து வருகிறது. அதை உண்மை என நம்பி, மக்கள் பல அந்தப் பகுதி மக்களை அச்சம் தரும் ஆட்களாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள். அந்தத் தோற்றத்தை முழுமையாக உடைத்தெறியும் வேலையில் இறங்கி உள்ளது திராவிட மாடல் அரசு. இதற்காக வடசென்னையில் ரூ 1000 கோடி மதிப்பில் பல புதிய திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் வடசென்னை மக்களின் வாழ்வில் புதிய கலாச்சார மேம்பாட்டினை ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்கி உள்ளது.
வடசென்னையை மையமாகக் கொண்டு புதிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், சமூக நலக்கூடம் என நவீன வசதிகளை ஏற்படுத்தித் தர, சிஎம்டிஏ நிர்வாகம் மூலம் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளது தமிழ்நாடு அரசு. இதற்கான அதிகாரிகள் மூலம் ஆய்வுகளை நடத்தி, திரு.வி.க நகர் உள்ளிட்ட மொத்தம் 6 பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களை மேம்படுத்தவும், அதிகம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களைக் கண்டறிந்து மேம்பாலங்களைக் கட்டவும், இளைஞர்கள் பயன்பெறும் விதம் விளையாட்டு மைதானங்களை உருவாக்கவும் திட்டங்கள் கூர்தீட்டப்பட்டு வருகிறது. மேலும் வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றாகப் பழமை வாய்ந்த காசிமேடு கடற்கரையை நவீனமாக்க, ஆய்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன.
இதன் மூலம் காசிமேடு வரை திருவொற்றியூர் வரை உள்ள கடற்கரையைச் சுற்றுலாத் தலமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக சில அதிகாரிகள் நமக்குத் தகவல் தெரிவிக்கின்றனர். இந்தத் திட்டம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “காசிமேடு மற்றும் திருவொற்றியூர் பகுதிகளை ஒட்டி உள்ள ஒரு இடத்தைத் தேர்வு செய்து அங்கே ஒரு மீன் அங்காடி கட்ட திட்டமிட்டுள்ளோம். அதைப் போன்று ஒரு சமுதாய நலக் கூடம், பள்ளிகள் மற்றும் விளையாட்டுப் பூங்காக்கள் என ஏறக்குறைய 50 விதமான பணிகளைச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் செய்து தரப் போகின்றோம்.
இவற்றைத் தாண்டி கழிவுநீர் வெளியேறச் சரியான பாதைகளை உருவாக்குவது, நல்ல குடிநீர் வசதியைச் செய்து தருவதற்கான திட்டமிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன” என்கிறார்.
வடசென்னையில் சர்வதேச தரத்திற்குச் சவால் விடும் அளவுக்குக் கால்பந்து மற்றும் குத்துச்சண்டைப் போட்டி வீரர்கள் பலர் உள்ளனர். அவர்களின் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு சமூக பொருளாதார திட்டத்தின் மூலம் வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, ஆர்.கே. நகர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு, சில புதிய திட்டக்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டங்களை சிஎம்டிஏ நிர்வாகம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து செயல்வடிவம் தர உள்ளன என்கிறார்கள்.