கவரப்பேட்டை ரயில் விபத்தில் திடுக்கிடும் தகவல்..!
கவரப்பேட்டை ரயில் விபத்து பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தண்டவாளத்தில் நட்டுகள் கழற்றப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. பொன்னேரியில் 6 நட்டுகளும், கவரப்பேட்டையில் 3 நட்டுகளும் தண்டவாளத்தில் கழற்றப்பட்டு இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மைசூரில் இருந்து புறப்பட்டு பெங்களூர் வழியாக ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை சென்டிரல் வழியாக தர்பங்கா நோக்கி செல்லும். கடந்த 11 ஆம் தேதி வழக்கம் போல பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்ற போது, சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.
மெயின் வழியில் செல்ல வேண்டிய பாகுமதி எக்ஸ்பிரஸ் லூப் லைனில் சென்றதே இந்த விபத்துக்கு காரணமாக இருந்தது. இந்த விபத்தில், 19 பயணிகள் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. அண்மைக் காலமாகவே ரயில் விபத்து சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பயணிகள் மத்தியில் அதிரச்சியை ஏற்படுத்தியது.
ரயில் விபத்துக்கு நாச வேலை காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால், தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. அதில், விபத்து நடந்த இடத்தில் இருந்த ‘சுவிட்ச் பாயிண்ட்’ போல்டு மற்றும் நட்டுகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. ரயில்வே போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், நட்டு போல்ட்டுகள் கழற்றப்பட்டதே விபத்திற்கு காரணம் என்ற திடுக்கிடும் தகவல் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரயில் நிலைய மேலாளர், சிக்னல் ஊழியர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் உள்ளிட்ட 15 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் தண்டவாளத்தில் நட்டு, போல்ட்டுகள் கழற்றப்பட்டதும், குறிப்பாக கவரப்பேட்டையில் 3 நட்டுகளும், பொன்னேரியில் 6 நட்டுகளும் கழற்றப்பட்டது தெரியவந்துள்ளது.
நட்டுகள் கழற்றப்பட்டதால் இரண்டு தண்டவாளங்களை மாற்றுவதில் சிக்கல் இருந்ததாகவும், இதனால் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது. விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.