தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் ராம நவமி யாத்திரை செல்ல அனுமதி மறுப்பு..!

 தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் ராம நவமி யாத்திரை செல்ல அனுமதி மறுப்பு..!

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் ராம நவமி யாத்திரை செல்ல அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏதாவது ஒரு மாவட்டத்தில் யாத்திரை செல்ல அனுமதி அளிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

ராமநவமியை முன்னிட்டு ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை கேரள மாநிலம் மலப்புரம் வண்டூரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வரை யாத்திரை செல்ல அனுமதி கோரி, கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான திலீப் நம்பியார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் யாத்திரை செல்ல அனுமதி கோரிய விண்ணப்பித்ததைச் சட்டம் – ஒழுங்கை காரணம் காட்டி தமிழக அரசு நிராகரித்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சென்னை உயர்நீதிமன்ற ஜி.ஜெயச்சந்திரன், ராம நவமி யாத்திரை ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்? என காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகவே இந்த முறை ராம நவமி யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பு விளக்கம் அளித்தது. இதையடுத்து ராம நவமியை முன்னிட்டு தமிழ்நாட்டில் 11 மாவட்டங்கள் வழியே யாத்திரை செல்ல மாநில அரசு அனுமதி மறுத்தது சரியே என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் மட்டுமாவது ராம நவமி யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்த நிலையில், அதுகுறித்து 2 நாட்களில் பரிசீலித்து அரசு முடிவெடுக்க நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...