தமிழ்நாடு அரசு நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்கிறது – நடிகர் வடிவேலு | சதீஸ்

 தமிழ்நாடு அரசு நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்கிறது – நடிகர் வடிவேலு | சதீஸ்

நிவாரணம் வழங்கும் பணிகளில் தமிழ்நாடு அரசு மிகச்சிறப்பாக செய்து வருகிறது, விமர்சனம் செய்பவர்கள் விமர்சனம் செய்து கொண்டே தான் இருப்பார்கள் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் விழுந்த மரங்களுக்கு மாற்றாக 5,000 புதிய மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டையில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர் வடிவேலு, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு பேசியதாவது:

“அமைச்சர் மா.சுப்ரமணியன் போன்ற திறமையானவர்களை தேர்ந்தெடுத்ததற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது உடலுக்கு நுரையீரலை போல பூமியின் நுரையீரல் மரங்கள் ஆகும். அதனை வெட்டுவது நமது நுரையீரலை வெட்டுவதற்கு சமமாகும். இந்த நல்ல முயற்சியை தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் செய்ய வேண்டும்.

இயக்குநர் மாரி செல்வராஜ் ஏன் ஆய்வு பணிகளில் ஈடுபடுகிறார் என்று கேட்கிறார்கள். அது அவருடைய ஊர். அவர் ஈடுபடாமல் வேறு யார் போவது? அமெரிக்காவில் இருந்தா ஆள் வருவார்கள். அது போல உதயநிதி ஸ்டாலின் ஏன் திருநெல்வேலி சென்றார் என கேட்கிறார்கள். அவர் அமைச்சர், நிவாரணப்பணிகளுக்காக அவர் சென்றுள்ளார். சென்னையை தாக்கிய புயலை வைத்து பெரும் அரசியல் செய்தனர். ஆனால் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பை வைத்து அரசியல் செய்ய இயலாது.” இவ்வாறு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வடிவேலு தெரிவித்ததாவது:

“நிவாரணம் வழங்கும் பணிகளில் தமிழ்நாடு அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விமர்சனம் செய்பவர்கள் விமர்சனம் செய்து கொண்டே தான் இருப்பார்கள். அதையெல்லாம் கருத்தில் கொள்ள கூடாது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெறாத விமர்சனமா. அரசாங்கம் அதன் கடமையை அருமையாக செய்து கொண்டு தான் வருகிறது.” இவ்வாறு தெரிவித்தார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...