இசைஞானியை சந்தித்த பா.ரஞ்சித் | சதீஸ்

 இசைஞானியை சந்தித்த பா.ரஞ்சித் | சதீஸ்

ஒடுக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும், ஆதிக்கத்தை எதிர்த்து கேள்வி கேட்பதுபோலவும் திரைப்படங்கள் அதிகம் வர ஆரம்பித்ததற்கு விதை போட்டது பா. இரஞ்சித். அட்டக்கத்தியில் ஆரம்பித்த அவரது பயணம் மெட்ராஸ் படத்தில் உச்சம் சென்றது. அந்தப் படத்தில் பல காட்சிகள் ஆதிக்கவர்க்கத்தினரை ஒடுக்கப்பட்டவர்கள் கேள்வி கேட்பதுபோல் இருக்கும். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டானது. அதன் பிறகு அவர் இயக்கிய காலா, கபாலி உள்ளிட்ட படங்களும் அதே ஜானரில் வந்தன.

இரஞ்சித் தொடங்கிவைத்த இந்த கலாசாரத்தை பலர் வரவேற்றனர். அவர் இவ்வாறு படம் எடுக்க ஆரம்பித்ததை அடுத்து பல படைப்பாளிகள் ஒடுக்கப்பட்டவர்களுக்காக படம் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் வெற்றிமாற்ன, மாரி செல்வராஜும்கூட அடக்கம். சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில்கூட பா. இரஞ்சித் போன்றவர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தது பெரிய வரப்பிரசாதம் என்று மணிரத்னம் புகழ்ந்திருந்தார்.

அவர் மட்டுமின்றி பல இயக்குநர்கள் இரஞ்சித்தை மனதார பாராட்டிவருகின்றனர். பா. இரஞ்சித் இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர் ஆவார். அவர் இயக்கிய மெட்ராஸ் உள்ளிட்ட படங்களின் சில காட்சிகளில்கூட இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியிருப்பார். இந்நிலையில் அவர் இன்று இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்தார்.

அப்போது பாபா சாகேப்பின் காதல் கடிதம் புத்தகத்தை பரிசாக கொடுத்தார். அம்பேத்கர் தனது மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்களை உள்ளடக்கியதுதான் அந்தப் புத்தகம். பா. இரஞ்சித் மரியாதை நிமித்தமாக இளையராஜாவை சந்தித்ததாக ஒருபக்கம் கூறப்படுகிறது. அதேசமயம் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கான முதல் படியாகவும் இந்த சந்திப்பு இருக்கலாம் என்றும் திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...