எழுத்தாளர், மருத்துவர் சார்வாகன் நினைவுநாள் இன்று
சார்வாகன் நிறைய சிறுகதைகள் எழுதவில்லை. அதுபற்றி நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ள தொகுப்பின் முன்னுரையில் அவரே இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“நான் உண்மையாக `எழுத்தாளன்’ என்றிருந்தால் இதைப்போல நாலைந்து மடங்கு எழுதிக் குவித்திருக்க வேண்டும். என் கைவிரல்கள் மரத்து மடங்கி விடவில்லையே. ஆகவே, இன்னமும் எழுதிக்கொண்டிருக்கவும் வேண்டும். இரண்டும் நேரவில்லை. நான் அவ்வப்போது ஏதேதோ எழுதியிருந்தாலும் என்னை எப்போதும் ஓர் எழுத்தாளனாகக் கருதிக்கொண்டதில்லை. இப்போதும் கருதிக்கொள்ளவில்லை.
… எனக்கு இன்னும் ஒருகுறை. 1988-ம் ஆண்டில் என்று நினைக்கிறேன். நான் இறந்துவிட்டேன் என்று கேள்விப்பட்டு (உண்மையில் இறந்தது சார்வாகனல்ல. சாலிவாஹணன் என்கிற முந்தின தலைமுறை எழுத்தாளர்) வல்லிக்கண்ணன் ஓர் இரங்கல் கட்டுரை எழுதியிருந்தார். எதில் பிரசுரித்தார் எனத் தெரியவில்லை. அந்த அரிய கட்டுரையைத் தேடுகிறேன்… தேடுகிறேன். இன்னும்தேடிக்கொண்டேயிருக்கிறேன். எனக்குத் தெரிந்து மார் ட்வயின் தவிர, வேறு யாருக்கும் இந்த அரிய பாக்கியம் கிட்டினதில்லை. மிகப்பல வருஷங்களுக்குப் பிறகு வ.க.வைச் சந்தித்தபோது அவரிடம் விசாரித்தேன். நடந்தது பற்றி வெட்கப்பட்டுக்கொண்டாரே தவிர, எங்கே பிரசுரித்தார் என்பது அவருக்கும் நினைவில்லை. அது யாரிடமேனும் இருந்தால் அதையும் அடுத்த பதிப்பில் (அப்படி ஒன்று வருமானால்) சேர்த்துவிடலாம்.”
தன்னை எழுதத் தூண்டியவர் என மூத்த படைப்பாளி தி.க.சி-யை நன்றியுடன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். “எழுதுங்கய்யா” என்று பார்த்தபோதெல்லாம் அவர் தூண்டியிருக்காவிட்டால், நான் இத்தனையாவது எழுதியிருப்பேனா என்பது சந்தேகம்தான் என்று குறிப்பிடுகிறார்.
ஆறு கண்டங்களுக்கும் பயணம் செய்து, பல்வேறு தேசங்களின் தொழுநோயாளிகளின் வாழ்வில் ஒளியேற்றிய அவரது செறிவான அனுபவங்களில் காலூன்றி அவர் எவ்வளவோ எழுதியிருக்கலாம். நமக்குக் கிடைக்கவில்லை. நாம் அவர் வாழும் காலத்திலேயே அவரை இனம்கண்டு வாசித்துக்கொண்டாடியிருக்க வேண்டும். கொள்வார் இல்லாததால் கொடுக்காமல்போன கலைஞன் சார்வாகன். எவருடைய எழுத்தைப்போலவும் இல்லாத தனித்துவத்துடன் மிளிரும் அவரது கதைகளை வாசிக்கையில் இந்த ஏக்கம் நம் மனதில் படர்கிறது. அவர் அளித்துள்ள இந்த 43 சிறுகதைகளும் சிறுகதை வரலாற்றில் நிச்சயம் இடம்பெறுகின்றன.
ஆனால், அவருக்கு இந்த வாழ்க்கையின் மீது எந்தப் புகாரும் இருக்கவில்லை என்பதோடு நிறைவான மனதோடுதான் இந்த உலகிலிருந்து விடைபெற்றுள்ளார். காலச்சுவடு வெளியிட்டுள்ள அவரது தேர்ந்தெடுத்த கதைத்தொகுப்பின் பிற்சேர்க்கையாக ஒரு மருத்துவ ஏட்டில் அவர் எழுதிய கட்டுரையின் பகுதியை வெளியிட்டுள்ளார்கள்.
“1980-களில் பிரேசில் நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த மனாவ்ஸ் என்ற சிற்றூருக்கு WHO குழுவினருடன் சென்றிருந்தேன். அங்கே தொழுநோய் மருத்துவமனை ஒன்று இருந்தது. அங்கு இருந்த நோயாளிகளைப் பரிசோதித்துக்கொண்டிருந்தபோது, மருத்துவர் ஒருவர் தொலைவில் நின்றிருந்த பெண்மணியைச் சுட்டிக்காட்டி “அவர் உங்களைப் பார்க்க வேண்டுமென்று துடிதுடித்துக் கொண்டிருக்கிறார்”என்றார். `இங்கு இருப்பவர்களுக்கு உங்களுடைய அறுவைசிகிச்சை மூலம்தான் சிகிச்சையளிக்கிறோம். பத்து வருடங்களாகச் செயலிழந்திருந்த இந்தப் பெண்ணின் கை, கால்கள் சிகிச்சைக்குப் பிறகு சரியாகியிருக்கின்றன. அதற்குக் காரணமான உங்களுக்கு அவர் நன்றி கூற வேண்டுமாம்” என்றார். அந்தப் பெண்ணிடம் சென்றேன். என்னை அருகில் பார்த்ததும் அவருக்கு சன்னதம் பிடித்ததைபோல ஆகிவிட்டது. எனக்குச் சற்றும் புரியாத போர்ச்சுக்கீசிய மொழியில் என்னென்னவோ பேசினார். கை, கால்களை ஆட்டிக்காட்டினார். என்னைக் கட்டிப்பிடித்தார். என் உடம்பு முழுக்கத் தடவிக்கொடுத்தபடி பாதி அழுகையும், பாதி சிரிப்புமாக ஏதேதோ பிதற்றினார். தென்னிந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் ஆரணி என்ற சிற்றூரில் வளர்ந்த ஒருவனிடம், ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டியுள்ள ஒரு கண்டத்தில் வசிக்கும் ஒரு பெண்மணி அவருடைய வாழ்க்கையை மீட்டெடுத்துத் தந்துவிட்டதாகச் சொல்லி ஆனந்தக் கூத்தாடி நெகிழ்ந்துகொண்டிருக்கிறாள். இதைவிடப் பெரிய விருது எனக்கென்ன வேண்டும்? நான் சரியான வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறேன் என்று அப்போதுதான் உணர்ந்தேன்.”
ஆனாலும் உங்கள் வாழ்வனுபவத்தின் சாரத்தைக் கதைகளாக நாங்கள் பெறவில்லை என்கிற குறை ஒன்றுள்ளது தோழர் சார்வாகன்!
ச.தமிழ்ச்செல்வன்
நன்றி: விகடன்