சுஜாதா கடைசி வரை சமகாலத்தவராகவே வாழ்ந்தார்.
நாலாயிரத் திவ்யப் பிரபந்தமும் , பெரியவாச்சான் பிள்ளையும் , இன்னும் பலப் பல வைணவ இலக்கியங்களும் எனக்கு அறிமுகமானது சுஜாதாவின் மூலமாகத்தான் என்று சொல்லலாம்.
உலக இலக்கியத்தை எவ்வளவு தீவிரமாக வாசிக்கிறேனோ அதே அளவு தீவிரத்துடன் வைணவ இலக்கியத்தை வாசித்து வருகிறேன்.
இதற்கெல்லாம் எனது சாளரங்களைத் திறந்து விட்டவர் சுஜாதா. அவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பற்றியும் , ஆழ்வார்கள் பற்றியும் பேசினாலும் அதெல்லாம் அவரது இலக்கிய அனுபவங்களாகவே இருந்தன. அவருக்கு ஜோதிடம் போன்ற விஷயங்களில் அறவே நம்பிக்கை இருக்கவில்லை. அதையெல்லாம் பற்றி எப்போதுமே அவர் கிண்டலுடனேயே எழுதி வந்தார். ஒரு பிரிட்டிஷ் பிரஜையைப் போலவே அவர் இந்திய மரபை அணுகினார். அவர் படித்த புத்தகங்களைப் படித்து , அவர் காட்டிய திசைவழிச் சென்று நான் ஒரு ஆன்மீகவாதியாகவே மாறிவிட்டேன். இருப்பிடத்தையும் கேசவப் பெருமாள் கோவிலருகே மாற்றிக் கொண்டு விட்டேன். தினமும் எழுந்தவுடன் தர்சனம் தருவது கேசவப் பெருமாளின் திருமுகம்தான்.
சுஜாதாவை நேரில் சந்திக்காமலேயே , அவர் எனது ஆசானாக இருந்து வந்திருக்கிறார் என்பதைக் கூட பிரக்ஞாபூர்வமாக உணராமலேயே நான் அவரிடமிருந்து பலப்பல வருடங்களாக பல்வேறு விஷயங்களைக் கற்று வந்திருக்கிறேன். நான் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவனாதலால் யாரிடமும் வலிய சென்று பார்ப்பதில்லை ; பேசுவதில்லை.
1994- ஆம் ஆண்டு கணையாழி நடத்திய குறுநாவல் போட்டியில் என் கதை முதல் பரிசு பெற்றது. ‘ நினைவுகளின் புதர்ச்சரிவுகளிலிருந்து ‘ என்ற அக்கதை அதே ஆண்டு மே மாத கணையாழியில் வெளிவந்தது. இக்கதையை ஸ்ரீவைஷ்ணவ இனத்தில் பிறந்து வளர்ந்த ஒருவரால்தான் எழுத முடியும் என்பதால் இதைப் படித்த சுஜாதா கணையாழி ஆசிரியர் கஸ்தூரி ரங்கனிடம் ” “சாரு நிவேதிதா என்ற பெயரில் வேறு ஒருத்தரும் எழுகிறார் போலிருக்கிறதே ?” என்று கேட்க , கஸ்தூரி ரங்கன் ” இல்லை அதே சாருநிவேதிதா தான் ” என்று சொல்லியிருக்கிறார். ” அப்படியானால் அவரைச் சந்திக்க விரும்புகிறேன் ” என்று சுஜாதா தெரிவிக்க அவரை நான் நேரில் சந்தித்தேன்.
அது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. சுஜாதாவின் வீடு மாடியில் இருந்தது. வீட்டின் வெளியிலேயே செருப்பைக் கழற்றிப் போட்டு விட்டு பேசிக் கொண்டிருந்தேன்.
திருமதி. சுஜாதாவின் அருமையான காப்பி வந்தது.
பேசி முடித்துவிட்டு வெளியே வந்த போது என் செருப்பைக் காணவில்லை. சுஜாதாவுக்கு ஒரே ஆச்சரியம். ” இப்படி நடந்ததே இல்லை! ” என்று திரும்பத் திரும்ப சொன்னார். “பரவாயில்லை சார்” என்று கூறிவிட்டு செருப்பு இல்லாமலேயே ஆட்டோவில் திரும்பினேன்.
சுஜாதாவுக்கு தமிழ் நாட்டில் எழுத்துச் சுதந்திரம் இல்லை. அவரைத் தமிழ்ச் சமூகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவுமில்லை. மேலும் , கணையாழியில் தெரியும் சுஜாதாவை மிக வசதியாகப் புறக்கணித்த இந்தச் சமூகம் , அவரிடமிருந்து தனக்கு வேண்டியதை மட்டுமே எடுத்துக் கொண்டது.
இவ்வளவு தடைகளுக்கிடையிலும் அவருடைய எழுத்தை கடந்த 45 ஆண்டுகளாக அவருடைய கடைசி தினம் வரையிலும் நம்மால் உற்சாகமாகப் படிக்க முடிந்தது. உதாரணமாக , இப்போது விகடனில் வெளிவரும் வண்ணதாசனின் பத்தியை என்னால் ஒரு வரிகூட படிக்க முடியவில்லை. ஆனால் இலக்கியச் சூழலில் வண்ணதாசன் தான் இலக்கியவாதியாக மதிக்கப்படுபவர் ; சுஜாதாவுக்கு அந்த அங்கீகாரம் கடைசி வரை கிடைக்கவில்லை. இதுதான் தமிழின் நவீன இலக்கியம் உலக அளவில் மிகப் பின் தங்கிய அளவில் இருப்பதன் காரணம். பெரும்பாலான எழுத்தாளர்கள் இன்னும் 60 களிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சுஜாதா கடைசி வரை சமகாலத்தவராகவே வாழ்ந்தார். அவருடைய சமீபத்திய ஒரு கதையில் ஒரு காதலன் காதலியிடம் ‘ ச்சோ ச்வீட் ‘ என்று கொஞ்சுவான். இது இன்றைய இளைஞர்களின் மொழி என்பது சுஜாதாவுக்குத் தெரிந்திருக்கிறது. பல இலக்கியவாதிகள் இதை அறிய மாட்டார்கள்.
சுஜாதா இன்னும் 20 ஆண்டுகள் இருந்திருந்தால் அப்போதும் 2028 இன் இளைஞர்களின் உலகை எழுதியிருப்பார் ; அப்போதும் சமகாலத்தவராக இருந்திருப்பார்.
சுஜாதாவின் மிக வீரியமான பகுதியை தமிழ்ச் சமூகம் கண்டு கொள்ளவே இல்லை என்று குறிப்பிட்டேன். அவருடைய கணையாழி கடைசிப் பக்கங்கள் தொகுக்கப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியும் சுஜாதாவின் இரங்கல் கூட்டத்தில் பேசிய கணையாழி ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் கடைசிப் பக்கங்களெல்லாம் தொகுக்கப் பட வேண்டும் என்று குறிப்பிட்டார். ஹிந்து பத்திரிகையும் அதையே எழுதியிருந்தது. வெகுஜனப் பத்திரிகைகளில் வராத சுஜாதாவின் சீரியஸ் எழுத்துக்கள் ஒரு சில ஆயிரம் பிரதிகளே விற்பதும் இதற்கு ஒரு எடுத்துக் காட்டு.
வெகுஜன சினிமா மற்றும் பத்திரிகைகளை தாக்குவதை சுஜாதா 40 ஆண்டுகளுக்கு முன்பே செய்ய ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகள் வரை செய்து கொண்டிருந்தார். அவருடைய கடும் விமர்சனங்களுக்கும் , கேலிக்கும் ஆளாகாத ஆளே இல்லையோ என்று சொல்கிற அளவுக்கு எழுதியிருக்கிறார். மொத்தம் 540 பக்கங்கள் வரக்கூடிய ‘ கணையாழி கடைசிப் பக்கங்கள் ‘ என்ற அந்தப் புத்தகம் முழுவதையும் இதற்கு நான் உதாரணமாகக் கூறலாம்.
– சாருநிவேதிதா