மரப்பாச்சி –12 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

 மரப்பாச்சி –12 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 12

      மூன்று நாட்கள் கழிந்திருந்தது.. மாடியிலிருந்து பள்ளிச் சீருடையில் இறங்கி வந்து கொண்டிருந்தாள் ப்ரியா.. அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பிருந்தா..

“என்னம்மா அப்படிப் பார்க்கறீங்க?”

“என் கண்ணே பட்டுடும் போலிருக்கு, அவ்வளவு அழகு என் ப்ரியாக் குட்டி..”

“போங்கம்மா” என்றவள் டைனிங் டேபுள் சென்று காலை உணவை உண்டாள்.. புத்தக மூட்டையை தூக்கியவள்..

“அம்மா போயிட்டு வர்றேன்..” என்று கிளம்பவும்.. காலை பேப்பரை மேய்ந்து கொண்டிருந்த மணிவண்ணன் காதுகளில் அந்த ‘அம்மா போயிட்டு வர்றேன்’ என்ற வார்த்தை விழவும் திடும் என்று நிமிர்ந்தார்..

“ப்ரியாக்குட்டி இப்ப என்ன சொல்லிச்சு..”

“அம்மா ஸ்கூலுக்குப் போயிட்டு வர்றேன்னு சொன்னேன்.. சாரி அப்பா ஸ்கூலுக்குப் போயிட்டு வர்றேன்..” என்று வெளியே கிளம்பினாள் ப்ரியா.. அர்த்தம் பொதிந்த பார்வை ஒன்றை பிருந்தாவின் மேல் வீசினார் மணிமாறன்.. கணவனின் பார்வையில் அர்த்தம் புரிந்தவள் கூறினாள்..

“ஆமாங்க அவ சித்தியா இல்லை என்னை அம்மாவாவே ஏத்துக்கிட்டா..”

பிருந்தாவை அருகில் வந்து அமரச் சொன்னார் மணிமாறன்.. அருகில் அமர்ந்தாள் பிருந்தா.. அவள் கைகளை தன் கைகளில் ஏந்திக் கொண்டவர் கூறினார்…

“தேங்க்ஸ் பிருந்தா..”

“ஐயய்யோ தேங்க்சா.. நன்றி சொல்லி அன்னியப்படுத்தாதீங்க இது என் கடமை, நான் பொறுமையா இருந்தேன், ப்ரியா என்னை புரிஞ்சுக்கிட்டா, அவ்வளவுதான்” என்றாள் பிருந்தா..

      வருடம் இரண்டு ஓடியிருந்தது.. ப்ரியா பிருந்தாவிற்கு சொந்த மகளாகவே ஆகிப்போயிருந்தாள், இயற்கை ப்ரியாவை அழகிய ஒரு சிற்பம் போல் செதுக்கியிருந்தது.. வயதுக்கு மீறிய வளர்ச்சியில் ஜொலித்தாள் ப்ரியா. . மேட்ரிமோனியில் பார்த்த ஒரு வரன் செட்டாக, மூத்த தங்கையின் திருமணம் இனிதே நிறைவேறியிருந்தது.. இளையவளுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர்..

      மாலை மணி ஏழு சோபாவில் அமர்ந்து டிவியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தார் மணிமாறன், தயங்கியபடி அவர் முன் வந்து நின்றான் டிரைவர் காளிராஜ்..

“என்ன காளி நேரமே கிளம்பணுமா? இன்னிக்கு எங்கயும் அவுட்டிங் இல்லை நீ கிளம்புறதா இருந்தா கிளம்பு..”

“அது இல்லையா..” இழுத்தான்.

“சொல்லுப்பா எதுன்னாலும் தயங்காமச் சொல்லு..”

“ஐயா நான் கேட்கப் போறதை கேட்டு நீங்க கோபப்படக்கூடாது.. நீங்க முடியாதுன்னு சொன்னா நான் அதைக் கண்ணை மூடிக்கிட்டு கேட்டுப்பேன்..”

“சரி கோபப்படமாட்டேன் சொல்லு..”

“அம்மாவையும் கொஞ்சம் கூப்பிடுங்க இது அவங்களும் சம்பந்தப்பட்ட விஷயம்..” காளிராஜ் கூறவும் பிருந்தாவிற்கு குரல் கொடுத்தார் மணிமாறன்.

சில வினாடிகளில் அங்கே தோன்றினாள் பிருந்தா..

“சரி பிருந்தாவும் வந்துட்டா, நீ சொல்ல வந்ததைச் சொல்லு..”

“ஐயா திரும்பவும் கேட்கறேன் நீங்க என்னை மன்னிக்கணும்..”

“இதையேத்தான் திரும்பத் திரும்பச் சொல்லுறியே தவிர விஷயத்துக்கு வரமாட்டேங்கற..”

தயங்கியவனை ஊக்குவித்தாள் பிருந்தா..

“காளி தயங்காம சொல்லுங்க..”

“ஐயா நான் ஒரு பொண்ணைக் காதலிக்கறேன்..”

“ஃபூ.. இவ்வளவுதானா இதுக்குத்தான் இவ்வளவு நீட்டி மொளங்கினியாக்கும்?, பொண்ணு யாருன்னு சொல்லு போய் பொண்ணு கேட்போம், குடுக்கலைனா ரெஜிஸ்டர் ஆபீசுக்குப் போய் ரிஜிஸ்டர் பண்ணிக்குவோம், ஏன்னா ரிஜிஸ்டர் நமக்கு இப்ப ரொம்ப தோஸ்து..” என்று பிருந்தாவைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினார் மணிமாறன். அவள் முகம் சற்றுச் சிவந்தது..

“சரிங்க நீ லவ் பண்ணுற ஓகே, அந்தப் பொண்ணும் உங்களை லவ் பண்ணுதா?” பிருந்தா கேட்டாள்.

“பண்ணுதுங்க..”

“அப்புறம் என்னப்பா காளி, கல்யாணத்தை முடிச்சிருவோம்”

“அதுக்கில்ல ஐயா உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணிட்டனோன்னு மனசு கெடந்து தவிக்குது..”

“நீ என்ன சொல்ல வர்ற?”

“திரும்பவும் நீங்க என்னை மன்னிக்கணும்.. நான் லவ் பண்ணுறது பிருந்தா அம்மாவோட தங்கச்சி கார்த்திகாவை..”

      பிருந்தாவும், மணிமாறனும் ஒரு சேர அதிர்ச்சியில் விழுந்தனர்.. ஒரு கணம் இருவரிடமிருந்தும் வார்த்தைகள் எழவில்லை, காளிராஜ் இப்படி ஒரு காரியம் செய்வான் என்று அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. மணிமாறன் செல்லை உயிர்ப்பித்து பிருந்தாவின் தங்கை கார்த்திகாவிற்கு போன் செய்தார்.. மறுமுனையில் கார்த்திகாவும் அவர்கள் காதலை ஒத்துக் கொண்டாள்.  நிமிட நேர அமைதிக்குப் பின் மணிமாறன் பிருந்தாவிடம் கூறினார்..

“பிருந்தா உன் தங்கச்சியும் ஒத்துக்கிட்டா.. இது உன்னோட தங்கச்சி வாழ்க்கை நீதான் முடிவு பண்ணணும்..”

“நான் என்னங்க முடிவு செய்யுறது, இப்ப குடும்பத்துல நீங்க எடுக்கிறதுதான் முடிவு, இதுக்கு நீங்களே ஒரு முடிவு சொல்லிடுங்க..”

“காளி.. இது அவசரகதியில வந்த காதல் இல்லையே?”

“இல்ல ஐயா, அவளை நான் நல்லா வச்சுக் காப்பாத்துவேன்..”

“சரி ஒனக்கு அப்பா, அம்மா கிடையாது, சொந்த பந்தத்தை கூட்டிட்டு வா பேசி கல்யாணத்தை முடிச்சிடுவோம்..”

“எனக்கு ஒங்களைவிட்டா ஏது ஐயா சொந்த பந்தம், நீங்க முடிவு பண்ணுங்க நான் ஏத்துக்கறேன்..”

      அங்கயே முடிவு செய்யப்பட்டது, காளிராஜ் – கார்த்திகா திருமணம். பிருந்தாவின் தாய், தந்தையும் எந்த எதிர்ப்பும் கூறவில்லை, அடுத்த மூகூர்த்தத்திலேயே காளிராஜ் கார்த்திகாவின் கழுத்தில் தாலிகட்டி தம்பதியாகினர்.

      சிறியதாக தனிவீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொடுத்தார் மணிமாறன். பிருந்தாவின் அடுத்த சுமையும் இறங்கிக் கொண்டது!

      காளிராஜ் கார்த்திகா திருமணம் முடிந்து ஒருவாரம் ஓடியிருந்தது, ப்ரியா கேட்டாள்..

“டாடி ஸ்கூல் ஒருவாரம் லீவ் எங்கயாவது அவுட்டிங் போயிட்டு வரலாமா?” அவள் கேட்கவும்..

“ஆமாங்க வீட்டுலேயே இருந்து மூச்சு முட்டுது எங்கயாவது போகலாம்..” பிருந்தா கூற கொடைக்கானல் செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது. புதுக்கல்யாணம் என்பதால் காளிராஜை டிரைவராக்காமல், கேப் புக் செய்து கிளம்பினர் அவர்கள்..

கொடைக்கானல் இதமான சீதோஷ்ண நிலையில் இருந்தது. பகல் முழுவதும் சுற்றி களைப்பில் காட்டேஜில் ஹீட்டரின் கதகதப்பில் பிஸ்கட்டை கடித்துக் கொண்டு டீ பருகிக் கொண்டிருந்தனர் மணிமாறன், பிருந்தா, ப்ரியா மூவரும்.. டீயை இரண்டு மடக்கு குடித்த ப்ரியா.. ‘ஓவ்வ்.’ என்று வாந்தியெடுத்தாள்..

“என்னம்மா.. என்னம்மா..” என்று பதறினார் மணிமாறன். மீண்டும் வாந்தியெடுத்தாள் ப்ரியா. மதியம் சாப்பிட்ட நான்வெஜ் ஒத்துக்கலை போல.. என்று பிருந்தா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே மயங்கிச் சாய்ந்தாள் ப்ரியா..

“ட்ரைவர்..” ஒருகணம் கத்தியே விட்டார் மணிமாறன். அவரின் குரல் கேட்டு ஓடி வந்தான் அந்த கேப் டிரைவர்.

“டிரைவர் வண்டியை ஸ்டார்ட் பண்ணு.. என் பொண்ணு மயக்கப் போட்டுட்டா..”

டிரைவர் மின்னல் வேகத்தில் அந்த இனோவாவை காட்டேஜின் முன் கொண்டு வந்து நிறுத்தினான்.. மகளை ஒரு புஷ்ப மூட்டை போல் தூக்கி வண்டியில் கிடத்தியவர், ஓட்டலில் விசாரித்து நகரில் சிறந்த மருத்துவமனைக்கு வண்டியை விடச் சொன்னார்.

அந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை. மருத்துவர் அங்கயர்கன்னி 50 வயதில் வெள்ளரிப்பழம் போல் இருந்தாள்.. அவர் முகத்தில் புன்னகை இல்லாமல் இறுகிப் போய் இருந்தது..

பதட்டத்தில் இருந்த மணிமாறன் வினவினார்.. “மேடம் என் பொண்ணுக்கு ஒண்ணும் இல்லையே..”

அவரை ஒரு கோபப் பார்வை பார்த்தாள் டாக்டர் அங்கயர்கண்ணி..

“சொசைட்டியில நல்ல லெவலுல இருக்கற நீங்க எல்லாம் குழந்தை வளர்ப்புல மகாமோசமா இருக்கறீங்க”

“என்ன மேடம் சொல்லுறீங்க?, நாங்க குழந்தையை ஒழுங்கா வளர்க்கலையா?”

“பின்ன என்னங்க.. 14 வயசுல ஒரு பொண்ணு கர்ப்பமா இருந்தா அந்த அப்பா, அம்மா வளர்ப்பு சரியில்லைதானேன்னு அர்த்தம்..”

ஒரு பொக்ரான் குண்டு வெடித்துச் சிதறியது மணிமாறன் தலையில். அப்படியே தரையில் சரிந்து அமர்ந்தாள் பிருந்தா.. அவளுக்கு நினைவு தப்பிச் சென்று கொண்டிருந்தது!
(- தொடரும்…)

முந்தையபகுதி – 11 | அடுத்தபகுதி – 13

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...