மரப்பாச்சி –11 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

 மரப்பாச்சி –11 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் 11

மாதம் மூன்று ஓடி மறைந்திருந்தது. எந்த ஒரு திருப்பமும் இன்றி இயல்பாய் ஓடி மறைந்ததிருந்தது அந்த மூன்று மாதங்களும். ப்ரியா தாமரை இலை தண்ணீர் போல் தான் அவளிடம் பழகினாள். பிருந்தா கேட்பதற்கு பதில் கூறுவாள். மற்றபடி அவள் உண்டு அவள் வேலை உண்டு என்றிருப்பாள். பிருந்தாவிடம் பகைமை பாராட்டுவதும் இல்லை உறவு கொண்டாடுவதும் இல்லை. இது மட்டும் பிருந்தாவின் மனதை உறுத்திக் கொண்டிருந்தது. வீட்டிலிருக்கும் தன் கணவனின் மகள் தன்னிடம் நெருங்காமல் தன்னை விலக்கி வைத்திருப்பது அவளை சோர்வடைய வைத்தது.ஆனால் அவள் மனம் கூறிக்கொண்டது..’வயதும் காலமும் அவளுக்கு உணர்த்தும் அன்று அவள் தன்னை தாயக ஏற்றுக் கொள்வாள்’ என்று.

      அன்று அலுவலகத்தில் வேலையில் பிருந்தா மூழ்கியிருந்த நேரம் அவள் செல்போன் அவளை அழைத்தது. எடுத்துப் பார்த்தாள்.. ப்ரியாவின் பள்ளிக்கூடத்தின் எண். ‘ஏன் பள்ளிகூடத்திலிருந்து அழைப்பு’ என்று எண்ணியபடி ஆன்சர் பட்டனைத் தேய்த்து காதில் வைத்தாள். மறு முனையில் ப்ரியாவின் பள்ளியின் பிரின்சிபாலின் குரல்..

      “மேடம் சொல்லுங்க” என்றாள். அவள் கூறிய விஷத்தைக் கேட்ட மறுகணம் பிருந்தாவின் முகம் சந்தோஷத்தில் விழுந்தது. பிரின்சிபால் கூறியது ‘ப்ரியா பெரிய பெண் ஆகிட்டா வந்து கூட்டிட்டுப் போங்க’ என்பது தான். பிரின்சிபாலுக்கு நன்றி கூறி உடனே வருவதாக கூறிவிட்டு செல்லை அணைத்தாள். அடுத்து இந்த சந்தோஷ விஷயத்தை தெரிவிக்க கணவைத் தொடர்பு கொண்டாள். ஆனால் அவர் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக ரெக்கார்டட் வாய்ஸ் மீண்டும் மீண்டும் கூறியது. அப்பொழுது தான் அவள் மூளைக்கு உறைத்தது கணவன் ஒரு அரசு நில அளவை விஷயமாக ஒரு கிராமத்திற்குச் செல்வதாக கூறியிருந்தது. மாசிலாமணியிடம் விபரத்தைக் கூறினார். ஒரு மலர்ச்சிக்கு சென்றவர் “மணிமாறன் வர நேரமாகும் நீ உடனே ஸ்கூலுக்குக் கிளம்பி குழந்தையை அழைச்சிட்டு வா. குழந்தை பயந்து போய் இருக்கும். அவருக்கு தகவல் சொல்லிட்டியா?”.

“அவர் செல் நாட் ரீச்சபிள்னு வருது”

“நீ கிளம்பும்மா” என்றவர் அவள் கிளம்ப கால் டாக்சி அழைப்பதாகக் கூறினார்.

“வேண்டாம் சார் அவரு டிபார்ட்மண்ட் வண்டியில போயிருக்கறார் வீட்டுல கார் ஃப்ரீயாத்தான் இருக்குது. நான் காளிராஜை வரச் சொல்லுறேன்”. என்றவள் செல்லை எடுத்து அவர்கள் கார் ட்ரைவர் காளிராஜிடம் விஷயத்தைக் கூறி ஆபீசுக்கு வரச் சொன்னாள்.

      உயர் குடியினர் பிள்ளைகள் படிக்கும் லட்சக் கணக்கில் ஃபீஸ் வாங்கும் பள்ளிகூடம் அது. வாசலில் காரை நிறுத்தினான் காளிராஜ். பிருந்தா இறங்கி வாட்ச்மேனிடம் விபரத்தைக் கூறினாள். அவன் பிரிசிபால் அறை செல்லும் வழியைக் காட்டினான். சில நிமிட நடை பிரின்சிபால் அறைக்குள் நுழைந்தாள். அவள் வரவுக்குக் காத்திருந்த அந்த ஐம்பது வயது பிரின்சிபால் பிரியதர்ஷிணி லேசாக நரைக்கத் துவங்கிய தன் தலைக்கு டை அடைத்து இளைமையாக காட்ட முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

“வாங்க மேடம்” என்று முகமன் கூறினாள் பிரின்சிபால்.அறையின் ஓரத்தில் ஒரு நாற்காலியில் பதற்றமும் பயமும் விரவிய முகமாய் அமர்ந்திருந்தாள் ப்ரியா. அருகில் சென்று அவள் தலை தடவினாள் பிருந்தா. எழுந்தவள் அவளுடன் ஒட்டிக் கொண்டாள். பிரிசிபாலிடம் விடை பெற்று ப்ரியாவுடன் வீட்டிற்குக் கிளம்பினாள்.

      காரில் வரும்போதே அவள் பயம் போக அவளை ஆதரவாய் தன் தோள் மீது அவளை சாய்த்துக் கொண்டாள் பிருந்தா. பெண்கள் பூப்பெய்துவதை அவளுக்கு ஒரு ஆசிரியை பாடம் எடுப்பது போல் விளக்கினாள். அவள் விளக்கத்தில் சிறிது பயம் தெளிந்திருந்தாள் ப்ரியா. ஆனாலும் முகத்தில் வலியின் குறி. கார் வீடு வந்து சேர்ந்திருந்தது.

      ப்ரியாவை பாத்ரூம் அழைத்துச் சென்று மஞ்சள் பூசி குளிப்பாட்டினாள். தன் தாய்க்குப் பிறகு ஒரு பெண் தன் குளியலறையில் முதல் முறை இருப்பது அவளுக்கு என்னவோ போல் இருந்தது. ஆனால் அவளால் பிருந்தாவை வெளியே போகச் சொல்ல முடியவில்லை. பிருந்தாவின் அண்மை அப்பொழுது தேவைப்பட்டது அவளுக்கு. மஞ்சளில்  குளித்தவளை ஷவரின் கீழ் நிற்க வைத்தாள். காரில் வரும் பொழுதே சுந்தரத்திடம் புது பாவடை சட்டை எடுத்து வரச் சொல்லியிருந்தாள். அந்த உடையை உடுக்க வைத்தாள். எந்த அருவருப்பும் பாராமல் தன் அந்தரங்கங்களை தொட்டு சுத்தப்படுத்தி. மகிழ்ச்சி பொங்க தன்னை அலங்கரிக்கும் அந்த பெண்மணியை முதல் முறையாக சற்று பாசம் பொங்கப் பார்த்தாள் ப்ரியா.

“என்னம்மா அப்படிப் பார்க்கற?”

“என்னைத் தொட்டு சுத்தப் படுத்தி, குளிப்பாட்டி விட உங்களுக்கு அருவருப்பா இல்லையா?”

“என்னம்மா இது அருவருப்பா? இது பொண்ணுங்களோட வாழ்வுல ஒரு முக்கியமான தருணம். உன்னோட அம்மா இருந்து பண்ண வேண்டியது அந்தப் பாக்கியம் உனக்குக் கிடைக்கலை. உங்க அம்மா இருந்து இப்படிச் செய்திருந்தா இப்படி ஒரு கேள்வியை கேட்டிருப்பியா? இது என் கடமைமா. இப்படி ஒரு நேரம் வரும் அப்போ உனக்கு ஒரு துணை வேணும்னு தான் உங்க அப்பா என்னை கல்யாணம் பன்ணிக்கிட்டாரு”

பிருந்தாவை ப்ரியா அப்பொழுது பார்த்த பார்வையில் பாசமும் கூடவே நன்றி உணர்வும் கலந்திருந்தது.

சுந்தரம் மற்ற எல்லா வேலையயும் செய்து முடித்திருந்தான். பச்சரிசி மாவில் வெல்லம் கலந்து உருண்டை பிடித்து நல்லெண்ணையுடன்  கொடுத்தாள். ப்ரியாவை சாமிப் படத்தின் முன் அமர வைத்து விட்டு கணவனுக்குப் போன் செய்து பார்த்தாள். இன்னமும் நாட் ரீச்சபிளாகவே இருந்தது மணிமாறனின் செல்போன். இந்த நல்ல விஷத்தை கணவனிடம் சொல்ல விடாமல் சதி செய்தது செல்போன் அந்நேரம்.

      காலண்டரை எடுத்து நல்ல நேரம் பார்த்தாள். பிரின்சிபால் கூறிய பூப்பெய்திய நேரத்தைப் மனதில் ஓடவிட்டுப் பார்த்தவள் முகம் சுருங்கியது. ப்ரியா ருதுவான நேரம் ராகு காலம். அது மட்டும் அவளுக்கு ஒரு நெருடலாய் அமைந்தது அந்நேரம்.

      அவள் வீட்டிற்குப் போன் செய்து ப்ரியா பூப்படைந்த செய்தியைக் கூறினாள். அவள் குடும்பம் மகிழ்ந்தது அந்தச் செய்தியில். அவர்கள் உடனே கிளம்பி வருவதாக் கூறவும் செல்லை அணைத்தாள். அடுத்த வினாடி அவள் செல்போன் அழைத்தது. திரையில் ஒளிர்ந்த எண்ணைக் கண்டவள் முகம் பிரகாசித்தது. அது கண்வனின் அழைப்பு.

“பிருந்தா.. மிஸ்ட் கால் அலார்ட் பார்த்தேன் ஏன் இத்தனை மிஸ்ட் கால் எதாவது அவசரமா?”

“அவசரம் இல்லை ஆனந்தம் எல்லா நல்ல செய்தி தான்”

“சஸ்பென்ஸ் வைக்காதே சொல்லு”

“ப்ரியா பெரிய மனுஷி ஆயிட்டா”

மறு முனையில் மணிமாறன் மகிழ்ச்சியில் திக்கு முக்காடினார்.

“ச்சே..இன்னிக்குப் பார்த்து இண்டீரியரா ஒரு கிரமத்துல மாட்டிக்கிட்டேன் அங்க டவரே இல்லை.பிரியா நல்லா இருக்கறா இல்ல?”

“நல்லா இருக்கறா ஸ்கூலுல இருந்து அழைச்சிட்டு வந்து செய்ய வேண்டியதெல்லம் நல்லபடியா செய்துட்டேன், நீங்க இல்லாததுதான் குறை”

“நான் இன்னும் அரை மணி நேரத்துல வந்திருவேன். தேங்க்ஸ் பிருந்தா”

“தேங்க்ஸா எதுக்குங்க ஒரு அம்மா தன் பொண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமையை நான் செய்திருக்கிறேன் அவ்வளவுதான்”

“ஆனா பிரியா உன்னை அம்மாவா இன்னும் ஏத்துக்கலியே?”

“ஏத்துக்குவாங்க..அதுக்காக நான் காத்திருக்கிறேன்.அதெல்லாம் இப்ப எதுக்கு நீங்க சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேருங்க”

“சரி வந்துட்டே இருக்கறேன்” என்றவர் தொடர்பை துண்டித்தார்.

      ஒரு பெற்ற தாய்க்கு மேல் பிரியாவை கவனித்துக் கொண்டாள் பிருந்தா. அவள் சந்தோஷமாய் தனக்காக இயங்குவதை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் பிரியா. ’நான் வெறுத்து ஒதுக்கிய பெண் எந்த வெறுப்பும் அருவெருப்பும் படாமல் தன் உடலை சுத்தப் படுத்தி,சானிடரி நாப்கின் மாட்டி விட்டு.தன்னைத் தொட்டு குளிப்பாட்டி’ இப்பொழுது அவள் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.

      மணிமாறன் வீடு வந்து சேர்ந்திருந்தார். பிருந்தாவின் தாய்,தந்தை, தங்கைகள் வந்து சேர்ந்திருந்தனர். மாசிலாமணி மனைவியுடன் வந்திருந்தார். பிருந்தாவின் தோழி மலர்வதி கணவனுடன் வந்திருந்தாள். அவர்கள் முன்னிலையில் ப்ரியாவின் தலைக்கு தண்ணி ஊற்றும் வைபவம் எளிமையாக நடந்தது முடிந்தது.

      இரவு ப்ரியாவுடன் பெட்ரூமிற்குள் நுழைந்தாள் பிருந்தா. உள்ளே சென்றவள் வழக்கம் போல தன் கம்பளியை தரையில் விரித்தவள் கூறினாள்..

“ப்ரியா பெட்டுல படு தரையில படுத்தா உடம்பு வலிக்கும்” கூறியவள் மகள் கை பிடித்து அவளை பெட்டில் கிடத்தினாள். கட்டிலில் இருந்து எழுந்த ப்ரியா பிருந்தா தரையில் விரித்த கம்பளி தலையணையை எடுத்து கட்டிலில் வைத்தாள்.. மகளை வியப்பாய் பார்த்தாள் பிருந்தா.

“அம்மா வாங்க வந்து பெட்டுல படுங்க”

குபுக்கென்று அவள் கண்ணில் கண்ணீர் கட்டிக்கொண்டது..

“என்னம்மா சொன்ன திருப்பிச் சொல்லு”

“அம்மா வந்து கட்டுலுல படுங்கன்னு சொன்னேன்..”

      அப்படியே பிரியாவை கட்டியணைத்தவள் கட்டுப்படுத்த முடியாத ஆனந்தத்தில் ஓ வென்று அழ ஆரம்பித்தாள். தாய் ஏன் அழுகிறாள் என்பது ப்ரியாவிற்கு தெரிந்தது. பிருந்தாவை அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் அவள்.கரைந்து போனாள் பிருந்தா. அந்த முத்ததில் எத்தனை அன்பு கலந்திருந்தது என்பது அவளுக்கு புரிந்தது.இது ஒரு மகள் தன் தாய்க்கு கொடுத்த அனபு முத்தம்.’இவள் என்னை தாயாக ஏற்றுக் கொண்டுவிட்டாள். நீண்ட நாள் மன பாரம் நீங்கியவள் மகளுடன் கட்டிலில் படுத்தாள்.மிக இனிய இரவாய் மறியிருந்தது அந்த இரவு இருவருக்கும்.

– ( தொடரும்…)

முந்தையபகுதி 10 | அடுத்தபகுதி – 12

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...