மரப்பாச்சி –10 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

 மரப்பாச்சி –10 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 10

ட்டிலில் வெட்கம் முகத்தில் கோட்டடிக்க அமர்ந்திருந்தாள் பிருந்தா.. தலைகுனிந்திருந்தவள் முகம் நிமிர்த்திக் கேட்டார் மணிமாறன், “நான் வயசானவன் இல்லையே?” செல்லமாக அவர் மார்பில் குத்தியவள், அவர் மார்பில் சாய்ந்தாள். மணிவண்ணன் பேசினார்.. “பிருந்தா நாம இப்ப ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..”

“பேசுங்க கேட்கறேன்..”

“நம்ம தாம்பத்யம் இங்க தொடங்குது.. நமக்குள்ள தாம்பத்யம் உண்டு ஆனா நமக்கு குழந்தை வேண்டாம்..”

அதிர்ந்தவள் தன்னையறியாமல் எழுந்துவிட்டாள்.. “என்னங்க சொல்லுறீங்க?”

“ஆமாம் பிருந்தா, நமக்கு இனி குழந்தைகள் வேண்டாம், இது ஒரு பொண்ணுக்கு அதிர்ச்சியாத்தான் இருக்கும் ஆனா அதை நீ தாங்கித்தான் ஆகணும், எனக்கு என் வாழ்வுல ஒரே பிடிப்பு என் பொண்ணுதான், என் மனைவி இறந்து போனப்ப அவ கூடவே செத்துப் போயிடணும்னுதான் நான் நெனைச்சேன், ஆனா அந்த எண்ணத்தை என்னை மாற்றச் செய்ததே ப்ரியாவோட முகம்தான், அவ மட்டும் இல்லாம இருந்திருந்தா என் மனைவியோட நானும் சேர்ந்து போயிருப்பேன், இப்ப நான் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டதும் அவளுக்காகத்தான். அதுக்காக உன் உணர்ச்சிகளை கொன்னுட்டு நீ என்னோட வாழணும்னு நான் சொல்லக்கூடாது அது பாவம், அதனாலதான் சொல்லுறேன் நமக்குள்ள தாம்பத்யம் உண்டு, குழந்தை கிடையாது..”

பிருந்தாவின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து பெட்டை நனைத்தது.. கண்களை துடைத்துவிட்டுக் கூறினாள்..

“ஒரு பாக்யராஜ் படத்துல அவர் எல்லார்கிட்டயும் ஒரு கேள்வி கேட்பார் அது ஒரு பெண் எப்பொழுது முழுமை அடைகிறாள்னு.. ஆளாளுக்கு ஒரு பதில் சொல்லுவாங்க, கடைசியில அவரே அதுக்கு விடை சொல்லுவார்.. அந்த விடை ‘ஒரு பெண் முழுமை அடையிறது அவள் தாயாகும் பொழுது’ அப்படின்னு. ஒரு குழந்தையை வயிற்றுல சுமந்து வலி பொறுத்து பெற்றெடுக்கும் பொழுதுதான் ஒரு பெண் முழுமை அடைவா, அந்தப் பாக்கியம் ஒவ்வொரு பொண்ணும் விரும்புறது, என்னை ஒரு மரப்பாச்சின்னு கூப்பிடுவாங்க, நான் ஒரு குழந்தையைப் பெற்று கொளு கொளுன்னு வளர்த்து, பாருங்கடா இந்த மரப்பாச்சி பெத்த புள்ளையனு இந்த உலகத்துக்கு காமிக்கணும்னுங்கறது  என்னோட ஆசை அதுக்கு வழியில்லைனா எதுக்கு இந்த வாழ்க்கை..”

“பிருந்தா நீ உன் தரப்பு வாதத்தை வைக்கற, என் தரப்பு வாதத்தை நீ கேளு, நூத்துக்கு தொண்ணுறு சதவீத இரண்டாம் தாரமாய் வாக்கப்பட்ட பெண்கள் மொதல்ல நல்லவங்களாவே இருக்கறாங்க, எப்ப தனக்குன்னு ஒரு குழந்தை பொறக்குதோ அப்பத்தில இருந்து முதல் தாரத்துக் குழந்தையை அவ இரண்டாம் பட்சமா நடத்த ஆரம்பிப்பா, அந்த மாதிரி ஒரு நிலமை என்னோட மகளுக்கு வரக்கூடாது, அதுக்காக நான் உன்னை கொடுமைக்கார சித்தின்னு சொல்ல வரலை, அந்த மாதிரி நிலைக்கு உன்னை நான் ஆளாக்கிடக் கூடாது பாரு” மணிமாறன் குரலில் இருந்த உறுதி அவளை மேற்கொண்டு தர்க்கம் செய்யவிடவில்லை..

“சரிங்க இதுக்கு காலம் பதில் சொல்லட்டும், சரி நாளைல இருந்து வேலைக்குப் போகணும் இல்ல..”

“ஆமாம், நான் சம்பாதிக்கிறதே அதிகம் நம்ம குடும்பத்துக்கு, நீ இனி வேலைக்குப் போகணுமா?”

“கண்டிப்பா போகணுங்க, எங்க வீட்டுக்கு நான்தான் ஆதாரம், என்னோட சம்பாத்தியத்துலதான் குடும்பம் நடக்குது, அப்பாவோட பென்ஷன் ரொம்பக் கம்மி,  எனக்குக் கீழே ரெண்டு தங்கச்சிங்க அவங்களுக்கு கல்யாணம் நடக்கணும்னுதான் நான் இப்படி அவசரக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதனால என் தங்கச்சிகளுக்கு கல்யாணம் நடக்கற வரை நான் வேலைக்குப் போய்த்தான் ஆகணும்”

அவள் வார்த்தைகளின் உண்மை அவரை யோசிக்க வைத்தது.

“ஓகே பிருந்தா உன் தங்கச்சிங்க கல்யாணம் முடியறவரை நீ வேலைக்குப் போகலாம், அவங்க கல்யாணம் முடிஞ்சதும் நீ வேலையை மறந்திடணும்”

“ஓக்கேங்க” என்றாள் பிருந்தா.

“அப்ப உடனே தரகரையோ மேட்ரிமோனியல்லயோ விளம்பரம் குடுத்து அவங்களுக்கு தகுதியான மாப்பிள்ளைகளை பார்க்க ஆரம்பிப்போம்”

மணிமாறன் ‘பார்ப்போம்’ என்று கூறியதைக் கேட்ட பிருந்தாவின் உள்ளம் பூரிப்படைந்தது.கணவனின் ஒரு நிபந்தனை மட்டும் அவளை சோர்வடைய வைத்தது.தன் தங்கைகளை கரை சேர்க்க கணவனும் கை கொடுப்பான் எனபதை உணர்ந்ததும் சோர்ந்த அவள் உள்ளம் அப்பபொழுது தெம்படைந்தது.

     மதிய உணவை முடித்து ஒரு குட்டித் தூக்கத்தைப் போட்டு எழுந்தனர். எழுந்ததும் சுந்தரம் சுவையாக தேநீர் போட்டுக் கொடுத்தான். அவர்கள் தேனீரைப் பருகிக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில் வீட்டின்  முன் அந்த கால் டாக்சி வந்து நின்றது. அரவம் கேட்டு வெளியே சென்று பார்த்தாள் பிருந்தா. மறுகணம் அவள் முகம் மகிழ்ச்சியில் பொங்கியது. அங்கே அவள் தாய்,தந்தை,தங்கைகள் காரிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தனர். ஓடிச் சென்று தாயைக் கட்டிக் கொண்டாள் பிருந்தா. சந்தோஷ உணர்ச்சியில் அவளால் பேச முடியவில்லை. தாய்,தந்தை இவ்ளவு விரைவில் சமாதானம் ஆவார்கள் என்று அவள் நினைக்கவில்லை. அந்நேரம் மணிமாறனும் வெளியே வந்திருந்தார். பிருந்தாவின் தந்தையின் கை பிடித்துக் கூறினார் “இவ்வளவு சீக்கிரம் நீங்க கோபம் தெளிஞ்சு வீட்டுக்கு வருவீங்கன்னு நான் நெனைக்கலை”

“கோபம் எல்லாம் இல்லை மாப்பிளை” என்றவர் நாக்கைக் கடித்துக் கொண்டார்.

“சாரி சார் நான் உங்களை மாப்பிள்ளைனு கூப்பிடலாம் இல்ல?”

“என்ன மாமா நீங்க? உங்க பொண்ணுக்கு நான் தாலி கட்டிட்டேன், என்ன உங்க கிட்ட கேட்காம நாங்க கல்யாணம் பண்ணிட்டோம் அது தப்பு தான், ஆனா நான் தான் உங்க வீட்டோட முதல் மாப்ப்பிள்ளை. இவளுங்க என் கொளுந்தியாக்கள். என்னை நீங்க மாப்பிள்ளைனு தான் கூப்பிடணும். இதுல எந்த மாற்றமும் கிடையாது. சமூகத்துல நான் ஒரு பெரிய அரசு அதிகாரி, மத்தபடி நானும் ஒரு சராசரி மனுஷன் அவ்ளவுதான். எனக்கு நெருங்கின சொந்தம்னா ஒரே ஒரு அக்கா மட்டும் தான் அவளும் அமெரிக்காவுல செட்டில் ஆயிட்டா. இப்ப இங்க சொந்தம்னா இனி நீங்க மட்டும் தான். மனசுல எதையும் வச்சுக்காம மொதல்ல எல்லாரும் வீட்டுக்குள்ள வாங்க”

மணிமாறன் அவ்வாறு கூறவும் மகிழ்ந்து போனாள் பிருந்தா. இரண்டாவது தாரமாக வந்தாலும் சரியான ஆளுக்குத்தான் வாக்கப்பட்டிருக்கிறேன். மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் அவள். இன்னார்க்கு இன்னார் என்று இறைவன் எழுதி வைத்திருப்பான் எனக்கு இவர் தான் என்று எழுதப்பட்டு விட்டது. ஆனால் நல்ல ஒரு மனிதனாக கடவுள் எழுதியிருக்கிறான் என்று கன்ணுக்குத் தெரியாத ஆண்டவனுக்கு அக்கணம் நன்றி தெரிவித்துக் கொண்டாள் பிருந்தா.

அதற்குள் இயல்பாய் மாறிவிட்டிருந்தனர் பிருந்தாவின் தங்கைகள். கலகலப்பாக மணிமாறனுடன் அரட்டையடிக்க ஆரம்பித்திருந்தனர் அவர்கள். அந்த நேரம் அங்கே மகிழ்ச்சி வெள்ளம் பரவ ஆரம்பித்திருந்து!

(-தொடரும்…)

முந்தையபகுதி – 09 | அடுத்தபகுதி – 11

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...