ஒரே வாரத்தில் இழுத்து மூடப்பட்ட தமிழ்நாடு- இலங்கை கப்பல் போக்குவரத்து…

 ஒரே வாரத்தில் இழுத்து மூடப்பட்ட தமிழ்நாடு- இலங்கை கப்பல் போக்குவரத்து…

தமிழ்நாடு – இலங்கை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒரே வாரத்தில் நிறுத்தப்பட்டுவிட்டது. வடகிழக்கு பருவமழை முடிவடைந்த பின்னர் ஜனவரி மாதம்தான் மீண்டும் இந்த பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து “கூப்பிடு” தொலைவில்தான் இலங்கையின் தமிழர் பகுதிகள் உள்ளன. 40,50 ஆண்டுகளுக்கு முன்னர் இரு நிலப்பரப்புகளுக்கு இடையே கடல்சார் வர்த்தகம், பயணிகள் போக்குவரத்து இயல்பானதாக இருந்தது. இலங்கை ராணுவத்துக்கும் ஈழத் தமிழருக்கும் இடையேயான உள்நாட்டு யுத்தம் ஒட்டுமொத்தமாக அத்தனையையும் தலைகீழாகப் புரட்டி போட்டது.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரியின் காரைக்கால் அல்லது தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் வடக்கே உள்ள காங்கேசன்துறை துறைமுகம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இருவழிப் போக்குவரத்துக்கான பயண கட்டணம் ரூ7670 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 150 பயணிகள் பயணிக்கக் கூடிய கப்பல் இது. நாள்தோறும் அதிக அளவில் பயணிகள் பயணிக்கக் கூடிய லட்சத்தீவுகளில் இத்தகைய பயணிகள் கப்பல் உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. நாகப்பட்டினம்- காங்கேசன்துறை துறைமுகம் இடையே சுமார் 3.30 மணிநேர பயணம்தான். முதல் நாளில் ஓரளவு கூட்டம் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் 20 பேர், 30 பேர் மட்டுமே முன்பதிவு செய்தனர். இதனால் நாள்தோறும் பயணிகள் கப்பலை இயக்குவதை மாற்றி வாரம் இரு நாட்கள் இயக்குவது என தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அத்துடன் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தற்காலிகமாக நாகை- காங்கேசன்துறை துறைமுகம் இடையேயான இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை காலம் முடிவடைந்த பின்னர் மீண்டும் நாகை- காங்கேசன்துறை துறைமுகம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...