மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்…
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் இன்று காலமானார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி, அதன் குருவாகச் செயல்பட்டு வந்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
பங்காரு அடிகளாரின் ஆன்மீகச் சேவையைப் பாராட்டி, கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது. இந்நிலையில், இன்று திடீரன மாரடைப்பால் காலமானார் பங்காரு அடிகளார். அவருக்கு வயது 82.
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கருவறையில் பெண்களைப் பூஜை செய்ய அனுமதித்தும், மாதவிடாய் நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தியும் ஆன்மீகப் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார்.
கடந்த ஓராண்டாகவே உடல்நிலை சரியில்லாமல் பங்காரு அடிகளார் சிகிச்சை பெற்று வந்து நிலையில், கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்துள்ளது.
காலமான பங்காரு அடிகளாருக்கு பல்வேறு நாடுகளிலும் பக்தர்கள் உள்ளனர். அவர்களால், ‘அம்மா’ சென்று அழைக்கப்பட்டு வந்தார் பங்காரு அடிகளார். அவரது மறைவு ஆதிபராசக்தி சித்தர் பீட பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.