இந்தியாவின் முதல் அதிவேக மெட்ரோ ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.

 இந்தியாவின் முதல் அதிவேக மெட்ரோ ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.

மணிக்கு 180 கி.மீ செல்லும் இந்தியாவின் முதல் அதிவேக மெட்ரோ ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை டெல்லியில் தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் அதிவேக ரெயிலாக ‘வந்தே பாரத்’ உள்ளது. இது மணிக்கு 130 கி.மீ வேகம் வரை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் இருக்கை வசதிகள் கொண்ட 33 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அடுத்த கட்டமாக மணிக்கு 180 கி.மீ வேகம் வரை இயங்கக்கூடிய அதிவேக மெட்ரோ ரெயில் சேவை நாளை தொடங்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் நகரங்களை இணைக்கும் பிராந்திய விரைவு போக்குவரத்து சேவையை (RRTS – Regional Rapid Transit System) பிரதமர் மோடி நாளை டெல்லியில் தொடங்கி வைக்க உள்ளார். இது தற்போது நாட்டில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவைகளை விட 3 மடங்கு அதிக வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும் வகையில் இந்த ரெயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய வழித்தடத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதால் இந்த ரெயில் குறைவான வேகத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி முதல் மீரட் இடையே ரூ.30,274 கோடி செலவில் இந்த ரெயில் சேவையை தொடங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 82 கி.மீ தூர வழித்தடத்தில் 25 ரெயில் நிலையங்கள் 2 பணிமனைகள் அமைந்துள்ளன. இதில் 68.03 கி.மீ நீளத்திற்கு உயர்மட்ட பாதையாகவும், 14.12 கி.மீ நீளத்திற்கு சுரங்கப்பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த வழித்தடத்தில் முதற்கட்டமாக துஹாய் முதல் சாஹியாபாத் இடையேயான 17 கி.மீ தூர ரெயில் சேவையை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். டெல்லி முதல் மீரட் இடையேயான முழு நீள ரெயில் சேவை வரும் 2025ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ந்த அதிவேக மெட்ரோ ரெயிலில் மொத்தம் 6 குளிர்சாதன வசதிகொண்ட நவீன பெட்டிகள் உள்ளன. அதில் ஒரு சொகுசு வசதி கொண்ட முதல் வகுப்பு பெட்டியும், ஒரு பெண்கள் பெட்டியும், 4 சாதாரண பெட்டிகளும் இருக்கும். இருபுறமும் தலா 2 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள இந்த ரெயிலின் ஒரு பெட்டியில் 72 பயணிகள் வரை அமர்ந்து பயணிக்க முடியும் .

ஒவ்வொரு இருக்கையிலும் மொபைல் சார்ஜிங் வசதி, புத்தகங்கள் வைக்கும் வசதி இருக்கும். மேலும் நின்றுகொண்டு பயணிப்பவருக்கு கைப்பிடி வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர சிசிடிவி கேமரா, இலவச வைபை வசதி, உணவு பொருட்கள் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ரெயிலில் பயணிக்க வசூலிக்கப்படும் கட்டணம் குறித்த தகவல் வெளியாகாத நிலையில் விரைவில் அதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...