ராஜஸ்தான் கிராமத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால் 111 மரக்கன்றுகள் நட வேண்டும்…
உலகெங்கும் மனது நோகும் செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் ஒரு கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சி மனதை நெகிழ வைத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ராஜஸ்சாமானட் மாவட்டத்தில் உள்ள பிப்லாந்திரி கிராமத்தில் பெண் குழந்தைகளை பெருமைப்படுத்தும் விதமாகவும் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் விதமாகவும் ஒரு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
பிப்லாந்திரி கிராமத்தில் தூயகாற்று பொங்கியெழுவதற்குக் காரணம் அங்குள்ள ஏராளமான மரங்கள். அதிலிருந்து வெளியாகும் அளவற்ற பிராணவாயு. இந்த கிராமத்தில் ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்தால் அதன் நினைவாக 111 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கின்றனர்.
இதனால் பெண் குழந்தையோடு அந்த கன்றுகளும் செழிப்பாக வளர்ந்து கிராமத்துக்கு பல நன்மைகளைச் செய்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இந்தப் பழக்கம் தொடர்வதால் பிப்லாந்திரி கிராமத்தை பசுமைப் போர்வை சூழ்ந்துள்ளது.
அத்தோடு ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவள் பெயரில் அவரது பெற்றோர் ரூ.10,000 மற்றும் உறவினர்கள் தரும் ரூ.31,000 சேர்த்து பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த அக்கவுண்ட்டை கிராமப் பஞ்சாயத்து நிர்வாகம் செய்கிறது.
அவ்வப்போது டெபாசிட்டில் பணத்தை அதிகரிக்கிறது. பெண் குழந்தைகள் பிறந்தால் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்து குழந்தைக்குத் தேவையான அனைத்து அரசு திட்டங்களையும் அளிக்கிறது. மத்திய அரசின் ஜனனி சுரக்ஷ்சா எனப்படும் பெண் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்துகிறது. பிப்லாந்திரி கிராமத்தின் ஈடுபாடு காரணமாக அங்கு சுற்றுச்சூழலில் எந்த மாசுபாடும் கிடையாது. இதுவரை 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் அங்கு நடப்பட்டுள்ளன. அதில் வேம்பு, மா, நெல்லி போன்ற மரங்களும் வளர்ந்துள்ளன.
பிப்லாந்திரியில் ஆண்டுக்கு சராசரியாக 60 பெண் குழந்தைகள் பிறக்கின்றன. கிராமத்தின் முன்னாள் தலைவர் ஷ்யாம் சுந்தர் பாலிவால் தனது மகள் கிரண் ஞாபகமாக இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். வயிற்றுப் போக்கு காரணமாக 18 வயதில் கிரண் உயிரிழந்தாள். இதைத் தொடர்ந்து கிராமத்துக்கு நீர்வளத்தைப் பெருக்கும் நோக்கத்துடன் மரக்கன்றுகளை நடுவதற்கு ஷ்யாம் முடிவெடுத்தார்.
அவரது முயற்சியால் இப்போது பிப்லாந்திரி கிராமம் பசுமைச் சோலையாகப் பூத்துக் குலுங்குகிறது. பிப்லாந்திரி கிராமத்தில் பின்பற்றப்படும் இந்த மரக்கன்று திட்டம் பசுமையை மட்டும் தருவதில்லை. இதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல், ஆண் பெண் சமஉரிமை ஆகியவற்றையும் போதிக்கிறது.
பிப்லாந்திரி இன்றைக்கு நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பெண் பாதுகாப்பு பற்றிய கருத்துக்கு முன்னோடியாக விளங்குகிறது.