“வாச்சாத்தி” வழக்கில் இன்று தீர்ப்பு..

 “வாச்சாத்தி” வழக்கில் இன்று தீர்ப்பு..

வாச்சாத்தி மலை கிராமத்தில் பழங்குடி பெண்கள், மக்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் சென்னை ஹைகோர்ட்டில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 30 வருடங்களாக ஆண்டுகளாக காத்திருக்கும் மலைக்கிராமம்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ளது வாச்சாத்தி மலை கிராமம்… இந்த கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லி, கடந்த 1992ம் ஆண்டு ஜுன் 20ம் தேதி வனத்துறையினர், காவலர்கள், வருவாய் துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினார்கள்.. அப்போது, வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஊழியர்கள், பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டு இருந்த 215 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி தீர்ப்பு தந்திருந்தது.. இவர்களில் 126 பேர் வனத்துறை அலுவலர்கள், 84 பேர் காவல்துறையினர், 5 பேர் வருவாய்த்துறை ஊழியர்கள் ஆவர்.

இதில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 12 பேருக்கு தலா 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு தரப்பட்டுள்ளது..

இவர்களைத் தவிர மற்றவர்களுக்கு வாச்சாத்தி பழங்குடி மக்களை துன்புறுத்தியது, உடைமைகளை சூறையாடியது உள்ளிட்ட பிரிவுகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த குற்றங்களுக்காக அவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இன்று தீர்ப்பு: இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். மீதமுள்ளவர்களுக்குத்தான் ஒரு வருடம் முதல் 10 வருடங்கள் வரை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள், சென்னை ஹைகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பு மட்டும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

பிறகு கடந்த மார்ச் 4ம் தேதி, சம்பவம் நடந்த வாச்சாத்தி மலை கிராமத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்த நிலையில், வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கில் இன்றைய தினம் அதாவது, செப்டம்பர் 29ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்த கொடூர சம்பவத்தை இன்றும் நினைவுகூர்ந்தபடியே உள்ளனர் வாச்சாத்தி கிராமத்தினர்.. இந்த கிராமத்தில் நடுவில் ஒரு ஆலமரம் உள்ளது.. சம்பவம் நடந்த தினத்தன்று மாலை, இந்த ஆலமரத்தின் அடியில் மக்களின் உடைமைகளை சுக்குநூறாக உடைத்து போட்டு, மொத்த பேரையும் திரள செய்து தாக்கின..

18 இளம்பெண்களை வனத்துறை அலுவலகத்துக்கு இழுத்து சென்று, கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தனர்.. பெண்களில் மார்பகங்களில் சூடு வைத்தனர். ஆண்களை இரவு முழுதும் அடித்து துன்புறுத்தினர்.. இந்த மரத்திற்கு மட்டும் பேசும் திறமையிருந்தால், சாட்சியாக மாறி, உண்மை குற்றவாளிகளை நீதிமன்றத்தில் சொல்லியிருக்கும்.. 30 வருடமானாலும், நீதி நிச்சயம் கிடைக்கும்” என்று நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார்கள்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...