எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 11 | ஆர்.சுமதி

 எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 11 | ஆர்.சுமதி

அத்தியாயம் – 11

ட்கார்ந்தால், எழுந்தால், படுத்தால், உறங்கினால், கனவு வந்தால்… எல்லாவற்றிலும் அவன்தான் அவன் மட்டும்தான் வந்தான். இல்லை..இல்லை.. அவளும் வந்தாள். கோதை. ஃபோட்டோவில் பார்த்த காட்சியை ஆரம்பத்தில் ஒதுக்க முடிந்த அவளால் ஆட்டோவில் பார்த்த காட்சியை அப்படி ஒதுக்க முடியவில்லை.

கூட படித்தவன் சாதாரண நண்பன் என்றால் நகைவிற்க எதற்காக அவளோடு வரவேண்டும்? அம்மாவையோ தங்கைகளையோ அழைத்து வந்திருக்கலாமே. அவர்களை ஏன் அழைத்து வரவில்லை. அவர்களுக்கு நகை விற்பது தெரியக்கூடாது என்பதற்காகவா? அப்படியானால் நகையை விற்றது குடும்ப கஷ் டத்திற்காக இல்லையா?

அவனோடு சேர்ந்து சுற்றவா? ஜாலியாக செலவழிக்கவா?

மனம் கொத்திப் பறவையாய் கேள்விகள் அம்சவேணியை கொத்திக் குதறிக் கொண்டிருந்தன.

பணத்திற்காக சொத்திற்காக மற்ற பெண்களின் எதிர்கால வாழ்க்கைக்காக கோதையை மிரட்டி அடிபணிய வைத்து கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்களா? மனதில் காதலனை வைத்துக்கொண்டுதான் என் மகனுக்கு கழுத்தை நீட்டியிருக்கிறாளா?

இவளிடம் போய் என் மகனைப் பற்றிய எல்லா வியங்களையும் சொல்லிவிட்டேனே. ஏற்கனவே மனநலம் சரியில்லாமல் இருந்தவன் என்ற எண்ணம் பழைய காதலை புதுப்பிக்க வழி செய்துவிட்டதா?

கடவுளே… நான் என்ன செய்வேன்? என் மகனை புரிந்துக்கொண்டு குடும்பம் நடத்த இப்படி ஒரு ஏழைப் பெண்ணால் மட்டுமே முடியும் என்று நினைத்தேனே. ஏழைகள் என்பவர் யார்? பணம் இல்லாதவர்கள் மட்டும் இல்லை. பணத்திற்காக ஏங்கி நிற்பவர்கள்தானே. அது ஏதோ ஒரு வழியில் கிடைக்கும்போது அதற்காக எப்படி வேண்டுமானாலும் வளைந்துக் கொடுப்பவர்கள்தானே. அப்படித்தான் வளைந்துக் கொடுத்ததா அந்தக் குடும்பம். தான் ஏன் பலி கடா ஆகவேண்டும் தன் காதல் ஏன் நிராசையாகப் போக வேண்டும் என்று கோதை தன் காதலை தொடர்கிறாளா?

ச்சை…இதெல்லாம் என்னோட கற்பனையோ? ஒரு ஆடவனோடு வெளியில் வந்ததனாலயே அவளை தவறாக நான் ஏன் எண்ணவேண்டும்? கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பது தானே மெய். ஆட்டோவில் கண்டது பொய்யாக இருக்கலாம். சங்கீதாவின் வாயால் கேட்டதும் பொய்யாக இருக்கலாம். கோதையையே தீர விசாரித்தால் என்ன?

எப்படி விசாரிப்பது? ஒருத்தனோடு ஊர் சுற்றுகிறாயே அவன் யார்?என்றா…கூடாது. இந்த சமயத்தில் வார்த்தை பிரயோகம் மிகவும் அவசியம். கொட்டிவிட்டால் அள்ள முடியாது.

முதலில் அவளை வீட்டிற்கு வரவழைக்கவேண்டும். எப்படி? ஆடிமாதமே முடியவில்லையே. என்ன பெரிய ஆடிமாதம்? காதலித்து வீட்டைவிட்டு ஒடி குடும்பம் நடத்துபவர்களெல்லாம் ஆடிமாதத்தில் தனித்தனியாகவா வாழுகிறார்கள்?

முதலில் அவளை வரவழைக்கவேண்டும். முடிவு செய்தாள். முடிவு செய்த உடனேயே முதல் வேலையாக ஃபோன் செய்தாள். உடல் நிலை சரியில்லை உடனே புறப்பட்டு வா என்றாள். கோதையும் உடனே வந்துவிட்டாள்.

கோதை சமையலறையில் வேலை செய்துக்கொண்டிருந்தாள். சாதாரணமாக உள்ளே நுழைவதைப்போல் நுழைந்தாள் அம்சவேணி.

“என்ன அத்தை என்னவேணும்?” வெங்காயம் நறுக்கிக்கொண்டிருந்த கோதை திரும்பினாள்.

“தலையை வலிக்கற மாதிரி இருக்கு. கொஞ்சம் காபி போட்டுத் தர்றியா?” என்றாள்.

“நீங்க ஹாலுக்குப் போங்க அத்தை நான் காபி போட்டு கொண்டு வர்றேன்.”

ஹாலுக்கு வந்து காத்திருந்தாள். சில நிமிடங்களில் காபியோடு வந்தாள் கோதை.

“இந்தாங்க அத்தை.” காபியை நீட்டினாள்.

நீட்டிய கரத்தை வாங்கும்போது கவனித்த அம்சவேணி சத்தியமாக அதிர்ந்தாள்.

அதே வளையல்கள். கோதை விற்ற அதே வளையல்கள். தான் மறுபடி வாங்கி வந்த அதே வளையல்கள்.  எப்படி மறுபடி இவள் கைகளில்?

“காபியை எடுத்துக்கங்க அத்தை.” கோதை மறுபடியும் சொல்லவே விழிப்பு நிலைக்கு வந்த அம்சவேணி அந்த வளையல்களை நன்றாகப் பார்த்தாள்.

அவை அதே டிசைனில் இருந்த கவரிங் வளையல்கள். எப்படி அச்சு அசலாய் உற்று பார்த்தாலொழிய கண்டுபிடிக்க முடியாதபடி..? எல்லாம் கவரிங் நகை செய்பவர்களின் கைவண்ணம்.

காபியை வாங்கிக் கொண்ட அம்சவேணி “இப்படி உட்காரும்மா” என்றாள்.

“கிச்சன்ல வேலை இருக்கு அத்தை”

“இருக்கட்டும் உட்கார்.” தயக்கமாக அமர்ந்தாள்.கோதை.

காபியை பருகியபடியே யோசித்தாள் அம்சவேணி;. ‘என்ன ஒரு திருட்டுத்தனம்? வளையல்களை விற்றதோடல்லாமல் அதே டிசைனில் அச்சு அசலாக அதைப்போலவே கவரிங்கில் வாங்கி போட்டுக்கொண்டு வந்திருக்கிறாள்? கணவன் காதல் மயக்கத்தில் கவரிங்கை உணரமாட்டான். கிழவிக்கு கண் தெரியாது என்று நினைத்துவிட்டாளா?

காபியை பருகி முடித்ததும் கோப்பையை அவளிடம் தந்தவள் “ இந்த வீட்டு மருமகள் நீ இந்த வீட்டுக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு. இப்படி கவரிங் வளையல் போடலாமா?” என்றாள்.

அதிர்ச்சியாய் அத்தையைப் பார்த்தாள். “அத்தை…”

அந்த அதிர்ச்சியை ரசித்தவாறே “சொல்லும்மா…ஏன் கவரிங் வளையல் போட்டிருக்கே? அதுவும் அதே டிசைனில்?”என்றாள்.

“அது…அது….” கோதை திணறினாள். பதில் சொல்ல தடுமாறினாள்.

“சொல்லும்மா…”

“அது…வந்து அத்தை மீராவை பொண்ணுபார்க்க அடுத்த வாரத்துல மாப்பிள்ளை வீட்லயிருந்து வர்றாங்க. அதான்…அம்மா கொடுத்துட்டுப் போகமுடியுமான்னு கேட்டாங்க. அடுத்த முறை வந்தா எடுத்துட்டுப் போகலாம்னு சொன்னாங்க. நானும் சரின்னு கொடுத்துட்டு வந்துட்டேன் அத்தை.’

“அதனால நான் கேட்டா என்ன செய்யறதுன்னு அதே டிசைன்ல கவரிங்ல வாங்கிப் போட்டுக்கிட்டு வந்திருக்கே இல்லையா? கிழவிக்கு எங்கே கண்ணுத் தெரியப் போகுது கவரிங்கை கண்டுபிடிக்க மாட்டாள்னு இல்லையா?”

“ஸாரி அத்தை உங்களைக் கேட்காம வளையலைக் கழட்டிக் கொடுத்து தப்புத்தான். மன்னிச்சிடுங்க அத்தை”

அம்சவேணி  அலட்சியமாக சிரித்தாள்.

“என்னைக் கேட்காம வளையலை நீ உன் தங்கச்சிக்கு கொடுத்திருந்தா அது தப்பு இல்லை. என்னைக் கேட்காம வளையலை நீ வித்ததுதான் தப்பு.”

ஆடிப்போய்விட்டாள் கோதை. நாடி நரம்பெல்லாம் ஒடுங்கிப்போய்விட்டது. விழிகள் பிதுங்கி கீழே விழுந்திடும் போல் உருமாறியது.

“அத்தை…” பேச்சு எழாமல் எச்சில் விழுங்கினாள்.

“எனக்கு எப்படித் தெரியும்னு நினைக்கறியா? நீ வளையலை விக்கும்போது நானும் அந்த நகைக்கடையில் இருந்தேன். “

“அத்தை..

“இந்தா இதைக் கையில போடு. அந்த கவரிங் வளையலை கழட்டு.” அத்தையின் கையில் தான்விற்ற வளையல்கள் இருப்பதைக் கண்டு மேலும் ஆடிப்போனாள். இதை அவள் எதிர்ப்பார்க்கவில்லை.

“என்ன பார்க்கறே? நீ வித்ததை நான் வாங்கிட்டு வந்திட்டேன்” சொன்னவாறே மருகளின் கைகளில் வளையல்களைப் போட்டுவிட்டாள்.

“அத்தை வீட்ல ஒரே கஷ் டம். நான் சம்பாதிச்சுத்தான் குடும்பம் ஒடிக்கிட்டு இருந்தது. நான் இங்க வந்திட்டேன். அவங்களால சமாளிக்க முடியலை. நிறைய கடன். தங்கச்சிகளுக்கு ஃபீஸ் கட்டனும். அம்மாவுக்கு மருந்து வாங்கனும். அதான்…வித்துட்டேன். உங்கக்கிட்ட சொல்ல பயமாயிருந்தது.”

அம்சவேணிக்கு அவள் நகையை விற்றது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அவள் கூட வந்தவன்தான் பிரச்சனை. யார் அவன்?

அரித்துக்கொண்டிருக்கும் கேள்வியை சாதாரணமாகக் கேட்பதைப்போல் கேட்டாள்.

“அது சரி. உன் கூட ஒருத்தன் வந்திருந்தானே அவன் யார்?” இந்தக் கேள்விக்கு அவளுடைய முகத்தில் அதிர்ச்சியை எதிர்ப்பார்த்தாள். ஆனால் அவளுடைய முகத்தில் எந்த அதிர்ச்சியும் திடுக்கிடலும் இல்லை.

“அவர்..என் கூட படிச்சவர். என் நண்பர்.;. எங்க குடும்பத்துக்கு வேண்டப்பட்டவர். அந்த நகை;கடையில அவருக்கு தெரிஞ்சவர் இருக்கார் அவர் மூலம் நகைவித்தா சேதாரம் ரொம்ப எடுக்காம பார்த்துப்பார்ன்னு சொன்னார். அதான் அவரை அழைச்சுக்கிட்டுப் போனேன்.”

‘நகைகடைக்கு போனதுக்காக அவள் சொன்ன காரணம் ஏற்றுக்கொள்வதைப்போலிருந்தாலும் காபி ஷாப் போனது மனதை உறுத்த செய்தது.

கோதை… உன்னிடம் ஏதோ தவறு இருக்கிறது.

உள்ளம் நினைத்தது. அதை உறுதி செய்வதைப் போல் இன்னொரு நிகழ்வு நடந்தது.

 அன்றிரவு அம்சவேணிக்கு சுத்தமாக உறக்கம் போய்விட்டது. வயசானதால் இப்படி உறக்கம் இழந்து படுக்கையில் புரள்வது ஒன்றும் அவளுக்கு புதிதில்லை. ஆனால் உறக்கம் இழந்து தவிப்பது புதிது. புரள்வதற்கும் தவிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தபோது உள்ளம் கோதையை குற்றம் சாட்டியது. அவளால்தான்..அவளால் ஏற்பட்ட மனஉளைச்சல்தான் தூக்கத்தைப் பறித்துவிட்டது.

கூட வந்தவனை அவள் குடும்ப நண்பன் என கூறியதுதான் உறுத்தியது. வளையல் விற்ற பணம் உண்மையிலேயே அவளுடைய குடும்பத்திற்குத்தான் போனதா இல்லை கூட வந்தவனின் கைக்குப் போனதா? எப்படி தெரிந்துக்கொள்வது? அவளுடைய அம்மாவிற்கே ஃபோன் செய்து கேட்கலாமா?

குடும்பத்திற்கு கொடுத்திருந்தால்…குற்ற உணர்வு அவர்களுக்கு வரும். கொடுக்காமலிருந்தால்….அந்த தாயின் உள்ளம் மகளின் போக்கு நினைத்து வேதனைக் கொள்ளும். வேண்டாம். யாரையும் வேதனைப் படுத்தாமல் கண்டறிய வேண்டும்.

இப்படி சிந்தித்து சிந்தித்து மூளை சூடாகிவிட்டது. எழுந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள். ஏதாவது நிகழ்ச்சி பார்த்து மனதை நெகிழ்த்தலாம் என நினைத்தாள்.

தொலைக்காட்சியும் அவளை தொல்லைப்படுத்தியது.

இரவு ஒரு மணிக்கு ஒருத்தி இஷ்டத்திற்கு மேக்கப் செய்துக்கொண்டு செய்தி வாசித்துக் கொண்டிருந்தாள்.

‘கள்ளக் காதலனுக்காக கணவனை கட்டிய மனைவியே கூலிப்படை வைத்து கொலை செய்த கொடூரம்.’

நடுநெஞ்சில் குபீரென அதிர்ச்சி. குபுகுபுவென ரத்த ஓட்டத்தைப் பாய்ச்சியது. கூர் ஊசிக்கொண்டு குத்தியது தலை முழுவதும்.

மணப்பெண்ணைப்போல் அலங்காரம் செய்துக்கொண்டு மர்டர் செய்தியை விரிவாக சொல்லிக் கொண்டிருந்த செய்தி வாசிப்பாளினியை வெறுப்பாகப் பார்த்த அம்சவேணி தொலைக்காட்சியை வேகமாக நிறுத்தினாள்.

நிறுத்தியும் நிற்கவில்லை தலைவலி. இழந்த தூக்கம் தந்த எரிச்சல் போதாதென இப்பொழுது தொலைக்காட்சி தந்த தலைவலி வேறு.

இன்றைக்கு செய்திகளில் பாதிக்கு மேல் கள்ளக்காதல்தான். காதல் காதல் காதல். காதல் போயின் சாதல் என்பது போய், காதல் போயின் கள்ளக் காதல் என்றாகிவிட்டது.

கல்லானாலும் கணவன் என்பது போய் கல்லைத்தூக்கி அவன் தலையில் போடு என்றாகிவிட்டது. புல்லானாலும் புருஷன் என்பது போய் பொசுக்கி புதைத்துவிடு என்றாகிவிட்டது.

பெண்மை பேயாட்டம் ஆடும் காலமாகிவிட்டதா? பெற்ற குழந்தையையே கொன்று போடும் அளவிற்கு கள்ளக் காதலின் வெறித்தனம் வேரூன்றி விட்டதா?

அது…அது…இந்தக் குடும்பத்திலும் மூக்கை நுழைத்துவிடுமோ?

வந்த தலைவலி பந்தல் போட்டு பாய்விரித்தமர்ந்து மேளம் கொட்ட ஆரம்பித்துவிட்டது. மண்டை முழுவதும் விண் விண் என தெரிக்கத் தொடங்கியது.

எழுந்து எங்காவது தலைவலி  தைலம் இருக்கிறதா எனத்தேடினாள். மனதில் தேடிய கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்காததைப்போல் மருந்தும் கிடைக்கவில்லை.

கோதையிடம் கேட்கலாமா? அவள் எடுத்து எங்காவது வைத்திருக்கிறாளா?

நின்ற இடத்திலிருந்து நிமிர்ந்துப் பார்த்தாள். கோதையின் அறையில் விளக்கு வெளிச்சத்தை விடுத்துக்கொண்டிருந்தது.

‘தூங்கவில்லை. வாங்கிவரலாம்’ என்றெண்ணியவாறே படியேறினாள்.  மேலே வந்து கதவைத் தட்ட கைவைத்தவள் ஜன்னல் வழியே கண்டக் காட்சியைப் பார்த்து அதிர்ந்துப் போனாள்.

-(தொடரும்…)

முந்தையபகுதி – 10 | அடுத்தபகுதி – 12

இப்படிக்கு நான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...