எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 10 | ஆர்.சுமதி

 எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 10 | ஆர்.சுமதி

அத்தியாயம் – 10

ங்கீதா மூட்டிய தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருந்தது அம்சவேணிக்குள். கோதைமேல் அவளுக்கிருந்த பாசமும் நல்ல மதிப்பும் அந்த தீயின் மேல் தண்ணீரை விசிறி அணைக்க முயற்சி செய்துக்கொண்டிருந்தது.

சங்கீதாவின் பேச்சை ஏன் நம்ப வேண்டும்? ஒரு பெண் ஒரு ஆடவனுடன் இந்தக்காலத்தில் வெளியில் செல்வது சகஜம்தான். உறவுக்காரனாக இருக்கலாம். அண்ணன் முறை உள்ளவனாக இருக்கலாம். வெளியில் செல்லும்போது யதேச்சையாக கூட படித்த நண்பனைப் பார்த்திருக்கலாம். சேர்ந்து காபி குடித்திருக்கலாம். உடனே அதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?

இதையே சங்கீதா செய்திருந்தால்…? செய்யாமல் என்ன? அவளுடைய அன்றாட பொழுதுபோக்குகளில் இதுவும் ஒன்றுதானே. நண்பர்களில் அவளுக்கு ஆண் பெண் வேறுபாடு கிடையாதே. மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் தன் பெண்நண்பர்களைப் போலவே ஆண்நண்பர்களுடன் வெளியில் செல்வது அவளுக்குவாடிக்கைத்தானே. தான் செய்தால் சரி. அதையே மற்றவர்கள் செய்தால் தவறா?

ஃபாரின் போய் படித்துவிட்டு வந்ததால் அவளை பொறுத்தவரை ஆடவர் நட்பு மேல்நாட்டு கலாச்சாரம் . உள் நாட்டில் படித்த பெண்களின் ஆடவர்களுடன் கூடிய நட்பு கள்ளக்காதல். இது என்ன நியாயம்? சாதாரணமாக கூட அவர்கள் சந்தித்து பேசியிருக்கலாம். சேர்ந்து காபி குடித்திருக்கலாம். அதை அசிங்கமான கண்ணோட்டத்துடன் பார்த்தது மட்டுமல்லாமல் ஃபோட்டோ எடுத்திருக்கிறாள் என்றால் எத்தனை கீழ்த்தரமான எண்ணம்?

தான் ஆசைப்பட்ட வாழ்க்கை கோதைக்கு கிடைத்துவிட்டதே என்ற பொறாமைக்கு ஊட்டமளித்ததைப்போலிருந்திருக்கும் அந்தக் காட்சி. உடனே அதை ஃபோட்டோ எடுத்து கொண்டு வந்து ஒரு காதல் கதையை புனைந்துவிட்டு புகையவிட்டுப் போயிருக்கிறாள்.

நம்பவேண்டுமா இதை. தூக்கி எறிந்துவிட்டாள். தூரக்கிடாசினாள். தூசுபோல் தட்டிவிட்டாள்.

ஆனால் தட்டியதெல்லாம் வந்து ஒட்டிக் கொண்டதைப் போல்…தூக்கி எறிந்ததெல்லாம் மறுபடி வந்து தாக்கியதைப்போல்… தூர கிடாசியதெல்லாம் ஆற அமர வந்து அருகில் அமர்ந்துக்கொண்டதைப் போல் அடுத்து வந்த சம்பவம் நிகழ்ந்தது.

முத்துலெட்சுமி ஒரு மத்தியான வேளையில் போன் செய்தாள். ஆர்வமாக எடுத்துப் பேசினாள்.

நலம் விசாரித்துவிட்டு நல்லகாரியம் பேசினாள் முத்துலெட்சுமி. தன் மகளுக்கு திருமணம் கூடி வந்திருப்பதாக கூறினாள். அடுத்தவாரம் நிச்சயதார்த்தம் என அழைப்புவிடுத்தவள் மகளுக்காக நகைவாங்க தன்னுடன் மாலை வரமுடியுமா என வேண்டினாள்.  கரும்பு தின்ன கூலியா வேண்டும்?

சங்கீதா உண்டாக்கிவிட்டிருந்த சலனத்திலிருந்து விடுபட ஒரு சந்தர்ப்பம். வெளியே சென்றுவந்தால் உள்ளே உற்சாகம் நுழையலாம் என்று கிளம்பிவிட்டாள் அம்சவேணி.

முத்துலெட்சுமி சொன்ன நேரத்திற்கு வீட்டு வாசலில் காருடன் வந்து காத்திருந்தாள்.

நகரத்தின் மிக பிரபலமான நகைக்கடை. தொலைக்காட்சியில் நொடிக்கொருதரம் தலையைக்காட்டி தன் நகைக்கடை விளம்பரத்தைப் பற்றி சொல்லும் நிறுவனம்.

நகைகளை தேர்வு செய்யத் தொடங்கினர்.

“அம்சா…”

“சொல்லு”

“நீ நெக்லஸ் ஆரம்  இதையெல்லாம் செலக்ட் பண்ணிவை. நான் வளையல் செக்ஷன்ல போய் வளையல் செலக்ட் பண்றேன். ஒரே இடத்துல ரெண்டு பேரும் இருந்தா டயம்தான் வேஸ்ட் ஆகும். நான் வளையல்களை செலக்ட் பண்றேன். சீக்கிரம் வேலை முடிஞ்சுடும். அப்பறம் வெள்ளி சாமான்கள் வேற வாங்கனும்”

“சரி…நீ போய் வளையலை செலக்ட் பண்ணு”

முத்துலெட்சுமி வளையல்கள் இருக்கும் மூன்றாவது மாடிக்கு சென்றாள்.அம்சவேணி ஆரம் டிசைன்கனை பார்க்க சென்றாள்.

சரியாக அரைமணிநேரம் கழித்து முத்துலெட்சுமி கீழே வந்தாள். அதற்குள் அம்சவேணியும் தன் நகை தேர்வுகளை முடித்து தனியே எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.

“என்ன வளையல் செலக்ஷன் முடிஞ்சுதா?”

“ம்;;;… முடிஞ்சுது. பில் போட சொல்லியிருக்கேன்.”

“நானும் முடிச்சுட்டேன். பாரேன்” என்றபடி தேர்வு செய்திருந்த நகைகளை முத்துலெட்சுமியின் பக்கம் நகர்த்தினாள்.

முத்துலெட்சுமி அந்த நகைகளைப் பார்க்காமல் குனிந்து அம்சவேணியின் காதில் கிசுகிசுத்தாள்.

“அம்சா…அந்த நகை அப்படியே இருக்கட்டும் அவர்க்கிட்ட தனியே எடுத்து வைக்க சொல்லிட்டு கொஞ்சம் இப்படி வாயேன்.” என்றாள்.

அம்சவேணி எழுந்து நகைகளைக்காட்டிக்கொண்டிருந்தவரிடம் சொல்லிவிட்டு தனியே வந்தாள்.

கடை முழுவதும் கூட்டம் இருந்தது ஏதோ காய்கறி மார்க்கெட்டைப்போல. இந்திய நாடு ஏழை நாடு என்று யார் சொன்னது? ஓவ்வொரு பெண்ணின் கழுத்திலும் தேர் வடம் போல் நகைகள். தனி இடத்தை தேடுவதே கடினமாக இருந்தது. யாரும் இல்லாத ஒரு மூலைப் பக்கமாக அம்சவேணியை அழைத்துவந்த முத்துலெட்சுமி அங்கேயும் கிசுகிசுப்பான குரலிலேயே பேசினாள்.

“அம்சா..வளையல் செக்ஷன்ல உன் மருமகளைப் பார்த்தேன்”

“யாரு கோதையையா?”

“ஆமா”

“ஏதாவது வாங்கவந்திருப்பா?”

“வாங்க வரலை. விக்கவந்திருக்கா”

“விக்க வந்திருக்காளா?”

“ஆமா…ஒரு ஜோடி வளையல்களை வித்தா”

முகம் மாறினாள் அம்சவேணி. “கூட யார் வந்திருந்தா? அவ அம்மாவா?’

“இல்லை. யாரோ ஒரு பையன்.”

சுருக்கென்றது அம்சவேணிக்கு.

“பையன்னா..?”

“பையன்னா.. ஸ்கூல் படிக்கற பையனோடவா நகை கடைக்கு வருவாங்க? ஒரு வாலிப பையனோட”

‘அவனா இருக்குமோ?’ சங்கீதா காட்டிய போட்டோவில் காபி குடித்துக்கொண்டிருந்த இளைஞன் கண்ணுக்குள் வந்து போனான்.

“ஆடிக்கு அம்மா வீட்டுக்குப் போயிருந்தாள்ல யாராவது சித்தப்பா மகன் பெரியப்பா மகனுக்கு நகை விக்க வேண்டி வந்திருக்கும் கூட வந்திருப்பா”

அம்சவேணி சமாளிக்க முயன்றாள்.

“ப்;ச்…இல்லை. அவ தன் கையிலிருந்து வளையல்களை கழட்டி கடைக்காரர் கிட்ட கொடுத்தா”

திக்கென்றது அம்சவேணிக்கு.

“நீ போய் அவக்கிட்ட பேசவேண்டியதுதானே”

“பேசலாம்னுதான் நினைச்சேன். அவ வீட்லயிருந்து எந்த நகையும் போட்டுக்கிட்டு வரலை. எல்லாம் நீ போட்ட நகைகள்தான். அவ வளையலை கழட்டி விக்கறா. அது நீ போட்ட வளையல்தானே. அம்மா வீட்ல என்ன

கஷ்டமோ யாரு கண்டா? நான் பாட்டுக்கு போய் பேசினா உண்மை தெரிஞ்சு நான் உன்கிட்ட சொல்லிடுவேன்னு அவ பயப்படலாம். தவிர நீ வேற இங்க இருக்கறது தெரிஞ்சா அவளுக்கு இன்னும் தர்ம சங்கடமா போகும். அதான் அவ கண்ணுல படாம வந்துட்டேன்.”

“அவ இப்ப அங்கத்தான் இருக்காளா?”

“இல்லை. போய்ட்டா”

“சரி வா”

“எங்கே?”

“வளையல் செக்ஷனுக்கு”

“எதுக்கு? அவதான் போயிட்டாளே”

“அவ போனா என்ன? நம்ம வீட்டு வளையல் இருக்குல்ல”

“அதான் அவ வித்துட்டாளே”

“அதை திரும்ப நானே வாங்கறேன். அவ என்கிட்ட ஒருவார்த்தைக்கேட்கவேண்டாமா? என்னதான் பிரச்சனையாயிருந்தாலும் என்னோட பர்மிஷன் இல்லாம எப்படி விக்கலாம்?”

“சரி அந்த வளையலை வாங்கு. ஆனா..பிரச்சனை பண்ணாதே. பாவம் ஏழை வீட்டு பிரச்சனையெல்லாம் நம்ம மாதிரி வசதி படைச்சவங்களுக்குத் தெரியாது”

“ம்;;…ம்;….” என்றபடி மூன்றாவது மாடிக்கு சென்றனர்.

அதே வளையல்களை வாங்கினாள்.

நகைகளை வாங்கிக்கொண்டு கடையைவிட்டு வெளியே வந்து கார் அருகே சென்றபோது அவர்களைக் கடந்து சென்ற அந்த ஆட்டோவில்…..

புகைப்படத்தில் பார்த்த அந்த இளைஞனோடு கோதை அமர்ந்திருந்தாள்.

-(தொடரும்…)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...