காலச்சக்கரம் சுழல்கிறது-24 | | தெய்வ வரம் பெற்ற எழுத்தாளர் அறிவானந்தம்

 காலச்சக்கரம் சுழல்கிறது-24  | |           தெய்வ வரம் பெற்ற எழுத்தாளர் அறிவானந்தம்

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் கலைமாமணி பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.

பழனிச்சாமி, பார்வதி தம்பதியரின் மகனாகப் பிறந்த எனது அருமை நண்பர் கே.பி. அறிவானந்தம் தற்போது 80 வயதைத் தொட்டவர்.

இவர் குடியாத்தம் என்னும் ஊரில் பிறந்தவர். பள்ளிப் படிப்போடு சேர்ந்து வேதாந்த பாடசாலை எனும் குருகுலத்தில் சேர்ந்து இலக்கணப் பயிற்சியும் பெற்றவர். இவரது குரு ஸ்ரீசண்முகானந்த ஸ்வாமிகள் ஆவார்.

இவரை ஒரு சாதனையாளர் ஆக்கியது இவர் எழுதிய ‘அவன் போட்ட முடிச்சு’ என்னும் நாடகம். நடிகர் எஸ்.ஆர். கோபால் அவர்கள் தயாரித்து எண்ணற்ற முறை நடந்துள்ளது.

இவர் பெற்ற விருதுகள் மதுரை தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் பேரறிஞர் விருது, தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் கலைமாமணி விருது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருது, குன்றத்தூர் சேக்கிழார் மன்றத்தின் செஞ்சொற் சைவமணி விருது, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முனைவர் விருது, அரிமா சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற எண்ணற்ற விருதுகளை வாங்கிக் குவித்தவர். இவர் எழுதிய மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூன்று பேர் M.Phil. பட்டம் பெற்றுள்ளார்கள்.

இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துர்வாசர், திருநாவுக்கரசர், வரகுண பாண்டியன் ஆகிய நாடகங்களை ஆர்.எஸ். மனோகரின் நேஷனல் தியேட்டர்ஸ் குழுவிற்காகவும், ஹெரான் தியேட்டர்ஸ் குழுவிற்காக காவடி தந்த இடும்பன், தேவி கலைக்கூடத்திற்காக அம்பையின் சபதம், ராணி மங்கம்மா, வேலு நாச்சியார் போன்ற நாடகங்களையும், ஆதித்ய கரிகாலன் எனும் நாடகத்தை எம்.ஜி. முருகேசன் குழுவிற்காகவும்,  துரை D. பாலசுந்தரம் அவர்களின் குழுவிற்காக ஸ்ரீ நரசிம்மர், ஓம் சிவசக்தி, ராகு கேது, எனும் நாடகங்களையும் எழுதியவர். தற்போது ராகு கேது என்ற நாடகம் சர்ப்ப கிரகங்கள் எனும் பெயரில் திரைப்படமாக வெளிவர இருக்கிறது.

முப்பெரும் தேவியர், வேலுண்டு வினையில்லை ஆகியவை இவர் எழுதிய கதைதான். முப்பெரும் தேவியார், மீனாட்சி திருவிளையாடல், வெற்றி விநாயகர் இவரது கதை வசனத்தில் உருவான திரைப்படங்கள். நீறு பூத்த நெருப்பு, நவக்கிரக நாயகி, ஆயிரம் கண்ணுடையாள், நம்பினார் கெடுவதில்லை, வேலுண்டு வினையில்லை போன்ற எண்ணற்ற படங்களுக்குப் பாடல்களும் எழுதி உள்ளார்.

நரகாசுரன், ஆதிபராசக்தி, விநாயகர் விஜயம், இந்திரஜித், தெய்வக் குழந்தைகள், பைரவி, அகமும் புறமும், காலபைரவர், சாமியே சரணம் ஐயப்பா, பக்தி விஜயம் ஆகிய தொடர்கள் சன். டி.வி.யில், விஜய் டி.வி.யில், பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருக்கிறது.

நாடகக் காவலரின் வாரிசான சிவப்பிரசாத்திற்காக இவர் எழுதிய காஞ்சி காமாட்சி, ஸ்ரீ ரங்கநாதர் மகிமை, மீனாட்சி கல்யாணம், திருமுருகாற்றுப்படை, வள்ளலார் போன்ற நாடகங்களும் எழுதியுள்ளார்.

ஆன்மிகச் சொற்பொழிவிலும், இவர் புகழ் பெற்ற ஒரு மாமனிதர். வாமன அவதாரம் போலவும், அகஸ்தியர் போலவும் உருவமைப்பு கொண்ட இவர் எழுத்துலகிற்குக் கிடைத்த விலைமதிப்பில்லாத ஒரு வைரம்.

மாபெரும் சாதனை நிகழ்த்திய மாணிக்கம். சத்தான விஷயங்களை முத்தாகத் தந்தவர். இவரது மகாபாரதச் சொற்பொழிவு பாரத தேசத்திற்கு ஒரு பெரும் அர்ப்பணிப்பு. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் நாடகங்கள் அன்றும் இன்றும் எனும் பெயரில் இவர் ஆற்றிய சொற்பொழிவும், கண்ணதாசன் வாங்கிய கடன் எனும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவும் அறிவும் ஆனந்தமும் நிறைந்தது.

இவரது எல்லா புகழுக்கும் தாய் பார்வதி அம்மையார்தான் காரணம்.

இவருக்கு குமார், ஷங்கர், மோகன் என மூன்று முத்தான குழந்தைகள்.

சரஸ்வதி கடாக்ஷத்தைப் பெற்ற இவர் சத்தியவாணி என்ற ஒரு நல்ல வாழ்க்கைத் துணைவியையும் பெற்றவர்.

இவரது கை வண்ணத்தில் இன்னும் வரவிருக்கிறது அநேக படைப்புகள். நான் என்றென்றும் போற்றுவது எழுத்தாளர் கே.பி. அறிவானந்தத்தை தான்.

(தொடரும்)

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...