பாரம்பரிய சினிமா உலகம் ஏவி.எம். ஹெரிடேஜ் மியூசியம் திறக்கப்பட்டது

 பாரம்பரிய சினிமா உலகம் ஏவி.எம். ஹெரிடேஜ் மியூசியம் திறக்கப்பட்டது

கடந்த 77 வருடங்களில் 178 படங்கள் வரை தயாரித்துள்ள ஏவி.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளது. இந்தியாவிலேயே மிகப் பழமை வாய்ந்த நிறுவனமாக இருந்தாலும் ஏவி.எம். குடும்பம் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைக் கட்டமைத்துக் கொண்டு தனது பெருமையையும் புகழையும் தன்னிடத்தில் தக்க வைத்துள்ளது.

சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏவி.எம். ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார். பின்னர் அருங்காட்சியகத்தில் உள்ள பழமையான கார்கள், திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், தொலைக்காட்சிகள் உள்ளிட்டவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இதில் நடிகர்கள் சிவக்குமார், கமல்ஹாசன், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துக் கூறினர்.
புதுமைகளை, படைப்புகளை வழங்குவதில் முன்னோடியாக இருந்த எங்களது நிறுவனர் ஏ.வி மெய்யப்ப செட்டியார் அவர்களின் பாதச்சுவடுகளை பின்பற்றி ஏவி.எம். ஹெரிடேஜ் மியூசியத்தை ஏவி.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. சினிமா வரலாறு மற்றும் பெருமையைக் கொண்டாடும் விதமாக அதேசமயம் கவனமாகப் பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள். உபகரணங்கள் மற்றும் அரிதான இயந்திரச் சாதனங்கள் என இந்த மியூசியம் பார்வையாளர்களுக்கு ஏவி.எம். நிறுவனத்தின் பெருமை வாய்ந்த வரலாறை உடனடியாக உணரும் வாய்ப்பைக் கொடுக்கும்.

இந்திய திரையுலக வரலாற்றில் பல புதுமையான விஷயங்களை புகுத்தியதில் ஏவி.எம். நிறுவனத்திற்கு மிகப்பெரிய பெருமை உண்டு. முதல் மொழிமாற்று திரைப்படம் (ஹரிச்சந்திரா 1944), முதன்முறையாக பின்னணி பாடுவதை அறிமுகப்படுத்திய முதல் படம் (நந்தகுமார் 1938), இசைக்கு ஏற்ப பாடல்களில் பின்னர் உதட்டசைவை பொருத்தி கொள்ளும் முறையை கொண்டு வந்த முதல் படம் (ஸ்ரீவள்ளி 1945),

பாடல்களே இல்லாமல் உருவான முதல் தமிழ் படம் (அந்த நாள் 1954), நடிகர்களை அனிமேஷன் உருவங்களுடன் இணைத்து உருவாக்கிய முதல் படம் (ராஜா சின்ன ரோஜா 1989), சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்காக ஜவஹர்லால் நேரு கோல்டு மெடல் விருது பெற்ற படம் (ஹம் பாஞ்சி ஏக் தால் கே இன் 1957), டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தை முதலில் பயன்படுத்திய படம் (சிவாஜி 3D 2007) ஆகியவை நம் நிறுவனத்தின் புதுமைகளையும் மதிப்பீடுகளையும் புகுத்தியதற்கான சில சிறந்த உதாரணங்கள்.

சி.என் அண்ணாதுரை, மு.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், என்.டி.ராமராவ் மற்றும் ஜெயலலிதா என ஐந்து முதல்வர்களுடன் இணைந்து திரைப்படங்களில் பணியாற்றிய பெருமையை ஏவி.எம். நிறுவனம் கொண்டுள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி எழுதிய வலிமையான கதை மற்றும் சீற்றம் மிகுந்த வசனங்களை கொண்டு ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவின் முகத்தையே மாற்றியது. அந்தப் படம் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியதுடன் திரைப்படங்களில் – சமூகநீதி இருக்கவேண்டும் என்பதையும் அறிமுகப்படுத்தியது.

இந்தப் புரட்சிகரமான படத்தில் ‘வெற்றி வெற்றி வெற்றி’ என்கிற தனது முதல் வார்த்தைகளைப் பேசி நடிகராக அறிமுகமானார் புகழ் பெற்ற நடிகரான சிவாஜி கணேசன். அவரது முதல் காட்சி எடுக்கப்பட்ட அந்தப் பொன்னான தருணம் நினைவுச்சின்னமாக இந்த ஏவி.எம். ஹெரிடேஜ் மியூசியத்தில் காட்சிப்படுத்தப்பட்டு நினைவுகூரப்பட்டுள்ளது,

இந்திய சினிமாவை மாற்றிய முக்கியமான மைல்கற்களை கண்டு ரசிக்கும் ஒரு வாய்ப்பை ஏவி.எம். ஹெரிடேஜ் மியூசியம் பொதுமக்களுக்கு வழங்குகிறது. மேலும் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம் மற்றும் எஜமான் ஆகிய படங்களில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள் மற்றும் ஆடியோ, வீடியோ சாதனங்கள் வகைப்படுத்தப்பட்டிருப்பதைப் பார்வையாளர்கள் காண முடியும்.

மேலும் சிவாஜி படத்தில் அதிரடிக்காரன் என்கிற பாடலில் பயன்படுத்தப்பட்ட 1939 மாடல் வகையைச் சேர்ந்த MG TB கார், சந்தேகமே இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். அதுமட்டுமல்ல ‘சிவாஜி தி பாஸ்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்று நடித்த மொட்டை பாஸ் சிலையும் சினிமா ஆர்வலர்களை ரொம்பவே குஷிப்படுத்தும்.

1910ல் இருந்து 2000 வரையிலான பழமையும் அழகும் வாய்ந்த 45 விதமான கார்கள், 20 விதமான பைக்குகள் மற்றும் இயந்திரங்கள் பார்வையாளர்களை ஆட்டோ மொபைல்களின் பொற்காலமாகத் திகழ்ந்த அந்தக் காலகட்டத்திற்கே அழைத்து செல்லும். எம்.ஜி ராமச்சந்திரன், ஜெமினி ஸ்டுடியோஸ் அதிபர் எஸ்.எஸ் வாசன் மற்றும் ஏ.வி மெய்யப்பன் போன்ற ஜாம்பவான்கள் பயன்படுத்திய கார்களின் வடிவமைப்பையும் அது குறித்த பெருமை வாய்ந்த விவரங்களையும்கூட பார்த்து ரசிக்க முடியும்.

1886ஆம் ஆண்டின் பிரதியான பென்ஸ் பேடண்ட் மோட்டார்வாகன், உள் எரிப்பு இயந்திரத்தால் இயக்கப்படும் உலகின் முதல் ஆட்டோமொபைல் மற்றும் 1896ஆம் ஆண்டில் ஹென்றி ஃபோர்டின் முதல் சோதனை ஆட்டோமொபைலான ஃபோர்டு குவாட்ரிசைக்கிள் ஆகியவை வாகன ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய ஈர்ப்பாக இருக்கும்.

புதன்கிழமை முதல் திங்கட்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக இந்த மியூசியம் திறந்து வைக்கப்பட்டிருக்கும். செவ்வாய்க்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் இந்த மியூசியம் மூடப்பட்டிருக்கும். இந்த மியூசியத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணமாகப் பெரியவர்களுக்கு 200 ரூபாயும் சிறியவர்களுக்கு 150 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், அவரது மகன் குகன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...