திருமா – அன்புமணி ரகசிய சந்திப்பா?
“சமீபத்தில் சென்னையில் நடந்த பா.ஜ.க.விற்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, பா.ஜ.க., பா.ம.க. இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அது தி.மு.க. கூட்டணியாக இருந்தாலும்” என்று தெரிவித்திருந்தார் திருமாவளவன். ஆனால் தற்போது பா.ம.க. தலைவர் அன்புமணியுடன் ரகசிய சந்திப்பு நடத்தியதாக தினமலர் செய்தி வெளியிட்டிருக்கிறது
லோக்சபா தேர்தலில், பா.ம.க. தலைவர் அன்புமணியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் இணைந்து செயல்படும் வகையில், ரகசியப் பேச்சு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் கிடைக்குமா? அல்லது ஒரு தொகுதி ஒதுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன், தனிச் சின்னத்தில் போட்டியிட்டு, குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல், விழுப்புரம் தொகுதியில், அக்கட்சியின் பொதுச்செயலர் ரவிகுமார், தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு, திருமாவளவனைக் காட்டிலும் அதிக ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க. கூட்டணியில், மூன்று தொகுதிகளை, வி.சி.க. எதிர்பார்க்கிறது. ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவதால், அன்புமணி, திருமாவளவன் தரப்பினர் ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது.
இது குறித்து, பா.ம.க., வட்டாரங்கள் கூறியதாவது:
“தி.மு.க. – அ.தி.மு.க. கூட்டணியில், பா.ம.க. இடம்பெறுவது குறித்து இன்னும் முடிவாகவில்லை. இரு கட்சிகளும் பா.ம.க.விடம் பேச்சு நடத்தாமல் மவுனம் சாதித்து வருகின்றன. வடமாவட்டங்களில் உள்ள 20 லோக்சபா தொகுதிகளில், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் இணைந்து போட்டியிட்டால், கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என இரு கட்சிகளின் தலைவர்களும் கருதுகின்றனர்.
பா.ம.க.,வுடன் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனும் கூட்டணி அமைத்து, அன்புமணியுடன் கைகோர்த்துச் செயல்பட வேண்டும் என வன்னியர் சமுதாயத்தினர் விரும்புகின்றனர்.
அன்புமணி – திருமாவளவன் – வேல்முருகன் இணைந்து, புதுக் கூட்டணி அமைத்தால், வடமாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தலாம் என்றும் கணக்குப் போடப்படுகிறது.” என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
இந்தச் செய்திக்கு சில கேள்விகள்…
- வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அதில் பாமகவிலிருந்த விலுகி தனிக்கட்சி தொடங்கியவர். அவர் எப்படி தி.மு.க. கூட்டணிக்கு எதிராகக் களத்தில் இறங்குவார்?
- பா.ம.க., பா.ஜ.க. இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம் என்று உறுதியாகச் சொன்னவர் திருமா. அவர் எப்படி திடீரென்று பல்டி அடிப்பார். அதிலும் கூட்டணி கட்சியின் உதவியோடே தன் கட்சியை பலப்படுத்திவரும் திருமா இப்படிப்பட்ட பலப்பரீட்டையில் இறங்குவாரா?
- சட்டசபைத் தேர்தலின்போது இந்த நடவடிக்கையை எடுத்தாலும் பரவாயில்லை அதுவும் எம்.பி. தேர்தலில் இந்த முடிவு அவர் எடுக்கமாட்டார் என்பது நிச்சயம். நாளை தெரியும் சேதி.