‘ஹிட்லிஸ்ட்’டின் ஹீரோ இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே. செல்லுலாய்ட்ஸ், ஏற்கனவே தெனாலி மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய படங்களைத் தயாரித்திருந்த நிலையில் தற்போது ‘ஹிட்லிஸ்ட்’ என்கிற படத்தைத் தயாரித்து வருகிறது. பிரபல இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் படமாக உருவாகி வருகிறது.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய சூரியகதிர் மற்றும் கார்த்திகேயன் இருவரும் இணைந்து இந்தப் படத்தை இயக்கி வருகின்றனர். நடிகர் சரத்குமார் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் இந்தப் படத்தில் சித்தாரா, முனீஸ்காந்த், ஐஸ்வர்யா தத்தா, ஸ்மிருதி வெங்கட், பாலசரவணன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கே.ஜி.எஃப். புகழ் கருடா ராமச்சந்திரா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பயங்கரமான வில்லனாக நடிப்பதன் மூலம் இந்தப் படத்தின் நட்சத்திரப் பட்டியலில் தற்போது இணைந்துள்ளார். அவர் நடித்த சில முக்கியமான காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவை ராம்சரண் கையாள, படத்தொகுப்பை ஜானும் கலை இயக்கத்தை அருணும் கவனிக்கின்றனர்.
ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்குப் படத்திற்குத் தேவையான கமர்சியல் அம்சங்கள் நிறைந்த ஆக்சன் திரில்லராக ‘ஹிட்லிஸ்ட்’ படம் இருக்கும். கிட்டத்தட்ட முடிவுறும் தறுவாயில் இருக்கும் இந்தப் படத்தின் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் படங்கள் ஹிட் அடிக்கின்றன அதனால் ஹிட் லிஸ்ட்டில் கௌதம் வாசுதேவ் மேனன் பெயர் உள்ளது. இயக்குநர் என்பதிலிருந்து முழு நேர நடிகராக மாறிவிடுவாரோ என்கிற கருத்து ஏற்படுகிறது.