இயக்குநர் மகேந்திரன் பிறந்த தினம் இன்று
ஓடாத படத்துக்கு எழுதிய விமர்சனம்
காகிதப் படகில் சாகசப் பயணம்
இயக்குநர் மகேந்திரன் பிறந்த தினம் இன்று
பெ. கருணாகரன்
பொதுவாக சினிமா விமர்சனங்கள் எழுதுவதில் எனக்கு ஆர்வம் இருப்பதில்லை. குமுதம் இதழில் நான் சினிமா விமர்சனம் எழுதும் வாரத்தில் சினிமா நிருபர்கள் என் மீது ‘கிர்ர்ர்’ ஆகி விடுவார்கள். ஏனென்றால், படத்தை நான் கொஞ்சம் (சில நேரங்களில் நிறையவே) சேதாரமாக்கி விடுவேன். டெஸ்க்கில் இருக்கும் நான் எதையோ எழுதப் போக, தயாரிப்பாளர்களிடம் மாட்டிக் கொள்வது சினிமா நிருபர்கள்தான். திரும்பத் திரும்ப அரைத்த மாவையே அரைத்து, புளித்த மாவிலேயே எலுமிச்சம் பழச் சாறையும் கலப்பது போன்ற அணுகுமுறையுடன் அப்போது நிறைய படங்கள் வெளிவந்து, வதை செய்வதாக எனக்கு வருத்தம் உண்டு.
அத்தி பூத்தாற்போல ஒரு ட்ரெண்ட் செட் படம் வரும்போது, அதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்குப் பதில், அதே கதையை வேறு கதாபாத்திரங்களை வைத்து ஜெராக்ஸ் எடுக்கும் முயற்சிகளே இங்கு அதிகம்.
ஸ்டுடியோக்களை விட்டு தமிழ் சினிமாவை இயக்குநர் பாரதிராஜா கிராமங்களுக்கு அழைத்துச் சென்றார். அந்தக் காலகட்டத்தில் கோடம்பாக்கத்துக்கு திடீரென்று கிராமங்களின் மீது அக்கறை தொற்றிக் கொண்டது. வரிசையாக கிராமியக் கதைகளால் கோடம்பாக்கம் திணறியது. எல்லோரும் கிராமத்துக்குப் படமெடுக்கப் போனதால் ஸ்டுடியோக்கள் பிஸினஸ் இல்லாமல் காற்றோடியதால், ஏவிஎம் நிறுவனம் ‘சகலகலா வல்லவன்’, ‘பாயும் புலி’ போன்ற ஸ்டுடியோவில் படமாக்கப்பட்ட மசாலாப் படங்களை எடுத்து வெளியிட, அவைகளும் ஹிட் ஆயின. மீண்டும் ஸ்டுடியோக்கள் பக்கம் சாய்ந்துவிட்டார்கள் தயாரிப்பாளர்கள்.
கோடிக் கணக்கில் பணம் புழங்கும் துறை. போட்ட பணத்தைத் திரும்ப எடுக்கும் முனைப்பு. இந்த முன்னிறுத்தலில் கதை, கலை வடிவம், யதார்த்தம் ஆகியவை இரண்டாம் பட்சம் ஆகின. வித்தியாச முயற்சிகள் அரிதாகவே நடந்தன. ஒரு வித்தியாசமான இயக்குநருக்குத் துணிச்சலான தயாரிப்பாளர் அமைவது அவசியம். அப்படி அமைந்தால் அது தமிழ் சினிமாவுக்கு அதிர்ஷ்டம்.
இயக்குநர் பாரதிராஜாவுக்கு எஸ்.ஏ. ராஜ்கண்ணுவும், இயக்குநர் மகேந்திரனுக்கு வேணு செட்டியாரும், இயக்குநர் அகத்தியனுக்கு சிவசக்தி பாண்டியனும், இயக்குநர் பாலாவுக்கு கந்தசாமியும் அமைந்ததைப் போல் வித்தியாசமான இயக்குநர்கள் எல்லோருக்கும், துணிச்சலான தயாரிப்பாளர்கள் கிடைத்து விடுவதில்லை.
செம்மறியாட்டு மந்தையாக ஜெயிக்கும் ட்ரெண்டைச் சார்ந்தே தமிழ்த் திரைத்துறை இயங்கி வருகிறது. இதனை முழுக்கத் தவறு என்றும் தலையில் அடித்த மாதிரி கூறிவிட முடியவில்லை. வர்த்தகம் முன்னிறுத்தப்படும் ஒரு துறையில் எதற்கு டிமாண்ட் அதிகமோ அதற்குத்தான் போட்டி அதிகமிருக்கும்.
ஒரு பத்திரிகையாளனாய், படைப்பாளியாய் எனக்கு இந்த வர்த்தகக் கோட்பாடுகள் இரண்டாம் பட்சம்தான். அதனால், பொதுவாக அவர்களை ஏன் நோகடித்துக் கொண்டு என்று திரை விமர்சனம் எழுதுவதை நான் தவிர்த்துவிடுவேன். தவிர்க்க முடியாத நேரத்தில், அது தயாரிப்பாளரின் தலைவிதி என்று நொந்து கொள்வேன்.
நான் எழுதிய சினிமா விமர்சனங்களில் மறக்க முடியாதது இயக்குநர் மகேந்திரனின் ‘சாசனம்’பட விமர்சனம். ‘குமுதம்’ இதழில் எவ்வளவோ சினிமாவுக்கு விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், குமுதத்தில் நான்கு பக்கங்களுக்கு வெளிவந்த முதல் விமர்சனம் அதுவாகத்தான் இருக்கும். விமர்சனம் எழுதுவதற்காக அந்தப் படத்தை பார்த்ததுதான் மறக்க முடியாத, வேறு யாருக்கும் கிடைத்திராத விநோத அனுபவம்.
மகேந்திரன் அப்போது மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு (சுமார் பத்தாண்டுகள்) இயக்கி 2006-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘சாசனம்’. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் (என்.எஃப்.டி.சி.) நிதி உதவியுடன் எடுக்கப்பட்ட அந்தப் படத்தின் நாயகன் அரவிந்த் சாமி, நாயகி கௌதமி. படம் எடுக்கப்பட்டு நீண்ட நாட்கள் முடங்கியிருந்து, மிகத் தாமதமாகவே திரைக்கு வந்தது. கதை, நகரத்தாரின் கலாச்சாரமான தத்து கொடுத்தலைப் பின்னணியாகக் கொண்டது. வாங்கிய லட்சக்கணக்கான கடனுக்காக தன் இருபத்தைந்து வயது மகனைத் தத்து கொடுக்கிறார் தந்தை. ஈன்றெடுத்தவர், தத்தெடுத்தவர், தத்தளிக்கப்பட்டவர் ஆகியோரின் மனத் தத்தளிப்புகளே கதை. நுணுக்கமான கதை.
‘சாசனம்’ படத்தைப் பார்த்த அப்போதைய, ‘குமுதம்’ சேர்மன் டாக்டர். எஸ்.ஏ.பி. ஜவஹர் பழனியப்பன் அந்த வார இதழிலேயே அதுபற்றிய விமர்சனம் வெளிவர வேண்டும் என்றார். நான் எழுதுவதாக விரும்பி ஏற்றுக் கொண்டேன். அதற்கு இரண்டு காரணங்கள், 1. அது வித்தியாசமான படம். 2. எனக்கு மகேந்திரன் படங்களை மிகவும் பிடிக்கும்.
பொறுப்பை ஏற்றுக்கொண்டேனே தவிர, அதன் பிறகுதான் அதிலுள்ள சிக்கல்கள் தெரியவந்தன. காரணம், சென்னையில் அந்தப் படம் இரண்டு தியேட்டர்களில் மட்டுமே என்.எஃப்.டி.சி.யால் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. திரையிடப்பட்ட சில தினங்களிலேயே பார்வையாளர்கள் இல்லாததால் அந்தப் படத்தை எடுத்து விட்டதாகச் சொன்னார்கள். இதனால் படம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. இதனால், எனக்கு அந்தப் படத்தின் மீதான கவனம் அதிகமானது. அந்தப் படத்தைப் பார்த்தே தீருவது என்ற முடிவுக்கு வந்தேன்.
என்.எஃப்.டி.சி.யில் டி.வி.டி. வாங்கிப் படம் பார்த்து விமர்சனம் எழுத முடிவு செய்தேன். சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள என்.எஃப்.டி.சி. அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, அதன் இயக்குநரிடம் தொலைபேசியில் பேசினேன். மறுநாள் ஆபீஸில் வந்து வாங்கிக் கொள்ளச் சொன்னார். மறுநாள் காலையில் ஆபீஸ் சென்றபோது, தனது உதவியாளரிடம் எனக்கு டி.வி.டி. கொடுக்குமாறு உத்தரவிட்டார்.
அந்த உதவியாளரோ, ஒரு டி.வி.டி.தான் இருந்தது. அதை டெல்லிக்கு அனுப்பி விட்டதாகத் தலைசொறிந்தார். என்ன செய்வதென்று நான் திகைத்தபோது, இயக்குநரே ஒரு தீர்வு சொன்னார். ‘படத்தோட ஃபிலிம் கேன் (படப்பெட்டி) இங்குதான் இருக்கு. ஸ்கிரீன் பண்ணச் சொல்றேன். பார்க்கிறீங்களா?’ என்றார். அதைவிட, வேறு வேலை?
ஒரு சிறிய அறை. சின்னதாக ஒரு புரொஜெக்டர். சுமார் 50 இன்ச் சைஸில் ஸ்கிரீன். ஊழியர் ஒருவர் ஒரு ரோலை புரொஜெக்டரில் பொருத்தி படத்தைப் போட்டு விட்டுப் போவார். அந்த ஃபிலிம் ரோல் முடிந்தவுடன் end of part என்று எழுத்துக்கள் வந்து நம்பர்கள் ஓடும். மீண்டும் வெளியே வந்து ஊழியரிடம் விஷயத்தைக் கூற, அடுத்த ரோலை திரையிட்டுப் போவார். அந்த திரையிடலில் ஆடியோ, வீடியோ இரண்டும் சுமார்தான். என்றாலும் சில திருட்டு டி.வி.டிக்களை விட பெட்டராக இருந்தது.
உணர்ச்சித் துடிப்புள்ள அருமையான கதை. நகரத்தார் வாழ்வைப் பிரதிபலிக்கும் அழுத்தமான வசனங்கள். ஏகப்பட்ட இடங்களில் டைரக்டோரியல் டச். ஆபீஸ் வந்து சுடச்சுட விமர்சனம் எழுதி முடித்தேன். அன்றே அச்சுக்குப் போனது. ‘குமுதம்’ வெளிவந்த மறுநாள் ஒரு போன். இயக்குநர் மகேந்திரன் பேசினார். அந்த விமர்சனத்தை நான் எழுதினேன் என்று ரிப்போர்ட்டர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டு பேசினார். ஏற்கெனவே அவர் என் நண்பர் என்பதால், “மிஸ்டர் கருணாகரன், மகிழ்ச்சி! நீங்கள் எழுதிய விமர்சனம் அருமை. படத்தைப் புரிஞ்சிக்கிட்டு எழுதியிருக்கீங்க. மற்ற பத்திரிகைகள் செய்யாத கௌரவத்தை குமுதம் செய்திருக்கிறது…” என்று எதிர் முனையில் குரலில் நெகிழ்ந்தார். நானும் நெகிழ்ந்தேன்.
மேலும் அவர் பேசிய போது, “சாசனம் கதையை எழுத்தாளர் கந்தர்வன் எழுதியிருந்தார். என்.எஃப்.டி.சியில் கொடுக்க ஒன்பது பிரதிகள் ஸ்கிரிட் வேண்டும். அதைத் தயாரிக்கவே எட்டாயிரம் ரூபாய் ஆனது. எனது மனைவி நகைகளை எல்லாம் அடகு வைத்துதான் ஸ்கிரிப்ட் பிரதிகள் தயார் செய்தோம். படப்பிடிப்பு நடந்தது. ஆனால், அவங்க கொடுத்த முப்பத்தைந்து லட்சம் போதவில்லை என்று சொன்னபோது, அதற்குமேல் பணமே இல்லை என்று கைவிரித்தார்கள். அப்போதைய மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பவர்ஃபுல் லேடி. அவரிடம் பிரச்னையைக் கொண்டு சென்றேன். அவர் சொன்னதும் இன்னும் பத்து லட்சரூபாய் இருக்கு என்றார்கள்.
ஹீரோ அரவிந்த்சாமி ஒரு பைசா வாங்கிக் கொள்ளாமல் நடித்தார். அது விளையாட்டான விஷயம் இல்லை. கொஞ்சமும் சோர்வில்லாமல் நடித்தார். இத்தனைக்கும் அவர் மனைவிக்கு ஏதோ சின்னதா ஒரு ஆபரேஷன். ரஞ்சிதாவுக்கு திடீர்னு கல்யாணம் ஆச்சு. கௌதமி கல்யாணம் பண்ண தீர்மானித்து திடீரென்று மாலையும் கழுத்துமாக நின்றார். அப்படியும் சமாளித்துப் படம் முடித்தோம்.
படம் நன்றாக வந்திருப்பதைக் கேள்விப்பட்டு வாங்குபவர்கள் நிறைய பேர் வந்தார்கள். ஆபாவாணன், தாணு இது மாதிரி நிறையப்பேர் வந்தார்கள். இந்த இடத்தில் நீங்க ஒன்றை கவனிச்சே ஆகணும். என்.எஃப்.டி.சி. படத்தை வாங்க யாரும் வரவே மாட்டார்கள். பார்க்கவே மாட்டாங்க. காலில் விழுந்து கெஞ்சினால் கூட ‘அய்யா சாமி… விட்டுடுங்க…’ என்று சொல்லிவிடுவார்கள். அதற்காகத்தான் அரவிந்த்சாமியைப் போட்டேன். அவர் என் எதிர்பார்ப்புக்கு மேலாக நியாயம் செய்து அந்த கேரக்டரில் இன்வால்வ் ஆனார்.
என்.எஃப்.டி.சியில் மக்கள் பணமும் வீணாகிக் கிடக்கிறது. அதில் என் பணமும் உங்க பணமும் கூட இருக்கு. என்.எஃப்.டி.சி. வர வர ஆஸ்பத்திரி மார்ச்சுவரி மாதிரி ஆகிவிட்டது. அங்கே பிணங்களை வரிசையாக அடுக்கிவைப்பது போல இங்கே படப்பெட்டிகளை வரிசையா அடுக்கி வைத்திருக்கிறார்கள். ரிலீசாவதற்கு ஒரு துரும்பைக் கூட அசைத்துப் பார்க்க மாட்டார்கள். அதிகபட்சம் புறநகரில் ஒரு தியேட்டரில் இரண்டு நாள் சின்னதாக ஒரு போஸ்டர் ஒட்டிப் போட்டுவிட்டு அதை ஆபீசில் ஒரு காப்பி வைத்துக்கொண்டு இன்னொரு கட்டிங்கை டெல்லி ஆபீசுக்கு அனுப்பிவிடுவார்கள். அவ்வளவுதான். அவர்கள் கடமை முடிந்தது. இத்தனைக்கும் என்படம் சாசனம் இருபத்தெட்டு நாட்கள் ஷுட்டிங் நடந்தது. இருபத்தாறு ரோல்தான். நம்புங்கள். இதுதான் உண்மை.
பொன்வண்ணன் கூட ஜமீலா என்றொரு படம் எடுத்தார். அதுவும் உடனடியாக என்.எஃப்.டி.சி. மார்ச்சுவரிக்கு வந்துவிட்டது. கண்மாய்கள், கால்வாய்கள், ஏரிகளை தூர் எடுப்பது மாதிரி என்.எஃப்.டி.சியையும் தூர் வாரவேண்டும். முக்கியமாக இதைக் கண்காணிக்க ஓர் அமைப்பு வேண்டும். கமிஷன் மாதிரியெல்லாம் வேண்டாம்.
என்.எஃப்.டி.சி.யில் ஒரு படம் முடிக்க 35 லட்சம் கொடுக்கிறாங்க. அந்தப் பணத்தில் படம் பண்றது ரொம்ப ரொம்ப கஷ்டம். சில சாலிட் சீன்களை அனுபவம் மிக்க நடிகர்கள்தான் பண்ண முடியும். அவங்களுக்குக் கொஞ்சம் கொடுத்தாகணும். எல்லோரும் அரவிந்த்சாமி மாதிரி பைசா வாங்காம நடிக்க ஒப்புக்க மாட்டாங்க. அதைவிட பப்ளிசிடிக்கு முதலில் பணம் கொடுக்கணும். அவர்கள் கொடுக்கிற பணத்தில் விளம்பரத்துக்கு என்ன செய்வது? என்.எஃப்.டி.சி. ஆபீசில் மட்டும் போஸ்டர் ஒட்டினால் போதுமா? சென்னையில் இரண்டு தியேட்டரில் மட்டுமே திரையிடப்பட்ட ‘சாசனம்’ படம் ஒரு வாரம் கூட ஓட்டப்படாமல், விளம்பரமும் செய்யப்படாமல் திருப்பப்பட்டதுதான் வேதனை… ” என்று வேதனையுடன் சொல்லி முடித்தார் மகேந்திரன்.
பெ. கருணாகரன்
* இயக்குநர் மகேந்திரன் பிறந்த தினம் இன்று