‘விட்னஸ்’ திரைப்படத் திறனாய்வுக் கூட்டம்
மனித மலத்தை மனிதர்களே அள்ளி எடுக்கும் கொடுமை இன்றைய நவீன உலகத்திலும் ஒழிக்கமுடியாத அவல நிலையில்தான் நாம் உள்ளோம். அதன் தொடர்பாக மலக்குழிவு மரணங்கள் நிகழ்ந்தவண்ணம்தான் உள்ளன. அதைக் கண்டித்து எடுக்கப்பட்ட படம்தான் ‘விட்னஸ்’.
திரைக்கலைஞர் ரோகிணி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘விட்னஸ்’ திரைப்படத்தின் திறானய்வுக் கூட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சமீபத்தில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் தீபக், திரைக்கதை எழுதிய முத்துவேல், பாடலாசிரியர் ஏகாதசி, திரைக்கலைஞர் ரோகிணி ஆகியோரும் மற்றும் த.மு.எ.ச. பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
தூய்மை பணியாளர் (இந்திராணி) ரோகிணியின் மகன் தமிழரசன் குடும்ப சூழல் காரணமாக கழிவுநீர் குழாய் அடைப்பை எடுக்கும் பணிக்குத் தள்ளப்படுகிறார். அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் தொட்டியில் இறங்கி அடைப்பை சரி செய்யும்போது இறந்து விடுகிறார். அதே குடியிருப்பில் கட்டட நிபுணரான நாயகி ஷரத்தா ஸ்ரீநாத் வசிக்கிறார். இளைஞனின் மரணம் ஷரத்தாவை உலுக்க மகனைப் பறிகொடுத்து நிராயுதபாணியாக நிற்கும் ரோகிணிக்கு உதவ தன் அடுக்ககத்தின் வீடியோ பதிவை ரோகிணிக்குத் தருகிறார். அதுவே முக்கிய விட்னஸாக அமைகிறது.
அதனைத் தொடர்ந்து மகனின் சாவுக்கு காரணமானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த ரோகிணி போராடுகிறார்.
த.மு.எ.ச.வின் தலைவர் ஜி. செல்வா அநீதியை எதிர்த்துப் போராடுபவராக படத்தின் நாயகனாகவே சிறப்பாக நடித்துள்ளார்.
சமூக அவலத்தை வணிகத்தனம் இல்லாமல் அழுத்தமான கதாபாத்திரங்களோடு மனதைத் தொடும்படி படமாக்கியுள்ள இயக்குநர் தீபக்கை பாராட்டலாம்.
விழாவில் பேசிய கவிஞர் ஏகாதசி “முன்பு திரைத் துறையைப் பற்றிய பெரிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. ஒரு விஷயம் எல்லாருக்கும ஒரே நேரத்தில் போய் சேருகிற உச்ச ஊடகம் சினிமா. நம்முடைய குரலை இங்கு வந்துதான் கொடுக்கவேண்டும். அதற்கான விழிப்புணர்வு வந்தபிறகு இடதுசாரி அமைப்புகள் திரைப்படத் துறையை கைப்பற்றியே தீரவேண்டும் என்று இயங்கியதில் தற்போது ஆண்டுக்கு ஐந்திலிருந்து பத்து திரைப்படங்கள் ஒரு முனைப்பாக மக்களைப் பேசுகிற, மக்கள் விடுதலையைப் பேசுகிற படமாக வருகிறது. அந்த வகையில் ‘விட்னஸ்’ பாராட்டத்தக்க படம்.
ரோகிணி பேசும்போது “இயக்குநர் தீபக் இந்தப் படம் குறித்துப் பேச என்னிடம் வந்தபோது பெரிய தயாரிப்பாளர்கள் அவரிடம் இல்லை. ஆனால் கண்டிப்பாக இந்தப் படத்தை எடுப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. அந்த நம்பிக்கையை நான் அவருக்குக் கொடுத்தது நம்ம அதைப் பின் சார்பாக நான் செய்து கொண்டிருக்கும் இந்தப் பயணம்.
எல்லாரும் கேட்டாங்க, செம்மஞ்சேரிக்குத் தூக்கியெறியப்பட்ட மக்கள் வாழ்வைப் பற்றி நீங்க எப்படி உணர்ந்தீங்கன்னு. சூர்யா நகரில் குடியிருப்புகளுக்கு செல்வா தோழர் சென்று ‘யாரும் இங்கிருந்து போகாதீர்கள்’ என்று போராடியதை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
அதேமாதிரி துப்புரவுப் பணியாளர்கள் பற்றியும் மலக்குழி மரணங்கள் பற்றியும் நீங்கள் எப்படித் தெரிந்துகொண்டீர்கள் என்று கேட்டார்கள். இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே மலக்குழி மரணங்களைப் பற்றி ‘வாசனை’ என்கிற நாடகத்தை நான் எழுதி, இயக்கியிருக்கிறேன். இப்படி எல்லாவற்று பிரச்னைகள் பற்றியும் நான் பயணித்துக்கொண்டே இருந்திருக்கிறேன். ஆனால் விட்னஸ் என்கிற திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது.
இந்தப் படத்தில் நான் நடிக்கும்போதுகூட எனக்குத் தெரியவில்லை. ஆனால் எல்லாரையும் பேசவைத்திருக்கிறது. இதைவிட ஒரு கலைப் படைப்பு வேறெதையும் சாதித்துவிட முடியாது.
அதிகார அடுக்குகளில் இருக்கும் ஒவ்வொருவரும் இந்தக் கலைப் படைப்பினால் என்னென்ன மாற்றங்கள் செய்யவேண்டும் என்பது பற்றி அவர்கள் உணரவேண்டும். அவர்களுக்கு நாம் உணர்த்தவேண்டும். ஒரு இயக்கமாக ஒரு அமைப்பாக நாம் போக வேண்டிய வழியை விட்னஸ் திரைப்படக்குழு செய்திருக்கிறது” என்றார் ரோகிணி.
நன்றி உரையுடன் தோழர்களின் அளவளாவல் முடிந்து இரவு ஒன்பது மணிக்கு விழா நிறைவுற்றது.