ஏரி நடுவில் ஒரே கல்லில் மிகப்பெரிய புத்தர் சிலை

 ஏரி நடுவில் ஒரே கல்லில் மிகப்பெரிய புத்தர் சிலை

நண்பர்களே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகப் கோயில்களின் நகரமாக இருக்கக்கூடிய ஹைதராபாத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீண்ட தூரம் முன்பே திட்டமிட்டு பயணத்தைத் தொடங்கினோம்.

பல்வேறு திட்டமிடலுடன் ஹைதராபாத் நகரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று எண்ணி பல நண்பர்களிடம் பேசி பல்வேறு வகையான தகவல்களைச் சேகரித்து சுமார் ஆறு நாட்கள் தொடர்ந்து காலையில் இருந்து இரவு வரை நிற்க நேரமில்லாமல் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம்.

இதில் முக்கியமான வெற்றிக்குக் காரணம் திட்டமிடல்தான். திட்டமிட்டால் வெற்றி பெறலாம். எங்களுடைய திட்டத்தின் காரணமாக அறை வாடகை மற்றும் நாங்கள் சுற்றிப் பார்க்கக்கூடிய இடங்களுக்கான கார் செலவுகள் மிகவும் சாதகமான முறையில் எங்களால் அமைக்கப்பட்டது. அதற்குக் காரணம் பல்வேறு நண்பர்களின் உதவிகள்தான், தகவல்கள்தான்.

முதல் நாள் காலை திங்கள்கிழமையன்று ஹைதராபாத்தில் இருந்து கிளம்பி கீசர குப்தா  என்கிற கோயிலை அடைந்தோம். கோவிலுக்குச் செல்வதற்கு முன்பு ஹைதராபாத்தில் கோட்டி என்கிற இடத்தில் சுப்ரபாத் ஹோட்டலில் காலை உணவு சாப்பிட்டோம். மிக அருமை. அங்குள்ள சுவாமியை நன்றாகத் தரிசனம் செய்தோம். மலை உச்சியில் இருக்கின்றது  கோயில்.

அங்கே குரங்குகள் மிக மிக அதிகமாக இருக்கின்றன. நம்மைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. எங்கு பார்த்தாலும் லிங்கங்கள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன. அனுமன் சிலைகளும் மிக அதிக அளவில் உள்ளன.

மிக நீண்ட வரிசையில் சென்ற பிறகு சுவாமியைத் தரிசனம்  செய்து மீண்டும் அருகே உள்ள மழையும் தண்ணீரும் இணைந்த சுனை போன்ற பகுதியைச் சென்று அடைந்தோம். அங்கு சில மணித்துளிகள் இருந்துவிட்டு மீண்டும் மலை உச்சியில் இருந்த எங்களது காரை எடுத்துக்கொண்டு யாதகிரிகுட்டா நோக்கிச் சென்றோம்.

யாதகிரிகுட்டா திருப்பதியைப் போன்று மிகப் பெரிய மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கோயிலாகும். இங்கு மிக எளிதாக நம்மால்  மலையைச் சென்றடைய முடியவில்லை. ஏனெனில் ஒரு  கார் மேலே ஏறுவது என்றால் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து 500 ரூபாய் கொடுத்த பிறகுதான் மேலே விடுகின்றனர்.

ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டாம் என்று பஸ்ஸைப் பிடித்துச் செல்லலாம் என்று முயற்சி செய்தோம். ஆனால் பஸ்ஸில் ஏறுவது அவ்வளவு எளிதாக இல்லை. தெலங்கானா  அரசானது ஃப்ரீயாக பஸ்ஸை இயக்குகிறது. ஆனாலும் பஸ்ஸில் ஏறுவதற்கு மிகப் பெரிய கூட்டம் அலைமோதி அடித்துப் பிடித்து ஜன்னல் வழியாக ஏறுகின்றது.

நாங்களும் எப்படியோ ஏறி மேலே சென்றால் அங்கு நிற்கிறது மிகப் பெரிய கூட்டம். மிக நீண்ட நேரத்திற்குப் பிறகு சிறப்பு தரிசனப் பணம் பெற்று அதிலும் பார்க்க முடியாமல் மிகவும் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் பேருந்து இருக்கும் இடம் வந்தால் அதே நிலைமைதான்.

நான் ஏறிவிட்டேன் பேருந்தில். ஆனால்  என் மனைவியும் எனது மகனும் ஏறுவதற்குள் வண்டியை இயக்கிவிட்டார்கள். மொழி தெரியவில்லை. ஹிந்தி அவசியம் தெரிந்திருக்க வேண்டும். தெலுங்கும் தெரியவில்லை. பிறகு பேருந்து ஓட்டுநரிடம் சத்தம் போட்டு பஸ்ஸை  நிற்க வைத்து எனது மனைவியும் மகனையும் பேருந்தில் ஏற்றிக் கீழே வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

மிகப்பெரிய சிரமத்திற்கு இடையில்தான் நாங்கள் அங்கிருந்து கீழே இறங்கி வந்தோம். பிறகு அங்கிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சுரேந்திரபுரி அடைந்தோம். சுரேந்திரபுரி சுமார் இரண்டரை கிலோ மீட்டருக்கும் மேலாக 108 கோபுரங்களின் கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன.

கோயில்களின் கோபுரங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதனையும் நன்றாகத் தரிசித்துவிட்டு அங்கிருந்து நாங்கள் கிளம்பி நேராக நகர விடுதியை அடைத்தோம். நகர விடுதிகளில் அறைகள் எல்லாம் பார்த்து விட்டு நகர விடுதியிலிருந்து லும்பினி பார்க் பகுதியில் லும்பினி பார்க், என்டிஆர் கார்டன் போன்றவை அருகருகே அமைந்துள்ள இடத்திற்குச் சென்றோம்.

பார்க்கிற்கு உள்ளே செல்வதற்கு ஒரு ஆளுக்கு 50 ரூபாய் வசூல் செய்கிறார்கள். உள்ளே அமைந்துள்ள புத்தர் சிலையை நாம் தனியே போட்டில் சென்ற பார்க்க வேண்டும். போட்டில் செல்வதற்கு ரூபாய் 50 ஒரு நபருக்குக் கொடுக்க வேண்டும். அதற்கும் மிகப் பெரிய வரிசை நிற்கிறது.

டான்ஸ் போட், ஸ்பீட் போட் போன்றவையும் உண்டு.  புத்தர் சிலை உள்ள இந்த இடம்தான் மிகப்பெரிய ஏரி நடுவில் உள்ளது. இந்த ஏரிதான் ஹுசைன் சாகர் லேக் ஆகும்.

ஒரே கல்லாலான புத்தர் சிலையைத் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் அங்கிருந்து கிளம்பி பார்க்கின் மையப்பகுதியை வந்தடைந்தோம். 

அங்கே  லேசர் சோ காட்சிகளை ஒரு மணி நேரம் இரவு (7.15 மணி அளவில்) பார்த்துவிட்டு, (ஒரு ஆளுக்கு 200 ரூபாய்) லைட் அண்ட் சோவை பார்த்துவிட்டு மீண்டும் அறைக்கு இரவு 9.30 மணிக்கு வந்து சேர்ந்தோம். புத்தர் சிலை  பகுதியில் இருந்து நாம் படகில் வரும்பொழுது  புதிய தலைமைச் செயலகம் மற்றும் பிர்லா மந்திர் கோயில்களைக் கண்கொள்ளா காட்சியாக லைட் அமைப்புகளோடு  நாம் பார்க்கலாம்.

இந்தப் பயணத்தில் எங்களுக்கு ஹிந்தி தெரிந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் ஹிந்தி படிக்க வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. தெலுங்கும் தெரியாது. எங்களுக்கு ஆங்கிலம் தெரியும். ஆனால் ஆங்கிலம் பேசுவதற்கு அவர்கள்  தயாராக இல்லை. எனவே கொஞ்சம் கொஞ்சம் அவர்களுக்குத்  தெரிந்த ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டு அன்றைய நாள் முழுவதையும் ஓட்டினோம்.

(பயணம் தொடரும்) 

எம்.எஸ்.லெட்சுமணன், காரைக்குடி.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...