‘பொன்னியின் செல்வன்’ || திரை விமர்சனம்

 ‘பொன்னியின் செல்வன்’ || திரை விமர்சனம்

பொன்னியின் செல்வன் நாவலின் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்தப் படத்தின் கதை என்ன என்பதைப் பார்க்கலாம்:

ராஷ்டகூடர்களுடனான போர் முடிந்த பிறகு, தன் நண்பன் வந்தியத்தேவனை அழைக்கும் சோழ நாட்டு பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன், கடம்பூர் அரண்மனையில் ஏதோ சதித் திட்டம் நடக்கவிருப்பதாகவும் அது என்ன என்பதைத் தெரிந்துகொண்டுவிட்டு, தனது தந்தை சுந்தர சோழனிடமும், சகோதரி குந்தவைப் பிராட்டியிடமும் விஷயத்தைத் தெரிவிக்க வேண்டு மெனக் கேட்டுக்கொள்கிறான்.

ஆதித்த கரிகாலன் சொன்னது போல கடம்பூர் அரண்மனையில் ஒரு சதிக் கூட்டம் பெரிய பழுவேட்டரையர் தலைமையில் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில், சுந்தர சோழருக்குப் பிறகு ஆதித்த கரிகாலனுக்குப் பதிலாக கண்டராதித்தரின் மகன் மதுராந்தகனை அரசனாக்க வேண்டுமென பேசப்படுகிறது.

இதற்குப் பிறகு, தஞ்சைக்குச் செல்லும் வழியில் பழுவேட்டரையரின் மனைவி நந்தினியைச் சந்திக்கும் வந்தியத்தேவன் அவளிடமிருந்து முத்திரை மோதிரத்தைப் பெறுகிறான். பிறகு சுந்தரசோழரைச் சந்தித்து நடக்கும் சதிகள் பற்றித் தெரிவிக்கிறான். குந்தவையையும் சந்திக்கிறான். அப்போது குந்தவை, வந்தியத்தேவன் இலங்கைக்குச் சென்று தன் சகோதரன் அருள்மொழி வர்மனைச் சந்தித்து அழைத்துவர வேண்டுமெனக் கூறுகிறாள்.

இதனை ஏற்று பூங்குழலி உதவியுடன் இலங்கைக்குச் செல்லும் வந்தியத்தேவன் அருள்மொழிவர்மனைச் சந்திக்கிறான். நண்பனாகிறான். இதற்குள், அவனைக் கைது செய்து அழைத்துவர பழுவேட்டரையர்கள் கப்பல்களை அனுப்புகிறார்கள். அந்தக் கப்பல்களில் ஒன்றை பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் கைப்பற்றுகிறார்கள். அதில் வந்தியத்தேவனை கட்டிப்போடுகிறார்கள். அவனைக் காப்பாற்ற அதில் ஏறும் அருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் அந்தக் கப்பல் கவிழ்ந்ததும் நீரில் மூழ்குகிறார்கள். அருள்மொழி வர்மன் இறந்துவிட்டதாகச் சோழநாட்டில் செய்தி பரவுகிறது. கோபம் அடையும் ஆதித்த கரிகாலன் பெரும்படையுடன் தஞ்சைக்கு விரைகிறான். இத்துடன் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் கதை முடிகிறது.

ஒரு நாவலைத் திரைப்படமாக்கும்போது சந்திக்கும் பல சிக்கல்களை பொன்னியின் செல்வன் திரைப்படமும் எதிர்கொண்டுள்ளது.

“பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் கொண்ட கதைக் களத்தில் யார் யாருக்கு என்ன பாத்திரம், எதற்காக குறிப்பிட்ட பாத்திரம் இப்படி நடந்துகொள்கிறது, அதற்கும் அந்தக் கதாபாத்திரத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விகள் முதல் பாதியில் எழுகின்றன.

திரைப்படத்தின் கதைக் கருவிற்குள் நுழைவதற்கு முன்பாக, கதாபாத்திரங்கள் யார், எதற்காக என்ற எந்த விளக்கமும் பார்வையாளர்களுக்குத் தெளிவாகக் கடத்தும்படியாக அமையாதது திரைப்படத்திற்கு தொய்வை ஏற்படுத்துகிறது.

பழிவாங்கல், நயவஞ்சகம் என அரசியல் சதுரங்கத்தில் நடக்கும் சம்பவங்கள் போன்றவற்றில் ரசிகர்களுக்கு உணர்வு ரீதியாக நெருக்கத்தை ஏற்படுத்தித்தர படக்குழு முயலவில்லை.

ஒருவேளை பாகுபலிக்கு முன்னால் இந்தத் திரைப்படம் எடுத்திருந்தால் இப்படம் பிரம்மாண்டமாக இருந்திருக்கலாம்.

எந்த வித ஒப்பீடும் இல்லாமல் பார்த்தால் கதாபாத்திரங்களின் பெயர்கள் மட்டும் மனதில் நிற்கிறது. மற்றபடி மிகவும் சுமாரான திரைக்கதை. தேவையற்ற இடத்தில் பாடல்கள்.

வருடந்தோறும் சென்னையில் நடக்கும் புத்தகக் காட்சியில் அதிகம் விற்பனையாவது பொன்னியின் செல்வன்தான்…. இந்தப் படத்துக்குப் பின் அந்த நூலை வாங்குகிறவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் போலிருக்கிறது.

காரணம், படம் அந்த நாவலின் பெருமையை கவர்ச்சியை சிதைத்துப் போட்டுவிட்டது.

நாவலைப் படிக்காமல் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கதாபாத்திரங்கள் நினைவில்  நிற்காதவாறு  திரைக்கதையும், வசனங்களும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

நாவலில் இருக்கும் சுவாரஸ்யம் திரையில் இல்லை என்பதே பலரின் கருத்து.

இரண்டு பாடல்கள் மட்டும் கேட்க முடிகிறது. மற்ற பாடல்கள் எல்லாம் திணிப்புதான்.

கரிகாலனாக வரும் விக்ரம், ஐஸ்வர்யா ராயை நினைத்தே படம் முழுவதும் உருகிக் கொண்டிருப்பது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ராவணன்’ படத்தை ஞாபகப்படுத்துகிறது.

நாவலில் காட்டப்படும் வந்தியத்தேவனின் விறுவிறுப்பு  படத்தில் கொரோனா வந்த வந்தியத்தேவன் போல் சுணங்கிக் கிடக்கிறது.

சுந்தர சோழனாக வரும் பிரகாஷ்ராஜ் படுத்துக்கொண்டே இருப்பது, நாசர் ஒரே காட்சியில் ஐந்து நொடிகள் மட்டுமே வந்துபோவது என நன்றாக நடிக்கும் கேரக்டர்களை டம்மியாக வைத்திருப்பது தொய்வைத் தருகிறது.

‘பாகுபலி’ படத்தைப் பார்த்துவிட்டு வரும்போது அந்த பிரம்மாண்டம் நினைவில் இருக்கும்.

பொன்னியின் செல்வனில் காட்சி, கதாபாத்திரம், நடிப்பு எதுவும் மனதில் நிற்கவில்லை.

வரலாற்று ரீதியிலான படத்துக்கு வசனங்கள்தான் பெரிய பலம். இதில் ஆங்கிலப் படங்களுக்கு டப்பிங் பேசுவது போன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் காட்டப்படும் ஒவ்வொரு காட்சியிலும் இவர் போரில் 67 விழுப்புண் வாங்கியவர் எனச் சொல்லிக்கொண்டே இருப்பது சலிப்பை தருகிறது.

ஐந்து பாகங்கள் கொண்ட பெரிய நாவலை ஒருவரி வசனங்களுடன் படத்தை இயக்கும் மணிரத்னம் கையில் எடுத்திருப்பது ஆச்சர்யம்தான்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...