தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 19 | தனுஜா ஜெயராமன்

 தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 19 | தனுஜா ஜெயராமன்

“என்னடா இதெல்லாம்..?” என்ற அப்பாவின் நேரடியான கேள்வியில் நிலைகுலைந்து போனான் முகேஷ்.. அமைதியாகக் காரை செலுத்தினான்.
“நான் சாயங்காலம் போலீஸ் ஸ்டேஷன் போயிருந்தேன். அங்க இருந்த ஏட்டு வேற ஒரு போலீஸ்காரரிடம் உன்னை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்” என்றார் வேதமூர்த்தி கோபத்துடன்…

“என்னை மன்னிச்சிருங்கப்பா…நான் அந்த தப்பை செய்திருக்கக்கூடாது… இன்னைக்கு இது இவ்ளோ ப்ரச்சனையா ஆகும்னு கனவிலேயும் நினைக்கலைப்பா”….

“உங்கம்மாவுக்கும் சுதாவுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா என்னடா நினைப்பாங்க உன்னை பத்தி”…

“ப்பா!….தயவு செய்து எதுவும் சொல்லிடாதீங்கப்பா”…என்றான் கண்களால் கெஞ்சி…

“இது மட்டும் தானா… இல்லை, இன்னும் எனக்கு தெரியாம வேற எ…தா..வ…து பண்ணி வச்சிருக்கியா..?”

“ப்பா!.. சத்தியமா சொல்றேன் எனக்கும் அவ கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. என்னை நம்புங்கப்பா”…

முறைத்தவரிடம்…

“போலீஸ் குற்றவாளியை கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிருவாங்க… அப்ப நீங்களே தெரிஞ்சிப்பீங்க”…என்றான்.

எதையும் சொல்லாமல் ரோட்டை வெறித்தபடி அமர்ந்திருந்தவரை காணச் சங்கடமாக இருந்தது… “ப்பா!….என்னை நம்புங்க ப்ளீஸ் ..நீங்களே என்னை நம்பலைன்னா எப்படி?”…

“நம்பித் தானே இப்படி ஏமாந்தேன். இப்படி ஒரு காரியத்தை செஞ்சிட்டு வந்து நிக்கறியே வெக்கமாயில்லை..?”..

பரிதவிப்புடன் பார்த்தவனைக் கண்டு சற்று மனமிரங்கி..

“இதோ பாரு… உங்கம்மாவுக்கு தெரியாம பாத்துக்க.. தெரிஞ்சா தாங்கமாட்டா… உன் பொண்டாட்டியும் தான்… கூடிய சீக்கிரம் இந்த ப்ரச்சனையிலிருந்து வெளியே வரப் பாரு. இந்த கருமமெல்லாம் வெளியே தெரிஞ்சா குடும்பத்துக்கே தீராத அவமானம்… புரியுதா?”

“சரிங்கப்பா..” எனத் தலையாட்டி காரை வீடு நோக்கி திருப்பினான்.

ன்று காலையிலேயே ஸ்டேஷனுக்கு வந்து விட்டிருந்தார் கோகுல். அம்ரிதா கேஸ் அவருக்கு பெரும் தலைவலியை கொடுத்தது. சீக்கிரம் முடிக்க சொல்லி மேலிடத்து ப்ரஷர் வேறு…

உள்ளே நுழையும் போதே ஏகாம்பரமும் சரத்தும்… வெறும் டிராயருடன் நின்றுகொண்டிருந்த திருட்டு கேஸை லட்டியால் முட்டியில் தட்டி விசாரித்து கொண்டிருந்தனர்…

“ஏகாம்பரம், இங்க வாய்யா…” என கோகுல் அழைக்க..

“சார்…” என ஓடிவந்தார் ஏகாம்பரம்

“என்னய்யா கேஸூ…?”

“டாப்ஸ்டார் விமல் வீட்டுல திருடிட்டானாம். அவங்க வீட்டு முன்னாள் டிரைவர் சார் இவன்…” என சொல்லியவனை தடுத்து,

“சரி… நேத்து முகேஷுக்கு போன் செய்து இன்னைக்கு ஸ்டேஷனுக்கு வரச் சொன்னியா?”

“சொல்லிட்டேன் சார்… வரேன்னிருக்கார்”

“அந்த அம்ரிதா கேஸ் பைலை எடுத்துக்கொண்டு வாய்யா… அப்படியே அந்த புட்டேஜ்ஜையும் கொண்டு வா…” என்றார்.

ஏகாம்பரம் கொண்டு வந்து வைத்த புட்டேஜை பார்க்க தொடங்கினார் கோகுல்… தன்னிச்சையாக முகம் சுருங்கியது..

“சார்..! நீங்க என்னை இன்னைக்கு ஸ்டேஷனுக்கு வரச்சொல்லியிருந்ததா சொன்னாங்க…” என்று தயங்கியபடி வந்து நின்ற முகேஷை முறைத்து உறுத்து பார்த்தார்.

“வாய்யா… வா… கூட்டுக் களவாணிகளா… ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்சிங்களா..? திட்டம் போட்டு கச்சிதமாக முடிச்சீங்க போல…”

“சார்.. நீங்க என்ன சொல்றீங்க? எனக்கு எதுவுமே புரியலை…” என வியர்த்துப் போனான் முகேஷ்.

“ஆமாம்… உனக்கு ஒண்ணுமே புரியாது… இதை நான் வேற நம்பணும்… சரி, உன் கூட்டாளி எங்க? அவனை எங்க மறைச்சி வைச்சிருக்க?”

“சார்… நீங்க என்ன சொல்றீங்க…? யாரைச் சொல்றீங்க..?”

“என்னய்யா நடிக்குற… லாக்கப்ல வைச்சி முட்டிக்கு முட்டி தட்டினா தான் ஒத்துக்குவீங்க போல…”

“சார்… சத்தியமா சொல்றேன்… எனக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை..”

“அதெல்லாம் நாங்க சொல்லணும்… உன் கூட்டாளி எங்க?”

“நீங்க யாரை சொல்றீங்க…? நிஜமா புரியலை சார்…” என்றான் முகேஷ் பரிதாபமாக…

“இந்த ஃபுட்டேஜை பாரு… எல்லாம் தானா புரியும்.. அதுக்கப்புறமாவது உண்மையை ஒத்துக்க…”

திரையில்… அன்று ஓட்டலில் அம்ரிதாவுடன் பேசியவனை பார்த்தான்… அதன் பிறகு பல ஆண்கள் வருவதும் போவதும் நன்றாக தெரிந்தது… நடுவில் உயரமாய் வாட்டசாட்டமாய் ஒருவன் பைக்கில் வந்து இறங்கினான். தலையில் ஹெல்மெட் அணிந்ததால் முகம் அடையாளம் தெரியவில்லை.. அம்ரிதாவுடன் தோளில் கைபோட்டபடி உரிமையுடன் பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தவன்… ஹெல்மேட்டை கழற்றிய வினாடி… சர்வமும் ஒடுங்கியது முகேஷிற்கு… வைத்த கண் வாங்காமல் திரையை நோக்கியவன் மனம் நம்ப மறுத்தது…

“ஹரிஷ்.… அடப்பாவி.… நீயா..?” என அதிர்ந்து போனான். அவனுக்கும் அம்ரிதாவிற்கும் என்ன சம்பந்தம் எனப் புரியவில்லை.

‘ஒருவேளை அவனும் நம்மை போல ப்ளாக்மெயில் செய்யபட்டானா…’ என யோசித்தவனுக்கு எதுவும் பிடிபடவில்லை..

“என்னய்யா இப்ப என்ன சொல்ற? என்னென்ன மறைச்சிருக்கீங்க? எங்ககிட்ட இப்பவாவது ஒத்துகறியா? இல்லை போலீஸ் டிரீட்மெண்ட் வேணுமா?” என மிரட்டினார் கோகுல்.

“சார்… சத்தியமா சொல்றேன்… இப்பவும் எனக்கு எதுவுமே தெரியாது.. நான் எதையும் மறைக்கலை… ஹரிஷ் ஏன் அங்க போனான் என்று எதுவும் எனக்கு புரியலை சார்…” என்றான் அழாத குறையாக..

“நீ வர்றதுக்கு முன்னையே அவனைப் பிடிக்க ஆளை அனுப்பியாச்சு… எங்காளுங்க இன்னேரம் கோழி அமுக்கறாப்ல அவனை அமுக்கியிருப்பாங்க… அவனும் வந்துரட்டும்.. ரெண்டு பேருக்கும் சேர்த்து லாடம் கட்றேன்…” என கோபமாக பேசிய கோகுலை பயப் பார்வை பார்த்தான்.


தனக்கு எதுவுமே தெரியாது … என்கிற பல்லவியை திரும்ப திரும்ப பாடியபடி பயத்துடன் ஓரமாக பெஞ்சில் அமர்ந்தான்.

அப்பாவுக்கு போன் செய்யலாமா என்று தோன்றிய யோசனையைக் கை விட்டான் முகேஷ். ஏற்கனவே குழம்பிக் கிடக்கிறவரை மேலும் பயமுறுத்தி வைக்க வேண்டாம் என்று தோன்றியது. வருவது வரட்டும்… என்ற துணிவுடன் பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாரானான்.

அரைமணி நேரத்தில் சரத்தும் இன்னும் சில போலீஸ்காரர்களும், ஹரிஷை கழுத்தை பிடித்து நெட்டி தள்ளியபடி இழுத்து வந்தார்கள்… முகேஷை நேர்பார்வை பார்க்காமல் தலை குனிந்திருந்தான் ஹரிஷ்.

“சொல்லுடா!…” என ஹரிஸை ஏகாம்பரமும் சரத்தும் கன்னத்தில் அடித்தது முகேஷிற்கு வலித்தது.

“சார்… நாங்க போகும் போது.… தப்ச்சி ஓட தயாரா பெட்டி படுக்கையோட கிளம்பிகிட்டு இருந்தான். எங்களை கண்டதும் எகிறி குதிச்சி.ஓடினான்.. நாயை தொரத்தி பிடிச்சி முதுகுல ரெண்டு போட்டு இழுத்துட்டு வரோம்…” என்றார் சரத் கோபமாக.

“உன்னை இரண்டு நாளா கண்காணிச்சிட்டு தான் இருக்கோம்.. உனக்கே தெரியாம… இப்ப வகையா மாட்டின… ஒழுங்கு மரியாதையாக உண்மையை சொல்லு… இல்லேன்னா அடிபட்டே செத்துருவ…” என கழுத்தில் இடியை இறக்கினார் கோகுல்.

“சார்…சொல்லிடறேன் சார்…” என ஹரிஷ் பயத்தில் அலற….

“சொல்லுடா நாயே… ரெண்டு பேரும் ப்ளான் பண்ணி தானே செஞ்சிங்க…” என முகேஷை திரும்பி உஷ்ணப் பார்வை பார்த்தார் கோகுல்.

ஹரிஷ் பதிலளிக்காமல் கோகுலையும் முகேஷையும் மாறி மாறி பார்க்க… நெஞ்சில் பனிக்கட்டி உறைந்தது போல இருந்தது முகேஷிற்கு… பயத்தில் மயக்கம் வருவது போல தோன்றியது. அப்பா… அம்மா… சுதா… என முகங்கள் மனதில் வந்து போக, தற்காலிக மயக்கத்திற்கு போனான் முகேஷ்…

–தொடரும்….

18வது அத்தியாயம்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...