சிவகங்கையின் வீரமங்கை | 8 | ஜெயஸ்ரீ அனந்த்
ஒரு மதிய பொழுது! பனை ஓலைக்கீற்று வேய்ந்த ஒரு வீட்டின் கூரையைத் தாண்டி புகை கசிந்து கொண்டிருந்தது. புகையின் வாசனையை வைத்தே அது கம்பங்கூழும் கருவாட்டு குழம்பும் என்று கூறிவிடலாம். தூரத்தில் இருவர் இந்தப் புகை கசியும் கூரை வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் தனது ஒரு காலைச் சற்றுச் சாய்த்துச் சாய்த்து நடப்பதைப் பார்த்தால் அது சிகப்பின் கணவன் இசக்கி என்று நமக்கு தெரியும். மற்றொருவர்..?
அவரைப் பார்த்தால் கப்னி உடையும் தலையில் குல்லாவும்… வெளியூரை சேர்ந்தவர் போல் தோன்றுகிறதே. வரட்டும் பார்க்கலாம்…. என்று நாம் நினைத்து கொண்டிருந்த நேரத்தில் இருவரும் அக்கூரை வீட்டின் வாசலுக்கே வந்து சேர்ந்து விட்டனர். இசக்கி, அப்புதியவரை வாசலிலேயே நிறுத்திவிட்டு தான் மட்டும் வீட்டினுள் சென்றான். சில நிமிடங்கள் கழித்து அவனும் சிகப்பியுமாக வெளியே வந்து வெளியில் காத்து நின்ற புதியவரை உள்அழைத்து சென்றனர்.
மிகவும் சிறிய வீடு. சாணத்தால் மெழுகப்பட்ட மண் தரை. பனை ஓலைக் கீற்றின் மணமும் குழம்பின் வாசமும் வீட்டை நிரப்பியிருந்தது. ஒரு ஓரத்தில் சில மண்பாண்டங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இன்னொரு மூலையில் பதநீர்ப் பானைகள். அவ்வீட்டின் மூலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பனை ஓலைப் பாயை எடுத்து அவருக்கு விரித்தாள் சிகப்பி.
“இதில் அமருங்கள்” என்று கூறி, தாகத்திற்கு மண் பானையிலிருந்து குவளை நிறைய தண்ணீரை எடுத்து அவருக்குத் தந்தாள்.
“ஐயாவுக்கு மன்னரைப் பார்க்க வேண்டுமாம். என்னிடம் வினவினார். அதனால் தான் இங்கு கூட்டி வந்தேன்” என்றான் இசக்கி.
“ஐய்யா… இது என் மனைவி. பெயர் சிகப்பி.” என்றான் புதியவனிடம்.
“வணங்குகிறேன் தமக்கையே…”
“தாங்கள்..?”
“நான் சலீம் மாலிக். அரபு நாட்டைச் சேர்ந்தவன். வணிகத்திற்காக இங்கு வந்தேன். இந்த ஊரின் செழுமையும் மக்களின் ஒற்றுமை உணர்வும் இறை பற்றுதலும் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. என்னைப் போல சிலரும் இங்கே தஞ்சமடைய விரும்புகின்றனர். அதற்கு நான் மன்னரைச் சந்தித்து இவ்விஷயமாக அளவளாவ வேண்டும். ஏற்பாடு செய்ய இயலுமா?” என்றார் புதியவர்.
“அவகாசம் தேவைப்படும். உங்களை போல சிலரும் என்றீர்களே…. அந்த சிலர்..?”
“நாங்கள் கூட்டாக வாணிபத்திற்காக வந்தவர்கள். எங்கள் நாட்டுக் குதிரையை விட இங்கு கிடைக்கும் முத்துக்கள், சிப்பிகள் கடற்பாறைகளுக்கு அயல் நாட்டில் மதிப்பு அதிகம். ஆகவே நாங்கள் இத்தகைய வாணிபத்தில் ஈடுபடுவதற்கு அரசரின் அனுமதியைப் பெற வந்தேன்”
“ஓ… அவர்களில் ஒருவரா நீங்கள்?. உங்களை போல வாணிபத்தில் ஈடுபாடுடைய மக்கள் பாரசீகத்திலிருந்தும் துருக்கியிலிருந்தும் நிறைய பேர் மன்னரைக் காண வருவதை பார்த்ததுண்டு. அவர்களை விசாரித்தால் விவரம் தெரிய வரும். உங்களுக்கு கீழக்கரை சீதக்காதி அறிமுகம் உண்டா?”
“கேள்விபட்டுள்ளேன். மன்னரும் அவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்று..”
“ஆமாம். அவர்தான். அவருடன் நட்புறவு கொண்டால் நீங்கள் வந்த நோக்கத்தை அடையலாம்.”
“நல்லது. நானும் அவரைப் பற்றி விசாரிக்கிறேன். தாங்களும் இது குறித்து விரைவில் தகவல் கொடுத்தால் உங்களுக்கு கடமைபட்டுள்ளவனாக ஆவேன்” என்றவர் கப்னி உடையின் பையிலிருந்து ஒரு சிறிய சதுர வடிவ வேலைப்பாடுடன் கூடிய மரப் பெட்டியை எடுத்து இசக்கியிடம் தந்தார்.
“என்னது ஐய்யா இது?”
“உங்களுக்கான எனது சிறிய பரிசு”
“வேண்டாம் ஐயா…. நாங்கள் யாரிடமிருந்து எதையும் வாங்கும் பழக்கமில்லை.”
“என்னை உங்கள் சகோதரனை போல் பாவித்து பெற்றுக் கொள்ளுங்கள்?” என்று முடிக்கும் முன்னதாக இசக்கி அவரிடமிருந்து அப்பெட்டியை வாங்கிக் கொண்டான்.
• • •
இராமநாதபுரத்தை விட்டு வேலுநாச்சியார் சென்றதிலிருந்து நாம் அரண்மனைக்குள் எட்டிப் பார்க்கவில்லை. அதனால் அதையும் ஒருமுறை பார்த்து விட்டு வரலாம்.
நித்ய அனுஷ்டாடங்களை முடித்த அரசர் செல்லமுத்து கம்பீர நடையில் அரச சபைக்கு வந்தார். வெண்பட்டு வஸ்திரம் உடலை மறைக்க, இடுப்பில் கூரிய உடைவாள் செருகியிருந்தார். அணிகலன்கள் மார்பை மறைக்க தலையில் நவரத்தின கிரீடம் தரித்திருந்தார். கிரீடத்தைத் தாண்டி சுருண்டு வளர்ந்த கேசத்தில் ஆங்காங்கே வெள்ளை நிறமும் இழைந்திருந்தது. நெற்றியில் திருநீறும் உடல் முழுதும் நறுமணத்திற்காக பூசப்பட்ட சந்தனமும் அவரின் வசீகரத்தை மேலும் அதிகரித்திருந்தது. அவசர ஆலோசனைக்காக தன் முதன்மந்திரி பசுபதியை அரசவைக்கு அழைத்திருந்தார். அவசர ஆலோசனையாதலால் அங்கு இவர்கள் இருவரை தவிர ஏனையோருக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
“முதன்மந்திரியாரே… நம் நாட்டில் நிலவும் சூழ்நிலை யாவற்றையும் நீங்கள் தெரிந்து கொண்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். உள்நாட்டில் ஏற்படும் குழப்பத்தை சாதகமாக்கி கொண்டு பல அந்நிய தேசத்தவரும், நவாப் அரசும் அண்டை நாடுகளை வரிசையாக கையகப்படுத்தி கொண்டு வருவதாக நமக்கு தகவல் வந்த வண்ணம் உள்ளது. இது நமக்குக் கவலை அளிக்கக்கூடிய செய்தியாகும். இந்நிலையில் பவானி தஞ்சைச் சிறையிலிருந்து தப்பித்து விட்டதாக வேறு கேள்விப்பட்டேன். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் நாட்டை மட்டும் அல்ல… நாட்டு மக்களையும் ஆலயங்களையும் பாடசாலைகளையும் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு அதிகரித்துள்ளது. இதில் உங்களின் நிலைப்பாடு தான் என்ன?”
“அரசரே… தங்களின் நிலைப்பாடே எனது நிலைப்பாடும். ஏற்கனவே இளவரசியார் நம் நாட்டு படை வீரர்களை அதிகரிக்கும் பொருட்டு படைகளில் புதுப் புது ஆட்களை நியமித்து கொண்டு இருக்கிறார் . தவிரவும் நாட்டில் புதிதாகக் குடியேறியவர்களில் ஒரு பகுதியினரை கூலிப்படையினராகப் பயன்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆயுதங்களைச் சேமிக்க புதிதாக ஆயுதக்கிடங்கு ஆறும் கட்டப்பட்டு வருகிறது. இதைத் தவிர ஆயுத தொழிற்சாலை இரண்டை படமாத்தூர் கோட்டையிலும் மானாமதுரை கோட்டையிலும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஈசனின் அருளால் வேத பாடசாலைகளுக்கும் ஆலயங்களுக்கும் ஒரு குறையுமில்லாமல் நித்திய கைங்கர்யம் நடந்து வருகிறது..”
“நல்லது. இதற்கெல்லாம் நம்மிடம் போதுமான அளவு நிதி இருக்கிறதா?”
“பிரம்மாண்டமான ராஜசிம்மமங்கலம் ஏரியின் மடையிலிருந்து வெளிப்படும் உபரி நீரினால் கடந்த பதினைந்து வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் விவசாயத்தை அதிகரித்து உள்ளோம். அதனால் வாணிபம் அதிகரித்து அதிகப்படியான உபரி நிதியையும் பெற்றுள்ளோம். அதை தவிர தறி உற்பத்தி அதிகரித்துள்ளது கடலில் கிடைக்கும் அரிய வகை முத்துகள், பவளப்பாறைகளிலும் வாணிபம் அதிகரித்து உள்ளது.”
“சரி… ஆயுதக்கிடங்கு ஆயுதத்திற்காகச் செலவழித்தது போக உபரி வருமானம் ஒரு பகுதியை திருப்புல்லாணி கோயிலுக்காக ஒதுக்கி வையுங்கள் . மார்கழி மாத வைபவம் தொடங்கவிருக்கிறது. இம்முறை மிக விமர்சையாக கொண்டாடப்பட வேண்டும்” என்று அரசர் செல்லமுத்து, முதன்மந்திரி பசுபதியாரிடம் பேசிக் கொண்டு இருக்கையில் காப்பாளன் லிங்கபதி உள்ளே வந்தான்
• • •
கத்திக் குத்துப்பட்டு கிடந்த குவிரன் கிட்டத்தட்ட மயக்க நிலைக்குச் சென்றிருந்தான். இளவரசர் அவன் நெஞ்சில் குத்தப்பட்டு இருந்த கத்தியை உருவினார். “குபுக்” என்ற சிறு சத்தத்துடன் இரத்தம் பீறிட்டு வெளிவந்தது. இளவரசர் மிகவும் தீர்க்கமாக செயல்பட்டு தனது அழகிய அங்கவஸ்திரத்தின் ஒரு பகுதியை கிழித்து கத்தி குத்தப்பட்ட இடத்தில் இறுக்கிக் கட்டினார். பீறிட்ட ரத்தம் கொஞ்சம் கட்டுக்குள் வந்ததும் சிறிதும் தாமதிக்காமல் அவனைத் தூக்கிக் கொண்டு நடுநிசி இரவில் குதிரையில் வைத்தியர் வீட்டை நோக்கிப் பறந்தார்..
இருவரையும் சுமந்து சென்ற குதிரையானது ஊருக்கு ஒதுக்குபுறமாக மூலிகைக் காட்டின் அருகில் இருந்த வைத்தியரின் வீட்டின் வாசலில் வந்து நின்றது.
கதவு தட்டப்படும் ஓசை கேட்டு வாயிலைத் திறந்த வைத்தியருக்கு இன்ப அதிர்ச்சி. ஆமாம் உலகம் போற்றும் இளவரசரே வந்துள்ளார் என்றால் மகிழ்ச்சி இருக்காதா என்ன?
“இளவரசரே… தாங்களா? இந்த நேரத்தில்? யார் இவர்? உள்ளே வாருங்கள்” என்று அழைத்த வைத்தியர் அறையின் மூலையில் இருந்த கட்டிலைச் சரி செய்தார். அதன் அருகில் சிறிதாக எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கை சற்று பெரிதாக்கினார். அதற்குள் அவரது துணைவியார் மேலும் இரண்டு மாட விளக்குகளை ஏற்றி கொண்டு அவ்விடம் வந்தாள். இளவரசரை பார்த்துப் புன்னகைத்து, “வாருங்கள்” என்றவள் இருவரையும் தொந்தரவு செய்யாது ஒரு ஓரமாக நின்று கொண்டாள்.
இளவரசர் தன் மேல் கிடந்த உடலைக் கீழே இறக்கி, கட்டிலில் கிடத்தினர். “வைத்தியரே, இவர் யாரென்று தெரியவில்லை. நான் தடாகத்தில் அமர்ந்திருந்த பொழுது இவருடன் வந்தவர் இக்காரியம் செய்து விட்டார். இவரைப் பிழைக்க வைக்க வேண்டும். முடியுமா?”
குவிரனை குனிந்து அவன் கண்களை பரிசோதித்த வைத்தியர் அவனின் நாடி பிடித்துப் பார்த்தார். “இளவரசே நாடித் துடிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இவர் கழுத்தில் மிக ஆழமாக கத்தி குத்தபட்டு அதிக அளவில் இரத்தமும் வெளியேறி உள்ளது. இவர் நினைவு திரும்புவது மிகக் கடினம். அப்படியே திரும்பினாலும் இவர் எழுந்து நடக்க குறைந்தது பத்து நாட்களாவது ஆகும்.” என்றார் சன்னமான குரலில்.
“நல்லது. நீங்கள் இவருக்கு மருத்துவத்தை தொடங்குங்கள். நினைவு திரும்பினால் எனக்கு தகவல் தெரிவியுங்கள். யார் இவர் எதற்காக இச்செயல் நடந்தது என்று நான் தெரிந்து கொள்ளும் வரையில் இவரைப் பற்றிய ரகசியத்தை யாரிடம் தெரிவிக்க வேண்டாம்.” என்றார் இளவரசர்.
“அப்படியே ஆகட்டும்” என்ற மருத்துவர் சற்றும் தாமதிக்காமல் சில மூலிகைகளை உரலில் இட்டு இடித்து அதை இரத்தம் கசியும் இடத்தில் வைத்து இறுக்கக் கட்டினார்.
“நல்லது நான் வருகிறேன்” என்ற இளவரசர் திரும்பி வாசலை நோக்கி நடந்த நேரத்தில்….
“இளவரசரே… தாகத்திற்கு எங்கள் வீட்டில் ஒரு குவளை நீராவது அருந்திச் செல்லலாமே?”
காந்த குரல் வந்த திசையினை திரும்பி பார்த்தார் இளவரசர். வைத்தியரின் ஒரே மகளான கெளரி ஒரு குடுவையில் நீருடன் இளவரசரின் முன்பாக மிக அருகாமையில் நின்றிருந்தாள். தங்கத்தை உருக்கி வார்க்கப்பட்ட பொன் சிலை ஒன்று தீப ஒளியில் தகதகப்பது போல இருந்தாள். கண்களாக, கருவண்டுகள் இரண்டு தடாகத்தில் நீந்தி கொண்டிருந்தது. வளர்பிறையை ஒத்த நெற்றியில் கேசங்கள் முன் விழுந்து தவழ்ந்தது. நீளமாகப் பின்னி முடிந்த கூந்தலின் கீழ் குஞ்சலங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. அதற்கேற்ப தாமரையை ஒத்த பாதங்கள் ஒரிடத்தில் நில்லாமல் நடனமாடிக் கொண்டிருந்தது.
ஒரு நிமிடம் இளவரசர் முத்துவடுகநாதர் தன் நிலை மறந்து அவள் அழகில் லயித்துத் தான் போனார்.
“மன்னிக்க வேண்டும். இவள் என் ஒரே பெண் கெளரி. கொஞ்சம் துடுக்குத்தனம் அதிகம். ஆனால் மிகவும் புத்திசாலி. வைத்தியம் செய்வதில் கைதேர்ந்தவள். எனக்கு உதவியாக இருப்பவள். கெளரி …. இளவரசர் முன்பாக நீ….” என்று சற்றுக் கோபத்துடன் வைத்தியர் தன் பேச்சை முடிக்கும் முன்னதாக…
“ஆஹா….. பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். விருந்தினரின் குறிப்பறிந்து நடக்க வேண்டும். நானே நினைத்தேன் தாகத்திற்குத் தண்ணீர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று. மிக்க நன்றி” என்று கூறிய இளவரசர், அத்தண்ணீர் குடுவையை வாங்கிய சமயம் அவர்களின் விரல்கள் ஒன்றுக்கொன்று ஸ்பரிசித்துக் கொண்டன. அவர் விரல் ஸ்பரிசத்தால் சூடேறிய வெப்பம் அவளின் உடலை புல்லரிக்கச் செய்தது.
2 Comments
sema story. nalla eludhi irukenga. very interesting
புது ஹீரோயினையும் அறிமுகப்படுத்திட்டீங்க! சூப்பரா போகுது தொடர்! வாழ்த்துகள்!