யார் இந்த ஓவியர் பேங்க்ஸி?

 யார் இந்த ஓவியர் பேங்க்ஸி?

எழுத்து : கிறிஸ்டி நல்லரெத்தினம், ஆஸ்திரேலியா
உலகின் பல செல்வந்தர்கள் இன்று நடக்கவிருக்கும் ஏல விற்பனையை மிக ஆவலுடன் எதிர்பார்த்து இங்கு கூடி இருக்கின்றனர். அவர்களுடன் ஒன்றரக் கலந்து ஒரு உருவம், கடைசி இருக்கையில் அமர்ந்து, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்காவண்ணம் மெதுவாக கையில் இருந்த ஒரு தொலை யியக்கியை – remote control device – ஒரு முறை பார்த்து புன்னகைத் துக் கொள்கிறது.
ஏலம் ஆரம்பமாகிறது!
இடம்: சதபி ஏல விற்பனைக் கூடம் (Sotheby’s Auction House), லண்டன்
காலம்: அக்டோபர் 05, 2018
முதலில் ஏலத்திற்கு வந்த பொருள்… உலகில் பெயர்போன அநாமதேய தெருக்கிறுக்கல் ஓவியர் பேங்க்ஸியின் (Graffiti artist: Banksy) “பலூனுடன் ஒரு சிறுமி – Girl with the balloon” எனும் ஓவியம். மிக அழகாக தங்கமுலாம் பூசப்பட்ட அந்த பிஃரேமின் நடுவில் பதிக்கப்பட்டிருந்தது.
நிமிடங்கள் நகர ஏலம் சூடு பிடித்து $1.4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதன் விலை நகர்த்தப்படுகிறது. இறுதி விலை அதுவாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனையாளர் தம் கையில் இருந்த மரச்சுத்தியலை பலமாய் மேசையில் மோதி “SOLD” என்ற வார்த்தையை உரக்கக் கூவி அந்த ஏலத்தை முடிவுக் குக் கொண்டுவருகிறார்.
எல்லாம் முடிந்தது!
கடைசி இருக்கையில் இருந்த அந்த உருவம் மெதுவாய் நாற்காலியை விட்டு எழுந்து தன் கையில் இருந்த தொலையியக்கியை ஒரு முறை அழுத்திவிட்டு அக்கூடத்தை விட்டு வெளியேறி லண்டன் சனக்கும்பலில் கலந்து மறைகிறது.

அக் குமிழியில் இருந்து பிறந்த ஆணைக்கமைய $1.4 மில்லியனுக்கு விலைபோன அந்த ஓவியம் மெதுவாய் “ர்ர்ர்ர்……. ” என்ற ஒலியுடன் கீழே நகர்ந்து சிறு கீற்றுக்களாய் துண்டுற்று ஒரு கிழிந்த கோயில் திருவிழா அலங்காரம் போல் அலங்கோலமாய் காற்றில் அசைந்தது, அமைதியானது. அக்கூடத்தில் இருந்த எல்லோர் முகத்திலும் ஒரு ஆச்சரியம் மிகுந்த அதிர்ச்சி! அந்த ஓவியத்திற்கான ஏலம் உடனே ரத்து செய்யப்படுகிறது.
தெருக்கிறுக்கல் ஓவியர் பேங்க்ஸி இது போன்ற குறும்புகளுக்குப் பெயர்போனவர். அடுத்த வாரமே இச் செயலின் சூத்திரதாரி தானே எனவும் ஓவியத்தை ‘தன் அழிப்பு’ செய்யும் பொறிமுறையைத் தானே அந்த ஓவி யத்தின் பிஃரேமினுள் வடிவமைத்ததாயும் உலகிற்குப் பகிரங்கப்படுத்தி னார்.
இது நடைபெற்று மூன்று வருடங்களின் பின் பாதி சிதைவடைந்த இந்த ஓவியம் “குப்பைக்குள் காதல் – Love is in the bin” எனும் பெயர் மாற்றத்துடன் 2021ல் அமெரிக்க டாலர்கள் $25.4 மில்லியனுக்கு அதே ஏல விற்பனை நிலையத்தால் விற்பனை செய்யப்படுகிறது! பாதி சிதைந்த இந்த ஓவியம் அதன் ஒரிஜினல் விலையை விட 18 மடங்கு அதிகமாய் விலை போனதைப் பார்த்து உலகமே வாயடைத்து நிற்கிறது!

முகமற்ற இப்படைப்பாளியை இவ்வுலகமே ‘யார் இந்த பாங்க்ஸி?’ என்ற தேட ஆரம்பித்தது. இவரின் அநாமதேயமே இவரின் முத்திரையாய் மாறி இவரை ஒரு பேசுபொருளாய் மாற்றிவிட்டது. முகமற்ற, முகவரியற்ற இந்தப் படைப்பாளியின் கிறுக்கல்கள் உலகின் பல பாகங்களில் உள்ள சுவர்களை அலங்கரித்து வருகின்றன. இவரின் கிறுக்கல்களைப் பல மில்லியன் டாலர்கள் கொடுத்து கொள்வனவு செய்து தம் சுவர்களை அலங்கரிக்க செல்வந்தர்கள் போட்டி போடுகின்றனர்!
இவரின் ஓவியங்கள் அல்லது கிறுக்கல்கள் 1990களில் லண்டன் வீதிகளில் தோன்ற ஆரம்பித்தன. இவரின் தெருக் கிறுக்கல்கள் பத்தோடு பதினொன் றாய் இல்லாமல் ஆழ்ந்த கருத்துள்ளனவையாயும் நையாண்டித்தனமிக்க சமூக சாடல்களை உள்ளடக்கியவையாயும் இருந்ததால் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தன என்பது உண்மையே.


தெருக் கிறுக்கல்களை போதை வஸ்து அடிமைகளின் வடிகால்களாய் பார்த்த லண்டன் சமூகம் பேங்க்ஸியின் கிறுக்கல்களில் மறைந்திருந்த கலை வடிவத்தை கண்டுகொண்டு ‘தெருக்கலைஞனாய்’ மதிப்பளிக்கத் தொடங்கின.
இவர் கிறுக்கல்கள் உலக அமைதி, பசுமை புரட்சி, தனிமையின் சோகம், போலீஸ் அராஜகம், மானுட நம்பிக்கை, போர் எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு உள்ளிட்ட கருத்துகளை தொட்டுச் சென்றதால் இவற்றிற்குள் பொதிந்துள்ள கருத்துக்களை அச்சமூகம் முள்ளெடுத்து சதை சுவைத்து மகிழ்ந்தன. நாளடைவில் பேங்க்ஸி கடல் கடந்து பயணித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேல் – பாலஸ்தீன சுவர்களிலும் தம் கிறுக்கல்களை ‘சுவரேற்றினார்’.
தமது தெருக் கிறுக்கல்கள் பற்றி அவர் 2006ல் எழுதிய Banksy – Wall and Piece என்ற நூலில் இப்படி சொல்கிறார் : “உங்கள் படைப்புகளை வெளியிட சுவர் எப்போதும் ஒரு சிறந்த தளமாக இருந்து வருகிறது. எமது நகரபிதாக்கள் தெருக்கிறுக்கல்களை புரிந்து கொள்வதில்லை. இதற்குக் காரணம் சுவரில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் லாபமீட்டுவதாய் இருக்க வேண்டும் என்பது அவர்கள் தீர்ப்பு. இந்த தவறான நம்பிக்கை ஒன்றே அவர்கள் கருத்தை வலிமையற்றதாய் ஆக்கிவிடுகிறது! மேலும் விளம்பர சுலோகங் களால் சுவர்களை நிரப்பும் கம்பெனிகள் அவர்கள் உற்பத்திகளை நீங்கள் வாங்கும் வரை நீங்கள் ஒரு ‘குறைப்பிரஜை’ என்ற எண்ணத்தை அல்லவா விதைக்கின்றனர்?”


இங்குள்ள முரண்பாடு சுவர்கள் பொதுச்சொத்தாக என்றும் இருந்ததில்லை என்பதே. அதே வேளை அஜந்தா குகையும் சீகிரியா பாறையும் தனி மனிதனின் உரிமையாக இருந்திருப்பின் அங்கு வரைவதற்குத் தடை விதித்திருப்பானோ? காலத்தால் அழியாத இந்த ஓவியங்களும் தெருக் கிறுக்கல்கள் என்ற வரையறைக்குள் சிறையுண்டு மாண்டுபோயிருக் குமோ? வாசலில் போட்ட கோலம் சுவரேறினால் அலங்கோலமாய் மாறும் விந்தைதான் என்ன? பட்டிமன்றம் அமைத்து விவாதிக்க வேண்டிய இத்தலைப்பை விட்டு நகர்வோமா?
பேங்க்ஸி ஒரு தெருக்கலைஞர் மட்டுமல்லாமல் அரசியல் ஆர்வலராகவும் சமூக வர்ணனையாளராகவும் திகழ்கிறார். பொது இடங்களில் கிறுக்கல் களை வரைவது சட்டவிரோதமானதால் வரைவதற்கு அதிக நேரமெடுக் காத ‘ நகல் எடுக்கும் உள்வெட்டுத் தகட்டில்’ (stencils) தன் படைப்புகளை முன்னரே தயாரித்து அவற்றை தெரிவு செய்த சுவர்களில் பதித்து வண்ண திவலை தூறலால் தூவி ஓவியம் அமைத்து இருளில் மறைவார். பொழுது விடிந்ததும் அப்படைப்புகளைப் பார்த்து வாய்திறந்து வியந்து நிற்கும் உலகு!
இந்த மர்ம ஓவியரைப் பற்றிய ஓர் ஆவணப்படம். (Exit Through the Gift Shop) 2010ல் ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது.
அந்த ஆவணப்படத்தைக் கீழே உள்ள இணைப்பில் காணலாம். இப்படத்தில் தாம் எப்படி ஓவியங்களை தமது ஸ்டூடியோவில் உருவாக்குகிறார் என்று விளக்குகிறார்.
2009ல் பேங்க்ஸி Pest Control எனும் கம்பெனி மூலம் தம் ஆக்கங்களை நேரடியாகவே விற்பனை செய்யத் தொடங்கினார். எனினும் உலகின் பிரபல ஏல விற்பனை நிறுவனங்கள் மூலம் பல மில்லியன் டாலர்கள் பெறுமதியான ஓவியங்கள் பல கலை ஆர்வாளர்களால் கொள்வனவு செய்யப்படுகின்றன.


பேங்க்ஸி தன் வருமானத்தில் கணிசமான பகுதியை சமூக மேம்பாட் டிற்காய் வழங்குவது மட்டுமல்லாமல் தம் ஓவியங்களையும் சமூக ஸ்தாபனங்களுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறார். பாலஸ்தீன மக்களின் அவல நிலையை கண்ணுற்று 2000களில் பல நன்கொடைகளை வழங்கியது மட்டுமல்லாமல் 2020ல் இவரது மூன்று ஓவியங்களின் விற்பனை மூலம் £2,2 மில்லியன் திரட்டப்பட்டு அப்பணம் மூலம் பெத்ல கேமில் ஒரு வைத்தியசாலையை அமைக்க செலவிடப்பட்டது.
மே 2020ல் கோவிட் தொற்று காலங்களில் தன்னலம் பாராமல் சேவை புரிந்த லண்டன் National Health Service ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் தனது ஓவியமொன்றை அவர்களுக்கு பரிசளித்தார். Game Changer எனும் தலைப்பிட்ட அந்த ஓவியம் மார்ச் 2021ல் ஏலத்தில் விடப்பட்டு £14.4 மில்லியன்களை அவர்களுக்கு ஈட்டிக்கொடுத்தது!
ஆகஸ்ட் 2020ல் மத்தியதரைக்கடலை கடக்கும் அகதிகளைக் காப்பாற்ற இவர் ஒரு மீட்புப் படகை கொள்வனவு செய்வதற்கான நிதியுதவி செய்ததாயும் தெரிகிறது.
தெருக்கிறுக்கல் கலைஞர்களைப் பற்றிய அபிப்பிராயம் படிப்படியாய் உலகில் மாறி வருவது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமே. உலகின் பல நகரங்களின் நகராட்சி சபைகள் தம் நகர வீதிகளை அழகுபடுத்த இக்கலைஞர்களின் சேவையை நாடுவது இப்போது சகஜமாகிவிட்டது.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரின் வீதிச்சந்துகளில் இவர்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனேக உல்லாசப் பிரயாணிகள் இக் கிறுக்கல்களின் முன்னின்று ‘செல்பிகள்’ எடுப்பது இன்று சகஜமான காட்சியே.

மேலும் அவுஸ்திரேலியாவின் விவசாயப் பண்ணைகள் நிரம்பிய பிரதேசங்களில் உள்ள கைவிடப்பட்ட நெல் சேமிப்பு தாங்கிகள் (Silos) அண்மைக்காலங்களில் அரசால் புனருத்தாரணம் செய்யப்பட்டு அவற்றின் மேல் அழகிய ஓவியங்கள் இக் கலைஞர்களால் வரையப்படுகின்றன. இந்த ஓவியங்கள் இந் நாட்டின் மூத்த குடிகளை சித்தரிப்பவையாகவோ அல்லது பண்ணைத் தொழிலாளிகளை சித்தரிப்பவையாகவோ அமைந்துள்ளன. இவற்றை பார்த்து ரசிப்பதற்கு இங்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணி கள் இந்த சிறு நகரங்களின் பொருளாதாரத்தை புத்துயிரூட்டு கின்றனர் என்பதில் ஐயமில்லை.
மற்றவர் சுவர்களை மை கொண்டு கறைபடுத்திய இந்த தெருக்கிறுக்கல் கூட்டம் இன்று திரிபடைந்து ஒரு உன்னத கலை உலகை படைக்கும் வேட்கையில் சமூகத்துடன் கைகோர்த்து பயணிப்பது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமே!
சமூகத்தின் பெருச்சாளிகளாய் கணிக்கப்பட்டு அழிவின் மைந்தர்களாய் நோக்கப்பட்ட மாந்தர்களுள் ஒருவனான பேங்க்ஸியின் வெற்றிகரமான வாழ்வு இருட்டில் வாழும் பல தெருக்கலைஞர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமே!

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...