பார்த்திபனின் உலக சாதனை படம் ‘இரவின் நிழலில்’
ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க முடியுமா? எடுக்க முடியும் என நிரூபித் திருக்கிறார் பார்த்திபன். அவருடைய ‘ஹவுஸ்ஃபுல்’, ‘குடைக்குள் மழை’, ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ போன்ற சோதனை முயற்சித் திரைப்படங்களின் வரிசையில் கடந்த 2019-ம் ஆண்டு ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தைக் கொடுத் தார். ஒரேயொரு கதாபாத்திரம் மட்டுமே திரையில் தோன்றித் தன் கதையைக் கூறும் உத்தியை, தரமான ஒளிப்பதிவு, ஒலியாக்கம், குரல் நடிப்பு, இசை ஆகிய வற்றின் துணையுடன் சிறந்த முறையில் உருவாக்கம் செய்து, பார்வையாளர் களின் உள்ளத்தைத் தொட்டார்.
இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் உலக அளவில் பாராட்டுக்களை பெற்றது. இப் படத்தை இயக்கியதோடு அவர் மட்டுமே நடித்திருந்தார். இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. அதில் அபிஷேக் பச்சன் நாயகனாக நடிக்கிறார். பார்த்திபன்தான் அப்படத்தையும் இயக்கி உள்ளார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘ஒத்த செருப்பு’ இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது மீண்டும் ‘இரவின் நிழல்’ என்கிற சாதனையைச் செய்திருக்கிறார், மூன்று முறை தேசிய விருது பெற்றவரான பார்த்திபன். ‘நான் – லீனியர்’ கதை சொல்லும் உத்தியில், ஆனால், ஒரே ஷாட்டில் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்தப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்திருக்கிறார். இப்படத்தில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர்.
சென்னையில் நடக்கும் இந்தக் கதையில் முறையற்ற உறவில் பிறக்கும் ஒரு குழந்தையுடைய வாழ்க்கைப் பயணத்தின் பல்வேறு காலகட்டங்கள், முன்னும் பின்னுமாகச் சொல்லப்பட்டுள்ளன.
படம் தொடங்குவதற்குமுன், அரை மணி நேரம் working video காண்பிக்கப் படுகிறது. ஒரு ஷாட்டில் ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு சிரமம் என்பது அதில் காட்டப்படுகிறது. கதையோட்டத்துக்கு ஏற்ப 64 ஏக்கரில் 50 அரங்குகளில் செட் அமைக்கப்பட்டிருக்கிறது. முதன்மைக் கதாபாத்திரத்தின் 60 ஆண்டுக் கால வாழ்க்கையைப் பிரதிபலிப்பதற்கு செட் அமைப்பு முக்கியப் பங்காற்றியுள்ளது.
கதாபாத்திரத்தின் ஒவ்வொரு காலகட்டத்தையும் கச்சிதமாகக் காட்டும் வகையில் இந்த செட்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. யார் ஒருவர் தப்பு செய்தாலும், மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆனாலும் ஒவ்வொருவரும் சளைக்காமல் செய்திருக்கிறார்கள்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால், படத்தில் மழைக் காட்சி, நெருப்புக் காட்சி, இடம் பெறுவதோடு குதிரை, நாய், குழந்தைகளும் நடித்திருக்கிறார்கள். ஆகிறது. முதலில் 59 அரங்கங்கள் கொண்ட செட் அமைக்கப்பட்டு, அவை இறுதி செய்யப்பட்டதும் அதில் தொடர்ந்து 90 நாட்கள் ஒத்திகை செய்து பார்க்கப்பட்டிருக்கிறது. நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் உள்ளிட்ட 350 பேர் கொண்ட படக் குழுவினருடன் 90 நாட்கள் ஒத்திகையின்போது ஒருவர்கூட ‘ஆப்செண்ட்’ ஆகவில்லை. படப்பிடிப்பின்போது நடிகர்கள் அத்தனைபேரும் அவரவர் இடத்தில் கேமராவின் வருகைக்காகக் காத்திருந்து நடித்திருக்கிறார்கள். படம்பிடிக்கத் தொடங்கி 23வது டேக்கில்தான் படம் ஓகே
ஒரு முழு நீளத் திரைப்படம் ஒரே ஷாட்டில் எனும்போது, அதற்குப் பயன்படுத்தப்பட வேண்டிய கேமராவையும் அதைத் தூக்கிச் செல்வதற்கான கருவியையும் தேர்வு செய்வதில் நடைமுறைச் சாத்தியங்களை மனதில் கொண்டு செயல்பட்டுள்ளனர். சிங்கிள் ஷாட் முழுவதும் ஜிம்பல் கருவியின் துணைகொண்டு படமாக்கப்பட்டிருக்கிறது.
ஒருசில நிமிடக் காட்சியை ஒரே ஷாட்டில் எடுப்பது என்றாலே கேமராவில் ‘ஃபோகஸ் ஷிப்ட்’ செய்வது மிகவும் கடினமான சவால்! ஆனால் ‘இரவின் நிழல்’ படத்தில், 59 செட்களின் குறுகிய சந்துகள், மூலை, முடுக்குகளைக் கடக்கும் கேமரா, 100 நிமிடங்கள், 19 வினாடிகள் கொண்ட ஒரே காட்சியைப் படம்பிடித்த நிலையில் , தேவைப்படும் அனைத்து இடங்களுக்கும் ‘ஃபோகஸ் ஷிப்ட்’ செய்து அசத்தியிருக்கிறார்கள் படக்குழுவினர்.
படத்துக்கு ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களை ஒரே கோர்வையில் இசையமைத்துள்ளார். ஆஸ்கார் விருது பெற்ற கலைஞரான கிரேக் மான், ஒலியமைப்பு மேற்பார்வை பணிகளையும் மற்றொரு ஆஸ்கர் விருதுபெற்ற கலைஞரான கோட்டலாங்கோ லியோன் வி.எஃப்.எக்ஸ் பணிகளையும் செய்துள்ளனர்.
உலக சினிமாவில் இந்த முயற்சி புதிது. மற்ற மொழிகளில் பிரம்மாண்ட படங்களை எடுத்து மிரட்டும் இந்தச் சூழலில், தமிழில் ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுத்து மிரட்டியிருக்கிறார் பார்த்திபன்.
தற்போது ‘இரவின் நிழல்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி, வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் வந்ததும் கண்டிப்பாக உலக அங்கீகாரம் கிடைக்கும் என்று அன்று பார்வையாளர்கள் மத்தியில் பேசப்பட்டது.