தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 17 | தனுஜா ஜெயராமன்

 தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 17 | தனுஜா ஜெயராமன்

முகேஷ் வண்டியை வீட்டில் பார்க் செய்துவிட்டு உள்ளே நுழைந்தான். “சுதா!.. சாப்பாடு எடுத்து வையேன்.. பசிக்குது” என சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான்..

“முகேஷ் வந்துட்டயாப்பா?”.. என கேட்டுக்கொண்டே அப்பாவும் சாப்பிட டைனிங்டேபிளில் அமர்ந்தார்…

அம்மாவும் சுதாவும் தட்டு எடுத்துவைத்து பரிமாறிக் கொண்டிருந்தனர்.. “ஏம்பா!…என்ன தான் பிரச்சனையா இருக்கும். அந்த பொண்ணை யாரு கொன்னிருப்பாங்க”.. என அப்பாவியாய் கேட்ட அப்பாவை விழித்து பார்த்தபடி…

“தெரியலைப்பா!.… போலீஸ் விசாரிக்குறாங்க… அதன் முடிவில் தானேப்பா சொல்லுவாங்க”… என்றான் முகேஷ் அவர் முகத்தை பார்க்காமலே…

“அதில்லைப்பா!… அந்த பொண்ணு வேற நம்ம வீட்டுக்கு வந்து போயிருக்கு.. நம்ம நம்பரையும் ஸ்டோர் பண்ணி வைச்சிருக்கு.. அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு”… என்றார் கவலையுடன்..

“நீங்க கவலைபடாதீங்கப்பா!… பாத்துக்கலாம்” என்றான் பயத்தை மறைந்துக்கொண்டு…

“தேவைப்பட்டா போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவேண்டியிருக்கும்ங்றாரு… அந்த இன்ஸ்பெக்டர்”…

“நான் பாத்துக்கறேன் விடுங்கப்பா!”.. என வேகவேகமாக சாப்பிடத் தொடங்கினான்…

“என்னவோப்பா.… ஏதோ சரியில்லைன்னே மனசு கெடந்து அடிச்சிக்குது.. ஏதும் ப்ரச்சனை வந்துற கூடாதுன்னு கடவுளை வேண்டிக்குறேன்”.. என எழுந்து சென்றவரைக் கலக்கத்துடன் பார்த்தான்.

எப்படியோ அந்த குழந்தை ப்ரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.. அதற்குக் கூட மகிழ்ச்சியடைய முடியாமல் அடுத்தடுத்து ப்ரச்சனைகள்.. ச்சே!-.. என அலுத்த மனதை அடக்கிக் கொண்டு எழுந்து சென்று வாஷ்பேசினில் கைகளை கழுவி வந்தான்..

“சுதா!… ரொம்ப டயர்டா இருக்கு.. கொஞ்ச நேரம் தூங்குறேன்.. நாலுமணிக்கு வெளிய போகணும்.. எழுப்பி விடேன்” என்றவாறு ஏசியை போட்டான்.

மதிய வெயிலுக்கு இதமாக ஏசி சில்லிட உண்ட மயக்கத்தில் தூக்கம் கண்ணை சொருகியது.. தியா வேறு அருகில் அப்பா அப்பா என பிடித்து அடித்து மேலே ஏறி விளையாடிக் கொண்டிருக்க அப்படியும் சோர்வு உடலை அழுத்த, சரிந்து விழுந்து தூங்கிப் போனான்..

திடீரென முழிப்பு வர மணி மாலை ஐந்து… அருகில் துணி மடித்துக்கொண்டிருந்த சுதாவை… “ஏம்மா… நாலுமணிக்கு எழுப்ப சொன்னேனே… எழுப்பக்கூடாதா?”

“நீங்க அசந்து தூங்கிட்டிருந்தீங்க.. பாவம் இப்பெல்லாம் சரியாவே தூங்கறதில்லைன்னு கொஞ்சம் பொறுத்து எழுப்பி விடலாம்னு”.. எனத் தயங்கியபடி சொன்னவளை.. “சரி விடு பரவாயில்லை.. ஒரு காபி எடுத்துக்கொண்டு வாயேன்”… என அனுப்பிவிட்டு போனை எடுத்தான்.

ஹரிஷ் போன் செய்திருந்தான்… “ஹலோ..சொல்லுடா”.. என போனை உயிர்ப்பித்தான்…

“எங்கடா இருக்க?… போலீஸ் ஸ்டேஷன் போகணும்னியே”…

“சாரிடா… ரொம்ப டயர்ட்.. அசந்து தூங்கிட்டேன்.. இதோ கிளம்பி வரேன்”…

“சரி பரவாயில்லை… எனக்கும் இப்ப தான் வேலை முடிஞ்சது..நான் ஸ்டேஷன் வாசலுக்கு வந்துடறேன்… நீயும் வந்துரு”..என போனை வைத்தான் ஹரிஷ்.

சுதா கொண்டு வந்த காபியை குடித்ததும் கொஞ்சம் தெம்பாக இருந்தது. அருகில் தூங்கிவிட்ட தியாவை கன்னத்தில் கிள்ளி முத்தமிட்டு முகம் கழுவி தயாராக எழுந்தான்.

காரை போலீஸ் ஸ்டேஷன் நோக்கி செலுத்தினான். என்ன கேட்க போகிறார்கள்? என்ன சொல்வது? எப்படி சொல்வது என மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டான் இருந்தாலும் கொஞ்சம் பயமாக தான் இருந்தது.

ஹரிஷ் ஸ்டேஷனுக்கு எதிரே டீக்கடை வாசலிலேயே நினறிருந்தான்.. பிடித்து கொண்டு இருந்த சிகரெட்டை அணைத்துவிட்டு தூர எறிந்து முகேஷை நோக்கி வந்தான்.

“வாடா உள்ளே போகலாம்”.. என இருவரும் உள்ளே நுழைந்தனர்.

அங்கே இருந்து ஏட்டையாவிடம் இன்ஸ்பெக்டர் கோகுலை குறித்துக் கேட்க.. அவரை நோக்கி கையை காட்டினார் ஏட்டு ஏகாம்பரம். இன்ஸ்பெக்டர் கோகுல் காக்க காக்க சூர்யாவை போல கம்பீரமாக இருந்தார்..

“சார்!”… என ஹரிஷ் பவ்யமாக அழைக்க.. நிமிர்ந்தவரிடம்… “நான் ஹரிஷ்.. இவர் என் ப்ரண்ட் முகேஷ்… சன்லைட் டிடெக்டிவ் ஏஜென்ஸியின் அசோக் உங்ககிட்ட பேசுறதா சொல்லியிருந்தார்”… என தயங்கிக்கொண்டே சொல்ல..

“ஓ.… ஆமா… அசோக் சொல்லியிருந்தான்.… உட்காருங்க..அந்த அபார்ட்மெண்டில் கொலையான அந்த அம்ரிதா கேஸ் விஷயமாக தானே”..என கோகுல் நினைவுகூர… இருவரும் தலையாட்டினார்கள்.

“சொல்லுங்க”.… என இருவரையும் பார்த்த கோகுலிடம்…”கொலை செஞ்சவனைப் பத்தி தகவல் ஏதாவது கிடைச்சுதா?” என மென்று விழுங்கியபடி மெதுவாக கேட்டான் ஹரிஷ்..

“இல்லை… விசாரிச்சிட்டிருக்கோம்.. நீங்க வந்த விஷயத்தை சொல்லுங்க” என்றார்…

முகேஷின் முகம் வியர்த்து வழிய கர்சீப்பால் முகத்தை துடைத்துக்கொண்டே… “சார்!.. அந்த அம்ரிதா பத்தி சில விஷயங்களை சொல்ல வந்தேன்”… என்றான் பயத்துடன் தயங்கியபடி…

“சொல்லுங்க”.. என்றார் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு..

முகேஷ்… சற்று கலக்கத்துடன் தயங்க..

“எதுவாயிருந்தாலும் போலீஸ்கிட்டயும் வக்கில் கிட்டயும் எதையும் மறைக்காதீங்க. அப்படியே மறைச்சாலும் அதை நாங்க கண்டுபிடிச்சிருவோம் என்பதெல்லாம் வேறு விஷயம்”.. என்று சிரித்தார்.

முகேஷ் அம்ரிதாவை முதன்முதலாக திருச்சியில் சந்தித்தது முதல் கடைசியாக சந்தித்தது வரை ஒன்றுவிடாமல் ஒப்பித்தான்..

“ஓ…”வென நிமிர்ந்து உட்கார்ந்த கோகுல்.. “இவ்வளவு நடந்திருக்கா?”

“எனக்கு தெரிஞ்ச எல்லா உண்மையும் ஒன்று விடாமல் சொல்லிட்டேன் சார்!”..

“உங்களை அந்த பொண்ணு ப்ளாக்மெயில் பண்ணா சட்டப்படி நீங்க எங்களை தானே கான்டக்ட் பண்ணியிருக்கணும்…? நீங்க ஏன் அதைச் செய்யலை”..

“சார்!… நான் ஒரு தப்பு பண்ணியிருக்கேன். அது இன்னைக்கு வரை எங்க வீட்டுக்கு தெரியாது… அதனால் இதை நானே முடிச்சுடலாம்னு நினைச்சேன்”…

“அதான் முடிச்சுட்டீங்களா? ” எனச் சிரித்தார் கோகுல்..

“சார்!.… எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” …

“அதை நாங்க தானே சொல்லணும்”… எனச் சொன்னவரை பீதியுடன் நோக்கினான் முகேஷ்.. அருகில் டென்ஷனாகி விட்டாலும் அதனை மறைத்து ஹரிஷ் ” பதட்டபடாதடா” என முகேஷின் கைகளை ஆறுதலாக அழுத்தி தைரியம் சொன்னான்.

“முதல்ல நீங்க கொலை நடந்தப்போ எங்க இருந்தீங்க?”

“எங்க வீட்ல சார்”…என்றான் தயங்கிக்கொண்டே.

“அதுக்கு ஆதாரம் இருக்கா?”

“சா…ர்…”

“யூ சி மிஸ்டர் முகேஷ்.… நாங்க அந்த பொண்ணு தொடர்புடைய எல்லாரையும் சந்தேகபடுறதும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவதும் சகஜம். இப்ப தான் ஒவ்வொண்ணா விசாரிச்சிட்டிருக்கோம். அந்த அம்ரிதாவை பற்றிய பல உண்மைகள் தெரியவந்திருக்கிறது. தேவைபட்டா உங்களையும் கூப்பிடுவோம் விசாரணைக்கு. எங்களுக்கு கோ-ஆப்ரேட் செய்தா உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது” என கோகுல் எச்சரித்தது ஒரு மாதிரியாக இருந்தது இருவருக்கும்… எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.

“அசோக் சொல்லியதால்.… உங்களை கஸ்டடியில் எடுத்து விசாரிககலை. எங்களுக்கு தேவைன்னா அதையும் செய்வோம். நீங்க சொல்றது உண்மைன்னா ஒரு ப்ரச்சனையும் வரப்போறதில்லை… ஒருவேளை எதையாவது மறைச்சிருந்தீங்கன்னா ப்ரச்சனை உங்களுக்கு தான்”…என கடுமையாக எச்சரித்தார்.

“நா…ன் எதையும் மறைக்கலை சார்!”…என மென்று விழுங்கினான் முகேஷ்…

“சரி… நீங்க கிளம்புங்க..போகும்போது உங்க அட்ரஸ், போன் நம்பரை எழுதி குடுத்திட்டு போங்க”..

“நானுமா?”… என்ற ஹரிஷை

“இரண்டு பேருமே எழுதி குடுத்திட்டு கிளம்புங்க”.. என வேறு கேஸைப் பார்க்கக் கிளம்பினார் கோகுல்.

‘இது என்னடா வம்பா போச்சு.. முகேஷ் கூட வந்ததே தப்போ?’ என ஹரிஷ் தயங்கினான்.

இருவரும் அட்ரஸை எழுதி குடுத்திட்டு கவலையுடன் வெளியே வந்தனர். “என்னடா.. நம்மளையே மிரட்டுற மாதிரி பேசுறாரு” ..என்றான் முகேஷ்.

போலீஸ்ன்னா அப்படி தான்… பாத்துக்கலாம், விடு” …எனறான் ஹரிஷ் பெரும் யோசனையுடன். அவன் முகத்திலும் சற்று பயமும் கவலையும் தெரிந்தது. ஆனாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் சிரித்து மழுப்பினான்.

பல்வேறு யோசனைகளுடன் இருவரும் தத்தமது வீடு நோக்கி காரை செலுத்தினர்.

ஸ்டேஷனில்…

“என்னய்யா எதாவது தகவல் தெரிஞ்சுதா?” என்றார் டி எஸ்பி போனில்…

“விசாரிக்கறோம் சார்”.. என்றார் கோகுல் விறைப்பாக..

“என்னய்யா கொலைக்கான மோட்டிவ்”..

“இன்னும் கன்பார்மா தெரியலை சார். அந்த பொண்ணு அம்ரிதாவோட கேரக்டர் ஒண்ணும் சரியில்லைங்க சார்…அது தவிர அந்த பொண்ணு பலரை ப்ளாக்மெயில் பண்ணியிருக்கு. அதை தொழிலாவே செஞ்சிருக்கு”.

“அப்படியா?”

“ஆனா இதை அந்த பொண்ணு தனியா செஞ்சிருக்க வாய்ப்பில்லை . யாரோ அவ கூட இருக்கானுங்க.. யார்ன்னு கண்டுபிடிக்கணும் சார்! அதை கண்டுபிடிச்சாலே கேஸ் ஒரு முடிவுக்கு வந்திரும்.”

“அவளால் ப்ளாக்மெயில் செய்யபட்ட அல்லது பாதிக்கப்பட்ட யாராவது இதை செஞ்சிருக்கலாம் இல்லையா?”

“நிச்சயமாக இருக்கலாம் சார்.. அவ ப்ளாட்டுக்கு ஏகப்பட்ட ஆண்கள் வந்து போயிருக்காங்க.. போன்லையும் ஏராளமான நம்பரை வைச்சிருக்கா… ஒவ்வோண்ணா விசாரிச்சுகிட்டேயிருக்கோம் சார்”

“நீ என்ன பண்ணுவியோ எது பண்ணுவியோ தெரியாது. சீக்கிரம் கேஸை முடிய்யா”…

“சரிங்க சார்!… அவ ப்ளாட்டுக்கு வழக்கமாக ஒருத்தன் ரெகுலரா வந்து போறான்னு தகவல் கிடைச்சிருக்கு.. அவனை கண்டுபிடிச்சா கேஸ் சீக்கிரம் முடிவுக்கு வரலாம் சார்… பக்கத்து ப்ளாட்காரங்க சொன்ன முதல்கட்ட தகவலை வைத்து ஒருத்தன் மேல சந்தேகம் இருக்கு. அவன் மேலேயும் ஒரு கண்ணு வைச்சிருக்கேன் சார்…” என்றார் கோகுல்.

“சீக்கிரமே கண்டுபிடிய்யா.. பேப்பர்காரன் கண், காது, மூக்கு வைச்சி எழுதுவான்.. நம்மால சமாளிக்கமுடியாது. இதுல மேலிடத்து ப்ரஷர் வேற” ..என அங்கலாய்த்தபடி போனை வைத்தார் டி.எஸ்.பி

போனை வைத்த கோகுலுக்கு பெருத்த யோசனையாக இருந்தது. “யோவ் ஏட்டு, கொலைநடந்த இடத்துல கிடைத்த அந்த பொண்ணு போனை கொண்டு வா” ..என்றார்.

அதற்குள் சப் இன்ஸ்பெக்டர் சரவ் ஒரு பேப்பரை நீட்ட..”என்னய்யா இது” ..என்றார் கோகுல்.

“இப்ப வந்தவங்களோட அட்ரஸ் போன் நம்பர்”…

“இதை என்கிட்ட ஏன்யா கொடுக்கற?.. கேஸ் லெட்ஜர்ல எழுதி வைய்யா!… போய்யா” ..என கத்தினார்.

“சார்!” …என தயங்கியபடியே வந்த ஏட்டு ஏகாம்பரம் அம்ரிதாவின் போனை பவ்யமாய் நீட்ட, வாங்கியவர் அதனை ஓபன் செய்து கான்டாக்ட் லிஸ்டை, வாட்சாப் மெசேஜை செக் செய்தார்.… எதையும் விடவில்லை..

எதேச்சையாக வாய்ஸ் நோட்டை ஓபன் செய்ய.… யாரோ அனுப்பிய தகவல்.. “அவன் ஆஸ்பிட்டலுக்கு வந்துகிட்டிருக்கான்….சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கில்ல” என்று முடிந்தது.

கோகுலுக்கு குழப்பமாக இருந்தது. இந்தக் குரலை எங்கேயோ கேட்டது போல இருந்தது…

“அந்தக் கேஸ் லெட்ஜரை கொண்டு வாய்யா!” …என.மறுபடியும் வாங்கி பார்த்தார்.

ஏதோ மனதுக்குள் பொறி தட்டியது.. ‘சரியான ஆதாரம் கிடைக்கட்டும். கோழி அமுக்குவது போல அமுக்கிவிடலாம்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

குற்றவாளி விரைவில் அகப்படுவானா? தனது ப்ரச்சனைகள் தீருமா? என யோசித்தபடி வண்டியை செலுத்தி கொண்டிருந்தான் முகேஷ் தன்னை சுற்றி பின்னப்படும் கண்ணுக்கு தெரியாத வலைகளை பற்றி ஏதும் அறியாமல்…

–தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...