சிவகங்கையின் வீர மங்கை | 5 | ஜெயஸ்ரீ அனந்த்
எல்லாம் சில நொடிகள் தான். சரியாகக் குறி பார்த்து எறியப்பட்ட கத்தி சிறிதும் பிசகாமல் துல்லியமாக இலக்கை எட்டியிருந்தது.
இத்தகைய நிகழ்வை சற்றும் எதிர்பார்க்காத வேலு நாச்சியார் “பெரியப்பா…” என்று கூக்குரலிட்டாள்.. அதன்பின் ஒரு விநாடி கூட தாமதிக்காமல் உறையிலிருந்த வாளை உருவிக் கொண்டு கத்தி வந்த திசையினைப் பார்வையிட்டாள். அங்கு சசிவர்ணத் தேவர் படுத்திருந்த அறைக்கு மேலே இருந்த சாளரம் சற்று நகர்ந்திருந்தது தெரிந்தது. அங்கு நிழல் போல் ஏதோ உருவம் தெரிந்து மறைந்தது. “வீரர்களே, கவனம் தேவை” என்ற கர்ஜனைக் குரலெழுப்பி அரண்மனையின் மேல் தளம் நோக்கி பாய்ந்தாள். வீரர்கள் சிலர் அவளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கீழே மேலே விழுந்தடித்துக் கொண்டு அவளைப் பின்தொடர்ந்தனர்.
ஆண்களுக்கு நிகரான ஆளுமை, திடகாத்திர உடம்பை மீறித் திமிறும் பெண்மை. குதிரையை ஒத்த ஓட்டம். எதிரிகளைத் துவம்சம் செய்வதில் பாயும் புலியான அவள், கையில் உருவிய வாளுடன் அந்த அறையைக் கடந்து படியேறி மேல் தளத்திற்கு வந்தாள். பழக்கப்பட்ட அரண்மனை என்ற பொழுதிலும் சாளர இடத்தை அடைந்த அந்தச் சில நிமிடத்தில் அந்த இடம் வெறிச்சோடி இருந்தது.
“இங்கு யாரும் காவலுக்கு இல்லையா?”என்ற கேள்வியுடன் அந்தத் தளத்தைச் சுற்றிலும் பார்வையிட்டாள் . அங்கிருந்த சிறு அறையில் காவலாளிகள் சிலர் முதுகிலும் நெஞ்சிலும் குத்தப்பட்டு இறந்து கிடந்தனர்.
“கோழைகள்… விவேகம் இல்லா மூடர்கள்” என்று இறந்தவர்களிடம் கோபத்தைக் காட்டியவள், அறையைச் சுற்றி வந்து பின்புறம் இருந்த தடுப்புச் சுவர் வழியாகப் பார்வையை செலுத்தினாள். அப்பொழுது அரண்மனை மதில் சுவர் மேல் அடர்ந்து படர்ந்திருந்த கடம்ப மரம் வழியாக ஒரு உருவம் வெளியில் குதித்தது தெரிந்ததும்
சிறிதும் தாமதிக்காமல் இடுப்பில் சொருகியிருந்த குறுங்கத்தியை எடுத்து அந்த உருவத்தை நோக்கி எறிந்தாள். “விசுக்…” என்று பறந்த கத்தி சரியாக அந்த உருவத்தின் காலில் பட்டது. “அம்மா…” என்ற அலறலுடன் கத்திக்குத்து பட்ட அந்த உருவம் ஒரு குதிரையின் மேல் ஏறி மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது.
நடந்த சம்பவங்களைப் பார்த்த சிவக்கொழுந்துக்கு உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டு இருந்தது. சிவக்கொழுந்துவின் பரம்பரையில் யாரும் கையில் வாள் பிடித்தது கிடையாது. தலைமுறை தலைமுறையாக அரண்மனையில் வேளாண் குடிமக்களின் தலைவனாகவும் அரண்மனை வரவு செலவு விவரங்களை கையாளுவதிலுமே இவர்களது பணி இருந்து வந்தது. சிவக்கொழுந்து அதிலிருந்து சற்றே விலகி அரசரின் நன்மதிப்பை பெற்றவனாக ராஜாங்க ரகசியத்தில் அங்கம் வகிப்பவனாக இருந்து வந்தான்.
வேலு நாச்சியாரை இவன் முதன் முதலில் பிரமிப்பில் பார்த்ததற்கும் இப்பொழுது பயத்தில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தையும் நன்கு உணர்ந்தான்.
மெதுவாக நாச்சியார் அருகில் சென்று, “இளவரசியே…. நேற்று நான் சந்தேகத்திற்கு இடமான ஒருவனை ராமநாதபுரம் கோட்டையின் அருகினில் எதார்த்தமாகச் சந்திக்க நேர்ந்தது. அவனைப் பிடிக்க பின்தொடர்ந்து சென்றேன். கருவேலங்காட்டினுள் புகுந்து மறைந்து விட்டான்.”
இப்படி கூறியதும் நாச்சியாரின் கோபப்பார்வை சிவக்கொழுந்தின் மேல் விழுந்தது. “நீ நேற்று அரண்மனைக்கு ஓலை தருவித்தவன் தானே?”
“ஆமாம் இளவரசி “என்றான் சற்றே வெட்கித் தலை குனிந்தபடி.
“எத்தனை பெரிய விபரீதம் நிகழவிருந்தது?. நீங்கள் பார்த்த செய்தியைத் தளபதியிடம் சொல்லாமல் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? எனக்கென்னவோ உன்மீது தான் சந்தேகம் எழுகிறது. ஒரு வேளை உனக்கும் இங்கு வந்தவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?” இந்தக் கேள்வியால் அதிர்ந்த சிவக்கொழுந்து யோசிக்காமல் நாச்சியாரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான்.
“இளவரசி என் உயிரே என்னை விட்டு போனாலும் நம் நாட்டை காட்டிக் கொடுக்கும் நயவஞ்சகன் நான் இல்லை. அவனை என் முயற்சியால் கையும் களவுமாகப் பிடித்து தரவே எண்ணியிருந்தேன். மேலும் இந்த . செய்தி குறித்துத் தளபதியிடம் விரிவாக விவாதிக்க எண்ணியிருந்தேன்.” என்றான்.
“அப்படியா… சரி, போகட்டும் எழுந்திருங்கள். அவனை எங்கு பார்த்தோம் என்பதாவது நினைவிருக்கிறதா?” என்றாள்.
” இருக்கிறது.”
“நல்லது. வீரர்களே தாமதிக்காமல் இவருடன் செல்லுங்கள். இவர் காண்பிக்கும் இடத்தை ஆராயுங்கள். அங்கு சந்தேகப்படும்படியாக யாராவது இருந்தால் உடனே அவர்களை கைது செய்து அழைத்து வாருங்கள்” என்று உத்திரவிட்டாள்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் சிவக்கொழுந்துடன் சில படை வீரர்கள் குவிரன் இருப்பிடத்தை நோக்கி விரைந்தனர்.
நடந்த சம்பவங்களைக் கண்டு சற்று சஞ்சலமடைந்த நாச்சியார் உடனடியாக அங்கு பாதுகாப்பைப் பலப்படுத்தி அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்த ஏற்பாடு செய்ததோடு இளவரசர் முத்துவடுகநாதருக்கும் ஓலை ஒன்றினை அனுப்பினாள்.
• • •
நேயர்களே… இங்கு நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதிக்கு முன் ஆட்சி செய்த முத்து விஜய ரகுநாதர் தனது பெண் அகிலாண்டேஸ்வரியை சசிவர்ணத் தேவருக்கு மணம் முடித்து தந்தார். மேலும் தனது மகன் சிவகுமார முத்துக்கு வாரிசு இல்லாத காரணத்தால் செல்லமுத்துவை தத்தெடுத்து வளர்த்து பின் அவரை ராமநாதபுரத்து சேதுபதியாக முடிசூட்டினார். அதனால் செல்லமுத்துவுக்கும் சசிவர்ணத் தேவருக்கும் நெருக்கம் அதிகம். சசிவர்ணத் தேவர் – அகிலாண்டேஸ்வரி தம்பதிக்கு பிறந்தவர் தான் முத்துவடுகநாதர். தற்பொழுது அவர் நண்பன் விஜயகுமார நாயக்கருக்கு மதுரையை மீட்டுத் தரும் பொருட்டு கேப்டன் கோப்புடன் போர் புரிந்து கொண்டு இருக்கிறார்.
• • •
அன்றிரவு ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. சசிவர்ண தேவர் நோய்வாய்பட்டதற்கான அறிகுறி அவரின் முகவாட்டத்தில் தெரிந்தது. அருகில் நாச்சியார் மற்றும் படைத் தளபதிகளில் முக்கியமானவராக தாண்டவராயன் பிள்ளை இருந்தார். இவர் சசிவர்ணத் தேவரின் நம்பிக்கைக்குரிய நட்பினை கொண்டவர். மிகவும் புத்திக் கூர்மை உடையவர். நடந்து முடிந்த உள்நாட்டுப் போர்களிலும் வெள்ளக்குறிச்சி போரிலும் இருவர்களின் வீரமும் விவேகமும் மிக அளப்பரியது.
இப்படிப்பட்ட ஜாம்பவான்களுக்கு அருகாமையில் முக்கிய படைத் தளபதிகள் நின்று கொண்டிருந்தார். இவர்களுடன் வேலுநாச்சியாரும் அமர்ந்திருந்தார்.
அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலையை தளபதி தாண்டவராய பிள்ளைதான் தனது பேச்சினால் கலைத்தார் ..
“இளவரசியே, தற்பொழுது நாட்டில் நிலவும் சூழல் விரும்பத்தக்கதாக இல்லை. நவாப் படைகளும் கும்பிணிப் படைகளும் நமக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும் வெள்ளையர்கள் நம் நாட்டின் மீது போர் தொடுத்து குறுநில மன்னர்களின் ராஜ்யத்தை அபகரித்துக் கொள்வதாக தகவல் வேறு அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது இந்த நேரத்தில்தான் பவானி சங்கரின் வீரர்கள் இது தான் சரியான சந்தர்ப்பம் என்று எப்படியாவது சிவகங்கையை அழிக்க நினைக்கிறார்கள்.”
“பவானி மராட்டிய மன்னன் துல்ஜாஜியிடம் சிறைப்பட்டதாகக் கேள்விப்பட்டேனே மாமா?”
“ஆமாம். ஆனாலும் அவரின் கைக்கூலிகள், பவானியின் இந்த நிலைக்குக் காரணம் சசிவர்ணத் தேவர்தான் என்று தவறாக நினைத்துக் கொண்டு நம்மை அழிக்க நினைக்கிறார்கள் ஆனால் உண்மை அதுவல்ல. மராட்டியரை பவானி ஏமாற்றியதால்தான் அவருக்கு சிறை தண்டனை என்பதை உணர மறுக்கிறார்கள்.”
“என்னவோ மாமா… நீங்கள் இவருடன் இருக்கும் தைரியத்தில்தான் நானும் அத்தானும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறோம்.” என்று பெருமூச்சை உதிர்த்தவள். “மாமா, நாம் ஆயுதங்ளையும் ஆயுதக் கிடங்கையும் அதிகரிக்கும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். இது குறித்து அத்தான் வந்ததும் நாம் ஆலோசனை செய்யலாம்.” என்ற சமயத்தில் “நங்ங்…. நங்ங்.. நங்ங்..” என்று அருகினில் இருந்த சிவன் கோவிலின் ஆலய மணி அர்ததஜாம பூஜை நடப்பதை அறிவுறுத்தியது.
• • •
மதுரை நாயக்கர் மஹால் அரண்மனை மகிழ்ச்சியில் அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. போரில் கேப்டன் கோப் புறமுதுகு காட்டி ஓடியதைப் பற்றி வீரர்கள் தங்களுக்குள் ஒருவருக்குள் ஒருவர் பேசிக்கொண்டு குதூகலித்துக் கொண்டிருந்தனர். “பார்த்தாயா நம் வடுகநாத சிங்கத்தை… நவாப் ஆட்கள் கையில் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று நினைக்கும் போதே அவனின் கைகளை வெட்டினாரே… அடடா… அடடா… என்ன ஒரு கண்கொள்ளாக் காட்சி” என்றான் ஒருவன்.
“இதென்ன… வளரியின் ஒரே வீச்சில் ஆங்கிலேயரின் பத்துத் தலைகளும் பந்து போலத் தரையில் உருண்டதே…. அதைப் பார்க்கவில்லையா? ஹ ஹ ஹா…” என்றான் மற்றொருவன்.
“நமது அரசர் விஜயகுமாரர் மட்டும் என்னவாம்? எதிரியின் ஆயுதத்தைக் கொண்டே அவரை மடக்கவில்லையா?” என்று போரில் கண்ட காட்சியின் பிரதாபங்களை பேசிக் கொண்டு இருந்தனர். சில வீரர்கள் பானையில் ஊற்றி வைக்கபட்டிருந்த உற்சாகபானத்தை மூச்சு முட்டும் அளவிற்குக் குடித்து களிப்பில் ஒருவர் மேல் ஒருவராக கிடந்தனர்.
சற்று தள்ளி இருந்த இசை மண்டபத்தில் ஆடலுடன், ‘பாடல்களை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர். ஜல் ஜல் சலங்கை சத்தத்திற்கு ஈடு தரும் பொருட்டு வாத்தியங்களின் ஒலியும் எழும்பிக் கொண்டிருந்தது. அரண்மனை முழுதும் ஏற்றப்பட்டிருந்த தீப ஒளியிலும் தோரண அலங்காரத்திலும் வெற்றியின் கொண்டாட்டம் தெரிந்தது.
அன்றிரவிலிருந்து பத்து நாட்கள் ஊர் திருவிழா கோலம் பூண்டது. அரசர் விஜயகுமார நாயக்கர் தனது இணைபிரியாத் தோழன் முத்துவடுகநாதரை ஆரத்தழுவிக் கட்டிக் கொண்டார்.
“தோழனே… இன்றைய வெற்றி உனதாகுக. நீ மட்டும் என்னுடன் இல்லாதிருந்தால் இந்த மதுரை ஆங்கிலேயர் கைவசம் போயிருக்கக் கூடும். தக்க சமயத்தில் எனக்காகப் போர் புரிந்து எனது ராஜ்ஜியத்தை மீட்டுக் கொடுத்த உன்னை என் உயிர் உள்ளவரை மறக்கமாட்டேன்..” என்று அடி மனதின் ஆழத்திலிருந்து வார்த்தைகளாக வெளிபட்டன.
“இந்த நவாபிற்கும் கும்பினிப் படைகளுக்கும் தான் எத்தனை நரித்தனம்? எங்கிருந்தோ வந்தவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு நமது நாட்டை கூறுபோடப் பாத்தார்களே?”என்று பேசிக் கொண்டு மஹாலின் அரசவை மண்டபத் தூண்களை வாஞ்சையுடன் தடவிக் கொண்டிருந்தார்.
“இதில் உள்ள ஒவ்வொரு தூணும் என் முன்னோர்களின் உழைப்பையும் கெளரவத்தையும், பெருமையையும் கொண்டது. இதைப் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என்றார் மன்னன் விஜயகுமார நாயக்கர்.
“நண்பா, இந்த நவாப்பிற்கு நாம் ஒரு பாடம் சொல்லித்தர வேண்டியது மிக அவசியமாக உள்ளது. அதற்கு முன் நாம் நமது படைபலத்தையும் ஆயுதங்களையும் பெருக்கிக் கொள்வது மிக முக்கியம்.” என்றார் முத்துவடுகநாதர். இதே வார்த்தையை இதே நேரத்தில்தான் வேலு நாச்சியாரும் அங்கு தாண்டவராய பிள்ளையிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“ஆம்.. நீ சொல்வது சரிதான் நண்பா. நம்மிடம் வெறும் வில், அம்பு, வளரி, வேல் போன்ற ஆயுதங்களே புழக்கத்தில் உள்ளன. ஆனால் அவர்கள் கைவசம் புதுப் புது ஆயுதங்கள் உள்ளனவே. அதை நினைக்கும் பொழுதுதான் மனது கொஞ்சம் கவலைக்கு இடம் அளிக்கிறது. எனது அரசவையில் முதல் வேலையாக ஆயுதக் கிடங்கை அதிகரிக்க வேண்டும்.”
“ம்ம்….. இந்நேரத்தில் அதை பற்றிக் கவலை எதற்கு? நீ மறுபடியும் மன்னராகி விட்ட இந்த மகிழ்ச்சியை நாம் இப்பொழுது கொண்டாடும் தருணம் இது . இதைப் பற்றி நாம் பிறகு பேசிக் கொள்ளலாம்.” என்று தோழனுடன் பேசிக் கொண்டிருந்த சமயம்…
“மன்னருக்கு வணக்கம். சிவகங்கையிலிருந்து ஓலை தாங்கி ஒரு வீரர் வந்துள்ளார். மிக்க அவசரமாம்.” என்றான் காவலாளி ஒருவன்.
“வரச்சொல்.” என்றதும் வீரன் ஒருவன் தான் தாங்கி வந்த பட்டோலை உறை ஒன்றை முத்துவடுகநாதரிடம் சமர்ப்பித்தான்.
அதைப் பிரித்து படித்து பார்த்த முத்துவடுகநாதரின் கண்கள் இரண்டும் சிவந்தன. பற்களை நறநறவென்று கடித்தார். பின் தன்னை அமைதிப்படுத்திக் கொண்டவராய், “நண்பா… உன் சங்கடத்தில் பங்கேற்ற என்னால் உன் மகிழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை. என்னை மன்னித்து விடு. மிகவும் அவசரம்! நான் இப்பொழுதே என் தந்தையை பார்க்க சென்றாக வேண்டும். ஏதோ அவரை ஆபத்து சூழ்ந்துள்ளாக வேலுநாச்சியாரிடமிருந்து ஓலை.” என்றார்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத விஜயகுமார நாயக்கரின் முகம் சட்டென்று வாட்டம் கண்டது. வடுகநாதன் கைகளைப் பற்றிக் கொண்டார். “தந்தையார் நலம்தானே? பதற்றம் வேண்டாம் நண்பா. சுந்தரேசரின் அருளால் நல்லதே நடக்கும். சொக்கநாதர் உனக்குத் துணையிருப்பார். உன்னை அனுப்ப மனமில்லைதான். ஆனால், ஆபத்து சூழ்ந்துள்ள இந்தத் தருணத்தில் என்னோடு நீ இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவது பேராசையின் உச்சகட்டம். ஆகவே அங்கு நிலைமை சீரானதும் மறுபடியும் நீ மதுரை வரவேண்டும். இப்பொழுது நான் உனக்கு பிரியாவிடையளிக்கிறேன். செல்…. ம்..” என்றவர், “சொல்ல மறந்து விட்டேன். உன் நாச்சியாரை அண்ணனாகிய நான் விசாரித்ததாகக் கூறு” என்று சொல்லி ஒரு பெரிய மரப் பெட்டியை எடுத்துவரச் சொல்லி அதை முத்துவடுகநாதருக்கு பரிசாக அளித்தார்.
“இது….. என்ன நண்பா..?”
“தொலை நோக்கி. உனக்கான என் சிறு அன்பளிப்பு. மறுக்காமல் வாங்கிக் கொள்.”
“ஆஹா… பெருமைக்குரிய பரிசு. மிக்க நன்றி” என்றார். பிரிவு உபசாரங்கள் முடிந்ததும், நண்பர்கள் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டு பரஸ்பரம் அன்பை பரிமாறிக் கொண்டதும் வடுகநாதர் புறப்படுவதற்குத் தயாரானார். உயர் ஜாதி வெள்ளைக் குதிரை ஒன்று அலங்காரத்துடன் அரண்மனை வாயிலில் புறப்படத் தயாராக இருந்தது. முக்கியத் தளபதிகளுடன் மன்னர் விஜயகுமார நாயக்கர் வழியனுப்ப “வெற்றிவேல்… வீரவேல்” முழக்கத்துடன் முத்துவடுகநாதர் புறப்பட்டார். குதிரை சிவகங்கை நோக்கி சீறிப் பாய்ந்தது.
குதிரை வேகத்திற்கு ஈடாக அவரின் மனோ வேகமும் சென்றது. அதில் வேலுநாச்சியாருக்கு என்று தனி இடமிருந்தது. நாச்சியாரை நினைத்த மாத்திரத்தில் இனம் புரியாத அன்புடன் கூடிய கிளர்ச்சி குதூகலிக்க…. காதலுடன் விரைந்தார்.
• • •
நேயர்களே… இந்த இடத்தில் நமக்கு அவகாசம் கிடைப்பதால் முத்துவடுகநாதரின் திறமையைக் கொஞ்சம் அலசுவோம். ஆறடி கொண்ட உயரம் ஆஜானுபாகுவான உடல்வாகு. தீவிர சிவ பக்தர். சிவன் தரிசனம் செய்யாமல் அன்றைய நாட்களைத் துவங்க யோசிப்பவர். கோவில்களில் இவருடைய தொண்டு அளப்பரியது. வளரி எறிவதில் இவருக்கு நிகர் எவருமில்லை. வளரி வித்தை பொதுவாக ஓடித் தப்பிப்பவர்களைப் பிடிப்பதற்கும், திருடர்களைப் பிடிக்கவும் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதில் பல வகை உண்டு. வளைதடி, திகிரி, பாறாவளை, சுழல்படை, கள்ளர்தடி, படைவட்டம் போன்றவை. இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயல்பாடுகளை கொண்டது.
(தொடரும்)
3 Comments
மிகவும் அருமையாக இருக்கிறது இன்றைய தலைமுறையினர் நம் வீர வரலாற்றினை என்றும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
Very nice and interesting. Writer to be appreciated for the perfect flow …waiting for further episodes…Congrats
நாயக்க மன்னர்கள் சேதுபதி மன்னர்களின் வரலாற்றை சுவைபட கூறுவது மிகச்சிறப்பு! வாழ்த்துகள்!