பால்ஸ்ரீ விருது பெற்ற கல்லூரி மாணவி
பால்ஸ்ரீ விருதுபெற்ற வி.ஏ.எம். ஐஸ்வர்யா கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறார். பிரபல கர்நாடகப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பெல்லோஷிப் பெற்றவர். அவரிடம் பேசினோம்.
எப்போதிலிருந்து பாடத் தொடங்கினீர்கள்?
மூணு வயதிலிருந்தே சுரஸ்தானத்தோட பாடத்தொடங்கினேன். முதல் முதல் சென்னை, நங்கநல்லூரில் நடக்கும் பாலாஜி நகர் அசோசியேஷ னில் தியாராஜர் ஆராதனையில் தியாராஜர் கீர்த்தனையைப் பாடி பரிசு வழங்கினார்கள்.
அதன்பிறகு அம்மா உமா வெங்கடேசன் அபஸ்வரம் ராம்ஜி அங்கிள் இசைப் பள்ளில் லஷ்மிப்ரியா என்கிற ஆசிரியர் மூலமாக முறைப்படி கர்நாடக சங்கீதம் மூணு வருஷம் படித்தேன். ராஜலஷ்மி ஸ்ரீனிவாசன், உமாசங்கர் ஆகிய குருமார்களிடம் கர்நாடக இசை பயின்று பல மேடைகளில் பாடி யிருக்கிறேன். அபஸ்வரம் ராம்ஜி இசைக் குழுவில் திரையிசைப் பாடகி யாகவும் கர்நாடக இசைப் பாடகியாகவும் ஏழு வருடங்கள் பல மேடை களில் பாடினேன்.
ராஜாராணி படத்தில் பாடியது பற்றி?
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ‘ராஜாராணி’ படத்தில் எட்டு வயசுப் பெண் குரலில் ஒரு சிறிய பாடல் பாட வித்தியாசமான குரல்வளம் உள்ள பாடகியைத் தேடிக்கொண்டிருந்தார். அவர்களுக்குக் கிடைக்க வில்லை என்று அபஸ்வரம் ராம்ஜி மூலமாகக் கேட்டு ஐஸ்வர்யாவை அனுப்பிவைத்தார் ராம்ஜி. ‘ஹே பேபி என் ஹார்ட்பிட்’ என்ற பாடலை ஒரே டேக்கில் பாடி முடித்தேன். அப்போது நான் மூணாவது படித்துக் கொண் டிருந்தேன். நான் பாடிய அந்தப் பாடல் ஜி.வி.பிரகாஷ் குமாருக்குப் பிடித்துப் போக படத்தில் இன்னொரு இடத்தில் வரும் ஹம்மிங்கும் பாடச் சொன்னார். ராஜா ராணி தெலுங்குப் படத்திலும் நான்தான் பாடி னேன். இசையமைப்பாளர் ஜி.வி.பி.யும் இயக்குநர் அட்லியும் பாராட்டினார்கள்.
மறக்கமுடியாத சம்பவம்?
ஏழாவது படிக்கும்போதே பெரிய விவான்கள் பாடிய திருவாரூர் தியாக ராஜர் ஆராதனை விழாவில் கலந்துகொண்டு பாடியதை மறக்கமுடி யாது. அபஸ்வரம் ராம்ஜி இசைக்குழுவில் 2017ஆம் வருடம் எஸ்.பி.பி. முன்னிலையில் பாடும் வாய்ப்பு ஏற்பட்டதை என்னால் மறக்க முடியாது.
பரிசுகள், விருதுகள் பற்றி?
2016ல் மத்திய அரசு வழங்கும் பாலஸ்ரீ விருதுக்கான தேர்வு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டேன். தேசிய அளவில் நடந்த கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டுப் பிரிவில் 16 வயதினருக்கான போட்டியில் வாய்ப்பாட்டில் எனக்கு பாலஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. (பெரியவர்களுக்கு பத்மஸ்ரீ மாதிரி பாலகர்களுக்கு பால்ஸ்ரீ வழங்கப்படுகிறது.) இந்தப் போட்டி இரண்டு ஆண்டுகள் நடைபெற்றது. இதற்கிடையே கொரோனா வந்ததால் டெல் லிக்கு சிறுவர்கள் வரவேண்டாம் என்றனர். ஜனாதிபதி கையால் பாலஸ்ரீ விருது பெறமுடியாததால் சூழ்நிலையில் சென்னையில் அன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையால் பாலஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
2017ல் மத்திய கலாசாரத்துறை நடத்தும் பாலகலா உத்சவ் என்கிற சங்கீத்மணிவிருது போட்டியில் கலந்துகொண்டேன். 25 மாநிலங்களி லிருந்து ஆயிரம் சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்டனர். இதில் சங்கீதம், நடனம் போன்ற போட்டிகள் நடக்கும். சங்கீதத்தில் பல சுற்றுகள் நடந்தது. இறுதிச் சுற்றில் ஆறு பேர்தான் தேர்வானார்கள். அதில் முதல் பரிசு பெற்று சங்கீத்மணி பட்டம் எனக்கு வழங்கினார்கள்.
2021ம் ஆண்டு ஷண்முகாநந்தா சபா சார்பாக ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி பெல்லோஷிப்’ விருதும் ஒரு லட்ச ரூபாய் பரிசும் வழங்கினார்கள். இந்த விருது மூன்றாண்டுகளுக்கானது.
2022 மார்ச் மாதம் ஒசூரில் உள்ள எம்பயர் யுனிவர்சிட்டி ‘பாரத் கலா ரத்னா’ விருது வழங்கியது. என்னுடைய எல்லா பரிசு, பாராட்டுகளுக்கும் குரு நெய்வேலி சந்தானகோபாலன் மற்றும் அம்மா அப்பாவுக்கு நன்றி சொல் லிக் கொள்கிறேன்.
இளையராஜா பாராட்டினாரே எதற்கு?
சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியில் கலந்துகொண்டு பாடினேன். அதில் அனைவரின் பாராட்டையும் பெற்றேன். அப்போதுதான் இளையராஜா என்னை அழைத்துப் பாராட்டினார். 2022 மார்ச் மாதம் இசைஞானி இளைய ராஜா இசைக் குழுவில் துபாய் எக்ஸ்போவுக்கு அழைத்துச்சென்று பாட வைத்தார்.