புதுடெல்லியில் எழுத்தாளர் சிவசங்கரி 2022-ம் ஆண்டுக்கான ‘சரஸ்வதி சம்மான்’ இலக்கிய விருதை நேற்று பெற்றுக் கொண்டார். கடந்த 2019-ம் ஆண்டு அவர் எழுதிய ‘சூரிய வம்சம் – நினைவலைகள்’ என்ற நூலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருது ரூ.15 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டுப் பத்திரம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விருதை கே.கே.பிர்லா அறக்கட்டளை கடந்த 1991-ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. எழுத்தாளரின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் இலக்கிய விருதுக்கு எழுத்தாளர் சிவசங்கரி தேர்வு செய்யப்பட்டிள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, எழுத்தாளர் சிவசங்கரிக்கு இந்த விருதை வழங்கினார்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் சிறந்த இலக்கிய படைப்பாளிக்கு சரஸ்வதி சம்மான் இலக்கிய விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
ச
ரஸ்வதி சம்மான் விருதினை பெற்றுக் கொண்ட சிவசங்கரி “நான் 56 வருடங்களாக எழுத்தாளராக இயங்கி வருகிறேன். நல்ல இலக்கிய படைப்பு எது என என்னிடம் பலர் கேட்டுள்ளனர். நல்ல இலக்கியம் என்பது காலத்தின் தடைகளைத் தாண்டி வாசகரிடம் தாக்கத்தை உருவாக்கி, ஆக்கப்பூர்வமாக சிந்திக்கத் தூண்டும். இலக்கியம் கண்ணாடியை போன்றது. அது நமக்கு சுட்டிக்காட்டும் குறைகளைத் திருத்திக் கொள்வோம்” என்று கூறினார்.
