பிரபல எழுத்தாளா் சிவசங்கரிக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா! | தனுஜா ஜெயராமன்
2022-ஆம் ஆண்டுக்கான ‘சரஸ்வதி சம்மான்’ இலக்கிய விருது பெறும் பிரபல எழுத்தாளா் சிவசங்கரிக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபா் 13) மாலை பாராட்டு விழா நடைபெறுகிறது.
பாரதத்தின் புகழ் மிக்க இலக்கிய விருதான “சரஸ்வதி சம்மான் விருது” எழுத்தாளர் சிவசங்கரிக்கு நேற்று புது தில்லியில் வழங்கப்பட்டதை தொடர்ந்து இப்பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1942-ல் பிறந்தவர் சிவசங்கரி. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியம் சார்ந்து இயங்கி வருகிறார். 36 நாவல்கள், 48 குறுநாவல்கள், 150 சிறுகதைகள், ஐந்து பயணக் கட்டுரைகள், ஏழு கட்டுரைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். தமிழ் சிறுகதைகளின் இரண்டு தொகுப்புகளை தொகுத்துள்ளார். இவரது பல படைப்புகள் பல இந்திய மொழிகளிலும் மற்றும் ஆங்கிலம் உட்பட சில உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற ‘சூர்ய வம்சம்’ புத்தக வெளியீட்டு விழாவில் தற்போதைய நாகாலாந்து கவர்னர் இல.கணேசன், குமரி அனந்தன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல ப்ரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
விருது பெற்ற எழுத்தாளா் சிவசங்கரிக்கு தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. இந்த விழா தில்லி ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள தில்லி தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவா் கலையரங்கில் வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு ‘தினமணி’ ஆசிரியா் கே. வைத்தியநாதன் தலைமை வகிக்கிறாா். எழுத்தாளா் மாலன் பாராட்டுரை வழங்க உள்ளாா். எழுத்தாளா் சிவசங்கரி ஏற்புரையாற்றுகிறாா். இந்நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்குமாறு தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலா் இரா. முகுந்தன் ஆகியோா் கேட்டுக் கொண்டுள்ளனா்.