நீ என் மழைக்காலம் – 13 | இ.எஸ்.லலிதாமதி

 நீ என் மழைக்காலம் – 13 | இ.எஸ்.லலிதாமதி

அத்தியாயம் – 13

நிலா முற்றத்தில் கொடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை மழைச்சாரல் வந்து நனைத்துக் கொண்டிருந்தது. வேறு நேரமாக இருந்திருந்தால் ஓடிப்போய் அந்தத்துணிகளை எடுத்து வந்து பத்திரப்படுத்தி இருப்பாள் நிவேதிதா. ஆனால் அதை விட, வீட்டில் பெரும் புயல் ஒன்று அடித்துப் புரட்டிப் போட்டுக் கொண்டிருப்பதால், பால்கனியில் துணி நனைவது பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.  புயலுக்குக் காரணம் அக்கா. அவள் இப்படி ஒரு காரியத்தை செய்வாள் என்று அவளோ, அவள் பெற்றோரோ நினைக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளப் போவதாய், மிக எளிதாய் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு,  வீட்டை விட்டுப் போய் விட்டிருந்தாள். அந்தப் புயலில் சாய்ந்த பெருமரமாய் பெற்றோர் உட்கார்ந்து இருந்தார்கள். அதன் கிளைகள் முறிந்தது போல் நிவேதிதாவும், அவள் தம்பி சரவணனும் இருந்தார்கள்.

அக்கா காதலிப்பாள் என்றோ, அந்தக் காதனுடன் வீட்டைவிட்டு ஓடிப் போவாள் என்றோ நிவேதிதாவும் நினைக்கவில்லை. அவளைப் பெற்றவர்களும் நினைக்கவில்லை. ‘நான் தான் உனக்குப் பொறுப்பு. உனக்கு ஏதாவது ஒன்று நடந்தால் அதற்கு நான் தான் பதில் சொல்ல வேண்டும்’ என்று நிவேதிதாவிடம் அட்வைஸ் மழையாகப் பொழிந்தவள், தானே காதல் மழையில் விழுந்து வீட்டிற்குப் பேரதிர்ச்சி கொடுப்பாள் என்பது கனவில் கூட நினைத்திராத ஒன்று.

அவள் அம்மாவை விட,  அப்பாதான் அவள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கை தான் அவர்களை சென்னை வரைக்கும் அனுப்பி வைத்தது. மேற்படிப்பு படிக்க வைத்தது. வேலைக்கு போக வைத்தது. சுய காலில் நிற்க வைத்தது. ஆனால் அந்தக்கால் இப்படி கல்யாணம் கட்டிக்கொண்டு தனித்து ஓடும் என்று அவர் நினைக்கவில்லை. அவள் அம்மாவும் நினைக்கவில்லை.

அம்மா அழுது கொண்டிருந்தாள். “பொம்பளைப் பொண்ணை

படிக்க வச்சது போதும் கல்யாணம் பண்ணித் தொலைக்கலாம்னு தலையால் அடிச்சு சொன்னேன் கேட்டீங்களா? இப்போ என்னாச்சு? மானம் போச்சு மரியாதை போச்சு. ஊரில் தலை காட்ட முடியுமா? சொந்தக்காரங்க கேட்டால் என்ன சொல்றது!’’ வந்ததில் இருந்து இதே பாட்டைத்தான் அவள் பாடிக் கொண்டிருந்தாள். மூக்கை முந்தானையில் சிந்தினாள். ‘‘ஊமை ஊரை கெடுக்கும்னு சொல்வாங்க. அமுக்கி மாதிரி இருந்துக்கிட்டு இப்படி பண்ணிட்டு போயிட்டாளே! அவளுக்கு அடுத்து இன்னொருத்தி இருக்கிறாளே, அவளை வந்து எவன் பொண்ணு கேட்டபான்?’’ அவள் அதே பழைய அம்மாவாக அழுதுக் கொண்டிருந்தாள்.

கதிரேசனும் இடிந்து போய் தான் உட்கார்ந்து இருந்தார்.

‘‘பெண்கள் சுயகாலில் நிற்க படிப்பு வேணும், வேலை வேணும் என்று தானே அனுப்பினேன்-இப்படி முகத்தில் கரியைபூசி விட்டு ஓடிப்போவாள் என்று நான் நினைத்தேனா? ’’

அவமானம்,  துக்கம், துரோகம் ஏமாற்றம் எல்லாவற்றையும் உழன்று தவிக்கும் முகமாய் உட்கார்ந்து இருந்தார் அவர்.

நிவேதிதாவிற்கு தான் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அக்காவா இப்படி செய்தாள்? அதுவும் லெட்டர் எழுதி வைத்துவிட்டு,  ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கொண்டாள்? அவளால் நம்பவே முடியவில்லை. பொய்யாக இருக்கக் கூடாதா என்று நினைத்தாள். ஆனால் வாட்சப்பில் வந்திருக்கும் அவளது புகைப்படங்கள் பொய்யில்லை உண்மை என்பதை உறுதிப்படுத்தின.

ஏற்கனவே எப்போதோ இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் மனோஜுடன் திருமணம் செய்திருக்கிறாள். போட்டோவும் எடுத்திருக்கிறாள். அதை முறைப்படி பதிவும் செய்திருக்கிறாள். ஆனால் வீட்டை விட்டுப் போனப் பிறகு, அந்தப் புகைப்படத்தை இன்று மாலை தான் வாட்சப்பில் அனுப்பி இருக்கிறாள்.

கடிதத்தில், தான் எங்கிருந்தாலும் நல்லபடியாக இருப்பேன் என்று கூறியிருக்கிறாள்.

அப்பா அம்மாவிடம் மன்னிப்பு கோரி இருந்தாள். நீங்கள் என் முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்பதாலேயே இந்த முடிவு எடுத்ததாகக் கூறியிருந்தாள். பெரியம்மா பெண்ணுக்கு அப்பா கொடுத்த நீதியின் காரணமாகவே இந்த முடிவை எடுத்தாக குறிப்பிட்டிருந்தாள்.

வீட்டில் அவள் நினைவாக ஒருபொருள், துணி விடாமல் சுருட்டி எடுத்துச் சென்றிருந்தாள்.

மாப்பிள்ளை தன்னுடைய அலுவலக மேனேஜர் மனோஜ் என்றும் குறிப்பிட்டிருந்தாள்.

பெற்றோர்கள் எப்போதும் பிள்ளைகளுக்கு நல்லதை தான் யோசிக்கிறார்கள். ஆனால் அந்தப்பிள்ளைகளுக்குத் தான் அது பிடிக்காமல் போய் விடுகிறது. தங்களுடைய விருப்பம் மட்டுமே முக்கியம் என்று பிள்ளைகள் நினைக்கிறார்கள். இல்லை எங்கள் கெளரவம் முக்கியம் என்று பெற்றோர் நினைக்கிறார்கள். இப்படி இரண்டு தலைமுறைகளுக்கு இடையே நிகழும் புரிதல் இன்மை தான் இப்படியான திருமணங்கள் நடக்க,  காரணமாக இருக்கின்றன என்பதை நிவேதிதா உணர்ந்து இருந்தாள்.

வீணான கெளரவத்தைப் பிடித்துக் கொண்டு என்ன செய்யப்போகிறோம் நாம்? கெளரவம் கடைசி வரைக்கும் கூட வரப் போவதில்லை. ஒரு நோய் வந்தால் போய் விடக்கூடிய உடம்பு இது. ஒருவிபத்து நடந்தால் சட்டென்று எல்லாம் தலைக்கீழாக மாறி விடக்கூடிய வாழ்க்கை இது. பிறகு எதற்கு கெளரவம்,  அது இது என்று பெற்றோர் கொடி பிடிக்கிறார்கள்? புரியவில்லை அவளுக்கு.

பிள்ளைகளுக்கு காதல் பெரிது என்றால் அதை தன் பெற்றோருக்கு புரிய வைக்கும் தைரியம் வேண்டும், மனபக்குவம் வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே காதலிக்க வேண்டும். இப்படி பெற்றோர் மடியில் நெருப்பள்ளி கொள்ளி விட்டு ஓடிப் போகக் கூடாது.

அக்கா ஒரு தைரியமில்லாத கோழை. சுயநலவாதி. அதனால் வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டாள். பெற்றவர்கள் எக்கேடு கெட்டால் என்ன? அழுது புலம்பினால் என்ன என்று ஓடிவிட்டாள். ஆனால் நான் அப்படி ஒரு நாளும் செய்ய மாட்டேன். எதுவாக இருந்தாலும் அப்பா அம்மாவிடம் சொல்லும் மனதைரியம் எனக்கு இருக்கிறது. அவர்களுக்கு முடிந்த மட்டும் புரிய வைப்பேன். முடியாத பட்சத்தில் அவர்கள் புரிந்து கொள்ளும் வரை காத்திருப்பேன்… நிவேதிதா இப்படி எண்ணிக் கொண்டிருக்கையில் அவள் அப்பாவின் சிந்தனையோ வேறுவிதமாக இருந்தது.

‘‘பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் நான் வேறு ஒருமனநிலையில் இருந்தேன். வேறு ஒரு மனிதனாக இருந்தேன். மாற்றம் என்பது ஒரே நாளில் வரக்கூடியது அல்ல. அது படிப்படியாய் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக் கொண்டேயிருக்கிறது. மனமும் நடப்பதை பக்குவமாய் ஏற்றுக்கொள்ளத் தயாராகி விடுகிறது.  ரேவதிக்கு திருமணம் நடந்த காலக்கட்டம் வேறு. அப்போதைய சூழல் என்னை அப்படி பேச வைத்தது. ஆனால் இப்போது காலம் வேறு மாதிரியாக இருக்கிறது. அது அடுத்தடுத்தக் கட்டதுக்கு வேகமாய் நகர்ந்து கொண்டே இருக்கிறது.

அப்போதும் கூட பிடிவாதமாக எனக்கு அவன் தான் வேண்டும், நான் அவனைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று உறுதியாக அவள் என்னிடம் சொல்லி இருந்தால், நான் என்ன செய்திருக்க முடியும்? அவனையே கல்யாணம் பண்ணி வைத்திருப்பேன். ஆனால் அவள் அப்படி பிடிவாதம் பிடிக்காமல் ரகசிய கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்து நின்றாள். அந்த கோபம் தான் எனக்கு. மற்றபடி அவள் மீது எனக்கென்ன கோபம்?

அதே தவறை இப்போது கயல்விழி இன்று செய்திருக்கிறாள்.  அதே பழைய அப்பாவாக என்னை நினைத்திருக்கிறாள். காதலிக்கத் தெரிந்தவர்களுக்கு தைரியம் இருக்க வேண்டும். தன் பெற்றோரிடம் வந்து சொல்லும் தைரியம் இருக்க வேண்டும். அந்த தைரியம் இல்லாத கோழை தான் கயல்விழி…’’ அப்பா பேச பேச அதிர்ந்து போய் கேட்டுக் கொண்டிருந்தாள் நிவேதிதா.

‘‘ படிக்கவும்,  வேலைக்குப் போகவும் என்னிடம் ஆலோசனைக் கேட்டவள், திருமணம் என்று வரும் போது மட்டும் என்னை எப்படி ஒதுக்கி வைத்தாள்?

அப்பா நான் இன்னாரை காதலிக்கிறேன்,  எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று சொல்லியிருக்கலாம் . அட்லீஸ்ட் உன்னிடமாவது சொல்லி இருக்கலாம். உன்கிட்ட சொல்ல தயக்கம் இருந்திருந்தால், அவள் அம்மாவிடம் போனிலாவது சொல்லி இருக்கலாம்.  இப்படி எதுவுமே சொல்லாமல் எதற்கு இப்படி ஒரு காரியத்தை செய்தாள்?  பதினைந்து வருடங்களுக்கு முந்தைய என்னுடைய பிம்பமா? செயலா?’’ அவர் தன்னைத்தானே நொந்து கொண்டு உட்கார்ந்து இருந்தார்.

கொஞ்சநேரம் கழித்து என்ன நினைத்தாரோ, ‘‘உங்க அக்காவுக்கு போன் போடும்மா’’ என்றார்.

நிவேதிதா சந்தேகமாய் அப்பாவைப் பார்த்தாள்.

‘‘உன்னைதாம்மா. கயல்விழிக்கு போன் போடு. அவள் கூட கொஞ்சம் பேசணும்’’.

அவள் தயங்கிய படியே அம்மாவைப் பார்க்க,

‘‘சொன்னதை செய்யேன்டி. ஏன் என்னைப் பார்க்கிறே?’’ அவள், இவள் மீது எரிந்து விழுந்தாள்.

நிவேதிதா கயல்விழிக்கு போன் போட,  அது நீண்ட நேரம் ஒலித்து அடங்கியது.

‘‘எதுக்குப்பா இப்போ போன்? நான் தெரிஞ்சுக்கலாமா?’’ நிவேதிதா அப்பாவை பயத்துடன் பார்த்தாள்.

‘‘எல்லாம் காரணத்தோடு தாம்மா. நான் பெத்தப் பொண்ணு. அவளை எக்கேடோ கெட்டுப் போன்னு விட முடியுமா? எவன் கூடவோ போகட்டும்னு சும்மா இருக்க முடியுமா??   கூப்புடு அவளை, ஊர் அறிய உலகறிய கல்யாணத்தைப் பண்ணி தொலைக்கிறேன்….’’

அப்பா சொல்ல, பிறகு நடந்ததெல்லாம் நிவேதிதாவுக்கு உலக அதியசமாகவே பட்டது.

-(சாரல் அடிக்கும்)

முந்தையபகுதி – 12 | அடுத்தபகுதி – 14

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...