நீ என் மழைக்காலம் – 12 | இ.எஸ்.லலிதாமதி

 நீ என் மழைக்காலம் – 12 | இ.எஸ்.லலிதாமதி

அத்தியாயம் – 12

ண்டியில் வரும் போது சடசட வென்று நீர் தெளிப்பது போல், மழை வந்தது. வெயில் காய்ந்து கொண்டே மழை பெய்வது அதிசயமாக இருந்தது. சின்ன வயதில்,  ஊரில்,  இது போல் வெயிலும் மழையும் சேர்ந்து வரும் போது,

‘வெயில் அடிக்குது

மழையும் பெய்யுது

வெள்ளக்குள்ள நரிக்கு கல்யாணம்’

ன்று பாட்டி பாட்டு பாடுவாள். அந்தக் குள்ளநரி எங்கு இருக்கும்? மலையில் இருக்குமா? அல்லது அருகில் இருக்கும் கரும்புத் தோட்டத்தில் ஒளிந்திருக்குமா? என்றெல்லாம் அப்போது அவள் நினைததுப் பார்த்தது உண்டு.   இப்படி வெயில் காய்ந்து கொண்டே மழை பெய்வது வெப்ப சலனம் அல்லது அறிவியல் காரணங்களில் ஒன்று என்று இப்போது தெரிகிறது.  ஆனால் அப்போது அது தெரியாது . தெரியாத காரணத்தால் அதை கேட்கவும், ரசிக்கவும் முடிந்தது. சில விஷயங்களை ஏன் எதற்கு என்று காரணங்களை கண்டுபிடிப்பதை விட்டு,  அதன் போக்கில் ரசிக்கும் போது வாழ்க்கை இனிமையாக இருப்பதாகவே தோன்றுகிறது.

அவள் கல்லூரிக்கு நுழைந்த போது, மஞ்சள் வெயிலுடன் கூடிய அந்த மழை நின்று போய் இருந்தது. நேராக தன்னுடைய ‘கைடு’ செல்வகணபதி இருக்கும் அறைக்குள் நுழைந்தாள். அவர் பொறுமையாக பார்த்து விட்டு, உரிய திருத்தங்கள் சொன்னார். அவர் கூறியவற்றை குறித்துக் கொண்டவள், வெளியில் வந்தாள். ‘எழுதிய கட்டுரைகளை கணினியில் தட்டச்சு செய்ய வேண்டும். அதை புத்தக வடிவில் பைண்ட் செய்து மொத்தம் நான்கு பிரதிகள் எடுக்கவேண்டும்.  பேராசிரியருக்கு ஒன்று. பல்கலைக்கழகத்துக்கு ஒன்று, கல்லூரிக்குஒன்று, ஆய்வு செய்பவருக்கு ஒன்று.  தேவையெனில் ஒன்று அதிகமாக போட்டுக் கொள்வது நல்லது’ என்று அவர் கூறவும், தலையாட்டிவிட்டு வெளியில் வந்தாள்.

புன்னை மரத்தடிக்கு வந்து நின்றாள். புன்னை பூக்கும் பருவம் போய் காய் பரும் வந்திருந்தது. காய்கள் ஒவ்வொன்றும் இலைகளின் ஊடே பச்சயத்துடன் ஆடிக் கொண்டிருந்தன. காய்ந்த புன்னைக்காய்களில் துளையிட்டு குழந்தைகளுக்கு இடுப்பில் அரைஞாண் கயிற்றில் கட்டி விட்டதை பார்த்திருக்கிறாள். காத்து கறுப்பு அண்டாமல் இருக்க கட்டியதாகவும் , இருமல் வராமல் இருக்க கட்டிவிட்டதாகவும் இருவேறு காரணங்கள் சொல்லப்பட்டன.

ந்த கல்லூரியில் சேர்ந்த நாள் முதல்,  தன்வாழ்க்கையில் மாற்ற முடியாத மரமாக இருக்கும் என்று அவள் நினைத்துக்கூட பார்த்ததில்லை.

கல்லூரியில் சேர்ந்து ஆறேழு மாதங்கள் ஓடிவிட்டன.  நாட்கள் கடந்ததே தெரியவில்லை. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தக்கல்லூரி வாழ்க்கை முடிந்து விடும். பிறகு விரும்பினால் மேற்கொண்டு பி.எச்டி. படிக்கலாம். இல்லாவிட்டால் கார்த்தியை கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழ்க்கையை ரசிக்கலாம்…

இருவருக்கும் சேர்ந்து மாதம் எழுபது ஆயிரத்துக்கு மேல் வரும். அதுபோதும் வாழ்க்கை இனிமையாக கழிய. போதாததற்கு இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் இருவருக்குமே சம்பளம் கூடிவிடும். அதனால் பொருளாதாரப் பிரச்சனை என்பது இருக்காது.

திருமணத்தில் தான் பிரச்சனையே எழக்கூடும்.

அதற்கு முன்பாக அக்காவிற்கு திருமணம் ஆக வேண்டும். அதன் பிறகு வீட்டில் காதலை சொல்ல வேண்டும்…

அவள் எதிர்கால யோசனையில் ஆழ்ந்திருக்க,  கார்த்தி வந்து நின்றான்.

‘‘என்ன சொன்னார் பேராசிரியர்?  கட்டுரைகள் ஒ.கே. வா? சரிபார்த்து கொடுத்துட்டாரா?’’என்றான்.

‘‘ஒண்ணு, ரெண்டு திருத்தம் சொன்னார்….’’என்றவள்,

‘‘உன்னோடது முடிஞ்சுதா கார்த்தி’’ என்றாள்.

‘‘கிட்டத்தட்ட’’ என்றவனின் கண்கள் ,  திடீர் என்று பேசாமல் நின்றன. பதற்றமடைந்தன. அவன் முகபாவனைகள் மாறின.

‘ஏன் இப்படி மாறுகிறான்’ என்று நினைத்தவள், அவன் பார்வை செல்லும் திசையில் திரும்பிப் பார்த்தாள்.

அந்த நிர்மலா காரில் இருந்து இறங்கி, இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

‘இவதொல்லை இன்னும் கொஞ்ச நாளில் முடிந்து விடும் …அப்புறம் யாரை தொந்தரவு பண்ணுவாள்…’

அவன் மனதுக்குள் எண்ணிபடி நின்றான்.

அருகில் வந்தவள், ‘‘கார்த்தி உங்கிட்ட கொஞ்சம் பேசணும்’’ என்றாள்.

‘‘என்ன இங்கியே சொல்லுங்க’’ என்றான் .

‘‘இல்ல தனியா பேசணும்…’’ அவள் நிவேதிதாவை முறைத்தாள். அந்த முறைப்பில் அலட்சியம் தெரிந்தது.  இவள் ஒரு ஆளா என்பதுபோல் இருந்தது அந்தப்பார்வை.

‘‘இல்ல கார்த்தி,  நான் உன்கிட்ட மட்டும் தனியா பேசணும். பக்கத்தில் யாரும் இருப்பதை விரும்பவில்லை… கொஞ்சம் அந்த கார் வரைக்கும் வா…’’ அவள் வற்புறுத்தி கூப்பிட்டாள்.

‘எதுக்கு கூப்பிடுகிறாள்? அப்படி தனிமையில் என்ன சொல்ல வருகிறாள்? எதுவாக இருந்தாலும் டாமல் டுமில் என்று போட்டு உடைக்கும் ரகமாயிற்றே இவள்?  இப்போது எதற்கு பம்முகிறாள்?’ யோசித்தபடியே நின்றாள் நிவேதிதா.  கார்த்தி அவளுடன் சென்றான்.

‘எதற்கு கூப்பிடுகிறாள் என்று போய் பார்ப்போமே…’ என்ற நினைப்பில் கார்த்தி அவளுடன் சென்றான்.  அவளின்காதல்அவனுக்குபிடிக்கவில்லைதான். அவளின் அணுமுறை சரியில்லை தான். ஆனால் ஒருமனிதாபிமான அடிப்படையில், அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை கேட்பதற்காக சென்றான்.

கார் அருகே அவன் சென்றதும், ‘‘இன்னிக்கு என்னோட பர்த்டே கார்த்தி. எங்கவீட்டில் பங்கஷன் வச்சிருக்கிறோம். அதுக்கு நீ கட்டாயம் வரணும். வா…. வண்டியில் ஏறு…’’ என்றாள்.

‘‘ இல்ல…  நான் வரலை…’’ என்றான் கார்த்தி.

‘‘ இல்ல கார்த்தி நீ கண்டிப்பாக வந்துதான் தீரணும். நீ வருவதாய் எங்க வீட்டில் நான் சொல்லிட்டு வந்திருக்கிறேன்.’’

‘‘நான் எப்போ உங்க கூடவரேன்னு சொன்னேன்?’’ அவன் எரிச்சலானான். ‘இடத்தைக் கொடுத்தால் மடத்தை பிடிப்பாள் போலிருக்கிறதே’ என்று நினைத்தான்.

‘ நீ எப்பவும் சொல்லமாட்டேன்னு தெரியும்.  அதனால் தான் நான் சொல்றேன் .வண்டியில் ஏறு…’’ அவள் கார் கதவை திறந்து வலுகட்டாயமாக கார்த்தியை இழுக்கவும்,  நிவேதிதா பதற்றமானாள்.

என்ன செய்கிறாள் அவள்? எதற்கு கார்த்தியை வற்புறுத்தி வண்டியில் ஏற்றுகிறாள்?  என்று நினைத்தவள், கார் அருகே ஓடினாள்.

கார்த்தி கையைப்பிடித்து வெளியில் இழுத்தாள்.

நிர்மலா உள்ளே இழுக்க, நிவேதிதா வெளியே இழுக்க திமிரினான் கார்த்தி.

‘யாராவது ஓடி வாங்களேன்….’’ நிவேதிதா சத்தம் போடவும்,

கூட்டம் கூடி விட்டது. கூட்டத்தைப் பார்த்து, கார்த்தியின் பிடியை விட்டாள் நிர்மலா.

‘‘இவள் கார்த்தியை கடத்தப் பார்க்கிறாள்…’’ என்றாள் நிவேதிதா பதற்றத்துடன்.

‘‘என்னடா மச்சான்? என்ன நடக்குது இங்கே?’’ கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே வந்தான் அவனுடைய நண்பன் பிரபா.

‘‘தெரியலடா.  அவளின் செய்கையைப் பார்த்தால், ஏதோ பிளான் பண்ணி இருப்பாள் போல் தெரிகிறது.  என்னை வலுகட்டாயமாக காரில் ஏற்றப் பார்த்தாள்.  கையைப்பிடித்து இழுத்தாள்… ’’

‘‘என்ன நிர்மலா? என்ன இது?’’ என்றான் பிரபா இருவருக்கும் பொதுவாய். அவனும் அவர்களுடைய வகுப்பில் படிப்பவன்.

‘‘ பர்த்டே பங்கஷன் என்று சொன்னதுக்கே இவன் வரலேன்னு சொல்லிட்டான். கல்யாணம் பண்ணிக்கலாம் வான்னு சொன்னா வந்துடுவானா…? அதான் …!’’ அவள் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சொன்னாள்.

‘‘எங்க அப்ப அம்மாகிட்ட இவனை லவ் பண்ற விஷயத்தை சொன்னேன். அவங்க தான் அவனை வீட்டுக்கு கூட்டிட்டுவா. ரெஷிஸ்டர் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னாங்க. இவன் கூப்பிட்டால் வரலை….’’

அவள் கூலாக சொல்ல, விக்கித்து நின்றாள் நிவேதிதா. கார்த்தியும் அதிர்ந்து போயிருந்தான்.

எப்படி சினிமாவில் வரும் வில்லி போல் பேசுகிறாள்? நிஜத்தில் ஒரு பெண் இப்படி எல்லாம் கூட பேசுவாளா? நடந்து கொள்வாளா?

அப்படி எது அவளை பேச வைக்கிறது? இவன் மீதுள்ள காதலா? காதல் எப்படிவன் முறையில் இறங்க வைக்கும்?  நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தானே காதலாக இருக்க முடியும்? இவளின் காதல் எந்த வகையில் சேர்த்தி? வன்முறையில் திருமணம் செய்வது எத்தனை நாளைக்கு நிற்கும்? அப்படி திருமணம் செய்தால் அது நிலைக்குமா என்று ஏன் அவள் யோசிக்கவில்லை?

அவள் பேரதிர்ச்சியுடன் நின்றிருந்தாள்.

தான் நினைத்தது நடக்கவில்லை, ஈடேறவில்லை என்று தெரிந்ததும், நிர்மலா காரை விருட்டென்று கிளப்பிக் கொண்டு போய்விட்டாள்.

நிவேதிதாவிற்கு தான் அந்த அதிர்வில் இருந்து மீள நீண்ட நேரம் ஆனது.  கொஞ்ச நேரத்திற்குள் எவ்வளவு பெரிய கலவரத்தை உண்டு பண்ணிவிட்டாள் அவள்.

ஒருவேளை நான் இல்லாமல், கார்த்தி மட்டும் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

கார்த்தியை கூட்டிப்போய் கட்டாய திருமணம் செய்து இருப்பாளோ?

அப்படி செய்திருந்தால் கார்த்தி எனக்கு இல்லாமலே போயிருப்பானா? அவளுக்கு நினைக்கவே உடல் நடுங்கியது.

அவள் அருகே நின்ற கார்த்தியை பார்த்தாள்.

அவனுக்கும் கலவரமாய் தான் இருந்தது என்றாலும் இவளுக்கு ஆறுதலாய் புன்னகைத்தான். நிவேதிதா அவனை நெருங்கி அவன் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

‘‘நீ எனக்கு மட்டுமே சொந்தம் கார்த்தி’’ என்றாள்.

ஒருபொருள் தன்னிடம் இருக்கும் வரை அதன் மதிப்பு தெரியாது. அதே பொருளை மற்றவர்கள் விரும்பும் போதுதான் அதன் உண்மையான மதிப்பு அருகில் உள்ளவர்களுக்கு தெரியவரும், அல்லது புரியவரும். நிவேதிதாவிற்கு கார்த்தியின் மதிப்பு தெரியும் என்றாலும், நிர்மலாவின் நடவடிக்கைக்குப் பிறகு அவன் மீதான அன்பு கூடியது. அவனை இறுக்கிப்பிடித்துக் கொள்ள வேண்டும். அவனை யாரும் கொள்ளை அடித்து போகவிடக்கூடாது என்று தோன்றியது.

மறுபடியும் அவள் என்னென் அவதாரம் எடுக்கப்போகிறாளோ என்று நினைத்து கொஞ்சம் பயமாகக்கூட இருந்தது.

அதே நினைப்புடன் வீட்டிற்குச் சென்ற நிவேதிதாவிற்கு வீட்டில் இதைவிடவும் பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

-(சாரல் அடிக்கும்)

முந்தையபகுதி – 11 | அடுத்தபகுதி – 13

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...