நீ என் மழைக்காலம் – 11 | இ.எஸ்.லலிதாமதி

 நீ என் மழைக்காலம் – 11 | இ.எஸ்.லலிதாமதி

அத்தியாயம் – 11

டலை ஒட்டி வானவில் வண்ணக்குடைப் பிடித்திருந்தது. தூரத்தில் எங்கேயோ மழை பெய்ய வேண்டும். கடற் காற்றுடன் மழைக் காற்றும் வீச, அந்த மதியப்பொழுதும் மாலை நேரம் போல் ரம்மியமாக இருந்தது.

வண்டியை விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள கடற்கரை சாலையில், ஓர் ஓராமாக நிறுத்திவிட்டு, கார்த்தியுடன், மணல் வெளியில் கால்கள் பதிய நடந்தாள். காற்றில் பறந்த துப்பட்டாவை இழுத்துப்பிடித்தாள்.

கார்த்திக் உடன் வந்தாலும்,  அவள் மனக் கண்ணில், இலக்கியத்தில் படித்த பண்டைய கடற்கரை காட்சி திரையாக ஓடியது.

அப்போதெல்லாம் கடற்கரையில் பூங்காக்கள் இருந்திருக்கின்றன. நறுமணம் கமழும் அந்தப் பூங்காக்களில் ஞாழல் போன்ற நறுமணப் பூக்கள் பூத்துக்குலுங்கி மீன் நாற்றத்தைப் போக்கி இருக்கின்றன. புன்னை மரங்கள் நிழல் பரப்பி நின்றிருந்திருக்கின்றன.

இப்போது அதுமாதிரி பூக்களும் இல்லை. மரங்களும் இல்லை. சாலையோரத்தில் மட்டும் ஆங்காங்கே புன்னை மரங்களை பார்க்க முடிகிறது.

‘‘என்ன ஏதும் பேசாமல் வரே?’’ என்றான் கார்த்தி. அவன் முகத்தில், மனதுக்குப் பிடித்தமான பெண்ணுடன் சேர்ந்து நடப்பதன் பிரதிபலிப்பு தெரிந்தது. மகிழ்வு கூடியிருந்தது.

‘வங்காள விரிகுடாக்கு பழைய பெயர் என்னன்னு தெரியுமா கார்த்தி …’’என்றாள்.

‘குணகடல்…’’ என்றான்.

‘ஐ…! உனக்கு நல்ல ஞாபகசக்தி கார்த்தி… நான் இவ்ளோ நேரம் யோசிச்சு யோசிச்சு மண்டை குழம்பிடிச்சு’’ என்று அவனை மெச்சினாள்.

‘‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. எல்லாரும் எல்லா தகவலையும் எப்பவும் ஞாபகம் வச்சுக்கிட்டு திரிய முடியாது. அப்படி இருந்தால் ஒண்ணு மண்டை வெடிக்கும்.  இல்லாட்டி பைத்தியம் பிடிக்கும்…’’ அவன் சிரிக்க,

அவன் சொல்வதும் சரிதான் என்று பட்டது அவளுக்கு.

”உனக்கு ஒரு செல்ல பேர் வச்சிருக்கேன் நிவேதி”

”என்ன பேர்”  என்றாள் அவள் ஆர்வமாய்.

”முட்ட கண்ணி”

”அடபாவி,  என் கண்ணு அவ்ளோ பெருசாவா இருக்கு ?”

”இல்ல, அழகா இருக்குடி ” என்றவன் உண்மையிலேயே உன் கண்கள் வசீகரமானது நிவேதிதா. என்னை கேட்டால் உனக்கு மலர்விழி என்ற பெயர் தான் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்னு சொல்வேன்’’ என்றான்.

”பேர் எதுவா இருந்தால் என்ன கார்த்தி. குணம் தான் முக்கியம் இல்லையா? வெறும் பேர் மட்டுமே ஒருவருக்கு பெயரைக் கொடுத்து விடாது. அவங்களுடைய கல்வி,  குணம், ஒழுக்கம் இப்படி பலதும் சேர்ந்து தான் பெயரைத்தரும்…”

அவள் சொல்வதும் சரிதான் என்றுபட்டது அவனுக்கு.

‘அறிவழகன் என்ற பெயரை வைத்துள்ளவர்கள் எல்லாம் படிக்காமல் இருந்தால் எப்படி அந்தப்பெயருக்கு பொருத்தமாக இருக்க முடியும்? கறுப்பாக உள்ளவர்களுக்கு வெண்ணிலா என்று பெயர் வைப்பது போல் தான் பலபேருக்கு பெயர்கள் பொருத்தமற்றதாகவே இருக்கிறது…

நாகரிக மோகத்தில் சிலர் என்னென்னவோ பெயர் வைக்கிறார்கள். வாயில் நுழையாமலும் பொருள் புரியாமலும். நல்லவேளை அப்பா எனக்கு கார்த்தின்னு அழகான பெயர் வைத்திருக்கிறார்… ’அவன் தன்னையே எண்ணி மெச்சிய சமயங்கள் பல உண்டு.

”கார்த்தி” அவள் தான் அவனது சிந்தனை ஓட்டத்தை கலைத்து கூட்டிவந்தாள்.

”..ம்சொல்லு”  என்றான்.

”நம்ம காதல் சக்ஸஸ் ஆகுமா கார்த்தி ?  உன் வீட்டில் பிரச்சனை இல்லை. அப்பா அம்மா ஓ.கே சொல்லிட்டாங்கன்னு சொன்ன. ஆனால் என்வீடு தான் பயமுறுத்துகிறது. நம்ம கல்யாணம் நடக்குமா நடக்காதா என்ற கேள்வி வந்து குழப்புகிறது…  கவலைப்பட வைக்கிறது…” அவள் எதிர்காலத்தைப் பற்றிய கவலையில் மூழ்க,  அவன் அவள் கரத்தைப் பற்றி உள்ளங்கையில் வைத்துக்கொண்டான்.

”உன் காதல் மீது உனக்கு நம்பிக்கை இருக்கிறதா ? இல்லையா?” என்றான்

”இருக்கிறது”

”என் மீது உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?

”இருக்கிறது ”

”இவன் நம்மை ஏமாத்திடுவான் பாதியிலேயே விட்டுட்டு போயிடுவான் என்ற சந்தேகம் வருகிறதா” அவள் கண்களை பார்த்தான்.

”இல்லை சத்தியமாக இல்லை”

”அப்புறம் எதுக்கு பயப்படறே ?  நம் கல்யாணம் நிச்சயம் நடக்கும்” அவன் நம்பிக்கை ஊட்டினான்.  அவனது வார்த்தைகள் அவளுக்கு ஆறுதலாய் இருந்தது.  மனம் குழம்பி தவிக்கையில்… ஆறுதலாய் பேசவும் துவண்டு சாய்கையில் தோளணைத்து ஆறுதல் கூறுவதிலும் தான் ஆயிரம் மடங்கு அன்பு அதிகரிக்கிறது.  நிவேதிதாவிற்கு கார்த்தி மீது இன்னும் காதல் கூடியது. இவன் தைரியமாக இருக்கிறான் தெளிவாக இருக்கிறான். ஏமாற்றுகாரனைக்கண்டு தான் பெண்கள் பயப்படவேண்டும். குழப்பவாதி ஆண்களின் நட்பில் தான் பெண்கள் குழம்பி தவிக்க வேண்டும். இவன் ஓடும் ஆற்றுநீர் போல் தெளிவாக இருக்கிறான். தேங்கி இருக்காமல் தன்னம்பிக்கை உடையவனாக இருக்கிறான். நான் தான் நம்பிக்கை அற்று அது இல்லாமல் குழம்பி இவனையும் குழப்பிக் கொண்டிருக்கிறேன்…

ஊரே எதிர்த்தால் என்ன இருவரும் தெளிவாக இருக்கையில் எப்படி தோற்கும் காதல்? தவிரவும் என் காதலுக்கு பெற்றோர் தான் எதிர்ப்பார்கள் என்று பயப்படுகிறேன். எப்போதோ வரக்கூடிய பிரச்சனைக்கு ஏன் இப்போதே பயப்படவேண்டும்….

பெரிய அலை ஓன்று வந்து கரையில் மோதி காற்றில் சிதறியது. சிதறிய நீர் துளி நிவேதிதா முகத்தில் பட்டுத் தெறித்தது. அவள் உள்ளம் குளிர்ந்து,

‘ஐ லவ் யூ கார்த்தி’  என்றாள்.

”நானும் ” அவன் அவளை தோளில் கைபோட்டு அணைத்துக் கொண்டான்.

திடீர் என்று ஞாபகம் வந்தவளாய்,   என்னுடைய சக்களத்தி எப்படி இருக்கா” என்றாள்.

”சக்களத்தியா?  யார் அது?”  அவன் புரியாமல் விழிக்க, ” அவள் தான் நிர்மலா”  என்று சிரித்தாள்.

”ஐயே அவகூடவா என்னை சேர்த்து வைக்கிறே? வேற யாராச்சும் நல்ல பொண்ணா பாரேன்…”  அவன் கண்ணடிக்கவும்,

அவள் ‘ஒரேகுத்து’  என்று அவள் பிடியில் இருந்து விலகி உட்கார்ந்தாள்.

”ஆனாலும் பொறாமையா இருக்கு கார்த்தி… மனசால் கூட உன்னை யாரும் விரும்புவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை… கோபம் கோபமாக வருது.  ”  அவள் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டாள்

”இதுக்கு எதுக்கு நீ கோப படறே? பார்க்கப் போனால் நீ சந்தோசம் தான் படனும். மத்த பொண்ணுங்க கூட விரும்புற அளவுக்கு நம்ம கார்த்தி அழகா இருக்கானேனு நீ நினைக்கணும். அதோடு மத்தவங்க எத்தனை பேருக்கு என்னைப்பிடிக்கிறது என்பது முக்கியமில்லை. எனக்கு யாரை பிடிக்கிறது என்பதைத்தானே நீ பார்க்கணும்….” அவன் அவள் முகவாயை தொட்டு நிமிர்த்தினான்

அவன் சொல்வதும் சரிதான் என்று தோன்றியது.

‘நிர்மலா இவனை துரத்தி துரத்தி காதலித்தாலும் கார்த்தி காதலிப்பது என்னைத்தானே?  அது ஏன் எனக்குப் புரியவில்லை? என்னதான் படித்திருந்தாலும் அறிவிருந்தாலும் புத்திசாலி என்றாலும் காதல் என்று வரும் போது இந்த பொஸசிவ்னெஸ் தானாக வந்து விடவே செய்கிறது என்று தோன்றியது  ..’

அவள் சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்தாள். யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு  , சட்டென்று அவன் கரம் பற்றி முத்தம் ஒன்றை கொடுக்க, அவன் சிலிர்த்தான். குறும்பாய் இன்னொரு கரத்தையும் நீட்டினான்.  அவள் ‘அடி’  என்று அவன் முதுகில் இரண்டு வைத்தாள்.

அவர்களின் குறும்பு விளையாட்டை மணலுள் இருந்து எட்டிப் பார்த்த குட்டி நண்டொன்று பார்த்து ரசித்தது. அலைகள் கைதட்டி ஆர்ப்பரித்தது.

-(சாரல் அடிக்கும்)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...