தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 15 | தனுஜா ஜெயராமன்

 தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 15 | தனுஜா ஜெயராமன்

ன்று ஏனோ காலையில் எழுந்திருக்கும்போதே உற்சாகமாக இருந்தது முகேஷிற்கு…வழக்கத்திற்கு மாறாக சுறுசுறுப்பாக இருந்தது உடலும் மனமும்.… பக்கத்தில் பார்த்தான். சுதாவை காணவில்லை.. அருகில் குழந்தை ஒருக்களித்து தூங்கி கொண்டிருந்தாள். அவளது கலைந்த தலைமுடியை ஆசையாக கோதி நெற்றியில் முத்தமிட்டான். அம்ரிதா ப்ரச்சனையெல்லாம் நல்லபடியாக முடித்தால் சுதாவையும், குழந்தையையும் அழைத்துக்கொண்டு ஒரு ட்ரிப் போய்வர வேண்டும் என்று தோன்றியது.

உற்காகமாக சீட்டியடித்தபடி பாத்ரூமுக்குள் நுழைந்து… பல்லை துலக்கினான்…

சத்தம் கேட்டு, “எழுந்தாச்சா!….என்ன ஐயா இன்னைக்கு அதிசயமா காலையிலேயே நல்ல மூடில் இருக்கீங்க”…என காபியை நீட்டினாள் சுதா.

“சுதா!.… ரொம்ப நாளாச்சி! அடுத்த மாசத்துல நாம ஏதாவது டிரிப் போயிட்டு வரலாமா?”

“அட! நானே சொல்லணும்னு தாங்க நினைச்சேன்.. நீங்களே சொல்லிட்டீங்க”…என குழந்தையாக குதுகலித்தாள்…

“நீங்களும் வேலை வேலைன்னு அலையறீங்களா? எனக்கும் பாப்பாக்கும் கூட ரொம்ப போரடிக்குது… நானே உங்களை கேட்கலாம்னு நினைச்சேன்… நீங்க வேற எப்பவும் டென்ஷனா அலையறீங்களா? அதனால கேட்கவே கொஞ்சம் யோசனையா இருந்தது”…என்றாள் வருத்தத்துடன்..

“ச்சே!.… அதெல்லாம் ஒண்ணுமில்லை… நான் புக் பண்றேன்… சொல்லு! எங்க போகலாம்?”

“எங்க வேணா போகலாம்ங்க!… நீங்களே டிசைட் பண்ணுங்க? உங்க கூட இருந்தாலே போதும் எனக்கும் பாப்பாக்கும். வேற என்னங்க கேக்கப்போறோம்” ..என்றவளை உற்று நோக்கியவன்… கலங்கிய கண்களுடன் அவள் அறியாதவாறு முகத்தை திருப்பிக்கொண்டான்.

எப்படி முழுவதுமாக சரணாகதி அடைய முடிகிறது இவளால்? கணவன் என்று வரும் போது எப்படி முழுவதுமாக நம்பிவிடுகிறார்கள் இந்த பெண்கள் என்று தோன்றியது. கூடவே அவள் நம்பிக்கைக்கு தான் தகுதியானவன் தானா என்ற கழிவிரக்கமும் தோன்றியது.

போனது போகட்டும்… கூடிய விரைவில் அம்ரிதா ப்ரச்சனை சுமுகமாக முடியட்டும். ஏனோ இது முடிந்துவிடும் என்ற நம்பிக்கை மனதினுள் பூதாகரமாக தோன்ற, இனியாவது சுதாவின் பெருந்தன்மைக்கும் நம்பிக்கைக்கும் முற்றிலும் தகுதியானவனாக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தபடியே குளிக்கப் போனான்…

ஷவரை திறந்து நிற்க, ‘தலைமீது கொட்டிய நீரோடு தன் கஷ்டங்களும் ஓடட்டும்’ என தன்னை மறந்து நெடுநேரம் அப்படியே நின்றான்.

தலையை துவட்டியபடி வெளியே வர சுதா “சாப்பிட வாங்க! …டிபன் ரெடி!..” என அழைத்தாள்..

“இதோ வரேன் சுதா!…” என மொபைலை எடுத்து சார்ஜரில் போட… ஹரிஷின் நான்கு மிஸ்ட் கால் கண்ணில் பட்டது.

ஹரிஷ் ஏன் காலையிலேயே இவ்ளோ போன் பண்ணியிருக்கான் என குழப்பமாக இருந்தது. தலையை துடைத்து உடை மாற்றிக்கொண்டு திரும்ப போன் செய்யலாம் என்று நினைத்தான்.

போனை எடுத்து டயல் செய்ய போக… “ஏங்க! .. மாமா உங்களுக்காக ரொம்ப சாப்பிடாம காத்துகிட்டிருக்கார்… சீக்கிரம் வாங்க”…என சுதா மறுபடியும் அழைக்க…

“இதோ வரேன் சுதா!… நீ போ” என போனை சார்ஜரில் போட்டு விட்டு.. டிஎன்ஏ ரிப்போர்ட் பத்தி ஏதாவது கேட்பான், அதுக்காக தான் போன் பண்ணியிருப்பான்… இல்லைன்னா அந்த ராட்சசி அம்ரிதாவை பற்றி ஏதாவது கேட்கவோ, சொல்லவோ போறான், ஆபிஸ் போகிற வழியில் அவன்கிட்ட பேசிக்கலாமே என்று தோன்றியது. ஏற்கெனவே அப்பாவுக்கும் சுதாவிற்கும் லேசான சந்தேகம் இருப்பதாகவே தோன்றியது. கூடவே இது தனது மனப்ரமையாகவும் இருக்கலாம் என்றும் அவனே தன்னை சமாதானபடுத்திக் கொள்ள முயன்றான்.

ரெடியாகி வெளியே வர.. “எவ்வளவு நேரம்டா கிளம்ப. சாப்பிட வாடா.”.. என்றார் அப்பா டிவியிலிருந்து கண்களை எடுக்காமல்… அப்பாவின் பொழுது போக்கு நாள் முழுவதும் நீயூஸ் சேனல்களை மாற்றி மாற்றி பார்ப்பதும்…அதன் பரபரப்பான சந்தை கடை விவாதங்களை பார்த்து பதட்டமடைவதும் தான். இப்போதும் ஏதோ ஒரு சேனல் தனது வழக்கமான மீயூசிக்குடன் ப்ரேக்கிங் நீயூஸை துப்பிக்கொண்டிருந்தது.

“இதோ வந்துட்டேன் ப்பா!…” என தட்டை எடுத்து வந்து அமர்ந்தான்.

“முகேஷ்..இட்லி சாப்பிடுறியா?…தோசை சுடவா?…” என அம்மா உள்ளேயிருந்து குரல் கொடுக்க…

“ம்..ம்…முறுகலா நெய் ஊத்தி தோசையே சுடும்மா”… என ஆசையாக கேட்ட மகனை பாசத்துடன் பார்த்தாள்…

“சரிப்பா!…” என தோசைக்கல்லை வைத்து தண்ணீரை தெளிக்க.. அப்போதே தோசை வாசம் பசியை கூட்டியது முகேஷிற்கு.

“முகேஷ்!.… போன தரம் நம்ம குலதெய்வ கோவிலுக்கு போகும்போது… ஐயர் ஏதோ பரிகாரம் பண்ணனும்னார்… நான் அப்புறம் பாத்துக்கலாம்னு சொன்னேன்… இப்போ அந்த பரிகார பூஜைகள் செய்திடலாம்னு தோணுது… நீ எப்ப ப்ரியா இருப்ப… தேதியை சொல்லு”….

“அதுக்கு இப்ப என்னப்பா அவசரம்”…

“என்னவோ தெரியலைப்பா! ஏதோ மனசுக்குள்ள ஒரு நெருடல்… நம்ம குடும்பத்துக்கு ஏதோ ஒரு வகையில ப்ரச்சனை வரும்னு தோணுதுப்பா” …என்றவரை பயமாய் பார்த்தான்… பகீரென்றது..

“நீ ஒண்ணும் பயந்துக்காத.. எனக்கோ அம்மாவுக்கு உடம்பு ஏதாவது சரியில்லாம கூட போகலாம்… வேற ஒண்ணுமில்லை”…

“சரிப்பா!… அதனாலென்ன… இப்ப இந்த ப்ராஜக்ட் முடியும் தருவாயில் இருக்குப்பா… அடுத்த மாசம் நிச்சயமாக குடும்பத்தோட போகலாம்ப்பா” …என்றான்.

அதற்குள் சுடசுட முறுகலான நெய் தோசையை எடுத்துக்கொண்டு சுதா வர… “சரி முகேஷ் நீ சாப்பிடு!… பிறகு நல்லநாளா பாத்து பண்ணிடலாம்” என அப்பா எழுந்து சென்று சோபாவில் அமர்ந்து மறுபடியும் நீயூஸை தொடர்ந்தார்…

கொதிக்க கொதிக்க வெங்காய சாம்பாரும் கெட்டி சட்னியும் போட்டி போட்டு காத்திருந்தது. எப்போதுமே அம்மா, சுதா என இருவரின் கைமணமும் ப்ரமாதமாக இருக்கும். இதையெல்லாம் ரசிக்க நேரமில்லாமல் கண்டதை போட்டு மனதை உழப்பியது நினைவுக்கு வந்து போனது…

சுதா தோசையை போட்டுக்கொண்டே இருக்க… முறுகலான தோசையை வெங்காய சாம்பாருடனும் தேங்காய் சட்னியுடன் தோய்த்து முழுங்கி கொண்டிருந்தான். நெய் தோசை தேவாம்ரிதமாய் தொண்டைக்குள் விழ வழக்கத்தை விட இரண்டு தோசை அதிகமாக உள்ளே சென்றது….

“அம்மா!.… கொஞ்சம் பில்டர் காபியும் குடேன்” …என்று கேட்ட மகனை ஆச்சரியமாக பார்த்தாள்.

நுரை ததும்ப ஆற்றி வைக்கப்பட்ட பில்டர் காபியின் மணம் நுரையீரல் வரை இழுத்தது. அந்த வாசனையை இழுத்து நுகர்ந்தவாறு ரசித்து குடித்தான்…

இப்போது சற்று ரிலாஸ்டாக உணர்ந்தவன்… தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தான். பக்கத்திலிருந்து …”என்னடா இன்னுமா கிளம்பலை” என்ற அப்பாவின் குரலுக்கு “இதோ கிளம்பணும்ப்பா” ….என ஷுவை எடுத்தான்.

“சுதா!..… அந்த சாக்ஸை கொண்டு வாயேன்” …என குரல் கொடுத்துவிட்டு ஷீவை உதறினான்.

“சென்னையில் பூட்டிய வீட்டில் மர்மமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்த பெண்”…என்ற ப்ரேக்கிங் நியூஸ் அலற சவுண்டை சற்று அதிகரித்து அப்பா ஆர்வமாக நிமிர்ந்து அமர… “சென்னை வளசரவாக்கததில் தனியாக குழந்தையுடன் வசித்த பெண் அடையாளம் தெரியாத நபரால் படுகொலை செய்யப்பட்டார்” …என அலறியபடியே பெண்ணின் புகைப்படத்தை காட்ட… சாக்ஸ் கொண்டு வந்த சுதா…”ஐய்யய்யோ அன்னைக்கு குழந்தைகளோட நம்ம வீட்டுக்கு வங்தாங்களே அவங்களை மாதிரியே இருக்கே” …..என அலற..

அப்பா திடுக்கிட்டு டிவியை உற்று பார்க்க… முகேஷிற்கு பயத்தில் நெஞ்சுபடபடக்க உடல் வியர்வையில் நனைந்தது. சற்று சுதாரித்துக்கொண்டு நீயூஸை கவனமாக பார்த்தான்… “என்னடா இப்படி?” …என அப்பாவும் கவலையாக கேட்டார்.

திடீரென ஞாபகத்துக்கு வந்தது… காலையிலேயே ஹரிஷ் வேறு நிறைய முறை போன் செய்தது.. “அடடா! இதற்கு தான் போன் பண்ணியிருப்பான்.. நாம தான் கவனிக்காம இருந்துட்டமோ” ..என பயத்தில் உடம்பு வெலவெலத்து போனது.

“பதறினால் காரியம் சிதறி விடும்.. எனவே நிதானமாக இருக்க வேண்டும்” என்று மனதுக்குள் சொல்லியபடி.… ஷீவை அவசரமாக போட்டுக்கொண்டு “அப்பா… நான் கிளம்புறேன்… ஆபிஸூக்கு மணியாச்சு” என ஓடாத குறையாக வெளியே வந்து காரை நகர்த்தினான்..

அப்பா டிவியில் கவனமாக இருக்க அம்மாவும், சுதாவும் “உச்” கொட்டியபடி பரிதாபப்பட்டது இங்கிருந்தே தெரிந்தது.

அவசரமாக காரை வெளியே எடுத்து வெளியேறி ஹரிஷிற்கு போன் செய்தான்..

“ஏண்டா! எவ்வளவு கால் பண்ணேன்… எடுக்க மாட்டியா”? என கத்தினான் ஹரிஷ்..

“சாரிடா..! தூங்கிட்டேன்”….

“நல்லா தூங்கின போ…நீயூஸை பாத்தியா?

“இப்ப தான் பாத்தேன்.. அதான் உடனே உனக்கு கால் பண்ணுறேன்”…

“இப்ப என்னடா பண்ணுறது? யார்ரா அவளை கொன்னிருப்பாங்க?”

“தெரியலையேடா, எனக்கு ரொம்ப பயம்மா இருக்குடா? “

“நீயேண்டா பயப்படுற? நீயா கொன்ன?”

“ச்சீ!… வாயை மூடுறா? நானே பயந்து போயிருக்கேன் நேரங்காலம் தெரியாம கலாய்ச்சிகிட்டு”…

“போலீஸ் விசாரணைன்னு போகுமேடா? படுத்துவாய்ங்களே!”

“அதான் எனக்கும் பயமா இருக்கு. வீட்ல சுதா, அப்பா எல்லோரும் ஏற்கனவே குழப்பமா இருக்கிறாங்க… இது வேற? என்னடா இது பிள்ளையார் பிடிக்க இப்படி கொரங்காய் மாறிகிட்டிருக்கே”..

“ஆமாடா!…இந்த மாதிரி ப்ரச்சனைல மாட்னாலே புலிவாலை பிடிச்சமாதிரி தான்… விடவும் முடியாது… பிடிச்சிட்டிருக்கவும் முடியாது”..

“நீ வேற ஏண்டா என்னை கலவரப்படுத்தற?”

“நீ பயப்படாத மச்சி!… நாம அசோக்கை வைச்சி இந்த ப்ரச்சனையை டீல் பண்ணிக்கலாம்”.

“அவரை தாண்டா நான்மலை போல நம்பி இருக்கேன்” ..என்றான் முகேஷ் கவலையுடன்..

“சரிடா!… அசோக்கிட்ட உடனே போன் பண்ணி வர்றதா சொல்லிடு. நீ நேராக அசோக் ஆபிஸிற்கு வந்துடு. நானும் வந்திடுறேன். அநேகமா அவருக்கும் விஷயம் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்”…

“ம்” …என்று யோசனையுடன் போனை வைத்தான்…

இதென்ன தலைவலி போய் திருகுவலி வந்த கதையாய்… என மனதிற்குள் பெரும்பாரம் சூழ்ந்தது. நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைக்கிறதே? ஜாண் ஏறினால் முழம் சறுக்குகிறதே என மனம் குழம்பி தவிக்க இந்த சிக்கலிலிருந்து வெளிவருவது எப்படி? என்ற விடை தெரியாத கேள்வியுடன் அசோக் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான் முகேஷ்.

–தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...