பயணங்கள் தொடர்வதில்லை | 19 | சாய்ரேணு
18. கைக்கொள்க
“Every star houses a secret,
A whispered wish from far below,
And all these hopes and dreams
Are what causes them to glow.
So when you are in darkness
And you gaze into the black,
Know that each point of light’s a promise,
That is staring boldly back.”
தன்யா சொன்ன அந்த ஆங்கிலக் கவிதையை எல்லோரும் உன்னிப்பாய்க் கேட்டார்கள். இப்போது தர்ஷினி பேச ஆரம்பித்தாள்.
“இருளில் தெரியும் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு ரகசியம். அந்த ரகசியத்தில் மறைக்கப்பட்ட நம்பிக்கைகள், கனவுகள், உண்மைகள் எல்லாம் உண்டு. இருளைத் தாண்டி ஒளியைப் பார்க்கிறவன் அறிவாளி. ஒளியைத் தாண்டி உண்மையை உணர்கிறவன் விவேகி.
“ஒரு டிடெக்டிவ்வின் வேலை இதுதான். அவன் இருளையும் ஒளியையும் தாண்டி உண்மையை உணரணும். வானின் நட்சத்திரங்களைக் கைக்கொள்கிற செயல் அது! முழுமையான இருள்னு எதுவும் கிடையாது. பாரதி சொல்லற மாதிரி ‘இருள் என்பது குறைந்த ஒளி.’
“இங்கே இருளில் நிகழ்ந்த ஒரு குற்றத்தைத்தான் நாங்க துப்புத் துலக்கறோம். ஆனால் இங்கும் மினுக் மினுக்னு நட்சத்திர ஒளிகள் தெரிஞ்சுது. அவை சொல்லும் உண்மைகளும் – கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் – புரிஞ்சுது.”
எல்லோரும் தர்ஷினியையே பார்த்தார்கள். அவள் மீண்டும் பேச ஆரம்பிப்பதற்குள் பரத்குமாரின் குழந்தை டைனிங் காரின் அமைதி பிடிக்காததுபோலப் பெரிதாக வீறிட்டு அழுதது. தர்ஷினி புன்னகைத்தவளாய் பரத்குமாரின் மனைவியை நோக்கி “குழந்தை டிஸ்டர்ப் ஆகுது போலிருக்கு. வேணும்னா நீங்க உங்க கேபின்ல இருக்கலாம்” என்றாள் பெங்காலி மொழியில்.
அந்தப் பெண் தயக்கமாய் எழுந்தாள். அவளோடு பரத்குமாரும் எழ முயன்றபோது “ப்ளீஸ், நீங்க இங்கேயே இருக்க முடியுமா? உங்க ரிலேட்டிவ்ஸும் அவங்க கூடப் போகட்டும். கேபினைக் கவனிச்சுக்கிட்டு ஒரு அட்டெண்டர் காரிடார்லயே இருக்கட்டும்” என்றாள் தர்ஷினி.
பரத்குமார் தன் மனைவியைப் பார்த்தான். அவள் தன் உறவினர்களிடம் வேகமான பெங்காலியில் பேசினாள். அந்தப் பெரியவர்கள் மூவரும் புரிந்துகொண்டவர்களாக அவளுடன் போய்விட்டார்கள். பரத்குமார் மறுபடி அமர்ந்தான்.
“இப்போ இங்கே மிஸ்டர் பரத்குமார் இருக்கணும்னு நான் சொன்னதுக்குக் காரணம் என்னன்னு நீங்க எல்லோரும் நினைக்கலாம். ஏன்னா இந்தக் கேஸில் அவர் ஒரு அவுட்ஸைடர் – வெளி மனிதர். இது முழுக்க முழுக்க சங்கர் அண்ட் ஸ்ரீனி அஸோஸியேட்ஸோடு சம்பந்தப்பட்டது போல் முதல் பார்வையில் தோன்றுகிறது. சொல்லப் போனால், இங்கே இருப்பவர்கள் எல்லோருமே சங்கரோடு சம்பந்தப்பட்டவர்கள் – ஒரே ஒருவரைத் தவிர. அவர் – ஸ்ரீஜா!
“இன்னும் பார்த்தால், இங்கே இருப்பவர்கள் எல்லோரும் உறவினர்கள்தாம் என்றாலும், இந்தக் குடும்பங்களுக்கு இடையில் பல வருடங்களாக எந்தச் சம்பந்தமும் இருக்கலைன்னு முதல் பார்வையில் தோணுது. அதுக்கு முன்னால் சந்திரசேகரும் தேவா சாரும் ஒரே கம்பெனியில் இருந்த காலத்தில் – உறவினர்களா இல்லை, நண்பர்களா – பழகியிருக்காங்க. அப்புறம் ரொம்பப் பழக்கம் இருந்த மாதிரித் தெரியலை. இது சரிதானா?”
சந்திரசேகரும் தேவாவும் தலையாட்டினார்கள். “இன் ஃபாக்ட், இந்த ரயில் பயணத்தில்தான், அதுவும் நேற்றுத்தான், எங்க நட்பு மறுபடி ஆரம்பிச்சது” என்றார் தேவா.
“நீங்க முந்தாநாள் இரவே சந்திச்சீங்க, ஆனால் உங்க நட்பைத் தொடரணும்னு நேற்றுத்தான் நினைச்சிருக்கீங்க…”
“வெல், அது நடுராத்திரி” லேசாகச் சிரித்தார் சந்திரசேகர்.
“அந்த நடுராத்திரியில் நீங்க சுப்பாமணியைத் தேடிப் போனதுக்கு என்ன காரணம் சார்?”
சந்திரசேகர் திடுக்கிட்டார். “சுப்பாமணி… என்னோட ஃப்ரெண்ட். அவரோட பேசிட்டிருக்கறதை நான் ரொம்ப விரும்புவேன்” என்றார்.
“இதுதான் இந்தக் கேஸோட க்ரக்ஸ் – அதாவது மையப் புள்ளி” என்றாள் தர்ஷினி. “இங்கிருக்கிற எல்லோருமே, பரத்குமாரையும் சேர்த்துச் சொல்றேன், உறவினர்கள், நண்பர்களா இருந்தாலும், வெகுநாளா உங்களுக்குள் எந்தச் சம்பந்தமும் கிடையாது. உங்களுக்குள் இருக்கும் ஒரே சம்பந்தம் – சுப்பாமணி! சுப்பாமணியின் மூலமா, சந்திரசேகரைப் பற்றித் தேவாவுக்குத் தெரிஞ்சிருக்கு. கிருஷ்ணகுமார் பற்றி காமுப் பாட்டிக்குத் தெரிஞ்சிருக்கு. ஸ்ரீஜா பற்றி சந்திரசேகருக்குத் தெரிஞ்சிருக்கு!”
எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். எல்லோர் முகத்திலும் சந்தேகமும் வெறுப்பும் பயமும் ஓடியது.
“சுப்பாமணி கொல்லப்பட்டிருக்கார். அவரைக் கொல்றதுக்கு இங்கே இருக்கிற எல்லோருக்கும் காரணம் இருக்கு.”
இப்போது எல்லோரும் திரும்பி தர்ஷினியைப் பார்த்தார்கள்.
“தன்யா சொன்ன மாதிரி, இது முகமூடிகள் கலைகின்ற நேரம். ரகசியம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நம்முடைய எண்ணத்தில்தான் சுப்பாமணி போன்ற ராக்ஷஸர்கள் வளர்கிறார்கள், அழிகிறார்கள். இங்கே இனிமேல் ரகசியங்கள் வேண்டாம்னு நினைக்கறேன்…”
“அதாவது… அப்படி ஏதாவது இருந்தால்!” என்றான் தர்மா. வலியால் சுளித்த அவன் முகத்தில் மெல்லிய புன்னகை ஓடியது.
தர்ஷினி அவனை ஒருவிநாடி பார்த்துவிட்டுப் பார்வையை எல்லோர் மேலும் திருப்பினாள். “மிகச்சரி – ரகசியங்கள் ஏதேனும் மிச்சமிருந்தால். மிஸ்டர் கிருஷ்ணகுமார், உங்களுக்குள் நிறைய ரகசியங்கள், உங்க மகள்களிடம்கூட நீங்க சொல்லாத ரகசியங்கள் இருந்தது…”
“ப்ளீஸ்” என்று அலறினார் கிருஷ்ணகுமார். “என் பொண்ணுங்களுக்கு…”
“எதுவும் தெரியக் கூடாதா? தெரியாமலா அவங்க நீங்க எங்களோடு பேசிட்டிருக்கும்போது இடைமறிச்சாங்க?” என்று கேட்டாள் தர்ஷினி.
அந்த அடியிலிருந்து கிருஷ்ணகுமார் மீள்வதற்குள் “தெரியாமலா அவங்கள்ள ஒருத்தர் சுப்பாமணியோட கேபினுக்கு வந்தாங்க? இன்னொருத்தர் தர்மாவைத் தாக்கினாங்க?” என்ற தன்யாவின் கேள்வியில் அவர் நிலைதடுமாறிப் போனார்.
“தர்மாவோட இன்ட்யூஷனில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு. தான் கேபினில் பார்த்தது ஒரு பெண்ணாக இருக்கலாம்ங்கறது அவனுடைய எண்ணம். அதை வெச்சுப் பார்த்தா, சில பெண்கள் இந்த லிஸ்டிலிருந்து விலகிடறாங்க. முக்கியமான தேவா சார் வீட்டுப் பெண்கள். தர்மா மேல் விழுந்த கத்திக் குத்து வலிமையானது. அந்த அளவு வலு, அங்கே இருக்கற பெண்களுக்கு இருக்கும்னு தோணலை. அவங்க அந்த வீட்டு ஆண்களால் அனுப்பப்பட மாட்டாங்க.
“ஸ்ரீஜாவா இருக்கலாம்னு நினைச்சோம், ஆனா நாங்க இங்கே வருவதற்குள் இங்கே பெரிய மீட்டிங் நடந்திருக்கும் போலிருக்கு. இங்கிருக்கும் யாருக்கும் தெரியாம ஸ்ரீஜாவும் வேறு ஒருத்தரும் கேபின் ஏரியாக்கு வருவது சாத்தியமில்லைன்னு நினைக்கறேன்…”
இப்போது ஒரு அட்டெண்டர் இடைமறித்தார். “மேடமும் இந்த ரெண்டுபேரும் இங்கே உட்கார்ந்து ரொம்ப நேரம் பேசிட்டிருந்தாங்க, சார். அவங்களில் யார் எழுந்து போயிருந்தாலும் எங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்” என்றார்.
“ஓகே” என்ற தன்யா தொடர்ந்தாள். “இது ஒரு பிஸினஸ் மீட்டிங். எங்க வேலையை எப்படி நிறுத்தலாம்னு யோசிச்சிருக்கீங்க. கொஞ்சம் குரல் உயர்ந்திருக்கலாம்… காரசாரமாய் விவாதம் நடந்திருக்கலாம். அதனால, உங்க குடும்பங்களைச் சேர்ந்தவங்க எல்லாருடைய கவனமும் உங்க மேலதான் இருந்திருக்கும்… உங்களோடு சம்பந்தமில்லாத கிருஷ்ணகுமாரின் மகள்கள் டைனிங் காரைவிட்டு யாரும் கவனிக்காம நகர்ந்துட முடியும்…”
“புல்ஷிட்!” என்று கத்தினாள் மாயா.
தன்யா அவளை நேரடியாகப் பார்த்தாள். “நீதானே தர்மாவைக் குத்தியது? ரொம்ப ஆழமான காயம்… அது கத்தி இல்லை, டெய்லரோட கத்திரிக்கோல்னு நினைக்கறேன், சரியா?”
மாயா பிரமித்து நின்றாள்.
“நீ” என்றாள் தன்யா சாயாவை நோக்கி விரல் நீட்டி. “நீதான் சுப்பாமணியோட கேபினுக்கு வந்திருக்க. ப்ளாட்ஃபார்ம் இல்லாத இடத்தில் ட்ரெயினிலிருந்து குதிச்சு, மறுபடி ட்ரெயினில் ஏற ஒரு அத்லெட், ஒரு ஸ்போர்ட்ஸ் பர்ஸனால்தான் முடியும்.”
சாயா குற்றத்தை ஒப்புக்கொள்பவள்போல் மௌனமாக எழுந்து நின்றாள்.
“இப்போ ரெண்டுபேரும் பேச ஆரம்பிக்கறீங்க” என்றாள் தன்யா. ஆனால் இருவரும் பேசவில்லை.
“சரி, அவங்களுக்குப் பதிலா நாம பேசிடுவோம்” என்றவாறே அவர்கள் அருகில் வந்தாள் தர்ஷினி. “உங்க அப்பா மனதில் ஏதோ வருத்தம் பல வருடங்களா அரிச்சுட்டிருக்கு என்பது உங்களுக்குத் தெரியும், ஆனா என்னன்னு தெரியாது. அந்த விஷயம் இங்கே ட்ரெயினில்தான் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு, இல்லையா? அதைச் சொன்னது… மிஸஸ் இராணி கந்தசாமி!”
“ஈஸி கெஸ்” என்றாள் மாயா.
“அதுவும் கிருஷ்ணகுமாரை நாங்க விசாரிச்சிட்டிருக்கும்போதுதான் அவங்க சொல்லியிருக்கணும். அதிகமா சொல்லியிருக்கச் சான்ஸ் இல்லை. கிருஷ்ணகுமார் ஏதாவது உளறிடப் போறாரேன்னு பயந்து, உங்களை விட்டு அவரைக் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்கணும்…”
“இதையெல்லாமும் ஏற்கெனவே சொல்லிட்டீங்க” என்றாள் சாயா.
“இனி புதுசா ஒண்ணு சொல்றேன். உங்க அண்ணனைப் பற்றிய ரகசியங்கள் சுப்பாமணிகிட்ட இருக்கறதால, உங்க அப்பாதான் அவரைக் கொன்னுருக்கணும்னு இராணி கந்தசாமி சொல்லியிருக்காங்க, இல்லையா?”
கிருஷ்ணகுமார் சடாரென்று எழுந்து நின்றார். அவரைக் கவனிக்காமல் “யெஸ் ஆர் நோ?” என்று அதட்டினாள் தன்யா.
“சும்மா மிரட்டாதீங்க. எங்க அண்ணனோட லவ் ஃபெயிலியர், அதுக்காக அவன் தற்கொலை செய்துக்கிட்டது, இதைத்தான் சொன்னாங்க. இதைப் பற்றி நீங்க ஏதாவது தூண்டித் துருவிக் கேட்டு, அப்பா ஹெல்த் அஃபெக்ட் ஆகிடப் போகுதேன்னுதான் நாங்க வந்தோம்…”
“ரிடிகுலஸ்! இங்கே சில மணிநேரங்களுக்கு முன்னாடி ஒரு கொலை நடந்திருக்கு, அது உங்க அப்பாவை அஃபெக்ட் பண்ணலியாம், இருபது வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் அவர் ஹெல்தைக் கெடுத்துடும், இல்லை? இராணி கந்தசாமி நிச்சயமா உங்க அப்பாதான் சுப்பாமணியைக் கொன்னதுன்னு சொல்லியிருக்காங்க. அதுதான் அதன்பின் வர சம்பவங்கள் எல்லாத்தையும் விளக்க முடியும்…”
தர்ஷினி சொல்லிக் கொண்டிருக்கையில் கிருஷ்ணகுமார் “மேடம், நான் கொல்லலை மேடம்! சுப்பாமணியை நான் கொல்லலை மேடம்!” என்று அலறினார். “அவன் செத்தா தேவலைன்னு நான் நினைச்சேன், அது உண்மை…”
தர்ஷினி புன்னகைத்தாள். “அப்படி நினைக்காதவங்க மிகக் குறைவு இந்த ட்ரெயினில்! சரிதானே? நெஞ்சில் கைவெச்சு எல்லாரும் சொல்லுங்க! எத்தனைபேர் நினைச்சீங்க இங்கே?”
தேவாவின் மகள் மானஸீயைத் தவிர எல்லோருமே ஒப்புக்கொள்வதாகத் தலையசைத்தார்கள். பரத்குமார் கூட!
“ஆனா இங்கே வந்துதான், அதுவும் அவர் மரணத்துக்குப் பிறகுதான், இந்த ஆள் இருக்கறதைவிடச் சாகறதே மேல்னு நினைச்சோம்…” என்றாள் சாயா. மாயா தலையாட்டினாள்.
தர்ஷினி “சரி” என்றாள். “இராணி கந்தசாமி உங்களிடம் ஓரளவு விஷயம் சொல்லியிருக்காங்க. மிச்சமெல்லாம் நீங்க சொன்னீங்களா கிருஷ்ணகுமார்?”
“இங்கே டைனிங்காரில் வெச்சுத்தான்… இனிமே மறைச்சுப் பிரயோஜனமில்லைன்னு…” என்று இழுத்தார் கிருஷ்ணகுமார்.
தர்ஷினி அவரை உற்றுப் பார்த்தாள். அவள் கேள்வியைப் புரிந்துகொண்டவராக, “இல்லை, அதைச் சொல்லவில்லை. நீயும் சொல்லிவிடாதே” என்று கெஞ்சும் முகபாவம் காட்டினார் கிருஷ்ணகுமார்.
தர்ஷினி மெலிதாக, மிக மெலிதாகத் தலையசைத்தாள். “சரி, நேரத்தை வீணடிக்காம வேகமா விஷயங்களைப் பார்த்துடலாம். இருபது வருஷங்களுக்கு முன்னால், உங்க மகனும், இராணியுடைய மகளும் காதலிச்சிருக்காங்க. நீங்க அதை ஒத்துக்கலை. அவங்க வீட்டைவிட்டு ஓடியிருக்காங்க. ஆனா, ரவுடிகளால் வழிமறிக்கப்பட்டு, உங்க மகன் தாக்கப்பட்டான், அந்தப் பொண்ணு கடத்தப்பட்டா. நீங்க அந்தப் பெண்ணை மீட்க உதவ மறுத்துட்டீங்க. நடுவில் சுப்பாமணி அந்தப் பெண்ணை மீட்க உதவிட்டு, அதுக்குப் பதிலா ஒரு விலை கேட்டிருக்கார். இராணி அதுக்கு ஒத்துக்கலை. ஆனா விஷயம் கேள்விப்பட்ட உங்க மகன் தற்கொலை பண்ணிக்கிட்டான். இது எல்லாமே ரொம்பத் துன்பமான சம்பவங்கள். இதை இன்னும் நீங்க நினைவு வெச்சு வருத்தப்படறதுக்கும் பயப்படறதுக்கும் என்ன காரணம்?”
கிருஷ்ணகுமார் அமைதியாக நின்றார்.
“நான் சொல்றேன். சுப்பாமணிதான் அந்த ரவுடிகளை ஏற்பாடு பண்ணியிருக்கணும்ங்கறது எங்களுக்கு முதலிலேயே தெரிஞ்சுபோச்சு. ஆனா அதை அவர் நீங்க சொல்லித்தான் பண்ணியிருக்கணும்னு இப்போ தோணுது, சரியா?” என்று கேட்டாள் தன்யா.
கிருஷ்ணகுமார் தலைகுனிந்தார். “இது யாருக்கும் தெரியாது, இராணிக்குக்கூடத் தெரியாது! ஆனா, இந்த விவகாரம் பற்றின சில கடிதங்கள், வீடியோ டேப்ஸ் எல்லாம் சுப்பாமணிகிட்ட இருக்கற விஷயம் எங்களுக்குத் தெரிஞ்சது. அவன் என்னையும் இராணியையும் தனித்தனியா பார்த்து, இந்த ஆதாரங்களை எங்ககிட்ட தர முடியாதுன்னும், ஆனா அது எக்காரணத்தை முன்னிட்டும் வெளியே வராதுன்னும் சொன்னான். நாங்க நடுங்கிக்கிட்டே இருந்தோம். யோசிச்சுப் பாருங்க, அதெல்லாம் வெளியே வந்தா, இராணியோட மகளோட வாழ்க்கை? நான் ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும். என் மகனோட மரணத்துக்கே நாந்தான் காரணம்னு கேஸைத் திரிச்சுடுவான் சுப்பாமணி! என் பொண்ணுங்களோட நிலைமை?”
“சோகம் முடிகிற பயணம், பயம் முடியாத பயணம்” என்று பெருமூச்சுவிட்டாள் தன்யா.
“அதான் என் மகள்களை விட்டு அந்த ஆதாரங்கள் சுப்பாமணியோட கேபினில் இருந்தா எடுத்து வந்துடச் சொன்னேன். எத்தனை பெண்களோட வாழ்க்கை அதில் சம்பந்தப்பட்டிருக்கு!”
தர்ஷினி மாயா-சாயா பக்கம் திரும்பினாள். “இப்போ என்ன சொல்றீங்க?” என்பதுபோல் பார்த்தாள்.
“இனி மறைச்சுப் பிரயோஜனம் இல்லைம்மா” என்றார் கிருஷ்ணகுமாரும்.
“இராணி மேடம் விஷயத்தைச் சொல்லி, அப்பா இதைச் செய்திருக்கக் கூடும்னு சொன்னதும், நாங்க தவிச்சுப் போயிட்டோம். அப்பா… அப்பா செய்தது தப்பு இல்லைன்னு எங்களுக்குத் தோணுச்சு. அதான்…” என்றாள் மாயா.
“அதான், உங்க அப்பா பற்றிய உண்மைகள் தெரிஞ்ச இன்னொருத்தரான இராணியைக் கொன்னுட்டீங்க. அப்புறம் அலிபிக்காக தேவா சார் கேபினுக்குப் போயிட்டீங்க, கரெக்டா?”
“நோ! நோ!” என்று அலறினார்கள் மாயாவும் சாயாவும்.
“அதுக்கப்புறம் உங்களுக்குச் சுப்பாமணிகிட்ட இருந்த ஆதாரங்கள் பற்றித் தெரிய வந்திருக்கு. அதை எடுக்க முயற்சி செய்திருக்கீங்க. உங்களைத் தர்மா கண்டுபிடிச்சிருக்கான். அவனையும் கொல்ல…”
“இல்லை, சத்தியமா நாங்க உங்களைக் கொல்ல நினைக்கலை, ப்ளீஸ் நம்புங்க சார்! கடவுள் அவதாரம் மாதிரி இருக்கீங்க, நினைச்சாலும் எங்களால் அது முடியாது சார்! சாயாவை நீங்க கண்டுபிடிச்சுடக் கூடாது, உங்களைத் தடுக்கணும்னுதான் தாக்கினேன். சத்தியமா இவ்வளவு ஆழமா காயம் படும்னு நான் நினைக்கலை, என்னை மன்னிச்சுடுங்க சார்!” என்று தர்மாவின் முன் மண்டியிட்டுக் கதறி அழுதாள் மாயா.
தர்மா அவளைப் பரிதாபமாகப் பார்த்தான்.
“மாயா-சாயா! நீங்க ரெண்டுபேரும் இராணியைக் கொன்றிருக்க முடியும். ஆனா சுப்பாமணியை நீங்க கொன்றிருக்க முடியாது. ஏனென்றால் சுப்பாமணியுடைய மரணம்வரை உங்களுக்கு இந்த விவகாரங்கள் எல்லாம் எதுவும் தெரியாதுன்னு நான் நம்பறேன். கிருஷ்ணகுமாருடைய மனப்போக்கு, அவர் இதையெல்லாம் நிச்சயமா உங்ககிட்ட மறைச்சிருப்பார். இப்போ நம்ம முன்னால் இருக்கும் கேள்விகள் – இராணியைக் கொல்றதுக்கு ஸ்ரீஜாவின் துப்பாக்கி உங்களுக்கு எப்படிக் கிடைச்சது? அப்புறம் நீங்க என்ன வேணும்னாலும் நம்பியிருக்கலாம், ஆனா உண்மை என்ன? சுப்பாமணியைக் கொன்றது கிருஷ்ணகுமார் தானா?”
“உன் கேள்விகளுக்கு நான் பதில் சொல்றேன்” என்றாள் தன்யா. “கிருஷ்ணகுமார் சுப்பாமணியைக் கொன்றிருக்காட்டா, ஸ்ரீஜாவின் துப்பாக்கி அவரிடம் வந்திருக்காது, அவர்கிட்டயிருந்து மாயா-சாயாக்குப் போயிருக்காது. ஸோ, இது எல்லாத்துக்குமே ஆரம்பம், சுப்பாமணியுடைய கொலை!”
“நான் பண்ணலைம்மா” என்றார் கிருஷ்ணகுமார் அழமாட்டாக் குறையாக.
“நீங்க பண்ணலை சார்” என்றாள் தன்யாவும். “சுப்பாமணி சிறு உருவமில்லை. கொஞ்சம் குட்டையாக இருந்தாலும் நல்ல வெயிட்டான மனிதர். அவரைப் பிஸ்டலால் சுட்டு, அவர் உடலை இழுத்துப்போய் ட்ரெயினிலிருந்து தள்ளல்லாம் ஹார்ட்-ப்ராப்ளம் உடைய உங்களால் நிச்சயமா முடியாது! உங்களுக்கு இராணி மேடம் உதவியிருப்பாங்கன்னும் என்னால் நம்ப முடியலை. அப்படியிருந்தா, இப்போ அவங்க சாகவேண்டிய அவசியம் இல்லையே!”
“கொஞ்சம் இரு” என்றான் தர்மா, அதிர்ந்தவனாக. “என்ன சொல்ற நீ? கிருஷ்ணகுமார் சுப்பாமணியைக் கொன்னுருந்தா தானே தொடர்ந்து இதெல்லாம்… ஒருவேளை இந்தப் பெண்களோட அஸ்ஸம்ப்ஷன், கிருஷ்ணகுமார் கொன்னுட்டதா…”
“அப்போ, ஸ்ரீஜாவின் துப்பாக்கி அவங்ககிட்ட எப்படி வரும்? கொலையாளி கிட்டருந்து எடுத்துட்டாங்களா? எப்போ? அது யாருகிட்ட இருக்குன்னு இவங்களுக்கு எப்படித் தெரியும், அது கிருஷ்ணகுமாரா இல்லாத பட்சத்தில்? அவ்வளவு அலட்சியமாகவா ஒரு கொலையாளி துப்பாக்கியை வெச்சிருப்பான்?”
“அப்… அப்படின்னா…”
“இவங்க சுப்பாமணியையோ, இராணி மேடம்மையோ கொல்லல. சில இஞ்ச் தவறியிருந்தா உன்னைத்தான் வைகுந்தமோ சிவலோகமோ அனுப்பியிருப்பாங்க” என்று முடித்தாள் தன்யா.
சாயாவும் கிருஷ்ணகுமாரும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்கள். மாயாவின் கதறல் அதிகமானது.
*
தன்யா பரத்குமார் பக்கம் திரும்பினாள். “பரத்குமார், நீங்க இப்போ ஒரு உண்மையை மௌனமா ஒத்துக்கிட்டீங்க. அதை வெளிப்படையா ஒத்துக்கிட்டீங்கன்னா…”
“தாராளமா ஒத்துக்கலாம். இந்தப் பயணத்துக்கு முன்னாடியே எனக்குச் சுப்பாமணியைத் தெரியும்” என்றான் பரத்குமார்.
எல்லோரும் அவனை வியப்பாகப் பார்த்தார்கள்.
“என்னுடைய ஒரு நண்பன், சங்கர்-ஸ்ரீனி அஸோஸியேட்ஸ்ல இருந்தவன், அவன் வாழ்க்கையே சுப்பாமணியால்தான் போச்சு. அவன்… அதுக்கப்புறம் சுப்பாமணியைப் பற்றி நிறையத் தெரிஞ்சுக்கிட்டேன். அவங்க வீட்டுப் பொண்ணைத்தான் என் மனைவியோட கஸின் கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு தெரிஞ்சப்போ, ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. அப்புறம் அவன் சங்கர் சாருக்கு வெறும் எடுபிடிக்குச் சமானம்னு புரிஞ்சப்போ, நான் இந்த விஷயம் பற்றி யாரிடமும் சொல்லல” என்றான்.
பிறகு ஒரு புன்சிரிப்புடன் “இந்த ட்ரெயின் இப்படியே நின்னுடாது, ஊருக்குப் போகும், அங்கேயும் விசாரணை நடக்கும், அதுனால இங்கேயே சொல்லிடறேன் – சுப்பாமணி மட்டும் என் கையில் கிடைச்சான், அவனை வெட்டிக் கொல்லுவேன்னு பலமுறை என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லியிருக்கேன்” என்றான்.
“சரி” என்றாள் தர்ஷினி.
“என்ன மேடம் அப்படியே விட்டுட்டீங்க? என்னை விசாரிச்சு ஒரு வழி பண்ணிடுவீங்கன்னு நினைச்சேன்?” என்றான் பரத்குமார் வியப்பாய்.
“எதுக்கு சார்? உங்க குழந்தையை வெச்சுக்கிட்டு ராத்திரிப் பூரா நடந்துட்டிருந்தீங்கன்னு உங்க மனைவி, அட்டெண்டர் எல்லாரும் வாக்குமூலம் கொடுத்திருக்காங்க. குழந்தையை வெச்சுக்கிட்டே சுப்பாமணியைச் சுட்டீங்களா? அதை இடுப்பில் இடுக்கிக்கிட்டே அவரை ட்ரெயினிலிருந்து வெளியே தள்ளினீங்களா?” என்று தர்ஷினி சிரிப்புடன் கேட்டாள்.
பரத்குமார் தலைகுனிந்து சிரித்தான்.
“இதைவிட ஒரு முக்கியமான விஷயம், சுப்பாமணி உயிருடன் இருக்கும்போதே, அவர் கேபினில் இருந்த நபர் ஸ்ரீஜாவோட துப்பாக்கியை வைத்திருந்ததை சந்திரசேகர் பார்த்திருக்கார். அதை ஸ்ரீஜாவிடமிருந்து எடுக்க முடியாதவர் இந்த இடத்தில் நீங்க மட்டும்தான் – நீங்க சுப்பாமணி அரேஞ்ச் செய்திருந்த கெட்-டுகெதருக்கு வரலியே” என்றாள் தன்யா.
பரத்குமார் நிம்மதியானான்.
*
“இருந்தாலும், பரத்குமார் இங்கே எதுக்கு அழைக்கப்பட்டிருக்கார்னா, அவர் சொன்ன ஒரு ஸ்டேட்மெண்ட்க்காக. அவர் சுப்பாமணியுடைய கேபினுக்குள் சென்ற நபர் அட்டெண்டர் மாதிரி இருந்ததா சொன்னார். அதையே தர்மாவும் சொன்னான்…”
“…சாயா போட்டிருந்த வெள்ளைப் பைஜாமா குர்தா என்னை ஏமாத்திடுச்சு” என்றான் தர்மா வெட்கத்துடன்.
“சரி, பரத்குமார் பார்த்தது யாரை? அட்டெண்டர் மாதிரி இருந்த ஒரு உருவத்தையா? அல்லது உண்மையான அட்டெண்டர் ஒருவரையா?”
“வெள்ளைப் பேண்ட்டும் நீல ஷர்ட்டும் அணிந்திருந்தார் தேவாவின் மகன் அஸ்வின். மேலே ஒரு வெள்ளை கோட் அணிந்தால் போதும். தேவாவின் அப்பா கலிவரதன் வெள்ளை சபாரி அணிந்திருந்தார். சந்திரசேகரின் மகள் மெல்லிய டிஸைன் போட்ட வெள்ளைச் சூரிதார் அணிந்திருந்தாள்…”
தேவா குடும்பத்தினர் கோபத்துடன் கத்த, சந்திரசேகரும் அவர் மனைவியும் ஏதேதோ பேச, அங்கே பெரிய கலாட்டா ஆகிவிடும்போல் தோன்றியது.
இதற்கிடையில் மேஜைமேல் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை நோக்கி ஒரு கரம் நீண்டது. ஸ்ரீஜாவின் துப்பாக்கியை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டது.