தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 12 | தனுஜா ஜெயராமன்
காலையில் எழும்போதே சோர்வாக உணர்ந்த முகேஷ், காபி குடித்தபடி சோபாவில் அமர்ந்திருந்தான்.
உள்ளேயிருந்து வந்த அப்பா சோபாவில் அவன் அருகில் அமர்ந்து கொண்டே ..”ஏண்டா!…ஏதாவது பிரச்னையா”? என கேட்க பகீரென்றது முகேஷிற்கு…
அவசர அவசரமாக “அதெல்லாம் ஒண்ணுமில்லையே… ஏன்ப்பா!..” என்றான் தனது அதிர்ச்சியை சற்றுமே வெளியே காட்டிக் கொள்ளாமல்…
“இல்லை…இப்பெல்லாம் எப்ப வர்ற..எப்ப போறேன்னு கூட தெரியமாட்டேங்குது. வீட்லே யாருகிட்டயும் சரியா பேசமாட்டேங்குற… எப்பவும் எதையாவது யோசிச்சிகிட்டே இருக்குற மாதிரி தெரியுதே “…
“ஆபிஸ்ல கொஞ்சம் அதிக வேலைப்பா… அதான்”..
“என்னவோப்பா… நீ முன்ன மாதிரி இல்லை”.. என்றார் சந்தேகத்துடன்..
“நல்லா கேளுங்க மாமா.… நானும் அதைதான் நினைச்சேன்..நீங்க சொல்லிட்டீங்க..” காபியை ஆற்றிக்கொண்டே வந்த சுதா சொல்ல..
“சும்மாயிரு சுதா நீ வேற”
“இல்லீங்க நானே கவனிச்சேன், நீங்க முன்னமாதிரி இல்லை…இப்பெல்லாம் பாப்பாவை கூட கொஞ்சறது இல்லை”…
“ஆளாளுக்கு நீங்களா ஏதும் கற்பனை பண்ணாதீங்க”….என கோபத்துடன் கத்தியவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் சுதா..
“இதுக்கே ஏண்டா இவ்ளோ டென்ஷனாகுற..? சரி விடு”…
“அவன் தான் ஆபிஸ் வேலைங்குறான்ல.. நீங்க வேற ஏன் அவனை சும்மா நொய் நொய்ங்குறீங்க”… என நல்லகாலமாக துணைக்கு வந்தாள் அம்மா…
அப்பாடா!…என சற்று நிம்மதியானது முகேஷின் மனது.
“இந்த வீக் எண்ட் எங்கேயாவது குடும்பத்தோட வெளியே போய்ட்டு வரலாம்… ஒரு சேஞ்சா இருக்கும். நீ சனிக்கிழமை ஆபிஸ்க்கு லீவு சொல்லிடேன்”… என்றார் அப்பா
“ம்”.. என்றான் சுரத்தேயில்லாமல்..
“ஏங்க!.… நம்ம அம்ரிதா குழந்தைகளை வைச்சிட்டு தனியா தானே இருக்கா..? பாவம்… அவளையும் கூப்பிட்டு போகலாமா? ” என்ற அம்மாவை அதிர்ச்சியுடன் பார்த்தான்..மனதுக்குள் பகீரென்று இருந்தது.
“அம்மா வாயை மூடுறியா? இப்ப அவ எதுக்கு? தேவையில்லாம… அவளையெல்லாம் இதுல சேக்காத நீ” என்று பயங்கர கோபத்துடன் கத்தியவனை எல்லாரும் ஒரு மாதிரியாக பார்த்தனர்..
“என்னடா ஆச்சு! உனக்கு… நீ இப்படியெல்லாம் கத்த மாட்டியே… அதுவுமில்லாம கல்யாணம் ஆகி இரண்டு குழந்தை வைச்சிருக்கவளை அவ இவன்னு வேற பேசுற”…
“ஐய்யோ அம்மா!… சாரிம்மா!.… எனக்கு வேற ஒரு டென்ஷன்… ஆபிஸ்ல இப்ப டைட் ப்ராஜக்ட் போயிட்டிருக்கு..… அது முடியட்டும் .… யாரை வேணா அழைச்சிகிட்டு… எங்க வேணா போகலாம்… இப்ப எனக்கு மணியாச்சு, நான் ஆபிஸ் கிளம்புறேன்”.… என தப்பித்தால் போதுமென்று பதிலுக்கு கூட காத்திராமல் பாத்ரூமுக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டவனை கவலையுடன் தொடர்ந்த அப்பாவின் பார்வை முதுகை துளைத்தது.
அப்படியே பாத்ரூமுக்குள் நுழைந்து ஷவரை திறந்து சுவரை சாய்ந்து நின்று கொண்டான் முகேஷ்… வீட்டிலும் லேசாக சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. இது கொஞ்சமும் நல்லதல்ல… சீக்கிரம் இதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்…என்று நினைத்துக் கொண்டான். ஷவரில் பாய்ந்து வந்த சில்லென்ற நீர் மனதையும் உடலையும் ஒரேசேர குளிர்வித்தது.. சற்று ரிலாக்ஸாக உணர்ந்தான். “அவசரப்படக்கூடாது. பதறிய காரியம் சிதறும்”.… என்று புத்தியில் உறைக்க அமைதியாக குளித்துவிட்டு வெளியே வந்தான்..
நல்லவேளை… வெளியே அவரவர் தத்தமது வேலையை பார்த்துக் கொண்டிருக்க.. பேருக்கு டிபனை முழுங்கிவிட்டு காரை கிளப்பி ஆபிஸ் வந்து சேர்ந்தான்.
ஆபிஸில் நிஜமாகவே ஏகப்பட்ட வேலைகள் பென்டிங்காகவே கிடந்தது. அப்பா சொல்வது உண்மை தான்..கொஞ்சநாளாக எதுவுமே சரியில்லை… இது எல்லோரும் தெரிய ஆரம்பிப்பதற்குள் எப்படியாவது சுதாரிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டான்.
மொபைல் ஒளிர… எதிர்முனையில் ஹரிஷ்..
“என்ன மச்சி!… என்ன பண்ற?… எங்கடா இருக்க?”
“ஆபிஸ்ல தான்டா.. வேறெங்க?” என்றான் சலிப்புடன்..
“அதுக்கு ஏண்டா இப்படி சலிச்சுக்குற?”
“இல்லைடா!… இந்த அம்ரிதா ப்ரச்சனைல ஆபிஸ்லையும் வேலையில் கவனம் செலுத்தவே முடியலை.. அப்படியே நெறைய வேலை பென்டிங்லயே கெடக்கு.… அதுவுமில்லாமல் வீட்லேயும் இப்ப லேசா சந்தேகம் வர ஆரம்பிச்சிருக்கு”…
“ஏன்டா… அம்ரிதா பத்தி தெரிஞ்சிடுச்சா?”
“ச்சேச்சே!.. அதெல்லாம் இல்லைடா”… என்றவன், நேற்று திடீர் என்று அம்ரிதா வீட்டுக்கு வந்ததையும்.. இன்று வீட்டில் நடந்த விவாதங்கள் என ஒன்று விடாமல் கொட்டி தீர்த்தான்.
“இது வேறவா? உனக்குன்னு வருது பாரு தினுசு தினுசா… எங்கேயிருந்து டா இதெல்லாம் புடிச்சிக்கிட்டு வர்ற”… என கலாய்த்தவனை..
“டேய்! வெறுப்பேத்தாத… நானே காண்டாகி இருக்கேன்.. கடிச்சி வைச்சிருவேன் உன்னை… போடா!”
“அதான் அசோக் கிட்ட ஒப்படைச்சிருக்கோம்ல .. கவலையேபடாதடா. இதுக்கு சீக்கிரம் என்ட் கார்டு போட்ருவோம்.”
“அதை நம்பி தான் தைரியமா இருக்கேன். சரி..அசோக் ஏதாவது சொன்னாரா?”
“ஆமாம்டா!… சாயங்காலம் வரச்சொன்னார்.. ஏதோ டீடெயில்ஸ் வேணுமாம்! . இதை சொல்லத்தான் உனக்கு போன் பண்ணேன். அப்புறம் மறந்துட்டு வெறெதையோ உளறிகிட்டிருக்கேன்”..
“இதை முதல்ல சொல்லேண்டா… எதை எதையோ பேசிகிட்டு… சரி.. ஈவினிங் நான் ஆபிஸ்ல இருந்து நேரா அங்க வந்துடுறேன்”.
“ஆங்…அப்பறம் சொல்ல மறந்துட்டேன்”… என தொடர்ந்த ஹரிஷ்
“நம்ம சரத் இருக்கான்ல.. அவன் வெளிநாடு போறானாம்… அதுக்கு ராயல் ரெசிடன்சியில் இன்னைக்கு மதியம் பார்ட்டி இருக்கு.. நம்ம ப்ரண்ட்ஸ் நிறைய பேர் வரானுங்க… உன்னையும் அழைச்சிகிட்டு வர்றேன்னு அவன்கிட்ட சொல்லியிருக்கேன். நீயும் வந்திடு”…
“நான் வர்லைடா!…என வெறுப்பாக சொன்னவனிடம்…
“சும்மா கண்டதை போட்டு குழப்பிக்காதடா… ஒரு ரிலாக்ஸா இருக்கும்…. நீ வர்ற… நான் ராயல்ல வெயிட் பண்ணுறேன்… ஓக்கே”… என்றவனின் பேச்சை முகேஷால் தட்ட முடியவில்லை.
ஆபிஸிலிருந்து அரைநாள் விடுப்பு கேட்க… “ஏம்பா எப்பபாரு லீவா?… உனக்கெல்லாம் யாரு வேலை கொடுத்தது”.. என்ற மேனேஜரின் திட்டுக்களை அலட்சியபடுத்தி.. ராயல் ரெசிடென்சிக்கு தனது காரை கிளம்பினாள்.
அந்த மதிய நேரம் வெயில் பட்டையை கிளப்ப ஏஸியை ஆன் செய்தும் கார் கொதித்தது. காரை வேகமாக ஓட்டி சென்று ராயல் ரெசிடன்சியில் நுழைந்தான். மேலே ரெஸ்டாரண்ட். கீழே பல பார்ட்டி ஹால்கள் இருக்க…ஹரிஷை போனில் தொடர்பு கொண்டான். “மச்சி சைடில் ஸ்பைஸ் பார்ன்னு இருக்கு பாரு அங்க வந்துரு”..என போனை கட் செய்தான்.
ரிசப்ஷனில் கொண்டை போட்டிருந்த பளீர் லிப்டிக் பெண்ணை நெருங்கி வழி கேட்டு கிளம்பியவனின் பார்வை எதச்சையாக மேலே செல்ல… கண்ணாடியில் முதுகை காட்டியபடி அமர்ந்த பெண்ணை எங்கேயோ பார்த்ததுபோல் இருந்தது. எதிரில் அமர்ந்திருந்தவன் முகம் பயத்தில் வெளிறியது போல் தெரிந்தது. ஏதோ வித்யாசமாக தோன்ற..அந்த பெண் திரும்புவாளா என ஆர்வமுடன் நின்றான்…அதற்குள் ஹரிஷின் “எங்கடா இருக்க? சீக்கிரம் வாடா”… என்ற போன் விசாரிப்பில் கலைந்து…”த்தோ வந்துட்டேன்டா…ரிசப்ஷனில் இருக்கேன்..டூ மினிட்ஸ்”… என வேகமாக ஒடினான்.
ஸ்பைஸ் பாரில் ஹரிஷ், சரத் மற்றும் நண்பர்களின் கேலி கிண்டல் என கச்சேரி களைகட்டியது. ஹரிஷ் பொதுவாகவே கலகலப்பானவன். இதிலும் நண்பர்கள் பார்ட்டி என்றாலே தனி உற்சாகம் வந்துவிடும். ஆடல் பாடல் என உற்சாகத்திற்கு குறையேதுமில்லை. ஹரிஷிற்கு நெடுநாள் கழித்து பார்ட்டியில் கலந்து கொள்வது அவனது நிகழ்கால துன்பங்களை சற்று மறக்கடித்தது.இந்த கலகலப்பான இடமும் பிரண்ட்ஸ் கேங்கும் மனதுக்குள் புது உற்சாகத்தை தந்தனர்.
முகேஷ் பார்ட்டி உற்சாகத்தில் அமர்ந்து டிரிங்ஸ்ஸை சுவைத்தபடி ஹரிஷூடனும் சரத்துடனும் அரட்டையடித்தபடி கண்ணாடி வழியாக பார்த்தவன் சட்டென பார்வையை சுருக்கினான். அம்ரிதா தனது மகனுடன்… அந்த முகம் வெளிறிய அ..ந்?த.. அந்த நபருடன் கண்ணாடி லிப்டில் இறங்கி வருவது தெரிந்தது. யார் அவன்?… என தெரியவில்லை.. அதற்குள் சரத்தை யாரோ அழைக்க அவன் எழுந்து செல்ல.. ஹரிஷிடம் கண்காட்டினான். அவனும் திரும்பி பார்த்து சற்று அதிர்ந்தவன்…
“வாடா!… யார் என்ன்னு பாத்துருவோம்” …என இருவரும் ஓடி வெளியே வர.. அதற்குள்… லிப்டை திறந்து அவர்கள் காரில் ஏறி பறக்க… ச்சே!.. என ஏமாற்றத்துடன் திரும்பி பார்ட்டிக்கே வந்துவிட்டனர். “யார்ரா அவன்?…நெருக்கமாக போறானே?” …என ஹரிஷ் விசாரிக்க…
“தெரியலைடா?.… ச்சே! பின்னாடி போய் பிடிச்சிருந்தாலாவது ஏதாவது தெரிஞ்சிருக்கும்…”
“சரி..விடுறா.. நாம பார்ட்டி முடிந்ததும் அசோக்கை பார்த்து பேசிடலாம்.. அவரும் நமக்கு ஏதாவது தகவல் சொல்லுறாரான்னு பாக்கலாம்”… என சமாதானபடுத்தினான்.
ஆனாலும் மறுபடியும் நெருஞ்சிமுள் ஒன்று முகேஷின்நெஞ்சை கீறியது…
மொபைலில் ” பணம் ரெடியா” என்ற குறுந்தகவல். “ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கிறாளே கிராதகி” ..என்று தோன்றியது. இவளிடமிருந்து தப்பி விடுவோமா? என்ற கேள்வியுடன் பார்ட்டியை தொடர்ந்தான்.
ஈவினிங் அசோக் தூக்கி போடப்போகும் வெடிகுண்டு பற்றி தெரியாமல் பார்ட்டியில் ஐக்கியமாகி சந்தோஷமாக சிரித்து கொண்டு இருந்தான்… விதியும் தான் சிரித்து கொண்டு முன்னே ஆடியது.