பேய் ரெஸ்டாரெண்ட் – 24 | முகில் தினகரன்

 பேய் ரெஸ்டாரெண்ட் – 24 | முகில் தினகரன்

“என் இனிய ஆவி நண்பரே…என்ன விஷயம்?…ஏன் இந்தப் பரபரப்பு?…” கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த குணாவின் உதடுகள் கேட்டன.

அந்தக் கேள்விக்கான பதிலை வெள்ளைத் தாளில் எழுதித் தள்ளியது லட்சுமி நரசிம்மன் ஆவி.

“அன்பரே!…தங்களுக்குப் பொருத்தமானதொரு ஜோடியைக் கண்டுபிடித்து விட்டேன்!…அவளும் தங்களைப் போலவே நல்ல தோழி!…பல தரகர்கள் அவளுக்கு வரன் தேடித் தேடி ஓய்ந்து போய் “இனி முடியாது” என்று ஒதுக்கி விட்டதால் ஆற்ற மாட்டாத சோகத்துடன் “இனி நமக்கு திருமணம் என்பது இந்த ஜென்மத்தில் இல்லை” என்று முடிவு செய்து விட்டு விருப்பமேயில்லாமல் நடைப் பிணமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்…தாங்கள் அவளை நேரில் சந்தித்துப் பேச வேண்டும்…கட்டாயம் தங்களுக்கு அவளைப் பிடிக்கும்…நிச்சயம் உங்களிருவருக்கும் திருமணம் நடைபெறும்…நல்லதொரு இல்லறம் அமையும்”

படித்து முடித்ததும் குணாவின் இதழோரத்தில் சிறியதாய் ஒரு புன்னகை அரும்பியது.

மீண்டும் கண்களை மூடியவன், “என் மேல் அளவு கடந்த அக்கறை காட்டும் ஆவி நண்பரே!…நான் எங்கே?…எப்போது?…அந்தப் பெண்ணைச் சந்திக்க வேண்டும் என்கிற குறிப்பைச் சொல்லுங்கள்…நான் சந்திக்கிறேன்”

ஆவியின் பதில் அடுத்த விநாடியே காகிதத்தில் விழுந்தது.

“அடுத்த வாரம் வியாழக்கிழமை…நெறைஞ்ச முகூர்ந்த நாள்…அன்னிக்கு அந்தத் தோழியை கோவை மருதமலைக்கு வரச் சொல்லி நான் தகவல் தந்து விடுகிறேன்!…தாங்களும் சிரமம் பாராது மருதமலை சென்று அந்தப் பெண்ணை சந்தியுங்கள்!…அடையாளம்…பச்சை நிற பட்டுச்சேலை என்பதை மனதில் தெளிவாகக் குறித்துக் கொள்ளுங்கள்!…தாங்கள் தூய வெண்ணிற ஆடையை அணிந்து செல்லுங்கள்…நடந்தவை நடந்தவையாகட்டும்!…இனி நடப்பவை நல்லவையாகட்டும்”

நீண்ட பெருமூச்சு விட்ட குணா காலண்டரைப் பார்த்தான். “இன்னும் அஞ்சு நாளிருக்கு…ஓ.கே…போய்ப் பார்த்திடுவோம்”

அவனுக்கே அவனை நினைத்தால் சிரிப்பாயிருந்தது. “முப்பது வயதுக்கு மேலே திருமணம்!..அதுவும் ஒரு ஆவி தயவில்…”

ஆனாலும், அவனுக்குள் ஒரு நம்பிக்கை விதை விழுந்து முளை விடத் தொடங்கியது. முகம் தெரியாத அந்தப் பெண்ணின் மேல் மதிப்பு மிக்க ஒரு காதல் உணர்வு ஏற்பட்டது.

அந்தக் குறிப்பிட்ட தினத்தில், மருதமலையில் நிகழப் போகும் குளறுபடிகளைப் பற்றி அவனுக்கு அப்போது தெரியாது…ஏன் அந்த ஆவிக்கும் கூட அது தெரியாது.

*****

தன் தந்தையானவர், ஒன்றுக்கு நாலு தரகர்களிடம் தன் ஜாதகத்தைக் கொடுத்து, அந்த தரகர்களும் தங்கள் பங்கிற்கு ஏகப்பட்ட வரன்களைக் கொண்டு வந்து குவித்து, “எப்படியாவது முடித்து விட வேண்டும்” என்று வரிந்து கட்டிக் கொண்டு காரியமாற்றிய போதெல்லாம் சுமதிக்கு அந்த முயற்சிகள் வெற்றிகரமாக முடியும் என்கிற நம்பிக்கை துளிக் கூட ஏற்பட்டதில்லை. “பாவம் அப்பா…வழக்கம் போல் இந்த தடவையும் ஏமாறத்தான் போகிறார்” என்று முன்னதாகவே முடிவும் செய்து விடுவாள்.

அவள் நினைத்தது போலவேதான் நடக்கும்.

“போய் கடிதம் போடுகிறோம்” என்று சொல்லி விட்டுப் போனவர்கள் கடிதமும் போடுவதில்லை….கத்தரிக்காயும் போடுவதில்லை.

“தரகரிடம் தகவல் சொல்லியனுப்புகிறோம்” என்று சொல்லி விட்டுப் போனவர்கள் தகவல் தருவார்கள். “எங்க பையனுக்கு வேற இடத்துல முடிஞ்சிடுச்சு” என்று.

ஆனால், அதே தன் ஆவி நண்பன் அந்த முயற்சியில் ஈடுபடத் துவங்கியதும் அவளையுமறியாமல் அவளுக்குள் நம்பிக்கை விளைந்தது. இல்லாவிட்டால் அடுத்த நாளே ஆர்வமுடன் தன் ஆவி நண்பனைத் தொடர்பு கொண்டு பேசுவாளா?

“என் ஊடகத் தோழியே…நம் எண்ணங்கள் ஈடேறப் போகும் நாள் வந்து விட்டது…அடுத்த வாரம் வியாழனன்று பச்சை நிறப் பட்டுடுத்தி…மருதமலைக்குச் சென்று தண்டாயுதபாணியை வழிபடுங்கள்…அதே நாளில் அங்கு வெள்ளை நிற உடையணிந்து குள்ளமாயிருக்கும் ஒருவர் உங்களுக்காக காத்திருப்பார்!…அவரே உங்களிடம் வந்து பேசுவார்!…நீங்களும் அவருடன் பேசுங்கள்…இருவரும் மனம் விட்டுப் பேசி நல்லதொரு முடிவெடுங்கள்”

படித்து முடித்தவுடன் மந்திரத்தால் கட்டுண்டவள் போல் எழுந்து பீரோவை நோக்கிச் சென்று அதைத் திறந்தாள். உள்ளே, மேல் அலமாரியிலிருந்த அந்தப் பச்சை நிறப் பட்டுப் புடவையை எடுத்து, ஆசையாய் ஒரு முறை தடவிப் பார்த்து விட்டு, வெட்கத்துடன் சிரித்தாள்.

தன் செய்கைகளை நினைத்து நாணினாள். மனம் சிறு பிள்ளையைப் போல் துள்ளிக் குதித்தது. இதுநாள் வரையில் தன்னைச் சுற்றியிருந்த பொருட்களெல்லாம் வெறும் ஜடமாய்த் தெரிந்தன. ஆனால், இன்றோ, அவை எல்லாவற்றிலும் ஏதோ ஒரு அழகு தெரிந்தது. ஜன்னலை நீக்கும் போது சரேலென்று முகத்திலடித்த காற்று நேற்று வரை எரிச்சலூட்டியது. இன்று இதமாயிருந்தது. “கீச்…கீச்”சென்று கத்திக் கொண்டு காம்பௌண்ட் சுவற்றின் மீது துரத்தித் திரியும் காதல் அணில்கள் தொந்தரவாய்த் தெரிந்தன. அவைகளே இன்று ஒரு சந்தோஷக் குறியீடுகளாயின. அணிலாய் மாறி விட ஆசை கூட வந்தது.

“ஏன்…ஏன் எனக்குள் இந்த மாறுதல்கள்?”

“நேற்று இல்லாத மாற்றம் என்னது?…காற்று என் காதில் ஏதோ சொன்னது?…இதுதான் காதல் என்பதா?…இதயம் பூ விரித்ததா?” மெல்லிய குரலில் பாடியபடி கட்டிலின் மீது சாய்ந்து படுத்தாள். அந்தப் பாடல் வரிகளின் அர்த்தம் கூட இன்று புதிதாய்த் தெரிந்தது.

“சந்தோஷம் என்பது பட்டாம்பூச்சி மாதிரி…அதை நீங்க துரத்தினா…ஓடி ஒளிஞ்சுக்கும்…அதைக் கண்டுக்காம விட்டுட்டா அதுவா வந்து உங்க தோள்ல உட்கார்ந்துக்கும்” எங்கோ…எப்போதோ படித்தது இப்போது ஞாபகம் வந்தது சுமதிக்கு.

அமைதியாயிருந்த அவள் மனதில் புதுச் சலனம் ஏற்பட்டது போல், அமைதியாயிருந்த அந்த அறைக்குள் திடீரென்று ஒருவித சலனம் தெரிந்தது.

காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டாள்.

நிசப்தமே நிலவியது.

ஆனாலும், ஏதோவொன்று இருப்பதை அவள் மனம் துல்லியமாய் உணர்ந்தது. “ஒருவேளை லட்சுமி நரசிம்மன் ஆவிதான் மறுபடியும் வந்திருக்கோ?”

அவசர அவசரமாய் ஒய்ஜா போர்டை எடுத்து, அதில் பிளாஸ்டிக் துண்டை வைத்து ஆவியை வரவேற்க ஆயத்தமானாள் அவள்.

ஆவி வந்தது. அவளது இடது கையைக் கொண்டே அவளுக்கு ஒரு தகவலை எழுதி வைத்து விட்டு உடனே பறந்தும் போனது.

இவையெல்லாம் ஒரு வினாடி நேரத்திலேயே நடந்தேறி விட, கண் விழித்த சுமதி அது எழுதி வைத்து விட்டுச் சென்ற தகவலைப் படித்தாள்.

“பச்சை வேண்டாம்…மஞ்சள் வேண்டும்”

குழம்பினாள். “என்ன இது?…இதுக்கு என்ன அர்த்தம்?”

பளீரென்று யோசனை வர, “ஓ…பச்சைப் பட்டுப் புடவை வேண்டாம்…மஞ்சள் கட்டிட்டுப் போ”ன்னு சொல்லுது போலிருக்கு!…மஞ்சள்தான் மங்களகரமான நிறம் என்பது ஆவிக்குக் கூடத் தெரிஞ்சிருக்கு” தனக்குத் தானே பேசினாள்.

பாவம், இடையில் புகுந்து புடவையின் நிறத்தை மாற்றிச் சொல்லி விட்டுச் சென்றது கிராஸ்டாக்கில் உள்ளே புகுந்த துஷ்ட ஆவி என்பது அவளுக்கு எப்படித் தெரியும்?.

மாலை அலுவலகத்திலிருந்து வந்த சுமதி, வீட்டில் தாய் இல்லாதிருக்க தந்தையிடம் கேட்டாள். “அம்மா எங்கே?”

“நம்ம சிவகாமி பெரியம்மா வீட்டுக்குப் போயிருக்காங்க”

தன் அறைக்குள் நுழைந்து புடவையிலிருந்து நைட்டிக்கு மாறியவள், மீண்டும் ஹாலுக்கு வந்து, “என்ன திடீர்னு சிவகாமி பெரியம்மா வீட்டுக்கு?” கேட்டாள். அந்த சிவகாமி பெரியம்மா இதுவரையில் எழு வரன்களைக் கொண்டு வந்து புறமுதுகிட்டுப் போனவள். மறுபடியும் ஏதாவது வரனைக் கொண்டு வந்திருப்பாளோ? என்கிற ஐயம் அவளை அப்படிக் கேட்க வைத்தது.

“உனக்கு விஷயமே தெரியாதா?…அவங்க பொண்ணுக்கு பேய் பிடிச்சிருக்காம்…பத்து நாளா வீட்டில் ஒரே களேபரமாம்!…யாராலும் அவளைக் கண்ட்ரோல் பண்ணவே முடியலையாம்”

“அவங்க பொண்ணுக்குன்னா….மூத்த பொண்ணுக்கா?…இல்லை.…சின்னப் பொண்ணுக்கா?” புருவங்களை நெரித்துக் கொண்டு கேட்டாள் சுமதி.

“சின்னவ கல்பனாவுக்குத்தான்…பாவம் கல்யாணமாக வேண்டிய பொண்ணு…அதுக்குப் போய் இப்படி” வேணுகோபால் அங்கலாய்த்தார்.

“அவங்க சின்னப் பொண்ணு…வெளியூர்ல…காலேஜ் ஹாஸ்டல்ல அல்ல தங்கிப் படிச்சிட்டிருக்கு?…”

“ஆமாம்…அங்கேயே இந்தப் பொண்ணுக்கு பேய் பிடிச்சிருக்கு!..…நல்லா…சாதாரணமாகவே பேசிட்டிருப்பாளாம்…திடீர்னு ஒரு மாதிரி…பிஹேவ் பண்ண ஆரம்பிச்சிடுவாளாம்!…அதைப் பார்த்து பயந்து போன மத்த மாணவிகளெல்லாம் பிரின்ஸிபால் கிட்டே கம்ப்ளைண்ட் பண்ணியிருக்காங்க!…அவரு பொண்ணோட பேரண்ட்ஸை வரவழைச்சு அவங்க கூட பொண்ணை அனுப்பி வெச்சிட்டாரு”

அப்பா சொன்னதைக் கேட்ட சுமதிக்கு அடிவயிற்றில் அமிலம் சுரந்தது.

“அடக் கடவுளே!…இதுல இப்படியொரு பிரச்சினை இருக்கா?…இது தெரியாம நான் பாட்டுக்கு ஒரு ஆவி கூட ஃப்ரண்ட்ஷிப் வெச்சுக்கிட்டு…அது சொன்ன பேச்சைக் கேட்டு மருதமலைக்கு போக முடிவு பண்ணி வெச்சிருக்கேனே?…நான் செய்வது சரிதானா?….இல்லை..வில்லங்கத்தை தேடிப் போய் வாங்கிக்கப் போறேனா?”

குழப்பமானாள்.

“இன்னிக்கு நைட் அந்த லட்சுமி நரசிம்மன் ஆவியை வரவழைச்சு…சிவகாமி பெரியம்மாவோட மகள் கல்பனா விஷயத்தைப் பற்றிக் கேட்டு நம்மோட சந்தேகத்தைத் தீர்த்துக்கணும்”

முடிவு செய்தாள்.

இரவு எட்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்த ராஜேஸ்வரி வரும் போதே கத்திக் கொண்டு வந்தாள். “இந்தக் காலத்துப் பொண்ணுக பெரியவங்க பேச்சைக் காதுல கூட வாங்கறதில்லை!…என்னமோ எல்லாம் தெரிஞ்ச மாதிரி தேவையில்லாத வேலைகளையெல்லாம் பண்ண வேண்டியது…அப்புறம்… “அப்படி ஆகிப் போச்சு!…இப்படி ஆகிப் போச்சு” புலம்ப வேண்டியது!…இதுக பண்ற அட்டூழியங்களுக்கு பாவம் பெரியவங்கதான் கஷ்டப்படறாங்க”

“ஏய்…ராஜேஸ்வரி…கொஞ்சம் மூச்சு விட்டு விட்டுப் பேசு…இப்படி ஒரேயடியா மூச்சு விடாமப் பேசினேன்னா…சங்கு தான்” என்றார் வேணுகோபால்.

இடையில் புகுந்த சுமதி, “அம்மா..என்னம்மா ஆச்சு அந்தக் கல்பனாவுக்கு?” ஆர்வமாய்க் கேட்டாள்.

“காலேஜ்ல….கூடப் படிக்கற பொண்ணுக கூடச் சேர்ந்துக்கிட்டு… “ஆவி கூடப் பேசப் போறேன்…பேய் கூடப் பேசப் போறேன்”னு சொல்லிக் கிட்டு…கண்ட கருமாந்திரங்களை வாங்கிட்டு வந்து ஹாஸ்டல் ரூம்ல வெச்சு ஏதோ பண்ணியிருக்கு…மந்திரவாதிக பில்லி சூனியம் பண்ற மாதிரி…அதுலதான் வினை வந்து ஏறிடுச்சு” என்றாள் ராஜேஸ்வரி.

சுமதியின் பீதி மேலும் அதிகமானது. “ஆஹா…நானும் ஒரு நாளைக்கு அந்த மாதிரி ஆயிடுவேனா?”

“எப்படா ராத்திரி வரும்?” என்று காத்திருந்தவள் சரியாக இரவு பனிரெண்டு மணிக்கு, தன் கேள்விகளைக் காகிதத்தில் எழுதி வைத்து விட்டு ஒய்ஜா போர்டு எதிரிலமர்ந்து காத்திருக்கத் துவங்கினாள்.

விரைவிலேயே வந்திறங்கிய லட்சுமி நரசிம்மன் ஆவி, அந்தக் கேள்விகளைப் படித்து விட்டு, அவளது இடது கை மூலமாகத் தன் பதில்களைப் பதிவிட்டு விட்டுச் சென்றது.

சிறிது நேரத்திற்குப் பிறகு கண் விழித்த சுமதி அந்த பதில்களை வாசித்தாள்.

“அம்மா…அந்தப் பெண் தங்கியிருந்த ஹாஸ்டல் அறைக்குள் சில வருடங்களுக்கு முன் ஒரு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாள். பரிட்சையில் சரியான மார்க் வாங்க முடியாமல் போனதால் நிராசையோடு இறந்த அந்த மாணவியின் ஆவி இன்னும் அந்த ஹாஸ்டலைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றது…தன்னால் வாங்க முடியாத மார்க்கை உங்கள் பெரியம்மா மகள் மூலமாக வாங்கி விட வேண்டுமென்கிற எண்ணத்தில்தான் அந்த ஆவி இவள் உடம்பில் இறங்கியுள்ளது…உங்க பெரியம்மா மகள்…சுமாராகத்தான் படிப்பாள் போலிருக்கு!…அந்த ஆவி இவளுக்குள்ளிருந்து…“நீ நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கணும்!…இல்லே…உன்னை அப்படியே உயிரோட எரித்து விடுவேன்”னு மிரட்டுது!…அந்த மிரட்டலுக்கு பயந்துதான் அந்தப் பெண் திடீர்…திடீர்ன்னு வேற மாதிரி நடந்துக்குது!…இந்தப் பிரச்சினை தீர ஒரே வழி….இவள் நன்கு படித்து…நல்ல மதிப்பெண்களை எடுத்து விட்டால் அந்த ஆவி பறந்து விடும்…ஆகவே நீங்கள் அப்பெண்ணை நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களை எடுக்கச் செய்யுங்கள்…எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும்”

மறுநாள் காலை கண் விழித்த சுமதி, “இந்த விஷயத்தை எப்படி சிவகாமி பெரியம்மாவுக்குத் தெரிவிப்பது?…நான் போய் சொன்னால் “நீ சின்னப் பொண்ணு உனக்கென்ன தெரியும்?”ன்னு சொல்லி என்னை உதாசீனப்படுத்துவாங்க!…அம்மா மூலமாய்ச் சொல்லலாம்!..ன்னா…அம்மா “உனக்கெப்படித் தெரியும் அதெல்லாம்?”னு கேட்டு என்னைச் சாவடிச்சிடுவாங்க…என்ன பண்ணலாம்?…எப்படி இதை அவங்களுக்குத் தெரிவிக்கலாம்?”

தீவிரமாய் யோசித்தவள் மூளைக்குள் “பளீர்”ரென்று அந்த ஐடியா உதித்தது. “கரெக்ட்…இதை சைக்காலஜிகலா டீல் பண்ணித்தான் சரி செய்யணும்” என்று முடிவெடுத்தவள் அவசரமாய் எழுந்து சமையலறையை நோக்கி ஓடினாள்.

“என்னடி?…காஃபியா?”

“இல்லைம்மா…நாம ரெண்டு பேரும் கொஞ்சம் சிவகாமி பெரியம்மா வீட்டு வரைக்கும் போயிட்டு வரலாமா?”

பீதியான ராஜேஸ்வரி, கண்களைச் சுருக்கிக் கொண்டு,. “எதுக்கு?” கேட்டாள்.

“வந்து…அவங்க கல்பனாவைக் குணப்படுத்தறதுக்கு ஒரு வழியிருக்கு…அதை அவங்களுக்குச் சொல்லி…முயற்சி பண்ணச் சொல்லலாம்ன்னு…”இழுத்தாள்.

“இரு…இரு…இரு…பேய் பிடிச்சவளை குணமாக்கற வழி உனக்குத் தெரியுமா?…ஆஹா…இதென்னடி புதுசா ஒரு பீதியைக் கிளப்பறே?…உனக்கு எப்படி ராசாத்தி…அதெல்லாம் தெரியும்?” நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு கேட்டாள் ராஜேஸ்வரி.

“அம்மா…நீ பயப்படற மாதிரி ஒண்ணுமில்லை!…நான் லைப்ரரில அப்பப்ப சைக்காலஜி புத்தகங்களைப் படிப்பேன்!…அதுல படிச்ச சில விஷயங்கள் எனக்கு இப்ப ஞாபகம் வந்திச்சு…அதான்…”

“என்னடி…அதை என்கிட்டச் சொல்லு…அது சரியா?…இல்லையா?ன்னு நான் சொல்றேன்”

“அம்மா…அதெல்லாம் சைக்காலஜி சம்மந்தப்பட்ட விஷயங்கள்…சொன்னாலும் உனக்குப் புரியாது!”

“அதெல்லாம் புரியும்…சொல்லு”

“அதாவது…இதப் பேய் பிடிக்கறது…பிசாசு பிடிக்கறதைப் பத்தி சைக்காலஜி என்ன சொல்லுதுன்னா…அதெல்லாம் வெறும் “மனப் பிறழ்வுகள்”னு சொல்லுது”

“என்னது மனப் பிறழ்வா?…அப்படின்னா?”

“அதான் அப்பவே சொன்னேன் உனக்கு புரியாதுன்னு”

“உனக்குப் புரியற மாதிரி சொல்லத் தெரியலை…தெளிவாய்ச் சொல்லு…அதாவது எனக்கு புரியற மாதிரிச் சொல்லு” என்றாள் ராஜேஸ்வரி.

“அதாவது நாம நம்மோட மனசை ஒரு நிலைல வெச்சுக்காம…கண்டபடி இங்கும் அங்கும் அலைய விட்டுக் கிட்டேயிருந்தா…ஒரு கட்டத்துல அது மனச் சோர்வாய் மாறி…அப்புறம் மனத் தளர்வா மாறி…கடைசில மனப் பிறழ்வா ஆயிடும்…அதாவது மனநிலை பாதிக்கப்பட்டு விடும்…அதை சைக்கியாட்ரிஸ்டுகள் “மெண்டல் டிஸ்ஆர்டர்”ன்னு சொல்லுவாங்க!…படிக்காத பாமரர்கள்…பேய் பிடிச்சிருச்சு…ன்னு சொல்லுவாங்க” விளக்கமாய்ச் சொன்னாள்.

“ம்ம்ம்…நீ சொல்றது இப்பத்தான் புரிய ஆரம்பிக்குது!…அது சரி…அதை எப்படிக் குணமாக்க முடியும்?”

“சிலர் தியானம் செய்து தங்களோட மனதை ஒரு நிலைப்படுத்தி…மன உறுதியை ஏற்படுத்திக்குவாங்க…சிலர் யோகா மூலம் மனதை திடப்படுத்திக்குவாங்க…அதாவது தடுமாற்றம் கண்டு…கண்டபடி அலைபாயும் மனத்தை ஏதோ ஒரு விதத்தில் ஒரு முகப்படுத்தணும்!…இப்ப திடீர்னு போயி அந்தக் கல்பனாவை “தியானத்துல ஈடுபடு…யோகாவுல ஈடுபடு”ன்னு சொன்னா அது இன்னும் பிரச்சினையாகத்தான் ஆகும்!…அதனால காலேஜ்ல படிக்கற அந்தப் பொண்ணோட மனதை ஒருமுகப்படுத்த அந்தக் கல்வியையே பயன்படுத்தினா என்ன?ன்னு தோணுது”

“எப்படி?”

“அவ சாதாரணமாய் இருக்கும் போது…அவ கிட்டே போய் “நீயெல்லாம் எதுக்கு காலேஜ் போறே காசுக்குக் கேடா…பேசாம வீட்டோட இருந்து சமையல் வேலைகளைப் பார்த்திட்டு…சீக்கிரமே ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டுப் போய் புள்ளை குட்டிகளைப் பெத்து வளர்த்தற வழியைப் பாரு”ன்னு சொல்லி அவளைக் கோபப்படுத்தணும்!…அவளுக்கு அப்படியும் ரோஷம் வரலேன்னா…இன்னும் அதிகமா பேசணும்!…” என்று சுமதி சொல்ல,

“ஆமாம்…இதெல்லாம் செஞ்சா…என்ன ஆகும்?…அவ சரியாயிடுவாளா?”

“இதையெல்லாம் செஞ்சா சரியாகாது…இதன் மூலம் அவ ரோஷப்பட்டு… “நல்லாப் படிச்சு…நல்ல மார்க் வாங்கிக் காட்டறேன்”னு சொல்ல வைக்கணும்!…அவ சொன்னாலும் விடாமல்… “நிச்சயம் உன்னால் முடியாது”ன்னு தூண்டி விடணும்…அதுக்கப்புறம் அவ கவனம் முழுவதும் படிப்பில் இறங்கும்…மனசு ஒரு நிலைப்படும்…கான்ஸண்ட்ரேஷன் மொத்தமும் படிப்பின் மீதே இருக்கும்..அப்ப அந்த மனப்பிறழ்வு கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து விடும்!…எப்படி என் டிரீட்மெண்ட்?” கை தட்டியவாறே சுமதி சொன்னாள்.

அதைக் கேட்ட ராஜேஸ்வரி நெற்றியைச் சுருக்கிக் கொண்டு, “என்னது உன் டிரீட்மெண்டா?…ஏதோ புத்தகத்துல படிச்சே!ன்னு சொன்னே?” கேட்டாள்.

சட்டென்று சுதாரித்துக் கொண்ட சுமதி, “நான் என்ன மனநல மருத்துவரா?…எல்லாம் நாலு புத்தகத்துல படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டதுதான்” என்று சொல்லி சமாளித்தாள்.

“என்னமோ…நீயும் ஒரு நல்ல எண்ணத்தோடதான் இதைச் செய்ய ஆசைப்படறே?…போ…போய் சிவகாமி பெரியம்மாவை சந்திச்சுப் பேசிப் பாரு” அனுமதி கொடுத்தாள் தாய்.

– தொடரும்…

< இருபத்தி மூன்றாம் பாகம் | இருபத்தி ஐந்தாம் பாகம் >

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...