அஷ்ட நாகன் – 19| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்-
நாக தோஷம் நீங்க போகர் பிரான் கூறிய பரிகாரத்தை காண்போம்.’நாக சதுர்த்தி திதி’ அன்று,ஒரு அரச மரத்திற்கு அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன்மேல் சிவலிங்கம் ஏந்திய நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாக தோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம். பிரதிஷ்டை செய்ய வேண்டிய நாக விக்கிரகத்தின் உருவ அமைப்பையும்,நாக யந்திரம் தயாரிக்கும் முறையையும் தனது நூலில் தெளிவாகவும் விளக்கமாகவும் போகர் குறிப்பிட்டுள்ளார்.
கோயில்களில் அரச மரத்தின் கீழே நாகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.பீடத்துடன் நாகத்தின் சிலை இரண்டரை அடி உயரத்திற்கு பாம்பின் உடல் மூன்று அல்லது ஐந்து சுற்றுகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.’ஆஸ்லேஷ் ஹோமம்’ என்பதை கர்நாடகா மாநிலத்தில் உள்ள குக்கே சுப்ரமண்யா தலத்தில் விமரிசையாக நாகபத்திரி தலைமையில் செய்கிறார்கள்.குக்கே சுப்ரமணியர் கோயிலில் முருகப்பெருமானை நாக ரூபத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றனர்.இக்கோயிலில் பரிகாரம் செய்வதற்கு உரிய பணம் கட்டி விட்டால் நாகர் சிலையை அவர்களே வாங்கி வைப்பார்கள்.
நாகர் சிலையை பிரதிஷ்டை செய்யும் தினத்தன்று, பாலும் பழமும் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு விரதமிருந்து, பயபக்தியுடன் இந்த பரிகாரத்தை செய்திடல் வேண்டும்.ஆகஸ்ட் மாதம் வரும் ‘நாக பஞ்சமி’ அன்று இப்பரிகாரத்தை செய்வது உத்தமம்,அன்று தான் சர்ப்பங்கள் இன பெருக்கம் நடைபெறும் என்று நம்பப்படுகிறது.இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நாக தோஷம் நீங்கி பரிகாரம் செய்பவரின் வம்சத்து ஆணின் இனிவரும் எல்லா தலை முறைகளையும் காக்கும் என்று கூறப்படுகிறது.
– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-
முழு நிலவு இரவு !
ஏலக்காய் சித்தரைத் தொடர்ந்து யோகினி, அரவிந்தன் மற்றும் முருகேசன் என நால்வரும் பெளர்ணமி பூஜைக்காக கொல்லிமலையின் மையப்பகுதியில் உள்ள சிவலிங்கத்தை வழிபட சென்றுக் கொண்டிருந்தனர்.
“மக்கா ! வழியில எந்த காட்சியைக் கண்டாலும் பயப்படாமல் வரணும்.என்ன புரியுதா?” என்று எச்சரிக்கையோடு ஏலக்காய் சித்தர் மூவருக்கும் கூறினார்.
“உத்தரவு சாமி” என்று முருகேசன் கூறினான்.
‘பெளர்ணமி பூஜையில் என்ன நடக்க போகுதோ? ஏது நடக்க போகுதோ?’ என்ற மிகுந்த யோசனையுடன் சற்று அச்சத்தோடு அரவிந்தன் காணப்பட்டான்.
‘நடப்பது எதுவானாலும் அதை திடமான மனதோடு சந்திக்க வேண்டும்.இங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயமும் தான் எழுதப்போகும் தொடர் கதைக்கு பயன்படும்’ என்ற எண்ணத்தில் யோகினி நம்பிக்கையுடன் நடந்தாள்.
முருகேசன் எந்த வித பயமுமின்றி ஏலக்காய் சித்தர் மீது கொண்ட முழு நம்பிக்கையோடு ஏலக்காய் சித்தரை பின் தொடர்ந்தான்.
அவர்கள் போகும் வழியில் ஒரு ‘ஏறழிஞ்சில் மரம்’ காணப்பட்டது. அந்த மரத்தைக் கண்டதும் முருகேசன் அரவிந்தனிடம் பின்வருமாறு கூறினான்.
“அரவிந்த் இந்த மரம் பேரு ‘ஏறழிஞ்சில்’ மரம்.இது ஒரு அதிசய மரம். இந்த மரத்துல இருந்து விழுகுற விதைகள் இரவு நேரத்துல தானாக இந்த மரத்துலே ஒட்டிக்குமாம்” என்று வியப்பு பொங்க கூறினான்.
“அட கிறுக்கு பயபுள்ள ! ஏறழிச்சி மரத்தைப் பத்தி உனக்கு என்னலே தெரியும்?” என்று முருகேசனை ஏலக்காய் சித்தர் ஒரு மடக்கு மடக்கினார்.
முருகேசனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பேந்த பேந்த விழித்தான்.
ஏலக்காய் சித்தரே, தன் பேச்சைத் தொடர்ந்தார்.
“முருகேசா ! ஏறழிஞ்சி மரத்துல இருந்து கீழே விழுந்த விதைகள் திரும்ப இராக்காலத்துல மரத்துல ஒட்டிக்கும்.இது அதிசயம் இல்லை.இதுல ஒரு விஞ்ஞானப் பூர்வமான உண்மை ஒண்ணு இருக்கு.ஏறழிஞ்சில் விதைகளோடு இந்த தன்மைக்கு காரணம் அந்த விதைகள்ல சின்ன சின்ன புழுக்கள் இருக்கும்.அதுக தான் இந்த விதைகளை திரும்ப மரத்துல ஒட்டவைக்குது” என்று கூறினார்.மேலும், ஏறழிஞ்சி மரத்தில் ஒட்டியிருந்த விதையை எடுத்து அதில் புழுக்கள் இருப்பதையும் காண்பித்தார்.
அந்த காட்சியைக் கண்ட முருகேசன் வியப்புற்றான்.
“சரி ! சரி ! வா…பெளர்ணமி பூசைக்கு நேரமாச்சு” என்று முருகேசனுக்கு நினைவூட்டினார்.
சுமார் ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகு நால்வரும் பெளர்ணமி பூஜைக்காக உரிய சிவலிங்கம் இருக்கும் இடத்தை அடைந்தனர்.
ஏலக்காய் மூங்கில் கூடையில் தான் கொண்டு வந்த அத்தனை பொருட்களையும் வைத்து சிவலிங்கத்திற்கு பூசை செய்து,ஈசனுக்கு காட்டு மல்லிகையும் மகேந்திர வில்வத்தையும் சாற்றி மிக உருக்கமாக வழிபட ஆரம்பித்தார்.
முருகேசன், யோகினி மற்றும் அரவிந்தனுக்கு எல்லாம் ஒரு புது அனுபவமாக இருந்தது.
விண்ணில் சந்திரன் மின்னிக் கொண்டிருந்தான்.
ஏலக்காய் சித்தர் ஒரு குச்சியை எடுத்து சிவலிங்கத்திற்கு சற்று முன்பாக உள்ள மண்தரையில் மூன்று வட்டம் வரைந்தார்.
ஒவ்வொரு வட்டத்திலும் முருகேசன், அரவிந்தன் மற்றும் யோகினி என மூவரையும் தனித்தனியாக அமர வைத்தார்.
“இந்த வட்டத்துல எதுக்கு உங்களை உட்கார வச்சேன்னு சொல்றேன்.இப்ப நான் ஈசனுக்கு முன்னாடி பூசையில உட்காரப் போறேன்.அப்போ இந்த கொல்லிமலை வனத்துல நாக ரூபத்துல தவம் பண்ற சித்தர்களும் மற்றும் சில தெய்வீக நாகங்களும் இங்க இருக்குற சிவலிங்கதை தரிசனம் செய்ய வருவாக.எந்த நாகமும் உங்களை ஒண்ணும் செய்யாது.இருந்தாலும் உங்களுக்கு பயம் இல்லாமல் இருக்குறதுக்கு உங்களைச் சுத்தி மந்திர வளையம் போட்டிருக்கேன்.எக்காரணம் கொண்டும் இந்த மந்திர வளையத்தை விட்டு வெளியே வந்துடாதீங்க. எக்காரணத்தைக் கொண்டும் கண்ணை மூடாமல் ஈசனை வேண்டிக்கங்க.ஒருவேளை நாக ரூபத்துல இருக்குற சித்தர்கள் உங்களுக்கு மானிட ரூபத்துல காட்சி கொடுத்தாலும் கொடுக்கலாம்” என்று கூறிவிட்டு ஏலக்காய் சித்தர் ஈசன் முன் தன் கண்களை மூடிக்கொண்டு தவத்தில் ஈடுபட்டார்.
45 நிமிடங்கள் கடந்த நிலையில் அங்கே “ஸ்ஸ்ஸ்” என்ற சப்தம் மிக பலமாக கேட்டது.
2 Comments
அடுத்து அடுத்து அமானுஷ்யங்கள் கூடிக் கொண்டே செல்கிறது அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள்
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி நண்பரே