வாகினி – 33| மோ. ரவிந்தர்
அன்று கஸ்தூரி விஷம் குடித்து இறந்து விட்டாள் என்று ஊரே அவள் வீட்டுக்குள் படை எடுத்து நிற்க. ஆவடி இன்ஸ்பெக்டர் வானதி தலைமையில் எண்ணற்ற காவலர்களுடன் வீட்டுக்குள் இன்வெஸ்டிகேஷன் நடந்து கொண்டிருந்தது.
மக்கள், ஆங்கங்கே நின்று, கூடிப் பேசிக் கொண்டிருப்பதும் காட்சியாக அமைந்தது.
அடுத்தடுத்து இந்தப் பகுதியில் இப்படி ஒரு இறப்பு, இழவு என்றால் அவர்களுடைய மனநிலையும் எப்படிதான் இருக்கும்?’ தடம் புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம் போல்’ மனம் புரண்டு தானே ஓடும். அவரவர்களுக்குத் தெரிந்த, தெரியாத விஷயங்களை மாறி மாறிக் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
அந்த நேரம், கஸ்தூரியின் வீட்டுக்குள் இன்ஸ்பெக்டர் வானதி மரகதத்தையும், இளங்கோவனையும் விசாரித்துக்கொண்டு இருந்தார்.
“ஏம்மா, அந்த மருந்து பாட்டில யாரோ விஷத்தைக் கலந்து இருக்காங்க. ஒருத்திச் சாகணும்னு நினைச்சா விஷத்தை வாங்கி அப்படியே குடிக்க வேண்டியது தானே? எதுக்கு இந்த மருந்து பாட்டில கலந்து வெச்சு குடிக்கணும்? உங்க தம்பி தூக்குமாட்டி இறந்ததால இவளை நீங்க யாராவது பழிவாங்கி இருக்கீங்களா என்ன ?” என்று இருவரையும் விசாரிக்கத் தொடங்கினார், வானதி.
“அப்படி எல்லாம் எதுவும் இல்லம்மா. நாங்களே, தகவல் தெரிஞ்சு தான் இங்க வந்தோம்” என்று அழுதுக்கொண்டே பதிலளித்தார், இளங்கோவன்.
“தம்பி செத்து இன்னும் இரண்டு நாள் கூட முழுசா ஆகல. அதுக்குள்ள, பாவி மக இப்படிப் பண்ணிட்டாளே…” என்று கண்ணைக் கசக்கினாள், மரகதம்.
“ஐயோ… இந்த மூன்று பிள்ளைகளும் இனி அனாதை தானா?” என்று ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தார், பரவதம்மாள்.
“நாங்கலாம் இருக்குற வரையும், என் பிள்ளைங்க எதுவும் அனாதை இல்ல” என்று அழ ஆரம்பித்தாள், மரகதம்.
“ராஜா, சீக்கிரம் போஸ்ட் மாடத்திற்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று குரல் கொடுத்துக் கொண்டே, சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தாள், வானதி.
மகாலட்சுமியின் கையைப் பிடித்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்த வாகினி, இன்ஸ்பெக்டர் வானதியைப் பார்த்துக் கேள்வி எழுப்பினாள்.
“ஆன்ட்டி, அம்மாவுக்கு நான்தான் மருந்து கொடுத்தேன். அம்மாவுக்கு என்ன ஆச்சு?” என்று அழுதுக்கொண்டே கேட்டாள்.
அங்குக் கூடியிருந்த மக்கள் அனைவரும் பெரும் திகைப்போடு வாகினியைத் திரும்பி பார்த்தனர்.
“என்னடாம்மா சொல்ற?” என்று தாய்மையின் கனிவுடன் வாகினியிடம் கேள்வி எழுப்பினார், வானதி.
“ஆமாங்க ஆன்ட்டி, அம்மா இரும்பிட்டு இருந்தாங்க. அந்த அறையில் செல்ஃப் மேல மருந்து எடுத்துட்டு வந்து அம்மா கையில் கொடுத்தேன். அம்மா அதனாலதான் செத்துட்டாங்களா?” என்று விஷயம் தெரியாமல் கேள்வி கேட்டாள், வாகினி.
“ராஜா, அந்த மருந்து பாட்டில்ல வேற ஏதாவது கைரேகை இருக்கான்னு பாருங்க” என்று குரல் கொடுத்தாள், வானதி.
“மருந்து பாட்டிலை ஏற்கெனவே லேபுக்கு அனுப்பி இருக்கிறேம்மா. இன்னைக்குச் சாயங்காலம் தான் தெரியும்” என்று பதில் குரல், ராஜாவிடம் இருந்து வந்தது.
அவள் தாய் எழுதிய டைரி மட்டும் பத்தோடு பதினொன்றாக ஜன்னலுக்குக் கீழே இருந்த விளக்குப் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தது.
“சரிங்க, இந்தக் குழந்தைக்கிட்ட ஒரு ஸ்டேட்மெண்ட் வாங்கிக்கங்க. மேஜிஸ்ட்ரேட் முன்னாடி ஸ்டேட்மெண்ட் கொடுக்க வேண்டியிருக்கும்” என்று கூறிவிட்டு, “நீங்க யாராவது இந்தக் குழந்தைக் கூடக் காலையில வாங்க” என்று இளங்கோவனைப் பார்த்துக் கூறினாள் வானதி.
“அம்மா, குழந்தையை அரெஸ்ட் பண்ணப் போறீங்களா?” என்று மூர்த்திப் பதறிக்கொண்டு கேட்டார்.
பக்கத்திலிருந்த மரகதம், இளங்கோவன், பரவதம்மாள் என அனைவரும் பதறத் தொடங்கினர்.
“அப்படியெல்லாம் எதுவும் இல்லைங்க. இவ சின்னப் பொண்ணு. அரெஸ்ட் எல்லாம் செய்ய முடியாது. நாளைக்கு மேஜிஸ்ட்ரேட் முன்னாடி ஒரு வாக்குமூலம் அவ்வளவுதான். அவங்க என்ன சொல்றாங்களோ அதன்படி நாம நடக்க வேண்டியிருக்கும்” என்று இன்ஸ்பெக்டர் வானதி பதிலளித்தாள்.
“அப்படி எல்லாம் செஞ்சுடாதீங்கம்மா. இவங்களுக்கு நாங்க இருக்கோம். எங்களுக்கும் குழந்தைகள் எதுவும் இல்லை. நாங்க காலம் பூராவும் இந்தப் பிள்ளைகளைப் பாத்துக்குறோம்” என்று பதறிக்கொண்டு கூறினார், மூர்த்தி.
“தெரியலைங்க, கோர்ட் என்ன சொல்லுதோ அதுதான் நாங்க செய்ய வேண்டியது வரும். வாகினியைக் காலையில கோர்ட்டுக்குக் கூட்டிட்டு வந்துடுங்க” என்ற வருத்தம் நிறைந்த குரலுடன் கூறினாள், வானதி.
தொடரும்…