தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 11 | தனுஜா ஜெயராமன்

 தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 11 | தனுஜா ஜெயராமன்

“சன்லைட் டிடெக்டிவ் ஏஜென்சி” என்று கொட்டை எழுத்தில் பித்தளை போர்டு தொங்கிய கேட்டில் காரை உள்ளே நுழைத்து பார்க் செய்தான் முகேஷ்.

அங்கே ஏற்கனவே வந்து காத்திருந்த ஹரிஷ், பிடித்து கொண்டிருந்த சிகரெட்டை தூர எறிந்துவிட்டு …”ஏன்டா இவ்ளோ நேரம்” என்றான்.

“கொஞ்சம் நேரமாகிடுச்சி…ஆமா பேசிட்டியா அவர்கிட்ட?…ஒண்ணும் ப்ரச்சனை ஆகாதே”…

“நைட்டே போன் பண்ணி பேசிட்டேன்… வா மச்சி போகலாம்”..

இருவரும் ரிசப்ஷனில் சென்று பெயரை சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்து காத்திருந்தனர்…

இன்டர்காமை கைகளால் பொத்தியபடி ரிசப்ஷனில் இருந்த பெண்..” உள்ளே போங்க சார்”..என சொல்ல

டிடக்டிவ் என்பவர் பரத் சுசீலா, கணேஷ் வசந்த், விவேக் போல கம்பீரமாக இருப்பார்கள் போல என நினைத்துக்கொண்டே நுழைந்த முகேஷிற்கு …உள்ளே நோஞ்சானாக ஒருவர் அமர்ந்திருந்தது சற்று ஏமாற்றமாக இருந்தது. “இவர் தான் அசோக்”…என அறிமுகப்படுத்திய உடன் கைகுலுக்கினான்..

பரஸ்பர அறிமுகத்துக்குப் பின் அசோக் “சொல்லுங்க”…என நிமிர்ந்து உட்கார.. சொல்லவந்ததை சற்று தயக்கத்துடனே சொல்லிமுடித்தான் முகேஷ்..

“சரி…இப்ப என்னமாதிரி உதவியை நீங்க என்கிட்ட எதிர்பார்க்கறீங்க”? என அசோக் கேள்வியுடன் நோக்க…

முகேஷ் தயக்கத்துடன் ஹரிஷையும் அசோக்கையும் பார்க்க…

“அந்த குழந்தை அவனோடது தானா? அவ சொல்லுறது நிஜமான்னு தெரியணும்.. அதன்பிறகு…” என அசோக் இழுக்க…

“அது தெரிஞ்சா ஏதோ ஒரு தீர்மானமான முடிவுக்கு வர வசதியா இருக்கும்”..என்றான் ஹரிஷ்.

“சரி.. அந்த லேடியை பத்தின தெரிஞ்ச டீடெயில்ஸை குடுத்திட்டு போங்க.. மத்ததை நாங்க விசாரித்து உங்களுக்கு தகவல் குடுக்குறோம்”..

சிறிது நேரம் பேசிவிட்டு “ரொம்ப நன்றி மிஸ்டர் அசோக்”.. என இருவரும் கைகுலுக்கி வெளியேறினர்..

வெளியே வந்த முகேஷ்…”எல்லாம் சரியா நடக்குமாடா”..

“அசோக் நல்ல திறமைசாலி…அவர் பாத்துக்குவார் மீதியை…நீ கவலபடாத”..

“என்னவோ…நான் உங்களை நம்பி தான் இருக்கேன்டா..ஆமா…இவருக்கு அழகான லேடி அஸிஸ்டெண்ட் எல்லாம் கிடையாதா”?

“ஏண்டா…ஏன்?”

“இல்லை… கதையில எல்லாம் டிடெக்டிவ் ன்னா அழகான லேடி அஸிஸ்டெண்ட் வைச்சிருப்பாங்கன்னு படிச்சிருக்கேன்.. அதான் கேட்டேன்”..

“நீயெல்லாம் அடங்கவே மாட்டியாடா.. உன்னைபோயி நல்லவன்னு நினைச்சேனேடா” ..

“அடச்சீ..சும்மா கேட்டேன்டா”..என சிரிக்க

“நானும் நீ ரொம்ப டென்ஷனாயிருக்கியேன்னு தான் உன்னை கலாய்ச்சேன்.. சொல்ல மறந்துட்டேன்… அசோக் கிட்ட லேடி அஸிண்டெண்ட்ல்லாம் கிடையாது. ஒரே ஒரு பாய் அஸிண்டெண்ட் தான் இருக்கார்…அதாவது காதர் பாய்னு ஒரு பையன்”… என கலகலவென சிரித்தான்.

இருவரும் சிரித்தபடியே எதிரே இருக்கும் ஹோட்டலில் நுழைந்து பிடித்த உணவினை ஆர்டர் செய்தனர். நெடுநாளுக்கு பிறகு நண்பனுடன் மனம் விட்டு பேசியது முகேஷிற்கு ஆறுதலாக இருந்தது. வீட்டுக்கு போன் செய்து சுதாவிடம் பேசினான்

“ஹரிஷோட வெளியே வந்திருக்கேன்மா..”

“என்ன சமைக்கட்டும்ங்க இன்னைக்கு…”

“எதுவும் வேண்டாம் சுதா.. நாங்க வெளியே ஹோட்டல்ல சாப்பிடுறோம்…வர கொஞ்சம் லேட்டாகும்..”

“சரிங்க…” என போனை வைத்தாள் சுதா. முகேஷ் பேச்சும் சிரிப்புமாக கவலை மறந்து பேசிக்கொண்டிருந்தான் சந்தோஷமாக… ஆனால் அது கொஞ்சநேரம் கூட நீடிக்கவில்லை..

முகேஷின் பாக்கெட்டிலிருந்த மொபைல் அந்த குறுஞ்செய்தியை துப்பி சென்றது.. “பணம் இன்னும் போடலையா?” என்ற அம்ரிதாவின் கேள்வியுடன்..

“ச்சே…கொஞ்ச நேரம் நேரம் நிம்மதியாக இருக்க விடமாட்றாளே”… என அலுத்து கொண்டே கோபமாக மொபைலை டேபிளில் தூக்கி போட..

“என்னடா? ஏன்டா மொபைலை எறியுற” என்ற ஹரிஷின் கேள்விக்கு..

“அவதாண்டா!… பணம் ஏன் அகவுண்டில் போடலை ன்னு தொளைக்குறா?”

“ஏதாவது சொல்லி சமாளி… ஆபிஸ்ல லோன் போட்ருக்கேன்… பிரண்ட் கிட்ட கடன் கேட்ருக்கேன்னு”.. என ஹரிஷ் எடுத்து கொடுக்க..

அதன்படியே ரிப்ளை செய்தவனுக்கு, “இன்னைக்கு தரேன் சொல்லியிருக்க.. தரலைன்னா பின்விளைவுகள் மோசமாயிருக்கும்ங்ன்னு அனுப்பியிருக்காடா..

“சரி … ஒருநாள் பொறுத்துக்கன்னு சொல்லு.. நாளைக்கு கட்டாயமா தந்திடுறேன்னு சொல்லி சமாளி… நாளைக்கு பாத்துக்கலாம்”..

“அனுப்பிட்டேன். ஆனா… எதும் ரிப்ளை வரலை”..

“விடுறா… நாளைக்கு பாத்துக்கலாம்.. ஒருநாள்ல அவளால என்ன பண்ணிற முடியும்” ..

ம்..ம்..என சுரத்தேயில்லாமல் சொல்லியவனை…

“சும்மா பயப்படாதறா.. அதுவே அவளை மாதிரி ஆட்களுக்கு சாதகமா போயிரும்”.. என சொல்லியபடி பில்லை செட்டில் செய்துவிட்டு இருவரும் ஹோட்டலை விட்டு வெளியே வந்தனர்..

நீ என்ன ஆபிஸ் போகணுமா? இல்லை வீட்டுக்கா… என கேட்டவனிடம்

“இல்லைடா..வீட்டுக்கு தான் ஆபிஸ்ல லீவு சொல்லிட்டேன்…இன்னைக்கு அப்பாவை வேற டாக்டர் கிட்ட செக்கப் கூட்டிட்டு போகணும்…இந்த ப்ரச்சனையில் வீட்டை கூட சரியா கவனிக்கமுடியலைடா… பாப்பாவை தூங்கி கொஞ்சியே பலநாளாகுது தெரியுமா?”…

“ரொம்ப மனசை போட்டு உழப்பிக்காம இயல்பா இருடா… சுதா ஏதாவது கண்டுபிடிச்சா உனக்கு தானே பிரச்சனை”…

“சரி…நான் கிளம்புறேன்”.. என காரை கிளப்பினான் முகேஷ்… மனது சற்று லேசாகியிருக் , காரிலிருந்த டேப் ரெக்காடரில் இளையராஜாவை ஓடவிட்டான்… “நெஞ்சை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரு என்னடி” என சொர்ணலதா குயிலாக கூவ… “வேற யாரு ராஜா தான்” என சொல்ல வேண்டும் போல தோன்றியது… பாடலை முணுமுணுத்துக்கொண்டே வண்டியை செலுத்தினான்…

வீட்டுக்குள் நுழைய வாசலிலேயே புதிய மூன்று ஜோடி செருப்புகள் அவனை வரவேற்றது.

தயக்கத்துடன் உள்ளே நுழைந்தவனிடம் வாசலிலேயே நின்றிருந்த அம்மா “யார் வந்திருக்கா பாருடா முகேஷ்”…என்றாள் வாயெல்லாம் பல்லாக…

யாரும்மா?… என ஷூவை கழட்டிக்கொண்டே ஆர்வமுடன் கேட்டவனின் பார்வை போன திசையில் இதயம் “தடக்” என ஒரு நிமிடம் நின்று துடித்தது…

ஹால் சோபாவில் தனது குழந்தைகளுடன் அமர்ந்திருந்தாள் அம்ரிதா.. அடிப்பாவி! வீடுவரை வந்துவிட்டாளே?… சதிகாரி? என்னவாகுமோ? என படபடப்பாக இருந்தது…

“அம்ரிதாடா… நம்ம அம்ரிதா… திருச்சியில் நம்ம வீட்டுக்கு எதிரில் குடியிருந்தாளே”… என்று அம்மா வேறு வெள்ளந்தியாய் சொல்லிக் கொண்டிருக்க…. சுதா காபி மற்றும் ஸ்நாக்ஸை அம்ரிதாவிடம் கொடுத்து கொண்டிருந்தாள்..

உள்ளூர கலக்கத்தை மறைத்து கொண்டு “வாங்க” என சம்பிரதாயமாக சிரித்து வைத்தான்..

அவன் கலக்கத்தை ரசித்துக்கொண்டே பதிலுக்கு சிரித்து வைத்தாள் …”கை தேர்ந்த நடிகை அவள்” என தோன்றியது..

சட்டென பெட்ரூமுக்குள் நுழைய முயன்றவனை… “வாடா! வந்து இப்படி உட்காரு!… அவனுக்கு எப்பவுமே கூச்ச சுபாவம்” என நேரங்காலம் தெரியாமல் அம்மா உளறி வைக்க உள்ளூர எரிச்சலாக வந்தது.

அம்ரிதா அவனை நக்கலாக பார்த்து சிரித்தது போல தோன்றியது நிஜமா? தனது ப்ரம்மையா? என சந்தேகமா இருந்தது முகேஷிற்கு..

அம்மாவும் அம்ரிதாவும் பழங்கதைகளை பேசிக்கொண்டிருக்க.. நடுநடுவே சுதாவும் கலந்துகொண்டு சிரித்து வைக்க… அப்பா அம்ரிதாவின் மகனை தூக்கி கொஞ்சி கொண்டிருந்தார். முகேஷிற்கு மட்டும் முள்மேல் அமர்ந்திருப்பது போல இருக்க.. சட்டென போனை வந்ததாக பாவ்லா செய்து மொபைலை எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டான்… ஆனாலும் காதை உள்ளேயே தீட்டி வைத்திருந்தான். அம்ரிதா ஏதாவது சொல்லிவிட போகிறாள் என்ற பயம் அவனை வாட்டியது.

நல்லவேளை சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தது சற்று ஆறுதலாக உணர்ந்தான்.

அம்ரிதா சாப்பிட்டு விட்டே குழந்தைகளுடன் கிளம்பினாள் .

“அடிக்கடி வந்து போம்மா” என அம்மா சொல்லியது வயிற்றில் புளியை கரைத்தது.

அனைவரிடமும் விடைபெற்று கொண்டு முகேஷின் தவிப்பை ஓரக்கண்ணால் ரசித்தபடியே… கிளம்பி போனாள்.

அப்பாடா!..என நிம்மதி பெருமூச்சு விட்டுகொண்டவன்… தன்னை ரகசியமாக மிரட்டவே வீடுவரை வந்து… பயங்காட்டி, ” “நான் எந்த எல்லைக்கும் போவேன்… நீ என்கிட்டயிருந்து தப்பிக்கவே முடியாது ” என சொல்லாமல் சொல்லிவிட்டு போகிறாள் என்பது புரிந்துபோனது.

“பாவம்.. சின்ன வயசுலையே அவ புருஷனை இழந்து குழந்தைகளை வைச்சிகிட்டு சிரமப்படுறா”..என அம்மா சுதாவிடம் புலம்பிக் கொண்டிருக்க.. சுதா அப்பாவியாய் “ச்சு” என உச்சு கொட்டியது கடுப்பாக வந்தது…

“அவளா பாவம் ” என மனதிற்குள் திட்டி பற்களை நறநறத்தபடி பெட்ரூமில் நுழைந்து கட்டில் சாய்ந்தவன் கண்களை மூடிக்கொண்டான்.

“வாழ்க்கையில் நாம் எடுத்துவைக்கும் தவறான சிறுஅடி கூட எப்படி நம் வாழ்க்கையை புரட்டி போடும்.. மனநிம்மதியை குலைக்கும்” என நன்றாக உறைத்தது. ஆனாலும் ஏதாவது நல்வழிபிறக்கும் என்ற நம்பிக்கையுடன் அப்படியே தூங்கிப்போனான்..

–தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...