சிவமலர் – மொட்டு – 2 | பஞ்சமுகி
“ஐ அம் சிவமலர்…”
காதுவரை நீண்ட கயல்விழிகள், கூரான நாசி, செப்பு உதடுகள் எடுப்பான மோவாய். மேலுதட்டில் இடது ஓரமாய் குறு மிளகாய் ஒரு மச்சம். பிறை நெற்றியில் அலைந்த கேசத்தை ஒரு கையால் ஒதுக்கியபடியே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவளை இமைக்காது பார்த்தான் குமார்.
ஆளை அசரடிக்கிற அழகு இல்லை. அதற்கும் மேலே ஏதோ ஒன்று அவள் முகத்தை விட்டு அவன் கண்களை நகர முடியாமல் கட்டிப் போட்டது.
“பார்த்த முதல் நாளே…” ட்யூனை
மெல்லியதாய் சீழ்க்கையடித்தபடி “என்ன குமார் கண்டதும் காதலா?” என கிண்டலடித்தான் குமாரின் நண்பனும் சக பணியாளனுமான ஹரீஷ்.
“”சே..சே..அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. அவங்களைப் பார்த்ததும் ஏதோ மாதிரி இருக்கு. அது என்னன்னு தெரியல.தட்ஸ் ஆல்”.
“இருக்கும் டா. இருக்கும். நீ இன்னைக்கு தான் இங்கே ஜாயின் பண்ணியிருக்க. அந்தப் பொண்ணு வேலைக்கு சேர்ந்து ஆறு மாசமாகுது. அட்டெண்டரிலிருந்து ஆபீஸர் வரைக்கும் எல்லோரும் பழகலாம்ன்னு டிரை பண்ணி பார்த்திட்டானுங்க. அது சிவமலர் இல்லை சிவப்பழம்.”
“ஹா ..ஹா..ஃபண்டாஸ்டிக். அந்தக் கூட்டத்தில நீயும் ஒருத்தனா?”
“டேய்..நான் தான் படிக்கறப்பவே உஷாரில்லாம ஒண்ணுகிட்ட மாட்டிக்கிட்டேனே. எந்தப் பக்கமாவது திரும்பினேன் கண்ணு முழியை நோண்டிடுவா மகராசி.”
“அந்தப் பயம் இருக்கட்டும். இதென்னடா புதுசா ஒரு பேரு… சிவமலர்… எனிஹௌ…அந்தப் பேரு என்னை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணுது.”
“பேரு மட்டுமா? இல்லை ஆளுமா?”
“சாயந்திரம் நீ வீட்டுக்குப் போறப்ப நானும் கூட வர்றேன். உன் வைஃப்…அதான் என் தங்கச்சிக்கு ஒரு கிப்ட் பண்ணனும்.”
“என்ன கிப்ட்? எனக்கு கொடுடா..”
“ஒரு சிஸர்ஸ். ரொம்ப ஓவரா பேசுனா உன் நாக்கை கட் பண்றதுக்கு.”
“அடேய்…இத்தனை கொடூரனா மாறிட்டியா? நான் போறேன்.”
அவன் நகர்ந்ததும் கண்ணாடி தடுப்பு வழியே அவளை மீண்டும் பார்த்தான். கணிணியில் மிக மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தாள்.
யாரிவள்? இவளைப் பார்த்ததும் ஏதோ ஜென்மாந்தரமாகப் பழகியது போலத் தோன்றுகிறதே ஏன்?
கடந்த ஏழு வருடங்களில் அவன் மூன்று கம்பெனி மாறி விட்டான்.சர்வ சாதாரணமாக வெளிநாடுகளுக்கு சென்றும் வருகிறான்.எத்தனையோ பெண்களிடம் பழகியும் இருக்கிறான். ஆனால் முதல் பார்வையிலேயே சலனப்படும் அளவுக்கு இவளிடம் என்ன இருக்கிறது?
கதவை லேசாகத் தட்டிவிட்டு உள்ளே வந்தாள் அந்தப் பெண். அவன் டீமில் உள்ளவள்.
“இன்னைக்கு ஈவனிங் கிராண்ட் மாலில் பர்த்டே பார்ட்டி வச்சிருக்கேன்.கண்டிப்பா நீங்க வரணும்.”
“ஓ…மெனிமோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே! எல்லோரும் வர்றாங்களா?”
“ஆமாம். எக்சப்ட் சிவமலர்.”
“வொய்?”
“அவ ஆஃபீஸ் நேரம் விட்டா வீட்டுக்குப் போய்டுவா. எங்கேயும் வர மாட்டா.”
“ரொம்ப மூடி டைப்போ?”
“இல்லை..அவ ஃபேமிலி சிச்சுவேஷன். அவ்வளவு தான்”
குமாருக்கு வியப்பாக இருந்தது. ஒரு 23 வயசிருக்குமா? இந்த வயசில என்ன குடும்ப நிலைமை? பேரைப் போல ஆளும் வித்யாசம் தான்..
தங்கத் தகடெனப் பௌர்ணமி நிலவு தகதகத்துக் கொண்டு இருந்தது பேரிரைச்சலோடு அலைகள் மேலே எழும்பி எழும்பி அதைத் தொட எத்தனித்துக் கொண்டிருந்தன. எஞ்சியவை கரையோரம் வந்து நனைத்து விட்டு சென்றன.
துள்ளிக் குதித்து அலைகளைப் பார்த்துக் கைதட்டி ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் மயூரியைப் பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவளைத் தட்டி எழுப்பினாள் நந்தினி.
“போதும். போகலாம் மலர்.”
“இன்னும் கொஞ்சநேரம் விளையாதறேன் மா. அத்தை ப்ளீஸ் நீ சொல்லு.”
“மயூ நேரமாச்சு.பாட்டி கவலைப்படுவாங்க.மலர் இவளுக்கு ரொம்ப இடங்கொடுக்காதே.”
“போம்மா..” என்றபடி முகம் வாடிய குழந்தையை அணைத்துக் கொண்டாள் மலர்.
“விடுங்க அண்ணி. இன்று ஒரு நாள் தானே.”
“அத்தை எனக்கு பலூன் ..ஐஸ்க்ரீம் ..தெதிபியர் எல்லாம் வாங்கித் தரணும்.”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். பார்க்கிறதெல்லாம் கேட்கறது என்ன பழக்கம்? மலர் உன் ஒருத்தி சம்பாத்யத்தில நாங்க நாலுபேர் உட்கார்ந்து திங்கறோம்.நேற்று தான் எனக்கு புடவை பாப்பாக்கு சட்டை எல்லாம் வாங்கிட்டு வந்த. இப்ப இதெல்லாம் தேவையா?”
“அண்ணி பேசாம இருங்க. அண்ணன் இருந்தா இன்னும் செய்வார். அவர் எனக்கு செய்யாததை எதுவும் உங்களுக்கு நான் செய்யல.”
கண்ணில் கட்டிய நீரை அண்ணிக்குத் தெரியாமல் மலர் துடைத்துக் கொள்ள நந்தினியோ முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டே நடந்தாள்.
சே..எத்தனை ஜாக்ரதையா இருந்தாலும் உளறிடறோம். அண்ணனைப் பற்றிப் பேச்செடுத்திருக்கக் கூடாது. மனசு முழுசும் நிறைஞ்சிருக்க ஒண்ணு வார்த்தையில வெளிப்படாம எப்படி இருக்கும்? கூடவே இருந்து கூடிப் பழகியவர் கற்பூரமா கரைஞ்சு போவார் னு யாருக்குத் தெரியும்?
கணவரை இழந்து அண்ணி, மகனை இழந்து அம்மா, தகப்பனை இழந்து குழந்தை, அண்ணனை இழந்து தங்கைகள்ன்னு எல்லோரையும் ஒரே சமயத்தில வேதனைப்பட வச்சிட்டாரே.
வீட்டு வாசலிலேயே அம்மா நின்றிருந்தாள்.
“வீட்டுக்கு வந்து ஒருவாய் சாப்பிட்டுட்டு போயிருக்கலாமே. இப்ப பாரு மணி எத்தனை ஆகுது னு.
முகமெல்லாம் வாடி கிடக்கு.”
“இல்லை மா. இன்னைக்கு தான் அண்ணிக்கு ஃபீஸ் கட்ட லாஸ்ட் டேட். அதனால தான் அண்ணியை நேரா அங்கே வரச் சொன்னேன். மயூ பீச்சுக்கு போகணும் னு சொன்னதால லேட்டாயிடுச்சு.”
“நான் பக்கத்திலிருக்கிற டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு வேலைக்குப் போறேன் அத்தை. இனிமே செலவு பண்ணி படிச்சு என்னாகப் போறது?”
நந்தினிக்கு குற்றவுணர்ச்சியாய் இருந்தது.
“நந்தினி நீயும் எனக்கு பொண்ணு மாதிரி தான். ஈஸ்வர் உன்னைப் படிக்க வைக்கிறதா வாக்கு கொடுத்திருக்கான். அதை நிறைவேத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கிருக்கு.”
“அத்தை நீங்க எனக்கு அம்மாவுக்கும் மேலே. மலர் ஒருத்தியே இந்தக் குடும்பத்தை தாங்க முடியுமா?”
“அண்ணி நீங்க படிப்பை முடிச்சு நல்ல வேலைக்குப் போகனும். அது தான் மயூரிக்கும் பாதுகாப்பு.”
நந்தினி உள்ளுக்குள் மறுகினாள். எத்தனை அழகான குடும்பம். யார் கண் பட்டதோ இல்லை தன் துர்பாக்கியம் தான் இங்கேயும் தொடருதோ?
அப்படித் தானிருக்கும்.
எங்கோ ஒரு கிராமத்தில் உழன்று கொண்டிருந்தவளுக்கு ஈஸ்வர் கிடைத்ததெல்லாம் பெரு வரம்.
பிறந்த மூன்றாவது நாளே பெற்றவள் ஜன்னி கண்டு இறந்து போக இவள் முகத்தில் கூட விழிக்க விரும்பாமல் வீட்டை விட்டு வெளியேறிய அப்பா எப்படி இருப்பார் எங்கே இருக்கிறார் என்பதெல்லாம் தெரியாத ரகசியம். தேசாந்திரியாய் போய்விட்டார் என்றதோடு அவரை நந்தினியின் வாழ்க்கையை விட்டு நகர்த்தி விட்டனர் குடும்பத்தினர்.
கேட்பாரற்றுக் கிடந்தவளைக் காப்பாற்றிக் கரைசேர்க்க நினைத்தவர் அம்மாவைப் பெற்ற பாட்டி. அதற்காக அவர் பட்ட சிரமங்களும் அவமானங்களும் எத்தனையெத்தனை… பாட்டி இரு பிள்ளைகள் வீட்டிலும் மாறி மாறி இருக்க, நந்தினியும் இரு பக்கமும் இழுபட்டாள்.
மாமாக்கள் இருவரும் மனைவி சொல்லே மந்திரம் என இருக்க, நினைவு தெரிந்த நாளிலிருந்து எந்நேரமும் வேலை செய்ய வைத்து சக்கையாய்ப் பிழிந்தார்கள்.
பாலும் தயிரும் பத்துவகை பலகாரமும் வேண்டாம். ஒரு வேளை உணவாவது வயிறார உண்டாளா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பால்வாடியும் பக்கத்து பெருமாள் கோவிலின் உண்டக்கட்டியும் இல்லையென்றால் உயிர்பிழைத்தலே அரிதாகி இருக்கும்.
பெண்பிள்ளை தங்குவதற்காவது ஒரு இடம் கிடைத்ததே என பாட்டி பொறுமை காத்தார்.பகலெல்லாம் உழைத்துக் களைத்தவளை இரவெல்லாம் பார்த்துக் கண்ணீர் விடுவதும் விசிறி விடுவதுமாக அவர் காலம் கழிந்தது.
யார் யாரோ கொடுத்த பழைய ஆடைகளிலும் பள்ளித் தலைமையாசிரியை அருள்மேரி தயவிலும் பத்தாவது வரை படிக்கவும் முடிந்தது. பப்ளிக் எக்ஸாம் அன்று கூட அவளைத் தேர்வெழுதவிடாமல் அழிச்சாட்டியம் செய்தாள் சின்னவரின் மனைவி.
எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி தேர்வெழுதி அதில் தேர்வு பெற்றதும் அவளை மேலே படிக்க வழிவகை செய்ய முயன்றார் தலைமை ஆசிரியை. ஆனால் விதி வலியதாயிற்றே. பாட்டி கீழே விழுந்து படுத்த படுக்கையானார். இரண்டு வருட காலம் ஒரு தாதி போல் அவரை தூக்கியெடுத்து கவனித்துக் கொண்டாள்.ஆனால் அவள் பட்ட கஷ்டத்துக்கு எந்தப் பலனுமின்றி பாட்டி சுவாசத்தை நிறுத்திக் கொண்டார்.
அடுத்து இவளின் கதி? வீட்டை விட்டு விரட்டிவிடத் தான் நினைத்தார்கள்.ஆனால் சின்னவரின் ஐடியாபடி நோயாளிகளை கவனிக்க இவளை அனுப்பி அதில் பணம் பார்க்க ஆரம்பித்தார்கள்.
சிறுநீர் வாடையும் மலவாடையும் சுற்றிக் கொண்டிருக்கும் கொட்டடி மாதிரியான அறைகளில் அவள் பணிவிடை செய்து கொண்டிருக்க சொற்ப பணத்தை அவளுக்குக் கொடுத்துவிட்டு மீதத்தை அபகரித்துக் கொண்டார்கள் மாமன் மனைவிகள்.
அந்த நரகத்திலிருந்து மீள வழி தெரியாது தவித்துக் கொண்டிருந்த போது ஆபத்பாந்தவியாக வந்தார் அந்த முதிய பெண்மணி.
மும்பையில் ஒரு ஹாஸ்டலில் சூபர்வைஸர் வேலைக்கு சேர்த்துவிடுவதாக சொல்லி மாமிகளிடமும் அனுமதி பெற்று தன்னுடன் அழைத்து வந்தாள். போகும் வழியில் தான் தெரிந்தது. அந்தப் பெண்….பெண்களைக் கடத்தும் கும்பலுக்கு இவளையும் விலைபேசியிருந்தது.
அவளுக்குத் தெரியாமல் ரயிலிலிருந்து இறங்கி வேறொரு ரயிலில் ஏறி விட்டாள். டிக்கெட் இல்லாமல் பரிசோதகரிடம் மாட்டியபோது தான் தேவதூதனாக அங்கே வந்தான் ஈஸ்வர்.
அலுவலக வேலையாக புனே சென்று வந்து கொண்டிருந்தான். தன்னுடன் பயணம் செய்ய வேண்டியவர் வராததால் அந்த சீட்டில் நந்தினி பயணிக்க அனுமதியும் வாங்கி அபராதமும் கட்டினான்.
இரவு முழுவதும் அழுதபடியே அவள் கூறிய கதைகளைக் கேட்டவன் மனம் நெகிழ்ந்து போனான். திக்கோ திசையோ தெரியாமல் நின்றவளை தன் வீட்டுக்குக் கூட்டிவந்தான்.
ஆனால் பணம் கொடுத்த பெண் சும்மா இருப்பாளா? மாமன்களிடம் அவள் சண்டையிட இருவரும் எப்படியோ கண்டுபிடித்து இங்கே வந்து சண்டை போட்டார்கள்.
ஈஸ்வர் அத்தனையையும் சமாளித்து அவளை மனைவியாக்கிக் கொண்டான்.
அன்பு பாசம் இதெல்லாம் அனுபவித்து அறியாதவளுக்கு சொர்க்கத்தைத் திறந்து காட்டினான்.
மாமியார் கற்பகமோ மகன் செய்யும் எதுவும் சரியாக இருக்கும் என்று அவன் பக்கம் நின்றார். பாசத்தோடு அவர் உணவிடும் போதெல்லாம் அவர் பாதங்களைக் கண்ணீரால் அர்ச்சித்தாள்.
ஆனால் இன்று பாசமழை பொழியும் மலர் அன்று இவளை ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. கல்லூரி ஹாஸ்டலில் தங்கி முதலாண்டு படித்துக் கொண்டிருந்தவள் விடுமுறைக்கு வந்ததும் இவளைப் பார்த்துக் கோபப்பட்டாள். தன் அண்ணனிடமும் இவளிடமும் பேசவேயில்லை.
ஈஸ்வர் பாசமானவன் மட்டுமல்ல. பக்குவமானவனும் கூட.
அவளுடைய தகுதி படிப்பு எதைப்பற்றியும் கவலைப்படாமல் மனைவியாக ஏற்றுக் கொண்டவன் அவள் சுயமரியாதைக்குப் பங்கம் வராமல் அவளைத் தாங்கினான்.
மகள் மாதிரி வளர்த்த தங்கை கோபித்த போதும் இருவரையும் விட்டுக்கொடுக்காமல் அனுசரித்தான்.
“என் தங்கச்சி கோபக்காரி. ஆனா என்னைவிட இளகின மனசுக்காரி. அன்பு செலுத்தறதில அவ ஒரு அன்னபூரணி.”
உண்மை தான். நந்தினியைப் பற்றிய விபரங்கள் அறிந்த போது உருகிப் போனாள். ஈஸ்வரை விட ஒருபடி மேலாய்ப் பாசங்காட்டினாள்.
கிராமத்துக்காரியான அவளுக்கு நகரத்தைப் புரிய வைத்தாள். +2 டைரக்டாய் படிக்க வைத்து பாஸ் பண்ண வைத்தாள். இதோ ஈஸ்வர் கண்ட கனவை நனவாக்க பி.காம் படிக்க வைக்கிறாள்.
கனவு மறைவது போல் கூடவே இருந்து சொர்க்கத்தைக் காட்டியவன் படு கோரமான விபத்தில் பலியான போது கூடவே விழுந்து சாகத் துணிந்தவள் இன்று வாழ்வதற்குக் காரணமே மலர் தான்.
மலரின் பாசத்தில் அவள் ஈஸ்வரைக் காண்கிறாள். தன் அண்ணன் தான் தன் உலகம் என்றிருந்தவள் அவனை இழந்ததும் உண்டான வெற்றிடத்தைப் பொறுத்துக் கொண்டு ஓடியாடிக் கொண்டிருக்கிறாள்.
ஈஸ்வர் இறந்த விபரம் தெரிந்ததும் சின்ன மாமா மனைவியின் தூண்டுதலில் வந்து ரகளை செய்தார். நந்தினியையும் குழந்தையையும் தன்னோடு அனுப்பிவைக்க கோரினார். ஈஸ்வருடைய பணமும் நந்தினியின் உழைப்பும் அவர்களுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தான்.
கற்பகம் கடுமையாகப் பேசி அவரை விரட்டி விட்டார்.
கண்களில் நீர்வழிய பழைய நினைவுகளுக்குள் அமிழ்ந்து போனவளை உலுக்கினார் கற்பகம்.
“எழுந்திரு நந்தினி. மயூவுக்கு சாப்பாடு ஊட்டிட்டேன். நீயும் பசங்களும் சாப்பிடுங்க. எனக்கு சாப்பாடு வேண்டாம். தூங்கப் போறப்ப ஒரு தம்ளர் மோர் கொடு போதும். போனவன் போயிட்டான். அதெல்லாம் நினைச்சு ஆகப்போறதென்ன. அவன் ஆசைப்படி நீ படிச்சு ஒரு வேலையைத் தேடிக்கோ. மனசை போட்டு அலட்டிக்காதே”
“ஆமாம் அண்ணி. உங்க முகத்தையும் மயூ முகத்தையும் பார்த்து தான் நாங்க எங்களைத் தேத்திக்கிறோம். ப்ளீஸ் அண்ணி. வருத்தப்படாதீங்க..”
மயூரியோடு விளையாடிக் கொண்டிருந்த ப்ரியாவும் ஓடி வந்தாள்.
“அண்ணி எனக்கு ரெகார்ட் நோட்டில வரைஞ்சு கொடுங்க. நீங்க தான் அழகா வரைவீங்களே.”
மலர் மீண்டும் சொன்னாள்.
“அண்ணி நான் மறந்திட்டேன். அண்ணனோட டெத் கிளெய்ம் சாங்ஷன் ஆகற மாதிரி இருக்காம். நாளைக்கு ஆபீஸுக்கு அது சம்பந்தமா உங்களை வரச் சொன்னாங்க. நான் ஆபீஸ் போறப்ப இறக்கி விடறேன். செக் வந்துதுன்னா வாங்கி உங்க அக்கௌண்டில் போட்டிடுங்க.”
“வேண்டாம் மலர். பணத்தை ப்ரியா காலேஜ் பீஸ் கட்ட வச்சுக்க.”
“அதுக்கு பணம் இருக்கு. தேவைப்பட்டா வாங்கிக்கிறேன். நீங்க வச்சுக்குங்க..”
கற்பகம் விசனத்தோடு பார்த்தார்.
முதலில் கணவர்… இப்போது மகன்.. இந்த வீட்டு ஆண்கள் ஏன் இப்படி அகால மரணம் அடைகிறார்கள்? ஆண்துணை இல்லாமல் இந்தப் பெண்களை எப்படி கரைசேர்க்கப் போகிறேன்? இறைவா நீ தான் ஒரு வழி செய்யணும்.
வழக்கம் போல் கணவர் மகன் படங்கள் முன் கண்களை மூடிப் பிரார்த்தித்தவர் அப்படியே உறங்கியும் போனார்.
நள்ளிரவு…
மலையும் காடுமாய் அந்தப் பகுதி முழுதும் இருள் சூழ்ந்திருந்தது. நீண்ட ஒற்றையடிப் பாதை நடக்க நடக்க விரிந்து கொண்டே போய் ஒரு குளக்கரையில் முடிந்தது.
குளத்தில் ஒரு பெரிய மொட்டு மிதந்து கொண்டிருந்தது. பட்டென அதன் இதழ்கள் விரிய உள்ளிருந்து ஒளிப்பிழம்பு போல ஐந்து தலை நாகம் ஒன்று வெளிவந்தது. அதன் கண்களின் உக்ரம் தீப்பிழம்பென ஒளிர்ந்தது. சட்டென பூவிலிருந்து இறங்கி வேகவேகமாக வரத் தொடங்கியது.
அருகே…இன்னும் அருகே பாதத்தை தீண்ட நெருங்க…..
சடாரென ஒரு கரம் பிடித்திழுக்க..
“ஆ…அம்மா..”
ஓலமாய் கேட்டக் குரலில் கற்பகமும் நந்தினியும் திடுக்கிட்டு எழுந்தார்கள்.
“சீக்கிரம் லைட்டைப் போடு நந்தினி!”
உடலெல்லாம் வெடவெடவென்று நடுங்க வியர்வையில் தெப்பலாக நனைந்திருந்தாள் மலர்.
மறுபடியும் கனவா?
“ஆமாம் மா. அதே கனவு. என்னை விடாம துரத்தற கனவு. அந்த கண்ணும் அதில தெரியற உக்ரமும்.. ஏன் மா இப்படி கனவு வருது?”
பயத்தில் தவிக்கும் மகளைத் தேற்ற வழி தெரியாமல் திகைத்தார் கற்பகம். வாரத்தில் ஒருநாள் இப்படி வந்து பயமுறுத்தும் அந்த கனவுக்கு என்ன தான் அர்த்தம்.
அம்மா..அங்கே பாருங்க..இதோ போகுது பாருங்க..
சன்னல் கதவுகள் படபடக்க சுவரோரம் இருந்த மாமரத்திலிருந்து வேகமாக இறங்கிப் போய்க் கொண்டிருந்தது அந்த நாகம்.
பகவானே இந்த வீட்டில என்ன தான் நடக்குது? இந்த கனவும் நாகமும் என்ன சேதி சொல்ல வருது?
(மொட்டு விரியும்)