பத்துமலை பந்தம் | 40 | காலச்சக்கரம் நரசிம்மா
40. உயரே உயரே… என் உயிரே உயிரே..!
மலைச்சரிவில் இருந்த போகர் பள்ளியினுள் நுழையும் வரையில், மயூரி தனது கண்களைத் திறக்கவில்லை. மறந்து போய்க் கீழே நோக்கினால், அச்சத்தினாலேயே தான் தொற்றிக்கொண்டிருக்கும் குகன்மணியின் தோளில் இருந்து நழுவி விடுவோம் என்கிற எண்ணத்தில், அவனது தோளில் புதைந்திருந்த தனது முகத்தை அவள் உயர்த்தவேயில்லை. அவன் பத்திரமாக தன்னைக் கொண்டு சேர்ப்பான் என்கிற நம்பிக்கையுடன், தான் வழிபடும் முருகன் தன்னைக் கைவிட மாட்டான் என்று உறுதியாக நம்பினாள்.
மலைச்சரிவில் அந்த காட்டுக் கொடிக் கயிற்றைப் பற்றிக்கொண்டு இலாவகமாக இறங்கிய குகன்மணி, போகர் பள்ளியில் காலைவைத்து, இருமுறை முன்னும் பின்னுமாக ஊசலாடிவிட்டு உள்ளே குதித்தான். இருவரும் அந்தச் சிறிய மலைக்குகையில் விழுந்து உருண்டனர்.
“இப்போ கண்ணைத் திற மயூரி..!” –குகன்மணியின் கனிவான குரல் கேட்க, மயூரி கண்களை திறந்தாள்.
போகர் பள்ளி இருட்டாகக் காணப்பட்டது. தனது பாக்கெட்டில் இருந்து செல்போன் டார்ச்சை குறிப்பிட்ட திசையில் அடித்து சுட்டிக் காட்டினான் குகன்மணி.
“அதோ பார் மயூரி..! பழனி, பள்ளங்கி அடுத்ததா மூணாவது நவபாஷாணச் சிலை. நம்ம போகர் அமைச்ச மூணாவது சிலை. சரியா இந்த் குகையிலிருந்து, பத்துமலை முருகன் மலையில இருக்கிற வௌவால் பாறை நேராக இருக்கு. அங்கே இருக்கிற நீலி வேல், இந்த போகர் பள்ளியைப் பார்த்து நிக்குது. இப்போ புரியுதா, உன்னை முதல்ல ஏன் வௌவால் பாறைக்கு அழைச்சுக்கிட்டுப் போனேன்னு..? ஒவ்வொரு சஷ்டிக்கும் நான் இங்கே வந்து ஆராதனை பண்ணுவேன்.”
குகன்மணி கூற, மயூரியின் கண்கள் பரவசத்துடன் விரிந்தன. பழனி மலை, பள்ளங்கி மலை என்று இரு நவபாஷாணச் சிலைகளை தரிசித்திருந்த மயூரிக்கு, தான் மூன்றாவது நவபாஷாணச் சிலையைத் தரிசிப்போம் என்று நினைத்துகூட பார்த்ததில்லை. அவனே இவளை அழைத்து வந்து, தன்னை காட்டிக்கொண்டு விட்டான்.
மயூரி கண்கலங்க சிலையை நோக்கி நடந்து அதன் முன்னே அமர்ந்தாள். கண் குளிர முருகனைத் தரிசித்தாள்.
‘ஓம் சிங் ரங்.. அங் சிங்’ –என்று சித்தர் மந்திரத்தைக் கண்மூடி உரைக்க ஆரம்பித்தாள்.
ஒரு விமானப் பணிப்பெண் இப்படிப் பக்தி செலுத்துவது குகன்மணிக்குப் பெருத்த ஆச்சரியம்தான். கண்களில் நீர் வழிந்தோட, வாய் சித்தர் மந்திரத்தை உச்சரிக்க, தியானத்தில் இருக்கும், மயூரியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் குகன்மணி.
பூட்டைத் திறப்பதுங் கையாலே
மனப் பூட்டைத் திறப்பது மெய்யாலே;
வீட்டைத் திறக்க முடியாமல்
விட்ட விதியி தென்கிறார் ஞானப்பெண்ணே!
வாசலிலே யொரு மேல்வாசலந்த வாசலிலே
சிறு வாசலுண்டு; நேசமு டன்றிரு வாசலிற்
பூட்டு நெருக்கம் பாரடி ஞானப்பெண்ணே..!
பாரப்பா இதையறியார் சித்தர் கூடிப் பார்தனிலே
அறுபத்து நாலு யோகம்
ஆரப்பா இருக்குமென்று வெவ்வே றாக
அலைந்தலைந்து கெட்டவர்க ளனந்தங் கோடி நேரப்பா
ராசாங்க யோகம் பார்த்து நிலையறிந்து கண்டவனே
கோடிக் கொன்று வீரப்பா பேசாமல்
மனக்கண் ணாலே விந்துவடா பாய்ந்ததலம்
வெளியைக் காணே.
குகன்மணி தனது வெண்கலக் குரலில் பாடத் தொடங்கினான். அவனது கம்பீரக் குரல் அப்போதுதான் படர்ந்திருந்த இரவில் மலைச்சரிவுகளில் மோதி, குளிர்காற்று அவனது பாடல் வரிகளைக் காற்றில் மிதக்க வைக்க, அவனது குரல், மேலே காட்டுக் கொடியை பற்றிக்கொண்டு பள்ளத்தாக்கில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கனிஷ்காவின் செவிகளில் கேட்டது.
“மிதுன்..! அதோ குகன்மணியோட குரல் கேட்குது..! ஏதோ பக்திப்பாட்டு பாடறான். அப்படின்னா மூணாவது சிலை மலைச்சரிவுல இருக்கிற அந்தக் குகையிலதான் இருக்கு..!” –குதூகலத்துடன் கூறினாள் கனிஷ்கா.
“கொஞ்ச நேரம் மயூரியையும், குகன்மணியையும், அந்த மூணாவது சிலையையும் கொஞ்சம் மறந்துடேன். நம்ம எதிர்காலத்தைப் பற்றிப் பேசலாம். நான் உனக்கு இப்போ ப்ரபோஸ் செய்யப் போறேன். நீ என்ன செய்யறே… நம்ம கல்யாணம் எப்பன்னு எனக்குச் சொல்லப் போறே..!” –மிதுன் ரெட்டி கூறினான்.
“சாரி மிதுன்..! லெட் மீ பீ பிராங்க்..! ஒரு வெறியோட வந்து உன்னோட நிச்சயதார்த்தத்தை நிறுத்தினப்ப வெறும் பொசசிவ்னெஸ் தான் இருந்தது. இப்ப எனக்கு அப்படித் தோணலை. நீ இல்லேன்னா கூட என்னால சமாளிக்க முடியும்னு தோணுது. அதனால, கல்யாணம் பத்தியெல்லாம் இப்ப அவசியம் பேசணுமா..?”
“எப்ப ஒரு பொண்ணு, காதலன்கிட்டே கல்யாணம் பத்தியெல்லாம் நினைச்சுப் பார்க்கணுமான்னு சொல்றாளோ, அப்ப அவ மனசுல புதுசா யாரோ புகுந்து இருக்கான்னு அர்த்தம். நீ இப்படிப் பேசறதுக்கு வேற ஏதாவது காரணம் இருக்கா..?” –மிதுன் ஆவேசத்துடன் கேட்டான்.
“நோ வே..! ஐ ஸ்டில் லவ் யு. பட்… என் குடும்பச் சூழ்நிலையை நினைச்சுப் பார்க்க வேண்டியிருக்கு…”
“வாட் டூ யு மீன்..? நீ அவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யவேதானே, நான் என்னோட எங்கேஜ்மென்ட்டை கேன்சல் செய்துட்டு உன் பின்னாடி வந்திருக்கேன். பிரஸ் கான்பிரன்ஸ்ல நீதான் என் மனைவின்னு வேற அறிவிச்சிருக்கேன். இனிமே… நோ கோயிங் பாக். நீ என்னைத் திருமணம் செய்துக்கிட்டே ஆகணும். இல்லேன்னா என்னோட எதிர்காலமே போயிடும். காதலைக்கூடக் காப்பாத்த தெரியாத ஒரு வீக் ஹீரோன்னு பெண்கள் முடிவு கட்டிட்டா, என் கதை முடிஞ்சுது. அன்னைக்கு ஒரு நாள் பள்ளங்கி மலையில, நானும், நீயும் நம்பிக்கை விளையாட்டு விளையாடினோம் இல்லே… நீதானே, ஒருத்தர் மேல ஒருத்தர் நம்பிக்கையோட இருக்கணும்னு நம்பிக்கை விளையாட்டை, எனக்கு அறிமுகப்படுத்தினே..! இப்ப நானே உன்னோட அந்த விளையாட்டை விளையாடப்போறேன். நான் உன் மேல முழு நம்பிக்கையை வச்சிருக்கேன். நீயும் என்மேல அதே நம்பிக்கையை வச்சிருக்கியான்னு பரிசோதனை செய்யப் போறேன்.” — மிதுன் ரெட்டி அங்கிருந்த மூங்கில் மரங்கள் அமைத்திருந்த மேடையின் அருகே நின்று கொண்டு தனது கைகளை கட்டிக்கொண்டான்.
“இப்ப நான் நட.. நடன்னு சொல்லுவேன். மலைச்சரிவு விளிம்பில் நில்லுன்னு சொல்லுவேன். நீ கண்களையும் திறக்க கூடாது. திரும்பியும் பார்க்க கூடாது. பள்ளங்கி மலையில நாம் விளையாடின அதே நம்பிக்கை விளையாட்டுதான். பீ ரெடி..!” –மிதுனின் குரலில் காட்டம் ஒலித்தது.
“இது இப்ப அவசியமா..?” –கனிஷ்கா கேட்க, அவன் பதில் கூறவில்லை.
“சரி… அஸ் யு விஷ்..!” –என்றபடி, கண்களை மூடிக்கொண்டு அவன் முன்பாக நின்றாள்.
“நட..!” –மிதுன் கூறினான்.
ஓரடி பின்பாக நடந்தாள் கனிஷ்கா.
“நட..!” –மிதுன் மீண்டும் கூறினான்.
இன்னுமொரு அடி பின்பாக நடந்தாள் கனிஷ்கா.
அப்படியே மிதுன் ‘நட’ என்று கூற, அவள் பின்னால் நடந்தபடியே மலைசரிவின் விளிம்புக்கு வந்தாள்.
அடுத்த அடியில் அதலபாதாளத்தில் விழுவாள் என்கிற நிலையில் “நில்” என்றான் மிதுன்.
“இப்போ என்னோட முறை..!” –மிதுன் கூற, கனிஷ்கா எரிச்சலோடு அவனைப் பார்த்தாள்.
“எனக்கு அந்தச் சந்தேகம் இல்லை..! நீ என்னை முழுசா நம்பறேன்னு எனக்கு தெரியும்..!” –கனிஷ்கா கூறினாள் .
“இல்லை..! உன்னைப் பரிசோதனைக்கு ஆட்படுத்தினேன். நானும் அந்த அக்னிப் பரீட்சையைச் செய்துக்கணும். கமான்..! இப்ப நீ கட்டளைகளைச் சொல்லு..! நான் பின்னாடியே நடக்கிறேன்..!” –என்று கண்களை மூடி அவள் முன்பாக நின்றான்.
ஒரு கணம் அவனை வெறித்துப் பார்த்தாள்..! மிதுன் என்கிற எக்ஸ்டரா லக்கேஜைக் கழட்டி விடுவதற்கு அவனே ஒரு நல்ல வாய்ப்பைத் தருகிறான்.
கனிஷ்காவின் கண்முன்பாக குகன்மணியின் கம்பீர தேகம் தோன்றியது. மிதுன் ரெட்டி இனி தேவையில்லை என்று ஆழ்மனதில் குரல் ஒன்று கூறியது. பிறகு என்ன… தனது முன்பாகக் கண்களை மூடி நிற்கும், மிதுன் ரெட்டியைப் பார்த்தாள்.
இனி இவளது வாழ்வில் மிதுன் ரெட்டி என்கிற கதாபாத்திரம் இருக்கப் போவதில்லை. காரணம், அவள்தான், மலை விளிம்பை நோக்கிப் பின்னாலேயே நடக்கும் மிதுன் ரெட்டிக்கு, ‘நில்’ என்கிற கட்டளையைக் கூறப் போவதில்லையே..!
போகர் பள்ளியில் பாடிக்கொண்டிருந்த குகன்மணியின் கண்கள், வெளியே பார்த்தன. வானில் வைரமணிகளாக நட்சத்திரங்கள் சுடர்விட்டுக் கொண்டிருக்க, திடீரென்று, ஹோ என்கிற ஓலத்துடன் பள்ளத்தாக்கில் விழும், மிதுன் ரெட்டி அவன் கண்களில் தென்பட்டான்.
குகன்மணியின் கண்களில் உக்கிரம். அண்ணாந்து குகையின் மேல்கூரையைப் பார்த்தான்.
“வினாச காலே விபரீத புத்தி..!” –என்றபடி மீண்டும் அவன் மயூரியைப் பார்த்தபோது, அவனது கண்களில் சாந்தம் தவழ்ந்தது.
1 Comment
Very nice