தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 10 | தனுஜா ஜெயராமன்

 தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 10 | தனுஜா ஜெயராமன்

மாலை. பீச்சில் இருக்கும் மணலை அளந்து கொண்டே “சொல்லுடா..? என்ன விஷயம்..? ஏன்டா வந்ததுலயிருந்து சும்மாவே கடலை வெறிச்சிகிட்டு உட்கார்ந்திருக்கே..?”…என உலுக்கினான் ஹரிஷ்..

“எப்படிச் சொல்லுறதுன்னு புரியலைடா..?”

“டேய், சும்மா ஜவ்வு மாதிரி இழுக்காம சொல்லித் தொலைடா… கடுப்பா வருது..”

“உ..ன்.. கிட்ட ஒரு உண்மையை மறைச்சிட்டேன்..”

“என்ன உண்மைடா அது..?”

அம்ரிதாவை ஹோட்டலில் சந்தித்தது அவள் ப்ளாக்மெயில் பண்ணியது என ஒன்றுவிடாமல் சொல்லத்தொடங்கினான்..

அவன் சொல்லி முடித்ததும்… “அடப்பாவி..! நினைச்சேன்.. அப்பவே உன்மேல எனக்கு சந்தேகம்டா… இவ்ளோ பெரிய வேலையை சத்தமில்லாம பண்ணியிருக்க.. பெரிய ஆளுதாண்டா நீ”.

“ஹரிஷ்… நானே பயந்து போயிருக்கேன். நீ வேற… ஏன் கடுப்பேத்துற..?”

“டேய்.. அது உன் கொழந்தையாடா..?”

“அவ அப்படித்தான் சொல்றா…”

“அதுக்கு வாய்ப்பிருக்காடா..?”

அமைதியாக இருந்தான்.… முகேஷ்.

“மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி… அப்ப அது நீதானா..? படுபாவி..”

“டேய்..! அன்னைக்கு… ஏதோ… தெரியாம… நடந்த ஒரு விஷயத்துக்கு இவ்ளோ பெரிய தண்டனையா..? இப்ப நான் என்னடா பண்ணுறது..? நீ ஏதாவது வழி சொல்லுவன்னு பாத்தா… நீயும் என்னை பயமுறுத்தறியே..?”


“முதல்ல என்ன நடந்ததுன்னு தெளிவாச் சொல்லு… அப்புறம் என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்…” என்று ஹரிஷ் கேட்க…

முகேஷ் அன்று நடந்ததை ரீவைண்ட் செய்ய…

ன்று திருச்சியின் ஒரு மதிய நேரத்தில்… அம்மாவும், அப்பாவும் கல்யாணத்திற்குச் சென்றிருக்க முகேஷ் டிவியில் படம் பார்த்துக் கொண்டிருந்தான்.

அம்மா காலையில் சொல்லியது நினைவுக்கு வந்து எரிச்சலாக இருந்தது. “டேய் முகேஷ்..! நைட் டிபனை எதிர்வீட்டு அம்ரிதா தரேன்னு சொல்லியிருக்கா.. போய் சாப்பிட்டுக்க…”

“ம்மா..! உனக்கு ஏதாவது யோசனை இருக்கா..? ஏன்மா இப்படி பண்ணுற..? நீ எதுவும் செஞ்சி வைக்கலையா..?”

“நான் செய்யறேன்னு தான்டா சொன்னேன். அவதான் நம்ம முகேஷிக்கு டிபனை கூட நான் தரமாட்டனான்னு கோவிச்சுகிட்டா… அதான்…” என இழுக்க…

“ம்மா போம்மா… அவ.. அவங்க சொன்னா.. எனக்கு டிபன்லெல்லாம் எதுவும் தேவையில்லை… நான் பாத்துக்கறேன்.. நீ போ..”

“டேய்.! அவ பாவம்டா… குழந்தையை வைச்சுக்கிட்டு சிரமப்பட்டு உனக்காக செஞ்சி தர்றா… வேணாம்னு சொல்லாதே.”

‘க்கும்… இந்த அம்மாவுக்கு ஒரு இழவும் புரியப் போவதில்லை.. வெள்ளந்தியாவே இருக்கா…’ என மனதுக்குள் நினைத்தவன்.. “சரி..! நீ போம்மா. நான் பாத்துக்கறேன்…” என அப்போதைக்கு அந்த விஷயத்திற்கு முற்றுபுள்ளி வைத்தான். ஆனால் டிபனெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிடவேண்டும் என மனதிற்குள் தீர்மானம் செய்து கொண்டான்..

அம்மா போனதும் ஹரிஷ்க்கு போன் செய்தான்.

“சொல்லு மச்சி..”

“சாயங்காலம் வீட்டுக்கு வர்றியாடா..?”

“ஏன்டா… என்ன விஷயம்..?”

“டேய்… அம்மாவும் அப்பாவும் ஒரு கல்யாணத்துக்கு வெளியூர் போறாங்க.. நாளைக்கு தான் வருவாங்க..”

“அடிதூள்… இதை சொல்லுடா மொதல்ல… அப்ப… மச்சி, ஓபன் தி பாட்டில் தான்.. கல்யாண், சுதிஷ் கூட ஈவினிங் வர்றதா சொல்லியிருந்தாங்க. அவங்களையும் கூட்டிட்டு வந்துடுறேன்.”

“ஓக்கே டா… வந்துருங்க..” என உற்சாகமானான் முகேஷ்

“ஈவினிங் ஷார்ப்பா ஆறுமணிக்கு உன் வீட்ல இருப்போம்… ஓக்கே..” என போனை வைத்தான்.

சாயங்காலம் முகேஷ் வீட்டில் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக…நண்பர்கள் கூட்டம் கச்சேரியை ஆரம்பிக்க…

“டேய்..! ஹரிஷ் பாத்துடா..!. அப்பா அம்மாவுக்குத் தெரிஞ்சா அவ்ளோ தான்..”

“சும்மா நல்லவன் மாதிரியே நடிக்காத மச்சி… நீ யார்னு எனக்கு தெரியும்.. நான் யார்னு உனக்கு தெரியும்..” எனக் கலகலவெனச் சிரிக்க… கல்யாணும் சுதிஷூம் கூடச்சேர்ந்து முகேஷைக் கலாய்த்தனர்..

இப்படியாக அரட்டைக் கச்சேரிகளோடு குடியும், சிகரெட்டுமாக… ஆட்டம் போட்டு கொண்டிருந்தனர்.

“ஓக்கேடா..! நாங்க கிளம்புறோம். அந்த பாக்கை எடுடா… போட்டுகிட்டு நல்ல பிள்ளையாட்டம் கிளம்பிடுறோம்.. எங்கப்பா கண்டுபிடிச்சா பின்னிப்புடுவாரு..” என சிரித்துக்கொண்டே… ஹரிஷ் மற்றவர்களுடன் கிளம்பினான்.

அவர்கள் போனதும் முகேஷ் கதவைச் சாத்த வெளியே வர… அம்ரிதா கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்து கொண்டிருந்தாள்.. கையில் தட்டுடன்…

‘ஐய்யோ..! இவளை எப்படி மறந்து போனேன்..? இப்ப டிபன் ரொம்ப முக்கியமா..?’ எனக் கடுப்பாக வந்தது. வீட்டில் போட்டு கொடுத்து விடுவாளோ என பயமாக வேறு இருந்தது. எனினும் சங்கடமாக இளித்து வைத்தான்.

நேராக உள்ளே வந்தவள்… டைனிங் டேபிளில் டிபனை வைத்துவிட்டு… மூக்கை சுளித்து, “என்ன முகேஷ்… தண்ணீ பார்ட்டியா..?” எனச் சிரித்தாள்..

சங்கடமாக நெளிந்தவன்.. “ப்ரண்ட்ஸ் வந்திருந்தாங்க… ப்ளீஸ், அம்மாகிட்ட சொல்லிடாதீங்க…”

“ச்சே.. சே.. இதையேன் நான் சொல்லப்போறேன்..? இந்த வயசுல ஜாலியா இல்லாம வயசானப்புறமா ஜாலியா இருக்கமுடியும்..?” எனக் கண்ணடித்தாள்.

“ஆமா… நீ சாப்பிட வருவேன்னு எவ்வளவு ஆசையாக் காத்திருந்தேன்..? நீ வரவேயில்லை… அதான் நானே வந்திட்டேன்…” என இளித்தாள்.

எதுவும் பேசாமல் அமைதியாக நின்றவன்… ஒரு மாதிரியான சிரிப்புடன் நெருங்கியவளைக் கண்டதும் விக்கித்து போனான்.

சட்டென அவனை இறுக அணைத்துக் கொண்டாள் அம்ரிதா. அவளது மெல்லியதான நைட்டியும் அளவுக்கதிமான ஒப்பனையும், மது போதையும் அவனைப் பலவீனமாக்கியதில் வியப்பில்லை.… சட்டென பஞ்சும் நெருப்பும் பற்றி கொள்ள தானே செய்யும்..?

அடுத்தடுத்த நாட்களில் அம்ரிதாவின் முகத்தை நேரிடையாகக் காண தயங்கி ஓடி ஒளிந்தவன். சில நாட்களிலேயே சென்னையில் வேலை கிடைத்தது மனதுக்குள் நிம்மதியை வரவழைத்தது. அம்ரிதா அவனது கணவரின் திடீர் வருகையால் அவளும் சற்று பிஸியாகிவிட.. முகேஷ் சென்னை கிளம்பிவிட்டான்… முற்றிலுமாக அம்ரிதாவை மறந்தே போய்விட்டான்.

அவனது அம்மாவின் மூலமாக அடுத்த சிலமாதங்களில் அம்ரிதா வீட்டைக் காலி செய்துவிட்டு சென்றது தெரிந்ததும் இன்னமும் நிம்மதியாகிப் போனது.. ஆனால்… இதோ.. இப்போது..வந்து நிற்கிறாள்..

ன்று நடந்ததை ஹரிஷிடம் சொல்லி முடிக்க..

“நான் உன்னை என்னவோன்னு நினைச்சேன்.. பலே ஆளுடா நீ..” எனக் கலாய்த்தான் ஹரிஷ்.

“டேய்..!. எல்லாம் உன்னால தான்டா… வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல ஊத்திக் கொடுத்த… இப்ப இப்படி வந்து நிக்குது…”

“இல்லைன்னா மட்டும் இவரு… ஒண்ணும் தெரியாத பாப்பா… போடா டேய்.. எப்படிடா செய்யுறதெல்லாம் செஞ்சிட்டு நல்லவன் மாதிரியே நடிக்குறே..?”…எனச் சிரித்தவனை…

“இதுக்கு ஒரு வழி சொல்லுடான்னா… சும்மா வெறுப்பேத்திட்டுக் கெடக்க…”

“இவரு பண்றதெல்லாம் பண்ணிடுவாரு… நாம வழி சொல்ணுமாமா..? சரிடா முறைக்காத… நீ மொதல்ல அவளுக்குப் பணம் எதுவும் கொடுக்காத… கொஞ்சம் டபாய்ச்சுகிட்டே இரு”…

“எப்படிடா..? அவ தான் மெரட்டுராளே..?”

“ஒருவாட்டி கொடுத்து பழகினா அதுவே வழக்கமாகிடும்…நீ சினிமா எல்லாம் பாத்ததில்லையாடா..?”

“டேய்…”

“மொதல்ல அவ சொல்றது உண்மை தானான்னு நாம கண்டுபிடிக்கணும்.… அப்புறம் மத்ததெல்லாம் யோசிக்கலாம்.. ஒரு ஐடியா இருக்கு என்கிட்ட..”

“என்னடா ஐடியா..? நாம எப்படி அதைக் கண்டுபிடிக்க முடியும்..?”

“என் கிளையண்ட் ஒருத்தர் டிடக்டிவ் ஏஜென்சி வைச்சிருக்காரு. அவருகிட்ட உதவி கேட்கலாம்..”

“டேய்..! வெளியே தெரிஞ்சா அவ்ளோதான்… அம்மா, சுதா..ன்னு பயந்து வருதுடா..”

“நமக்கு வேற வழியில்லை.. ப்ளாக்மெயில் பண்ண ஆம்பிச்சா… அது நிக்கவே நிக்காது.. பணத்தை கொடுத்துட்டேயிருப்பியாடா… பயப்படாத அவர் நம்பிக்கையானவர்… தைரியமா நம்பி இறங்கலாம்….”

முகத்தில் குழப்ப ரேகையுடன் கலவரமாய் ஹரிஷை பார்த்தான் முகேஷ்.
“சரிடா.. நான் அவர்கிட்ட போன்ல பேசிட்டு சொல்றேன்… நாளைக்கு நாம ரெண்டு பேரும் அவரைப் போய்ப் பார்க்கலாம்.. தைரியமாயிரு..”

ஹரிஷின் வார்த்தைகள் தெம்பூட்ட சற்று ஆசுவாசமாக உணர்ந்தான். நீண்ட பெருமூச்சு ஒன்று வெளியிட்டு நிம்மதியடைந்தான். ஆனால் சில நேரங்களில் வாழ்க்கையில் விதி விளையாடுவதை மதியால் கூட வெல்லமுடிவதில்லையே… அடுத்தடுத்து வரப்போகும் சிக்கல்களை அறியாமல்… வீட்டுக்கு கிளம்பினான் முகேஷ்..

–தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...