தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 7 | தனுஜா ஜெயராமன்

 தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 7 | தனுஜா ஜெயராமன்

காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது. தந்திரமாகத் தான் விரட்டியடிக்கவேண்டும். அதிலும் இது சாதாரணப் பாம்பல்ல. ஆலகால விஷமடங்கிய கொடூரப் பாம்பாயிற்றே என்று கவலைகள் வாட்ட இரவெல்லாம் விழித்தபடி யோசித்துக் கொண்டே படுத்திருந்தவன் விடியற்காலையில் அசந்து தூங்கிப் போனான்.

அவனை எழுப்ப மனமில்லாத சுதா…சத்தமில்லாமல் எழுந்து கதவை மெதுவாக சாத்திவிட்டுப் போனாள்.

ஐன்னல் வழியாகச் சூரியன் கட்டில் வரை நேரடியாகச் சுட்டெரித்துக் கொண்டிருந்தான். வெளிச்சம் கண்களைக் கூசியது. பதறியடித்து எழுந்தவன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்பதைக் காட்டியது. ‘இவ்வளவு நேரமா தூங்கி விட்டோம்..? அடடா..!’ எனப் போர்வையை உதறி எழுந்தான்.

“சுதா எழுப்பக் கூடாதா..? ஆபீஸ் போகணும்ல..?” என செல்லமாகக் கடிந்து கொண்டான்.

“சாரிங்க..! ராத்திரியெல்லாம் புரண்டு புரண்டு படுத்திட்டுருந்திங்க தூங்காம.. ஏதாவது உடம்புக்கு முடியலையா? லீவ் போடுங்களேன்..” என நெற்றியில் கைவைத்துப் பார்த்தவளின் கண்களை நேருக்கு நேராகப் பார்க்க முடியவில்லை முகேஷால்… மனது கூசியது தன்னை நினைத்து…

“அதெல்லாம் ஒண்ணுமில்லைமா..! ஆபிஸில் வேலை அதிகம், முடிக்க வேண்டியது நிறைய பென்டிங் இருக்கு…” என்றான்.

சுதா போனதும்… உடல் அலுப்பாக இருந்ததாக உணர்ந்தவன் அலுவலகத்திற்குப் போன் செய்து அரைநாள் லீவ் சொல்லி விட நினைத்து மொபைலை எடுத்தான். ஹரிஷ் போன் செய்திருந்தான். அப்புறம் வேறு ஏதோ தெரியாத நம்பரிலிருந்து மூன்று முறை கால் வந்திருந்தது.

ஆபிஸிற்கு போன் செய்து மேனேஜரிடம் அரைநாள் லீவ் சொல்லி விட்டு… ஹரிஷை அழைத்தான்.

“சொல்லுடா மச்சான்? தூங்கிட்டேன்டா… ஜஸ்ட், இப்ப தான் எழுந்தேன்.”

“பரவாயில்லைடா..! சும்மா தான் பண்ணேன்.. ஆபிஸ் போகலையா..?”

“மதியம் மேல போகணும்டா. உடம்பு டயர்டா இருக்கு.”

“சரிடா..ஒண்ணுமில்லை.. அந்த நம்பருக்கு கால் பண்ணி யார்னு கண்டுபிடிச்சியா..? அதைக் கேக்கத் தான் போன் பண்ணேன்.”

‘சொல்லிவிடலாமா..?’ என ஒரு நிமிடம் தயங்கியவன்… இப்போது வேண்டாம்.. தேவையில்லாத பதட்டம். தேவைப்பட்டால் பிறகு சொல்லிக் கொள்ளலாம்…’ என நினைத்தவன் “இல்லைடா, மறந்துட்டேன்…” என பொய் சொன்னான்.

“நீ தானேடா ரொம்ப பயந்த… அதான் கேட்டேன்… சரி ஏதாவதுன்னா கால் பண்ணு… சாயங்காலம் மறக்காம க்ளப்பிற்கு வந்திடுடா… அங்க பாக்கலாம்..” என போனை வைத்து விட்டான் ஹரிஷ்.

‘அந்தப் புது நம்பருக்குக் கால் பண்ணிப் பார்க்கலாமா..?’ என யோசித்தவன்.. பிறகு வேண்டாம் என நினைத்து தேவையில்லாத ஆணி என ஒதுக்கினான்.

“அதற்குள் எழுந்துட்டீங்களா? இன்னும் கொஞ்ச நேரம் படுக்குறதுதானே..?” என சுதா காபியை நீட்ட.. வாங்கிக் குடித்தவன் மற்ற வேலைகளில் மூழ்கி போனான்.

திய உணவினை வீட்டிலேயே உண்ட பிறகு அலுவலகம் கிளம்பினான். காரைச் செலுத்தியவனின் மனம் முழுவதும் குழப்பமாக இருந்தது. இவ்வளவு வருடங்களுக்கு பிறகு அமிர்தா ஏன் தற்போது மீண்டும் தன் வாழ்க்கையில் நுழைகிறாள் எனக் கவலைரேகைகள் முகத்தில் படர, அலுவலகத்தில் நுழைந்தான்.

காரை பார்க் செய்து… லிப்ட்டில் ஏறியவன், தன் டெஸ்கை அடைந்து வேலையில் மூழ்கிப் போனான்.

சரியாக நான்கு மணிக்கு ரிசப்ஷனிலிருந்து போன் வந்தது. முகேஷைப் பார்க்க யாரோ வந்திருப்பதாக…

யாராயிருக்கும் என்ற யோசனையுடன்… கீழே இறங்கியவனுக்கு ரிசப்ஷனில் நுழைந்ததும் தூக்கிவாரி போட்டது…

அ..ம்..ரி..தா.. நின்றிருந்தாள்.

‘வேறுவழியில்லை…சந்தித்து தான் ஆக வேண்டும்.. தனது தலையெழுத்து.’ என நினைத்தவன், அவளை நெருங்கினான்…

“என்ன முகேஷ்..? எப்படியிருக்க..?” என அலட்சியமாகச் சிரித்தவளை ஆராய்ந்தான்.

முன்பை விட அதீத மேக்கப்.! சற்றுப் பெருத்திருந்தாள்.

“இங்கே ஏன் வந்த..? சரி வா…” என கேன்டீனுக்குள் அவசரமாகத் தள்ளிச் சென்றான்.. யாராவது இவளோடுத் தன்னோடு பார்த்தால் என்ன செய்வது என்ற பதட்டம் வேறு.

“இங்க எதுக்கு இப்போ வந்தே..?” என்றான் கோபமாக..

“ஏன் கோபப்படுற…? நான் இங்க வரக்கூடாதா..? எனக்கு எல்லா உரிமையும் இருக்கு…” என்றாள் திமிராக.

“என்ன உரிமை..? வந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்பு… எனக்கு நிறைய வேலையிருக்கு…”

“ஏன் அவசரப்படுற..? என்னைத் தொரத்துரதுலையே குறியாயிருக்கே. நீயே நினைச்சாலும் அது உன்னால முடியாது…”

“அம்ரிதா… விளையாடாத.. எனக்கிப்ப கல்யாணம் ஆகிடுச்சி… குழந்தைகூட இருக்கு..”

“தெரியுமே..! உன் ஜாதகமே எனக்குத் தெரியும்… அப்புறம்… என்னது, நான் விளையாடுறனா…?” என கபகபவெனச் சிரித்தாள்.

சிரிப்பவளைக் கண்டு ஆத்திரமாக வந்தாலும்… அடக்கிக் கொண்டு பொறுமையுடன்… “தெரிஞ்சுமா என்னைப் பாக்க வந்தே..?” எனக் கடுப்படித்தான்.

“நாங்க இந்த ஏரியாக்கு வந்து ஆறுமாசமாகுது. அவர் ஆறு மாசத்துக்கு முன்னே இறந்துட்டாரு. இப்ப நானும் கொழந்தைகளும் தனியாத் தான் இருக்கோம்…” என அழுத்திச் சொன்னாள்.

“சரி… அதுக்கென்ன இப்ப..? நான் அதுக்கென்ன செய்யணும்..?”

“என்ன இப்படிச் சொல்லிட்ட..? என்னைப் பார்த்தா பாவமா இல்லையா..?” என உதட்டைச் சுழித்தாள்.

“இல்லை…” என்றான் முறைப்புடன்.

“அப்ப எனக்கும் அப்படித்தான்…” என முறைத்தாள்.

“இப்ப என்ன வேணும் உனக்கு..?”

“நீதான் வேணும்…” என அதிர வைத்தாள்.

“அ…ம்..ரி…தா… விளையாடாத.”

“நான் ஏன் விளையாடணும்..? சீரியஸாத்தான் சொல்றேன்.”

பக்கென இருந்தது முகேஷிற்கு. “நீ கெளம்பு. எனக்கு நிறைய வேலையிருக்கு.”

“ஆனா… எனக்கு உன்னைச் சுத்திச் சுத்தி வர்றதைத் தவிர வேறு வேலையே இல்லையே..” என்றாள் எகத்தாளமாய்.

“இங்க பாரு… இப்ப நான் கல்யாணம் ஆனவன்.. புரிஞ்சிக்கோ..”

“அதனாலென்ன..? எனக்கும் உன்மேல முழு உரிமையிருக்கு. நீயும் புரிஞ்சிக்கோ…”

“என்ன உரிமை..? சும்மா மெரட்டுறியா..?”

“நான் ஏன் மெரட்டணும்..? நீயே போகப்போகத் தெரிஞ்சிப்ப.. இப்ப அலட்சியபடுத்தற… விஷயம் தெரிஞ்சா என் கால்ல விழுந்து கெஞ்சப்போற…”

“என்ன விஷயம்..? நான் ஏன் கெஞ்சணும்..? நான்சென்ஸ்…” என அலட்சியமாகப் பேசியவனைக் கையமர்த்தி கபகபவெனச் சிரிக்கிறாள்.

அந்த சிரிப்பு முகேஷின் வயிற்றில் புளியை கரைக்கிறது. கிராதகி.. ராட்சசி என மனதுக்குள் திட்டினான்.

“சொல்ல வந்ததைச் சொல்லிட்டுக் கிளம்பு…” என்றான் அவசரமாக.

“அது போகப்போக உனக்கே புரியும். நான் கிளம்புறேன்..” என அவன் கன்னத்தில் செல்லமாய்த் தட்டிவிட்டு… டக் டக்கென ஹைஹீல்ஸ் ஒலி எழுக்க ஒயிலாக நகர்ந்து போனதைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

எவ்வளவு நேரம் சிலையாக உட்கார்ந்திருந்தானோ அவனுக்கே தெரியாது. என்ன உரிமை அது இது என உளறுகிறாள்… எப்படிச் சமாளிப்பது இவளை எனப் புரியவில்லை. இவளால் எழுந்த சிக்கலை எப்படி தீர்ப்பதென கவலை பீடிக்க அமர்ந்திருந்தான்.

–தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...