பயணங்கள் தொடர்வதில்லை | 6 | சாய்ரேணு

 பயணங்கள் தொடர்வதில்லை | 6 | சாய்ரேணு

6. சோப்பு

“ஹாட் சூப்ஸ் – டொமாட்டோ, வெஜிடபிள், மின்ஸ்ட்ரோன், அவகாடோ கார்ன். ஃப்ரெஷ் ஜூஸஸ் – ஆரஞ்ச், ஆப்பிள், வாட்டர்மெலன், பொமோக்ரானெட், க்ரேப்ஸ், லெமன்” என்று ஒப்பித்து முடித்த பேரர் “காஃபி?” என்ற கலிவரதனின் கேள்வியால் கோபப்பட்டிருப்பாரோ என்னவோ, வெளியே ஒன்றும் தெரியவில்லை. அதே மெஷின்தனமான குரலில் “யெஸ் சார், காஃபி, சாய், மசாலா சாய், மில்க், பாதாம் மில்க், பெப்பர் ஹல்தி மில்க், லெமன் மிண்ட் டீ” என்றார்.

“காஃபி” என்றார் கலிவரதன். பேரர் குறித்துக் கொண்டு காமுப் பாட்டியின் பக்கம் திரும்பினார்.

“நன்னா மிளகு தட்டிப் போட்டு பால் கிடைக்குமோ?” என்றாள் காமுப் பாட்டி.

“இருக்கு மேடம்” என்று சொல்லி, தேவசேனாபதி குடும்பத்தில் மற்றவர்கள் கேட்ட காப்பி, மிண்ட் டீ ஆகியவற்றைக் குறித்துக் கொண்டு நகர்ந்தார் பேரர்.

இரயிலில் கடைசியாக ஏறியவர்கள் அவர்கள் தானென்றாலும் முதலில் டைனிங் காருக்கு வந்தவர்கள் அவர்கள்தான். பிறகு பயணிகள் ஒவ்வொருவராக வெளியே இருந்த வாஷ் பேஸினில் லிக்விட் சோப் கொண்டு கைகளை நன்றாக அலம்பிக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள்.

அந்த டைனிங் கார் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்ததால், அங்கே சற்று இடப் பற்றாக்குறை இருந்தது அவ்வளவாகத் தெரியவில்லை. (காமுப் பாட்டி மட்டுமே அதைக் கவனித்தவள்.) அருமையான விரிப்புகளுடன் சற்று நீண்ட மேஜைகளும் இருக்கைகளும் இடையில் இடம்விட்டு மூன்று வரிசைகளாகப் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு வரிசைக்கும் நான்கு மேஜைகள். ஒரு மேஜைக்கு நால்வர் அமரலாம்.

மணி பனிரெண்டேகாலை நெருங்கியபோது, ஸ்பெஷல் கோச்சில் இருந்த எல்லோருமே டைனிங் காரில் குழுமிவிட்டார்கள். யாரார் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் எல்லோருக்குமே இருந்தது போலிருந்தது! எல்லோரையும் சௌகரிகமாக அமரச் செய்த பேரர்கள், அவர்கள் என்ன அருந்துகிறார்கள் என்பதற்கு ஆர்டர் எடுத்துக் கொண்டு விலகினார்கள். பத்தே நிமிடத்திற்குள் அவர்கள் கேட்டவை வந்துவிட்டன. இத்தனை சூப் வகைகள் இருந்தும், இரவு நேரமாக இருந்தும் அவர்களில் பலர் காப்பியே கேட்டதைக் கண்டு பேரர்கள் தங்களுள் ரகசியமாகப் பேசிச் சிரித்துக் கொண்டார்கள்.

முதலில் ஓரக் கண்ணால் மற்றவர்களைப் பார்த்த பயணிகள், பிறகு தங்களுக்கு அணுக்கமானவர்களை முதலில் அணுகி, அவர்களும் தங்களோடு பயணம் செய்வதற்கு மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டார்கள். மெல்ல மெல்ல எல்லோருமே ஒவ்வொருவருக்கும் முகமன் கூறி நலம் விசாரித்தார்கள். பிறகு ஆங்காங்கே சிறுசிறு கூட்டமாக அமர்ந்துகொண்டு பேச ஆரம்பித்தார்கள்.

அழகான சுற்றுப்புறம், சுவையான பானம், சுற்றிலும் தெரிந்த மனிதர்கள், ஒரு ரிலாக்ஸ்டான பயணம், பிறகு சௌகரியான தங்கும் இருப்பிடங்களுடன் காண்பதற்கு ஒரு கல்யாண வைபவம் என்று எதிர்நோக்கியதால் அப்போதைக்கு மனதில் இருந்த கவலைகள், பயங்கள், துயரங்கள் எல்லாவற்றையும் மறந்து எல்லோரிடமும் ஒருவித மகிழ்ச்சியும் அமைதியும் தலைதூக்கியது…

சரியாக அந்த நேரம் “ஹலோ, யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்!” என்று கண்ணாடி டம்ளரில் ஸ்பூனால் கிணுகிணுவென்று தட்டியவாறே கூறினார் முன்னால் இருந்த மேஜையில் அமர்ந்திருந்த சுப்பாமணி.

“எல்லோருக்கும் நமஸ்காரம். சங்கர் சார் – நம்ம எல்லோருக்குமே சொந்தக்காரர் – அவருடைய டாட்டர் கல்யாணத்திற்கு நீங்க எல்லோருமே வந்திருந்து ஆசீர்வாதம் பண்ணண்ணும்ங்கறது அவருடைய ஆசை. அதனால்தான் இந்தப் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நீங்க எல்லோரும் நல்ல சௌகரியமா, சந்தோஷமா பயணம் செஞ்சு கல்யாணம் நடக்கற இடத்தை அடையணும் என்பதற்காகவே எல்லா ஏற்பாடும் பார்த்துப் பார்த்துப் பண்ணியிருக்கோம்.”

எல்லோரையும் பார்த்துப் பொதுவாகப் பேசிய சுப்பாமணியின் பார்வை இப்போது ஒவ்வொருவர் மீதும் நின்று, தயங்கி, நகர்ந்தது. இது ஒரு முன்னுரைதான், இன்னும் பேச்சு முடியவில்லை என்று உணர்த்தியது.

தர்மா சுப்பாமணியையே உற்றுப் பார்த்தான். தர்ஷினியின் காதுகள் அவரின் பேச்சை நோக்கித் தீட்டப்பட்டு, மானசீகமாகக் குறிப்புகள் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தது. தன்யாவின் கண்களும் சிந்தனையும் சுப்பாமணியின் பார்வையைத் தொடர்ந்தே ஓடின.

“சாதாரணமா கல்யாணங்கள்ள பிள்ளை வீட்டாருக்குத்தான் எல்லா உபசாரங்களும் செய்வாங்க. பொண்ணு வீட்டுக்காரங்களை சம்பந்திகள் கண்டுக்கவே மாட்டாங்க… சொல்லப் போனா அவங்களை வேலைக்காரங்க மாதிரியும் அடிமை மாதிரியும் நடத்துவாங்க. சில சமயம் திருட்டுக் குற்றம்கூடச் சுமத்துவாங்க…”

ஏன் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தோர் தவிக்கிறார்கள்? அந்த எண்பது வயதுப் பெரியவரின் முகத்தில்தான் எத்தனைப் பீதி!

“அதுவும் கல்யாணம் லவ் மாரியேஜ்னா, கேட்கவே வேண்டாம்! கல்யாணத்துக்கு உதவி செய்யறவங்களைக்கூடக் கொலைக் குற்றவாளி மாதிரிப் பார்ப்பாங்க. அந்தப் பெண் மீது இல்லாத அவதூறுகளை எல்லாம் அள்ளி வீசுவாங்க! பாவம், அந்தப் பெண்ணுக்கு நல்லபடியா கல்யாணம் ஆகவோ, அல்லது பையன் குடும்பம் நல்லவங்களா இல்லைன்னா அவங்களைவிட்டு விலகி வரவோ பொண்ணோட அம்மா, அல்லது அப்பா, என்ன பாடுபட வேண்டியிருக்கு?”

அமைதியாக அமர்ந்திருக்கும் அந்தப் பெண்மணியைப் பார்க்கிறார் சுப்பாமணி. அவர்கள் முகத்தில் சலனமே இல்லை. சிறிய புன்னகைகூடக் காண்கிறது.

“சில சமயம் பையனுக்கு இதைத் தாங்க முடியறதில்லை. தற்கொலை வரைக்கும் போயிடறான்… அவனுக்கென்ன, போய்ச் சேர்ந்துடறான், ஆனா குடும்பத்துக்கு அதனால் எத்தனைப் பிரச்சனைகள், எத்தனை சோகங்கள்…”

சுப்பாமணி பொதுவாகப் பேசவில்லை, அவர் வார்த்தைகள் ஒவ்வொருவரைக் குறிபார்த்து எய்யப்படும் அம்புகள் என்று உணர்ந்தார்கள் தர்மா, தன்யா, தர்ஷினி.

“பெட்டர், நம்ம குழந்தைகளோட லவ்வை நாம ஆதரிச்சுடறது, இருவீட்டாரும் மனக்கசப்புகளையெல்லாம் தள்ளிவெச்சு ஒத்துப் போயிடறது, இல்லையா? என்ன இருந்தாலும் அவங்க நம்ம குழந்தைகள்…”

அங்கிருந்த பெரியவர்கள் எல்லோருடைய முகத்திலும் ஒரு இகழ்ச்சிப் புன்னகை தோன்றியது. எதற்காக இருக்கலாம் என்று மண்டையை உடைத்துக் கொண்டான் தர்மா. ஒருவேளை குழந்தைகளைப் பற்றித் திருமணம் ஆகாத சுப்பாமணி பேசுகிறாரே என்று எண்ணுகிறார்களோ, அல்லது அவருக்கே காதல் தோல்வி ஏதேனும் ஏற்பட்டிருக்குமோ…

“இந்தப் பிரச்சனைகள் எல்லாம் நம்ம குடும்பத்தில் வரப் போறதில்லைங்கறது நமக்கெல்லாம் பெரிய நிம்மதி, இல்லையா? சங்கர் சாரோட பொண்ணு பெங்காலிப் பையனான ஆசுதோஷ் முகர்ஜியை விரும்பினா. இரண்டு பக்கமும் பிரச்சனை பண்ணாம கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டாங்க. பிள்ளை வீட்டாரோட ஆசைப்படியே கல்யாணத்தைக் கொல்கொத்தாவில் நடத்த சங்கர் சார் ஒத்துக்கிட்டார். அதுக்காகப் பொண்ணும் அவளுடைய அம்மா-அப்பாவும் மட்டும் போய் கல்யாணத்தை முடிச்சுட்டு வரதெல்லாம் அவருக்கு இஷ்டமில்லை. நம்ம பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவங்க எல்லோரும் கல்யாணத்துக்கு வரணும், குழந்தைகளை ஆசீர்வாதம் பண்ணணும் என்பதுதான் அவருடைய விருப்பம். அதுக்காகத்தான் நாமெல்லோரும் இங்கே சந்திச்சு, பயணத்தை ஆரம்பிச்சிருக்கோம்.

“இங்கே நீங்க எல்லோரும் விருந்தாளிகள். நானும் கேடரிங் சர்வீஸும் ஹோஸ்ட்ஸ். ஹாயா, ரிலாக்ஸ்டா இருங்க. உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்க, நாங்க ப்ரொவைட் பண்றோம். ஹேப்பி ஜர்னி” என்று முடித்தார் சுப்பாமணி.

எல்லோரும் தங்களை அறியாமல் ஒரு பெருமூச்சுவிட்டார்கள். இளைஞர்கள் கைதட்ட ஆரம்பிக்க, பெரியவர்களும் சேர்ந்துகொண்டார்கள்.

“முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன். ஒரு நிமிஷம்” என்று சுப்பாமணி சொல்லவும், சற்றுத் தளர்வாக அமரப் போன பயணிகள் எல்லோரும் மீண்டும் நிமிர்ந்து அமர்ந்தார்கள்.

“இங்கே இருக்கிற எல்லோரும் ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள். இவங்க மூணுபேரும் நமக்குப் புதுசு. அவங்களை இப்போ அறிமுகம் செய்கிறேன்” என்று கூறிய சுப்பாமணி தர்மா, தன்யா, தர்ஷினியை அருகில் அழைத்தார்.

“இவங்க மூணுபேரும் சதுரா துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வராங்க. இவங்களும் கல்யாணத்தை அட்டெண்ட் பண்ண வராங்க. நம்மோடே சௌகரியமா வரட்டும், அப்படியே உங்களையும் அறிமுகம் செய்துக்கட்டும்னு நான் ஏற்பாடு பண்ணினேன்…”

இந்த இடத்தில் தர்மா, சுப்பாமணியை உற்றுப் பார்த்தான்.

மறுபடி நாங்கள் இவர்களைத் தெரிந்துகொள்ளும் பிரஸ்தாபம்!

எல்லோருடைய முகமும் இருண்டு போயிருந்தது. இயல்பு நிலைக்குத் திரும்பச் சிரமப்பட்டார்கள். சுப்பாமணி “வாங்க, எல்லாரையும் மீட் பண்ணலாம். பீ கேஷுவல்” என்றார்.

தர்மா, தன்யா, தர்ஷினி தலையெழுத்தே என்று அவரோடு நடந்தார்கள். சந்திரசேகரின் மகன் பிரபுராம் தன்னைத் தர்மாவிடம் அறிமுகம் செய்துகொண்டு “சார், நான் ஒரு ஓடிடி வெப் ஸீரீஸ்ல டிடெக்டிவ்வா நடிக்கப் போறேன். ஆனா ப்ரொட்யூஸர்ஸ் எனக்குக் கொடுத்திருக்கற அப்பியரன்ஸ், பெர்சனாலிட்டி ப்ளூப்ரிண்ட்டுக்கும் உங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கே!” என்று ஆச்சரியமாகக் கேட்டான்.

“உங்க ஸீரீஸ் வெற்றியடைய என் வாழ்த்துகள். டிடெக்டிவ்ஸ் என்பவங்களை ஒரே வகுப்பின்கீழ் கொண்டுவர முடியாது. தடாலடியானவங்க இருப்பாங்க, கேஸ்களை உலகம் பூராவும் துரத்திட்டுப் போறவங்க இருப்பாங்க. இன்னும் சிலர் இருக்கற இடத்தைவிட்டு அசையாம கேஸைத் தெளிவிப்பாங்க. ஆர்ம்சேர் டிடெக்டிவ்ஸ்னு கேட்டதில்லையா? அதோடு… நான் டிடெக்டிவ் இல்லை. என் ஸிஸ்டர்ஸ் தான் டிடெக்டிவ்ஸ். நான் நிறுவனத்தோட மேனேஜ்மெண்ட்டைப் பார்த்துக்கறேன், அப்பப்போ அவங்களுக்கு அஸிஸ்ட் பண்றேன், அவ்வளவுதான்” என்றான் தர்மா.

“பார்த்தீங்களா தன்னடக்கத்தை? போலீஸிலும் அரசாங்கத்திலும்கூட நல்ல இன்ஃப்ளூயன்ஸ் உள்ள பத்திரிகையாளர், துப்பறிவாளர் பேசறார்னா நம்புவீங்களா? சகோதரி மேல எத்தனை பிரியம். அவளோட தோழியையும் தன் சகோதரியா நினைக்கிற கண்ணியம்!” என்று சிலாகித்தார் சுப்பாமணி.

“சார்… என்ன சொல்றீங்க? ரெண்டுபேருமே என்…” என்று ஆரம்பித்த தர்மா, சுப்பாமணி காட்டிய ஜாடையைக் கண்டதும் நிறுத்திக் கொண்டான். அவருக்கு அருகில் நின்றிருந்தவர்களைப் பார்த்தான்.

பளபளக்கும் கண்களுடன் பிரபுராம். பயத்திற்கும் போதைக்கும் இடையில் தவிக்கும் கண்களுடன் ப்ரிஜேஷ்.

“இப்போ, இந்தப் பசங்களை மட்டும் குறை சொல்லி நிறுத்திட முடியாது, இல்லையா? பொண்ணுங்களும் தலைதெறிச்சு விழறாங்க! அம்மா-அப்பாவுக்கு அவங்களால் எவ்வளவு பிரச்சனைன்னு புரிஞ்சுக்கறதே இல்லை! லவ் விஷயங்களைப் பற்றி மட்டும் சொல்லலை, இன்னும் எவ்வளவோ இருக்கே” என்றவாறே முன்னால் நடந்த தன்யா, தர்ஷினியை நெருங்கினார் சுப்பாமணி.

“என்ன சுப்பாமணி சார், மாடர்ன் கேர்ள்ஸை வசைபாடற வழக்கம் உள்ளவர்தானா நீங்களும்?” என்று சிரிப்புடன் கேட்டாள் தன்யா.

“அடடா! உங்க முன்னால் நான் அப்படிச் சொல்லக் கூடுமா? பெண்களுடைய முன்னேற்றத்தைப் பார்த்து ஆனந்தப்படுபவர்களில் நானும் ஒருத்தன். என்ன, சில சமயம் வருத்தமாயிருக்கு. எத்தனையோ பெண்கள் காரை ஓட்டறேன்னு சொல்லிட்டு ஆக்ஸிடெண்ட் பண்ணிடறாங்க. ஆம்பிளைகிட்டச் சண்டை போடற மாதிரி அவங்ககிட்டப் போட முடியுமா சொல்லுங்க? இந்த அழகில் சிலர் குடிச்சுட்டு வேற வராங்க” என்ற சுப்பாமணி அதே மூச்சில் “அடடே! எங்க ஸ்ரீம்மாவோட பேசிண்டிருக்கீங்களா? இவங்க எங்க இன்னொரு பாஸ் ஸ்ரீனியோட ஸிஸ்டர் ஸ்ரீஜா” என்றார்.

“ஓ! கேள்விப்பட்டிருக்கோம்” என்று சொல்லி தன்யாவும் தர்ஷினியும் ஸ்ரீஜாவோடு கைகுலுக்கினார்கள். தர்மா கைகூப்பினான். இவன் கொஞ்சம் பழைய பஞ்சாங்கம் போலிருக்கிறது எண்ணிக் கொண்டாள் ஸ்ரீஜா.

அதற்குள் பின்னால் அமைதியாக அமர்ந்திருந்த சந்திரசேகர் குடும்பத்தை நெருங்கியிருந்தார் சுப்பாமணி. அவர்களை அறிமுகம் செய்துவிட்டு பக்கத்து மேஜையைச் சுற்றியிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தார். துப்பறிபவர்கள் மூவரையும் அவருக்கருகிலேயே அமர அழைத்தார்.

எல்லோரும் அவர்களையே குறுகுறுவென்று பார்ப்பது தர்மா, தன்யா, தர்ஷினிக்குச் சங்கடமாக இருந்தது. அங்கே இருந்தவர்களுக்குத் தங்களை எதிரிகளாக ஆக்கிவிட்டார் சுப்பாமணி என்று தோன்றியது.

எதையும் கண்டுகொள்ளாதவராகச் சுப்பாமணி உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். அவர்களுடைய வழக்குகளைப் பற்றி உற்சாகமாகக் கேள்விகள் போட்டுத் தெரிந்துகொண்டார். “இதுவரை ஸால்வ் பண்ணமுடியாத வழக்குன்னு ஏதாவது இருக்கா? எதை ரொம்பக் கஷ்டமான, நெரடான வழக்குன்னு சொல்வீங்க?” என்றெல்லாம் கேட்டார்.

தன்யா சிரித்தாள். “நம்மை முன்னே போகவிடாம தடுக்கற சக்திகள் எல்லா வழக்கிலுமே இருக்கும், சுப்பாமணி சார்! க்ரிமினல், அரசியல், பொறாமை இது மாதிரியான காரணங்களைத் தவிர்த்துட்டு அறிவுபூர்வமாகப் பார்த்தா… நடந்து நெடுநாளான குற்றங்களை சால்வ் பண்றது கொஞ்சம் கஷ்டம். பதினேழு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒரு கொலைக் கேஸ் வந்தது பாருங்க…”

“அதைத் தெளிவிச்சுட்டீங்க, இல்லையா? தெளிவாகாத கேஸ்னு…”

“அதாவது, நீங்க இதுவரை தோல்வி அடைஞ்சிருக்கீங்களான்னு கேட்கறீங்க?” என்று சிரித்த தன்யா “ம்… ரேரா அதுவும் நடந்திருக்கு” என்று ஒப்புக்கொண்டாள்.

“எப்பவாவது தானே? அடிக்கடி நடக்கறது இல்லையே? உங்களைப் பற்றி ரொம்ப உயர்வாகத்தான் கேள்விப்பட்டிருக்கேன்” என்றார் சுப்பாமணி.

“ஜெனரலா நாங்க எடுத்துக்கிட்ட கேஸில் வெற்றியடையறவரை விடமாட்டோம்” என்றாள் தர்ஷினி, இது எங்கே போகிறது என்று யோசித்தவாறே.

“அது தெரிஞ்சுதான் உங்களுக்கு ஒரு சேலஞ்ச் கொடுக்கப் போறேன்! உங்க திறமைகளுக்கு ஒரு சவால்! ஒரு இன்டலெக்சுவல் கேம்!” என்றார் சுப்பாமணி உரத்த குரலில். அங்கே இருந்த எல்லோருக்கும் அவருடைய பேச்சுக் கேட்டிருக்க வேண்டும். அங்கே ஒரு சங்கடமான மௌனம் சூழ்ந்தது.

*

“இனிமேலாவது கொஞ்சம் தூங்கலாம். மணி ஒன்றே முக்காலாகிடுச்சே! இப்போ கூடூர் ஸ்டேஷன் வரும்னு நினைக்கறேன்” என்றான் தர்மா.

“இந்தச் சுப்பாமணி நமக்கு எதுக்கு எல்லோரையும் அறிமுகம் செய்து வெச்சு… ஒரு டைப்பான கேரக்டராக இல்லை அவர்?” என்று கேட்டாள் தன்யா.

“நீ வேற… அவங்க எல்லோருக்கும் நம்மை அறிமுகம் செய்யறார் அவர்! நம்மகிட்டப் பேசும்போது, ஒரே புகழ்ச்சி! எதுக்காக இவ்வளவு சோப்புப் போடறார்? நமக்கு ஏதோ ஒரு கேஸ் கொடுக்கப் போறார் அவர்னு நினைக்கறேன்” என்றாள் தர்ஷினி.

“அது நிச்சயமா கல்யாணத்துக்கு வர பரிசுப் பொருட்களைப் பாதுகாக்கறது இல்லை” என்றான் தர்மா.

*

“படபட”வென்று கதவு தட்டப்பட்ட சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொண்டான் தர்மா. விளக்கைப் போட்டுக் கேபின் கதவைத் திறப்பதற்குள் தன்யா, தர்ஷினி எழுந்து அமர்ந்திருந்தார்கள்.

வெளியே நின்றிருந்த அந்தப் பெண் கிட்டத்தட்ட கேபினுக்குள் பாய்ந்தாள். “கா… கா… ணோம்” என்று மூச்சுவாங்கச் சொன்னாள்.

“யாரைக் காணல? என்ன விஷயம்மா? நீங்க யாரு?” என்று கேட்டான் தர்மா.

“நான் ஷான்” என்றாள் அவள் எதுகையாக. “ஸ்ரீஜா மேடமோட செகரட்டரி…” – புஸ்புஸ்ஸென்ற மூச்சுகளுக்கிடையில் திணறிக் கொண்டு சொன்னாள்.

“சரி, என்ன விஷயம்?”

“ஸ்ரீஜா மேடமைக் காணோம்.”

— பய(ண)ம் தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...